1
“மீனாட்சி… பாக்கறயா?”
“அடுப்புல வேலையா இருக்கேன்”
“ஒரு நிமிஷம் இங்க வாயேன்…”
பாட்டி அடுப்படி வாசலில் வந்து நின்றாள். அவளின் முகம் பார்க்கவும் ஹாலில் கட்டிலில் படுத்திருந்த தாத்தா எழுந்து உட்கார்ந்தார்.
“இப்போ சொல்லுவா கேளு” கே.பி சுந்தராம்பாள் ஔவையாராய் நடித்தப் படம் டிடி-யில் ஓடிக்கொண்டிருந்தது. அல்லது காரைக்கால் அம்மையாராய் இருக்கலாம். சரியாய் நினைவில்லை. தோராயமாய் காட்சி இதுதான் – மீண்டும் பிறவாமல் இருக்க என்னசெய்ய வேண்டும் என்ற கேள்விக்கு ஈசன் “இறக்கும்போது நீ என்ன நினைக்கிறாயோ அதைப் பொறுத்துதான் உன் அடுத்தப் பிறவி அமையும். என்னைச் சிந்தையில் வைப்பவர்கள் என்னை வந்து சேர்வர்”என்பார்.
“மனசுல வச்சுக்கோடி…”
“நல்லதே நெனைக்க மாட்டேளா”
“பரமேஸ்வரன நெனச்சுக்கறது நல்லதில்லையா”தாத்தாவின் சிரிப்பைச் சட்டைச் செய்யாமல், “பொழச்சுக்கிடந்தா என்ன நடக்கும்னு தெரியாது… இதுல இதெல்லாம் என்னத்துக்கு… அப்றம் நம்ம காரியம் என்ன நாளைக்கே முடியப் போறதா” சொல்லிவிட்டு அடுப்படிக்குள் சென்றுவிடுவாள்.
பாட்டியின் வார்த்தைகள் மட்டும் எனக்கு மறக்கவேயில்லை.
தாத்தாவின் காரியம் வெகு சீக்கிரமே முடிந்து போனது. தாத்தா இறக்கும்போது ஆந்தையைப் போல் இருமுறை ஒலி எழுப்பினார், பின் உயிர் பிரிந்தது என்று மாமா சொன்னபோது “இல்லை அவர் ‘சிவ சிவா’ எனத்தான் சொல்லியிருப்பார்” என்றேன்
மாமாவும் இருக்கலாம் என்பதைப்போலத் தலையசைத்தார்.
*
2
“சந்திர உதயத்தையோ, அஸ்தமனத்தையோ யாரும் பார்ப்பதில்லை. மலர் மலர்வதற்கோ, வாடி விழுவதற்கோ பார்வையாளர்கள் உண்டா என்ன! பார்வையாளர்கள் நிலவை மலரோடு ஒப்பிடுவதைவிட நடனமங்கையுடன் ஒப்பிடலாம். அதுதான் சரி… திரை விலகும்வரை தான் பார்வையாளர்கள் காத்திருக்க வேண்டும்… பார்வையாளர்கள் நிலவின் அரங்கில் எப்போதும் மக்கள் உண்டு… ஆனால் பார்வையாளர்கள்? பெளர்ணமி இரவில் கடலில் அலையடிக்கும். நதியில்..?”
மலை உச்சிக்குப்போகும் வரை அவனை நிலவு பின்தொடர்ந்தது.
அவனைப் பற்றிச் சொல்ல பெரிதாய் ஒன்றுமில்லை. சட்டகத்தை விட்டு வெளியேறத் துடிக்கும் ஓவியம் என்று சொன்னால் ஒருவேளை பொருந்தக் கூடும்.
அவன் உச்சியை அடைந்தபோது நிலவும் அடைந்திருந்தது. சில நபர்கள் நல்ல இடைவெளிவிட்டு படுத்திருப்பதைக் கண்டான். எல்லோருமே உடைகளற்று அம்மணமாய் வானம் பார்த்துப் படுத்திருந்தனர். அவனுக்கு ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. இதைப் போன்ற இடங்களில் நடக்கூடியவைதான். அவனும் ஒரு இடம் பார்த்துப் படுத்துக் கொண்டான்.
கண்விழித்த போது அவனைச் சுற்றி சிறுகூட்டம் நின்று கொண்டிருந்தது. முதன் முறையாக சங்கடமாயும், வித்தியாசமாயும் உணர்ந்தான். இரவில் பார்த்தபோது “போதையாய்”இருக்கும் என்று நினைத்தவன் விடிந்த பின்னரும் நிர்வாணமாய் இருப்பார்களென எதிர்பார்க்கவில்லை.
“போகலாமா”அவனுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்தவர் கேட்டார்.
மந்திரத்திற்கு கட்டுப்பட்டுவனைப் போல் “ம்ம்”என்றான்
அவன் இருந்த இடத்திற்கு எதிராகத் தெரிந்த பாதையில் இறங்கி கூட்டம் நடக்கத் தொடங்கியது.
அவன் அவர்களைப் பின்தொடர்ந்தான்.
ஒரு பத்தடியில் அவர்கள் அவனைத் திரும்பிப் பார்த்தனர். ஒன்றுமே சொல்லாமல் அவனைப் பார்த்தனர். அவன் குழம்பினான். சட்டென்று புரிந்தவனாய் உடைகளைக் களையத் தொடங்கினான்.
உடல் முழுவதும் உணர்ந்த குளிர் நொடியில் காணாமல் போனது.
பின் அவன் மலையை விட்டு இறங்கவேயில்லை
*
3
நீண்ட நேரமாக எழுப்பியும் அசைவற்றுக் கிடக்கும் அக்குருடனின் கருப்புக் கண்ணாடியை கழட்டிப் பார்த்து உறுதிசெய்து கொண்டு மயானத்திற்குத் தூக்கிச் செல்கிறார்கள். கட்டையெல்லாம் அடுக்கி, அதன் மேல் அவனைக் கிடத்தி சாணம் கரைத்து ஊற்றப் போகும்போது புரண்டு படுக்கிறான் குருடன். பிறகு சட்டென்று எழுந்து கொள்கிறான். நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டவனிடம் விசயத்தைச் சொல்கிறார்கள். “குருடன் விழுந்தால் செத்துதான் விழ வேண்டுமா..?”எனக் கேட்கிறான். “எங்களுக்கு எப்படித் தெரியும்…” என்று முணுமுணுப்போடு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்..
*
4
ஆசிரமத்தில் இருக்கும் பாட்டியைப் பார்க்கச் செல்கையில் ஏதேதோ நினைவுகள்.
ஒவ்வொருமுறை போகும்போதும் குறைந்தது இரண்டு புத்தகங்களாவது கொண்டு செல்வது உண்டு. பொன்னியின் செல்வன், யவன ராணி, ராஜ திலகம், ராமாயணம், மகாபாரதம் என ஒரு பெரியப் பட்டியலைச் சீக்கிரமே முடித்துவிட்டாள். கடைசி இரண்டு தடவைகளாக சிவபுராணம் வாங்கி வரும்படி கேட்டாள்.
மனம் ஒப்பவில்லை.
இன்னும் கொஞ்சநாள் போகட்டும் பாட்டி என்று சொல்ல நினைத்தேன்.
பாட்டிக்குப் போய் மோகமுள் கொண்டு போறயேடா என்று சிரித்த அம்மாவிடம் ஒன்றும் சொல்லவில்லை.
“ஏன்டா நான் கேக்கறத தவிர மத்ததெல்லாம் எடுத்துண்டு் வர…”
“அடுத்த வாட்டி வர்றச்சே நிச்சயமா கொண்டு வர்றேன் பாட்டி”
“நாளப்பாடு நாரயணனுக்கு… ராம் ராம்” என்றாள்.
சந்தோஷமாகவும் இருந்தது. ஏனோ வருத்தமாகவும் இருந்தது.
சங்கரன் விஸ்வநாதன்
narayanan.sangara@gmail.com