சரவணன் மாணிக்கவாசகம்
இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகளை எழுதும் முன்பே நான் எதிர்கொள்ள வேண்டிய கேள்வியை அறிவேன். அப்படி என்ன தமிழில் இதுவரை வந்த எல்லாப் புத்தகங்களையும் படித்து விட்டாயா? பாலகுமாரன் நான்கோ, ஐந்தோ படித்தேன், அதற்கு மேல் படிக்க முடியவில்லை என்கையில் எல்லாம் படிக்காமல் எப்படி அபிப்ராயம் சொல்ல முடியும் என்றார்கள். நல்ல புத்தகங்களை வாசகன் தேடிச்சலிக்க வேண்டியதில்லை. அவையே அவனைத் தேடிவரும்.
சிறார் இலக்கியத்திலிருந்து ஆரம்பிப்போம். வெளிநாடுகளில் Bedtime stories என்பது நம் அம்புலிமாமா கதைகள் இல்லை. Ruskin Bond-ன் தரத்தில் எழுதுவதற்குக் கூட தமிழில் ஆளில்லை. போலவே Young Adult என்ற பதமே இங்கே இல்லை. குட்டி இளவரசன், ஹாரிபார்ட்டர் முதலிய புத்தகங்கள் சிறுவர், பெரியவர் இருபாலாரும் படிப்பது. YA fiction என்பது மட்டுமே பலகோடி வாசகர்களைக் கொண்டது. பதின்ம வயதில் புத்தகங்கள் மீது காதல் வராமல் பின்னர் எப்போது வரும்?
அடுத்தது காதல் கதைகள். காதல் என்றால் Mills and Boons, Nicholas Sparks வகையறா இல்லை. Sons and Lovers, Wuthering heights போல் உலுக்கி எடுக்கும் காதல் கதைகள். Wuthering Heights-ன் மையக்கருவும் தி.ஜாவின் மலர்மஞ்சமும் ஒரே மையக்கரு. மலர்மஞ்சம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. மலர் மஞ்சம் வெளியான வருடம் 1961. Wuthering heights 1847.
கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடத்தைத் தமிழின் முதல் LGBTவகை நாவல் என்று சொல்லலாம். அது வெளிவந்து அறுபது ஆண்டுகளில் கலைநயத்துடன் LGBT முழுநாவல் எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. Gay பற்றி வந்த அளவிற்குக்கூட Lesbians பற்றி வரவில்லை. வெளிநாட்டினர் அனுபவக் குறிப்புகளோடு நம்மவர்களின் அனுபவங்களை ஒப்பிட வாழ்வியல் அனுபவங்கள் எழுத்து வடிவில் காணக் கிடைக்கவில்லை.
அடுத்தது மூன்றாம் பாலினம் குறித்த நாவல்கள். அவர்களது அவஸ்தை, அலைக்கழிப்புகளை புலியூர் முருகேசனின் மூக்குத்தி காசி ஓரளவு சொல்லியிருக்கிறது. Parcel போன்ற முழுமையான நாவல்கள் தமிழில் இல்லை.
அடுத்தது குறுங்கதைகள். நம்மவர்களில் அநேகருக்கு குறுங்கதை வடிவம் புரிபடவில்லை. குறுங்கதைகள் எழுத விளைவோர் குறைந்தபட்சம் Lydia Davis-ஐயாவது முழுக்கப் படித்தல் நலம்.
சாயாவனம் போல் Dystopian சாயல் கொண்ட தமிழ் நாவல்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். பாரன்ஹீட் 451 போன்ற முழுமையான Dystopian novel தமிழில் வந்திருப்பதாகத் தெரியவில்லை.
Kristin Hannahவின் The Nightingale போலவோ இல்லை Book Thief போலவோ அல்லது The Tattooist of Auschwitz போலவோ சரித்திர நாவல்கள் உண்டா பாருங்கள். சரித்திரநாவல்களிலேயே Historical Romance, Historical Mystery போல பத்துக்கும் மேற்பட்ட பிரிவுகள்.
Paranormal, Gothic ghost novels என்பதும் தமிழில் இல்லை. இரத்தக்காட்டேரியான Vampire-கள் ஒரு தனிப்பிரிவு. அதற்கென ஏராளமான வாசகர்கள். Charlaine Harris ன் Dead until dark சமீபத்தில் கவனம் பெற்ற இவ்வகை நாவல். தமிழில் முயற்சிக்கப்பட்ட சில சிறுகதைகள் காஞ்சனா திரைப்படம் போல் சிரிப்பை ஏற்படுத்துகின்றன.
அதே போல் வாழ்க்கை சரிதங்கள். புதுமைப்பித்தனுடன் பலகாலம் பழகிய தொ.மு.சியின் புத்தகத்தில் புதுமைப்பித்தன் பற்றி நாம் அறியாதது வெகு குறைவு. கஸ்தூரிபாய் யாரிடமும் பேசாமலா இருந்திருப்பார்! நேருவுக்கு படேலின் மகளிடம் என்ன வெறுப்பு? தி.ஜா ஏன் தனது எல்லா நாவல்களிலுமே பெண்களின் மீறல்களைக் கதைக்களமாக்க வேண்டும். ஆயிரமாயிரம் கேள்விகள். வாழ்க்கைக் குறிப்புகள் இங்கே சரியாகப் பதிவாவதில்லை.
திரில்லர் நாவல்களில் குறைந்தது இருபது வகை உண்டு ஆங்கிலத்தில். தமிழில் உலகத்தரத்தில் சொல்லும்படி ஒரு திரில்லர் நாவலும் கிடையாது. ஒரு Silent Patient-ஓ Gone Girl ஓ இங்கே வர இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் ஆச்சரியப்பட முடியாது.
True Crime என்பது கூட புனைவு போல் எழுதப்படுகிறது தகவல்களின் போதாமையால். Ted Bundyயுடன் பணியாற்றிய, பலமுறை அவரைப்பேட்டி கண்ட Ann Rule அவரது வாழ்க்கை சரிதத்தை ஆராய்ந்து எழுத எடுத்துக்கொண்டது பல வருடங்கள். அதனாலேயே அந்தப் புத்தகத்தை எதிர்த்து யாரும் ஒரு கேள்வி கேட்க முடியவில்லை.
Game of thrones, Lord of the Rings, Hobbit போன்ற Fantasy novels இங்கே இருக்கிறதா பாருங்கள். Fantasy என்பது கனவுத்தீவுக்குக் கூட்டிச்சென்று நிஜஉலகின் பாரத்திலிருந்து சிறிது நேரம் எனினும் விடுதலை தரவல்லது.
Contemporary Classics என்றால் Chinua Achebe, Isabel Allende, Balano, Ngugi wa Thiong’o என்பது போன்ற நூற்றுக்கணக்கானவர்களின் தரத்திற்கு இணையாக தமிழில் கடந்த பத்து ஆண்டுகளில் யாரைக் கூறுவீர்கள்?
போதாமைகள் என்று சொல்வதை விட இவையெல்லாம் வாய்ப்பிருக்கும் இடங்களாகவே சொல்லத் தோன்றுகிறது. மருத்துவர்கள் அனாடமி குறித்து, பாரிஸ் நகரில் பத்துமாதமேனும் இருந்தவர் அந்த நகரை பின்னணியாய் கொண்ட நாவல் எழுதுதல், பல ஆண்டுகள் பயிற்சியில் இருந்த வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை, Ravi Subramanian போன்ற வங்கியாளர்கள் அதன் Indepth தகவல்களை, சுதா சௌம்யா போன்றோர் கர்நாட்டிக் ராக நுணுக்கங்களை, பாலியல் தொழிலாளர்கள் அவர்களது அனுபவங்களை என்று துறை சார்ந்தவர்களோ அல்லது அதன் அடிப்படை தெரிந்தவர்கள் மிகுந்த ஆராய்ச்சியின் பின்னரோ எழுதாதவரை தமிழ் நவீன இலக்கியம் சிறிய வட்டத்தைச் சுற்றிச்சுற்றி வந்து நீண்டதூரம் பயணம் செய்ததாய் கற்பிதம் கொள்ளும்.
***
சரவணன் மாணிக்கவாசகம்
நிதர்சனமான உண்மை.தங்களின் கருத்து எனக்கும் தோன்றியது.நான் என் சிறுகதைகளில் தாங்கள் மேற்கூறிய சிலவற்றை முயற்சித்து எழுதியுள்ளேன்.”ஊரடங்கில் ஒரு காலமணிகரம்” என்ற என் மேஜிக் ஃபேண்டஸி சிறுகதை இம்மாத கணையாழி யில் பி 6 to 12 காணலாம்.