ஸ்டாலின்சரவணனின் ‘ரொட்டிகளை விளைவிப்பவன்‘ கவிதைநூல்விமர்சனம்
–நாராயணி.சுப்ரமணியன்
“பூமியில் ஒவ்வொரு புல்லும் மண்ணிலிருந்து தனக்கான உயிராற்றலைப் பெற்றுக்கொள்வதுபோல, மனிதனும் நிலத்தோடு வேர்விட்டு தனது வாழ்வையும் வாழ்வதற்கான நம்பிக்கையையும் பெற்றுக்கொள்கிறான்” என்கிறார் ஜோசப் கான்ராட். இயற்கைக்கும் மனிதனுக்குமான இழுபறி தன் உச்சத்தை எட்டியிருக்கும் இக்காலகட்டத்தில் இயற்கை / நிலம்சார் எழுத்து என்பதே ஒரு அரசியல் செயல்பாடு. நில வர்ணனை, எப்போதோ இருந்த நிலம் பற்றிய ஏக்கக்கனவு, இப்போதைய பிறழ்ந்த நிலம் பற்றிய கையறுநிலை ஒப்பாரி என நிலம் சார்ந்த எழுத்துக்கள் எல்லாமே சமகால வாழ்வியலின், அதன் மீதான அரசியல் கறைகளின் அழுத்தமான பதிவுகள்.
பூஞ்சை மனசுள்ள அமைதி நிறைந்த பொக்லைனாக இருக்கட்டும், சக்கரப் பற்களில் விரல்களைக் கடிக்கிற நில இயந்திரமாகட்டும், நெஞ்சிலறைந்து எத்தனை அழுதாலும் நிலத்தை விட்டு வெளியேறாமல் பிடிவாதம் பிடிக்கின்றன. ஸ்டாலின் சரவணனின் கவிதைத் தொகுப்பு இந்த ஆக்கிரமிப்பின் மௌன சாட்சியாக அதை ஆவணப்படுத்துகிறது. கால்களைப் பறத்தலுக்குத் தந்தவர்களையும் இழுத்து நிலத்தில் நிறுத்துகிறது.
அறம், பொருள், இன்பம் என்று இந்த நூலின் மூன்று பகுதிகளை மிகத்தளர்வான பகுப்புகளுக்குள் வைக்க முனைகிறேன். முதல் பாகம் யவனிகா ஶ்ரீராமுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. வயல் ஓரத்தில் மருதத்தின் மதியங்களில் சுழலும் தூக்கத்தோடும், கனவுகள் அறுந்த துயரோடும் பேசிக்கொண்டிருக்கும் ஒருவனை இது முன்வைக்கிறது. இயந்திரங்கள் மீதான மனிதர்களின் பார்வையையே ஒரு பெரிய வரலாறாக எழுதலாம். புதிய ஒரு கருவியைக் கண்டதும் வருகிற வெளியாரச்சம் (Xenophobia), பழகியபின் அது வேலைகளை முடிக்கும் அசுரவேகம் கண்டு வரும் பரிவும் இளைப்பாறுதலும், அது தன்னை மீறியும் செயல்படக்கூடும் என்று உணரும்போது வரும் மீள் அச்சம் ஆகியவை எல்லா பெரிய இயந்திரங்களுக்கும் பொருந்திப்போகும். “அது வெறும் இயந்திரம் : It is just a machine” என்பது எவ்வளவு ஒரு அடர்த்தியான வாக்கியம் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துகிறது. அப்படி எளிதாகப் புறந்தள்ளப்பட்ட இயந்திரங்களைக் கழுத்தில் கட்டிக்கொண்டேதான் மெதுவாக முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். ருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) எழுதிய இயந்திரங்களின் ரகசியம் (The secret of the machines) கவிதை நினைவுக்கு வருகிறது. யோசித்து முடிக்குமுன் உணர்வுகளற்ற பொக்லைன் இன்னுமொரு சிற்றிலைச் சிதைக்கிறது.
நிலத்தால் கைவிடப்பட்டவர்களும் நிலத்தைக் கைவிட்டவர்களாலும் காகங்களை மட்டுமே தூது அனுப்ப முடிகிறது. திணை கடந்த உறவில் பாலைவனத்தில் முயங்குபவனைக் கண்டு சூரியனே திகைத்தோடுகிறது. பரோட்டாக் கடையில் வேலை செய்யும் விவசாயிக்காக நிலமே வெடித்துக் கதறுகிறது.. அதிகாரத்தாலோ இயற்கையின் கையறு நிலையாலோ நிலத்திலிருந்து துரத்தப்பட்டவர்களின் அலைகழிப்பு என்றும் தீர்வதேயில்லை. நினைவில் நிலமுள்ள மிருகங்களாக, வறிய நாவுகளோடே வாழ்வின் இறுதிவரைக்கும் திரிய விதிக்கப்படுகிறார்கள். இந்த அலைக்கழிப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கின்றன இந்தக் கவிதைகள்.
பச்சை நிறக்குழல் விளக்குகள் எரிகிற, ஆண்கள் நிறைய புழங்குகிற சாலையோர பரோட்டாக் கடைகள் பல கேள்விகளை, தீராக்கவர்ச்சியை, கண்ணுக்குத் தெரியாத பயத்தைத் தந்தபடியே இருக்கின்றன. பொதுவாகப் பெண்கள் அதிகம் நுழையாத அவ்விடங்களில் என்ன பேசிக்கொள்வார்கள், ஏன் வெள்ளை நிறத்திலல்லாமல் இங்கே பச்சை நிற விளக்குகள் எரிகின்றன என்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து யோசித்திருக்கிறேன். குடிக்காதவனுக்குக்கூடக் காரம் தூக்கலாக மட்டுமே ஆம்லேட் கிடைக்கும் இடம் என்ற ஒரு புதிய புரிதலைத் திறந்துவிடுகிறது “காரம் நிமித்த இரவுகள்” கவிதை. மூன்றாவது வார்டில் செவிலியரிடம் இறைஞ்சுபவர்கள் இந்தக் கடைகளின் மிளகாய்ச் சீவலுக்குத் தன் மிச்சசொச்ச குடலையும் பொத்தலிடுவதற்கென்றே அர்ப்பணிக்கிறார்கள். குடிநோயாளியாக ஒருவனை மாற்றுகிற சமூகம் தனது இறுதி வன்முறையை மிளகாயின்வழி ஏவுகிறது.
ஒழுங்கற்றவனின் வாழ்க்கை ஒன்றைப் பேசும் கவிதையில் குக்கரின் விசில் சத்தமே கலவிக்கான சங்கீதமாகிறது. ஒழுங்கானவர்களைக் கொண்டாடித்தீர்க்கும் சமுதாயத்தில் நாம் எல்லாருமே ஒழுங்கற்றவர்களாகத்தான் இருக்கிறோம். ஒழுங்கை மீறுகிற எல்லாரும் ஒரு பெரும் புரட்சி மனநிலையில் அப்படிச் செய்வதில்லை……கோடுகளை மீறுகிற மனம் ஒரு ஆட்டுக்குட்டியின் உற்சாகத்தில் துள்ளும். காலம் / விதிகள் ஆகியவை சார்ந்த நீண்ட மஞ்சள் கோடுகள் நிறைந்த சாலையில் வளைத்து வளைத்து வண்டி ஓட்டிக்கொண்டிருப்பவர்களைப் பற்றியும் யாராவது பேசவேண்டும்தானே!
யூமா வாசுகிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற இரண்டாம் பாகத்தில் கூழாங்கற்கள் சிதறிக்கிடக்கின்றன. மலைகளின் நீட்சியென அவை திக்குபவனின் வாய்க்குள் உருள்கின்றன. கொஞ்சமாகத் தண்ணீர் சிதறினால் நனையலாம் என்று குளத்தின் மேல்படிகள் காத்துக்கிடக்கின்றன. மருதத்திலிருந்து குறிஞ்சிக்குப் போய்விட்ட இந்தக் கவிதைகள் மலைகளைக் கீழிருந்து அண்ணாந்து பார்ப்பவை, மலையேற எத்தனிப்பவை, குளிர் இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கம்பளி போர்த்தியபடி வாழ்வை வாசிப்பவை. சென்ற பாகத்தில் காலில் படிந்த ஈரமண்ணைக் குளக்கரையில் அலசச் செய்பவை. அதே மலையின் உச்சியில் தேவன் இசைக்கிற குறிப்புகளுக்கு மகுடிப் பாம்பென தலையசைக்க வைப்பவை. கவிதைகளைப் படிக்கும்போதே யூகலிப்டஸ் வாசம் எங்கிருந்தோ வருவது போலிருந்தது.
சமீபகாலமாகவே வெயிலோ மழையோ, விண்ணிலிருந்து கருணையென நம்மீது இறங்குவதில்லை. பருவகாலங்கள் ஒரு சாட்டையென நம் முதுகில் சொடுக்கப்படுவதைச் சொல்கிறது “வாளேந்திவரும் வேனிற்காலம்” என்ற வரி. நகரத்தின் கோடையும் கிராமத்துக் கோடையும் வேறு வேறானவை. நகரங்களின் கோடைகள் ஏனோ ஒரு கழிவிரக்கத்தையும், சுயவாதை மனப்பான்மையையும் கூடவே கொண்டு வருபவை. கோடைக்கும் அவனுக்கும் நிரந்தரமாய் நடக்கும் யுத்தத்தில் அவனது ஒரே ஆயுதம் ஒரு ஈரத்துண்டு. கோடை வென்றுவிடுகிறது என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? எழுதுவதைப் பாதியில் நிறுத்திவிட்டு மின்விசிறியின் வேகத்தை அதிகரித்துக் கொள்கிறேன்.
“ஒரு குவளை தனிமை” பேசும் தனிமை பற்றித் தனியாகக் கட்டுரையொன்று எழுதவேண்டியிருக்கும். “யாருமே எப்போதுமே வேண்டாம்” என்ற தனிமையைத்தான் மனநோய் என்கிறது மருத்துவ உலகம். ஆனால் தீங்கற்று, “அவ்வப்போது யாரேனும் இருந்தால் போதும், மற்றபடி விட்டுவிடுங்கள்” என்று கேட்கிறவனின் கையைப் பிடித்துத் திருகிக்கொண்டேயிருக்கிறது சமூகம். “எல்லாரும் எப்பவும் ஒன்னா இருந்தாதான் சந்தோஷம்” என்கிற வார்த்தைகளை நம் வீடுகளின் கொடிகளில் பதித்து வைத்திருக்கிறோம். தனிமையை வேண்டுபவனை அன்பை நிராகரிக்கிற குரூரன் என்று அழைக்கிறோம். விலகி விலகி வாழ்வுக்குள் இயல்பாய்த் திரும்ப விரும்புகிற மனிதனுக்கும், வாசற்படியை நோக்கிக் கால்கள் திரும்பினாலே அலறிப் பதறுகிற சமூகத்துக்கும் நடக்கிற இழுபறியை நினைவுபடுத்துகிறது இந்தக் கவிதை.
ரமேஷ்-ப்ரேமுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிற மூன்றாவது பாகம் பற்றியெரிகிற நெருப்பின் வேகத்துடனும், சிலசமயம் ரொட்டியின்மீது பூஞ்சை படரும் நிதானத்துடனும் வாழ்வைப் புணர நினைப்பது. அன்பு / காதல் என்பது பலவண்ணப் பட்டுநூல்களின் சிக்கல். காமமோ அளவுகோல் வைத்து வரையப்பட்ட வெள்ளைக்கோடு. இந்த இருமையையும் அதனால் வரும் இருண்மையின் அலைக்கழிப்புகளையும் எதிரொலிக்கின்றன இந்தக் கவிதைகள். கண்களைத் தாண்டாத பார்வை நட்புக்குத்தான் சரிவரும். காதலோ கண்களுக்குள்ளேயே தொலைந்துவிடுகிறது. கால் கட்டைவிரலின் உடைந்திருக்கும் நகத்தையும் பாவாடை கட்டி இறுகிய வளையத்தையும் ரசிக்கிற கண்கள் காமத்துக்கே வாய்க்கின்றன. ஈரம் சொட்டும் கூந்தல் நுனியோடுதான் காமத்தின் தாகம் முழுமையாகத் தீர்கிறது.
அருவருப்புகளைக் கட்டுடைக்கும் “சீழ் மணக்கும்” காதல் காயங்களை விரல்நகத்தால் சுரண்டியபடி ஒற்றை முத்தத்துக்கெனக் காத்திருக்கிறது. சுமந்து செல்லவேண்டிய எடையை எண்ணி அலுத்துக்கொள்ளும் அதே காதல்தான் அவள் கையில் மீனென அறுபடவும், கொதிக்கும் குழம்பில் துள்ளி அவளிடம் பின்மண்டையில் அடிவாங்கவும், உயிர் உருகும் கோழியென அவளுக்கு பலியாகவும் தயாராக இருக்கிறது. மொத்த வாழ்வையும் ஒரு தட்டில் வைத்து ஒப்படைக்கும் பித்து நிலைக்கும் நினைவுகளை அறுக்கத் துடிக்கிற கத்திக்கும் இடையில் ஊசலாடுகின்றன இக்கவிதைகள்.
இரவாட்டம் கவிதையில் கூட்டுக்குடும்பங்களிலும் ஒண்டுக்குடித்தனங்களிலும் போர்வைக்குள் மகிழ்ந்திருப்பவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். பெய்கின்ற மழை, சரசரவென்று எரிகின்ற நெருப்பு, படர்கின்ற இருள், நீர்க்குமிழியிலிருந்து உடைந்து பூமிக்குள் விழும் யாக்க, என பலவிதமாக விளையாட்டு காட்டுகிறது காமம். நாக்கு நீளமான ஞாபகங்கள் பெருவெளியில் துரத்துகின்றன; காமம் கண்மூடி தியானித்திருக்கிறது. அருகில்போய்த் தொட்டு எழுப்பினால் கண்ணடித்துச் சிரிக்கிறது. பெரும் பயணம் ஒன்றுக்கு அழைக்கிறது. உடலைக் கொண்டாடுவதற்கும் விரசத்துக்கும் இடையிலான கண்ணுக்குத் தெரியாத ஒரு கோட்டில் பயணிக்கின்றன ஸ்டாலின் சரவணனின் வரிகள்.
“சிறு குறிப்பு வரைக” பகுதி பற்றியும் கவிதைகளின் தலைப்பைப் பற்றியும் நிச்சயம் பேசியாகவேண்டும். உரைநடையின் வடிவத்தில், ஆனால் கவிதை நடையில் எழுதப்படுகிறவற்றை ஆங்கிலத்தில் Prose Poem என்பார்கள். ஆங்கிலத்தில் நவீன கவிதைகளை எழுதுகிற எல்லோருடைய தொகுப்பிலும் இப்படிப்பட்ட நீண்ட பத்தி ஒன்றாவது உண்டு.
சிறுகுறிப்பு வரைக பகுதியில் இருக்கும் வரிகளை அப்படி ஒரு Prose Poem இடத்தில் வைக்கலாம்தான். ஆனால் அப்படிச் செய்தால் அவற்றின் புதுமை கொஞ்சம் மட்டுப்பட்டுவிடும். அதனாலேயே அவற்றை வேறு பெயரிட்டு அழைக்க நினைக்கிறேன். இவற்றுக்குக் கவிதைத் தெறிப்புகள் என்று பெயரிடலாம். இரண்டு மூன்று வரிகளில், வடிவங்கள் பற்றிய கவலையின்றி ஏதோ ஒரு கவிதை மலரென அவிழ்கிற தருணத்தை ஒரு ஸ்க்ரீன்ஷாட் (Screenshot) போன்று பதிவு செய்திருப்பவை அவை. தோளில் ஏறிக்கொள்கிற “எக்ஸ்”ஸின் மகளிடம் அவளது அக்குள் வாசனையை உணர்வது தொடங்கி ஆரஞ்சுப்பழமென வாழ்க்கையைக் கவிதையில் உரித்து வைக்காதீர்களேன் என்று கெஞ்சுவது வரை சிறுகுறிப்புகள் எல்லாவற்றையும் எழுதிப்பார்க்கின்றன. கவிதையின் வடிவம் பற்றிய நம் முன்முடிவுகளை ஒதுக்கிவிட்டு இவற்றை அணுக வேண்டும்.
கவிதைகளுக்கும் தலைப்புகளுக்குமிடையே சிற்பத்தின் கால் பாதத்துக்கும் பீடத்துக்குமிடையே இருக்கிற சின்ன ஈர்க்குச்சி நுழையும் இடைவெளியொன்று. எழுதப்படாத வரிகள் அதற்குள் தாமாகவே வந்து அமர்ந்து கொள்கின்றன. தலைப்புகளே கவிதைகளாக மாறத்தயங்கி நின்று கொண்டிருக்கும் சொற்கள்தான். மனதுக்குப் பிடித்த ஒருவர் பிடித்த நிறத்தில் ஆடையையும் அணிந்து வருவதுபோன்ற ஒரு கூடுதல் அழகியலை அவை தோற்றுவிக்கின்றன. “செம்புலத்து மாயோன் பொக்லைன் தேரில் பவனி“, “கட்டமிட்ட சட்டையில் பூ அலர்ந்த வாழ்வு“, “உன் ஞாபகத்துக்கு நாக்கு கொஞ்சம் நீளம்தான்” ஆகியவை சில உதாரணங்கள்.
ஒரு கவிதையில் “நீங்கள் மட்டும் உச் கொட்டி ‘வாழ்க்கையென்பது’ என்று ஆரம்பிக்காதிருந்தால் போதுமானது” என்ற ஒரு வரி வருகிறது. “வாழ்க்கையென்பது” என்று பிரச்சாரம் செய்யாத, முன்முடிவுகளை உடைக்கிற, இறுதி முடிவுகளை நம்மிடமே விட்டுவிடுகிற கவிதைகள் இவை. அட்டைப்பட ஓவியம் கஸ்டாவ் க்ளிம்ப்ட்டின் தனித்துவமான, பாராட்டுகள் குவிந்த Golden Phaseன் போது வரையப்பட்டதாம். இந்தத் தொகுப்பின்மூலம் தனக்கான தங்கத்துகள் மிதக்கிற பாதைக்குள் ஸ்டாலின் சரவணன் பயணிக்கத் தொடங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது.
‘ரொட்டிகளை விளைவிப்பவன்’
உயிர்மை வெளியீடு
விலை: ரூ.80/-
***
நாராயணி சுப்ரமணியன்:கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com