சிவசங்கர்.எஸ்.ஜே
“சுவரை சரி செய்யவோ
அல்லது தரையின் ஓட்டையை அடைக்கவோ
உங்களுக்கு ஒரு செங்கல் வேண்டுமென்றால்
நீங்கள் ஒரு செங்கலைப் பெற வேண்டும்,
செங்கல்:
மூன்று பரிமாணத்தில் வாழும் ஓர் திட ஜீவி,
எடை கூடியது, சொரசொரப்பாக அல்லது துளைகள் கொண்டதாக தன்னை உணரக் கூடியது
குவியலாக வாழ அனுமதிக்கப்பட்டால்
அட்டைப்பூச்சிகளுக்கோ, சிலந்திகளுக்கோ, சிறு வண்டுகளுக்கோ கூடாகவும் மாறக் கூடியது
உயிரோடிருக்கும் ஒரு செங்கலின் இருப்பு, சுத்தியலொன்றால் உடைபடுகையில்
ஒரே ஒருமுறை துணுக் என ஒலிக்கும்,
அழகிய ஒலி,
சுருக்கமான, ஓங்கிய ஒலி,
சுத்தமான செங்கல் ஒலி
ஒன்றின் மேல் ஒன்றாக அற்புதமாக ஓய்வெடுக்கும் ஒரு செங்கல்
அதை போலி செய்யும் வார்த்தைகளை விடவும் அதிசிறந்தது
இந்த கவிதைகளைக் கொண்டு நான் செங்கல்களையே உருவாக்க முனைகிறேன்”
- -மஸ்ஸிமோ கெஸ்ஸி (இத்தாலி)
கவிதை அறிவு சார்ந்து இயங்குகிறதா உணர்வு சார்ந்து இயங்குகிறதா என்பது கொஞ்சம் மூத்த கேள்வி. முழுமை பெறாமல் போன விவாதத்தின் கேள்வியும் கூட. புத்தியா? மனமா? அகமா? புறமா? புலனா? சிந்தனையா? தர்க்கமா? தனிச்சையா? என்பவை கிளைக் கேள்விகள்.
ருஷ்ய திரைக்கலைஞன் தார்கோவஸ்கி ஒரு திரை அனுபவமானது முதன் நிலையில் உணர்வுகளையே தாக்கும், அறிவு அதன்பிறகுதான் செயல்படும் என்கிறார். இந்த இடத்தில் முதல் நிலை தாக்கம் இரண்டாம் நிலைத் தாக்கம் என்பது உருவாகிவிடுகிறது. கூடவே வாசகத்தளம் படைப்புத்தளம் என்ற இரண்டும் உருவாகிவிடுகிறது.
வாசகத்தளம் (readerly) என்பது உணர்வு ரீதியானது. அது வந்தடையும் தளம் (receiver’s end). கவிதையின் தொழிநுட்பமோ, பார்வை நுட்பமோ அங்கு செயல்படுவதில்லை. உணர்வின் தூண்டுதலே முதன்மையாகிறது.
படைப்புத்தளம்( writerly) என்பது அறிவு ரீதியானது. அது தருபவரின் தளம் (addressee). புலன்சார் அனுபவமோ, வாழ்வியல் அனுபவமோ அங்கு மொழித்தளத்துக்கு மாற்றபட்டு (shift) பிரதியாக்கம் நடைபெறுகிறது. அதற்கு மொழியறிவு தேவைப்படுகிறது.
அதிகாலையில் தேவலோகத்தை அங்காடித் தெருவெங்கும் தூவிச் செல்லும் சாம்பிராணி புகைக்காரருக்கு தான் உருவாக்கும் மாய உலகைக் குறித்த எந்த அறிதலும் இருப்பதில்லை . நனவிலி சொற்களில் சில வந்து விழுந்தாலும் படைப்பவர் அணைந்து போகும் நெருப்பை வீச மறப்பதில்லை. அது முற்றிலும் நனவுத் தளத்திலேயே செயல்படும். தன்னுணர்வு இன்றி மொழியில் இயங்குவது பெரும் சவால். அதனாலேயே மொழியுலகத்தில் பிரவேசிக்கும் எல்லாம் தவிர்க்க இயலாமல் அறிவுத் தளத்தில் இயங்குதல் ஆகிவிடுகிறது.
கவிதை இயங்குவது மொழித்தளத்தில். மொழி ஆயிராமாயிரம் உள்ளடுக்குகள் கொண்டது. கூட்டு நனவிலி, கலாச்சாரம் ,குறியீட்டு- தொடர்ச்சி எல்லாம் உள்ளடக்கியது. மொழி உணர்வு ரீதியானதாக மேல் தளத்தில் நின்றாலும் படைப்பாக்க தருணத்தில் மிகுந்த ஓர்மையோடு (ப்ரக்ஞாபூர்வம்) அறிவுத்தளத்தில் நின்றே தொழில்படும் சாத்தியம் கொண்டது. ஒருவரின் மொழியறிவு ,மொழிகிடங்கு, சொற்சேகரம், வாழ்வியல் அனுபவம், சுற்றுப்புறம், புழங்கு வாழ்வு எல்லாம் படைப்புத்தளத்தில் தாக்கத்தை செலுத்தும் கூறுகள்.
கவிதை மொழிச்செயல்பாடா அறிவுச்செயல்பாடா என்கிற விவாதம் மேற்கில் எலியட்டின் காலம் தொட்டே நீடிப்பது பால் வலேரி அதற்கு கோட்பாட்டுத் தெளிவை அளித்தார். Verse Donnes Verse Calculus என்கிற அவரது பகுப்பு தமிழ் சூழலில் தொண்ணூறுகளுக்குப் பிறகான Verse Liberale வகைமைக் கவிதைகளுக்கும் பொருத்திப் பேச வேண்டிய ஒன்று. உணர்வு ரீதியான கவிதைகள் என மேலோட்டமாக சொன்னாலும் சுய முயற்சியின்றி தேடலின்றி கிடைக்கும் கருப்பொருட்களை குறித்து அவரது பரிசோதனைகளும் அதை நிராகரித்து அறிவு சார் கவிதைகளை அவர் கொண்டாடியதும் தொடர்ந்து எடுத்து செல்ல வேண்டிய பயணம். சுயதேடலின் வழி கண்டடைகிற கவிதைகளையே வலேரி கவிதைகளாக கொண்டார்.
புலன்களின் வேலை உணரவைப்பது. அறிவின் வேலை தொடர்பு படுத்துவது. வாழ்வில் நடக்கும் ஒரு சம்பவத்தை நிகழ்வை உணர முடியும். அறிவு அதை பகுக்கும் மற்றொன்றோடு தொடர்பு படுத்தும். மொழியுலகில் உணர்வைக் கடத்த அதை கவிதையாக்கம் செய்ய அறிவே செயல்படும். மொழி என்பதே அறிவின், சிந்தனையின் இயங்குதளம். உணர்வை அழகியலோடு தொடர்புப் படுத்தி விவரிப்பது ஒரு மரபு. அழகியல் குறித்த பழைய வரையறைகள் எல்லாம் உணர்வு ரீதியான புலன்களின் பிரதிபலிப்பைக் குறித்தே பேசின .
அலெக்சாண்டர் பவும்கார்டன் ஐஸ்தநோமாய் என்கிற கிரேக்க சொல்லிலிருந்து உருவாக்கியதே இன்றைய அழகியல்என்கிற சொல்லாட்சி. இயற்கையின் எல்லா படைப்பும் புலன்களின் தொடர்பில் நல்ல உணர்வைக் கொடுப்பது அழகியல் என பொதுமைப் படுத்தப் பட்ட வரையறையே அழகியலின் அடிநாதம். பட்டாம்பூச்சி, பூக்கள் எல்லாம் தங்க விகித (Golden ratio) தெய்வீக விகித (Divine proportion) அளவுகோல்களில் அழகியலின் விதிகளை சமைத்தன. ஆனால் தனிநபர்கள்/ குழுக்கள்/ குழுக்களின் தனித்துவம் அவரவரது ரசனை கணக்கில் எடுக்கப்படாத இந்த வரையறைகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படவில்லை. ஒருவருக்கு இனிப்பு பிடிக்கும் என்றால் மற்றவருக்கு காரம் பிடிக்கும் என்கிற யதார்த்தம் கவனமாக தவிர்க்கப்பட்டது. ரோஜாவின் நறுமணத்தை விரும்பாதவர்களும் உலகத்தில் இருப்பது சாத்தியம்தானே. பொதுமையின் அதிகாரம் மொழிக்குள்ளும் ஊடுருவியது. வாழ்க்கை சுகமானதாக இருந்தால் இனிப்பாகவும் சுமையானதாக இருந்தால் கசப்பானதாகவும் உணர்வேற்றம் செய்யப்பட்டது. எப்போதும் சாத்தான்களின் விகிதம் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
இன்றுவரை தொடரும் இந்த உணர்வேற்ற உணர்ச்சியேற்ற மொழி அதிகாரத்தை மாற்றும் முகமாய் தோன்றியதே விடுதலை கவிதைகள்(Verse Liberale). விடுதலை கவிதைகள் என்பதை விரிவான பொருளில் சமூக விடுதலைக்கான கவிதைகள் என்றோ அல்லது பழைய கவிதை வரையறைகளிருந்து விடுதலையான கவிதைகள் என்றோ பொருள் கொள்ளலாம். உணர்சியேற்றம், அறிவேற்றம் போன்றவற்றின் அத்தனை பழம்பொருட்களையும் உருவ உள்ளடக்க ரீதியில் மறுகடந்தவை விடுதலைக் கவிதைகள். நவீனம் கடந்த கவிதைகள், பின்காலனியக் கவிதைகள், இனவரைவியல் கவிதைகள் எனப் பல பேர்களில் வழங்கப்படும் இக்கவிதைகளுக்கு சிறப்புப் பெயராய் Verse Liberale அமைகிறது. இவை அறிவும் உணர்வும் இணைந்த கலப்பினக் கவிதைகள். தரப்புகளுக்கு எப்போதுமே மூன்றாவது பக்கமொன்று உண்டுதானே?
தனக்கேயான அரசியல் தனக்கேயான அழகியல் அதை எதிர் அழகியல், விடுதலை அழகியல், மாற்று அழகியல், சமத்துவ அழகியல் என்று முன்வைத்தது. மானுட அறவியலும் சகோதரத்துவமும் அதன் மௌன முழக்கங்கள். பழைய அழகியலின் பூடகமான தெய்வீக இடம் இங்கு சமூக இடமாக சாத்தான்களின் இடமாக இடமாற்றம் அடைந்தது.
“உண்மையே கடவுள் கடவுளே அழகு” என்கிறது “சத்யம் சிவம் சுந்தரம்” எனும் தொடர். சரண்குமார் லிம்பாலே அழகியல் எப்படி தெய்வீகமாக்கப்படுகிறது என்பதை இத்தொடரை விமர்சித்து சுட்டுவார். படைப்பை தரிசனம் உள்ளொளி என்கிற தெய்வீக சொற்களுக்குள் அடைத்தலை விடுதலைக் கவிதைகள் தகர்ப்புக்கு உள்ளாக்கின. தனிமனித அழகியலிலிருந்து சமூக அழகியலுக்கு; சமத்துவ அழகியலுக்கான பாதையை விடுதலைக் கவிதைகள் திறந்து விட்டன.
இந்திரனின் அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம், சுகுமாரனின் பாப்லோ நெருதா, எம்.ஏ.நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகள்.. ஏராளம் சிற்றிதழ்களின் பங்களிப்பு மாற்று அழகியலுக்கான முன்னெடுப்புகளில் கரம் கோர்த்தன. அறிவுப்பெருக்கமும் தகவல் பெருக்கமும் கவிதைகளையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தின. துறைசார் விரிவும் தேச எல்லைகளின் விரிவும் கவிதைகளின் பரப்பை விஸ்தீரித்தன. சாத்தான்களின் உலகம் விரிவடைந்தது.
இப்போது முக்கியமான கேள்வி வருகிறது. விடுதலைக் கவிதைகள் வெறும் அறிவு கவிதைகளா? (போதம் கொண்டதா) இல்லை வெற்று உணர்வுக் கவிதைகளா? (எதிர்ப்புணர்வு) இதற்கான பதிலை எளிதாய் சொல்லிவிட முடியாது. அழகியலை ஒழுங்கியல் என்கிற சட்டகத்திற்குள் பூட்டிய பண்டைய வரையறைகளைக் கலைத்து ஒருமை என்கிற தளத்துக்கு மாற்றம் செய்தவை விடுதலைக் கவிதைகள். தனி நான்களிருந்து கூட்டு நான்களை நோக்கிய நகர்வு அது. விடுதலை எழுத்துக்களின் செயல்தளம் உணர்வா அறிவா என்பதை பிரித்தறிய முடியாது. அது கூட்டுணர்வையும் கூட்டு அறிவையும் சார்ந்தது.
செய்யப்படுவது செய்யுள் படைக்கப்படுவது கவிதை என்ற பழைய வரையறை செல்லாததாகிவிடுகிறது. ஒரு கவிதை உணர்வு சார்ந்து இயங்குகுகிறது என்பதற்காக அதை நிராகரிக்க முடியாது. ஒரு கவிதை அறிவு சார்ந்து இயங்குகுகிறது என்பதற்காக அதை நிராகரிக்க முடியாது. கவிதையாக இயங்குகிறதா என்பதே கேள்வி.
கட்டுரையின் தொடக்கக் கவிதையான “செங்கல்கள் “ உணர்வுக் கவிதையா? அறிவுக் கவிதையா? இல்லை கவிதை வரையறையிலிருந்து விலகிய கவிதையா? உணர்வு என்றால் யாருடைய உணர்வு? அறிவென்றால் யாருடைய அறிவு? அது கவிதையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதா? கேள்விகள் தொடரட்டும்.
செங்கல்களை செய்வதைப் போலவே ஒவ்வொருவரும் கவிதைகளை செய்கிறோம் கவிதைகளைக் கொண்டு செங்கல் செய்யும் வாய்ப்பு இங்குண்டு…
செங்கலுக்கு உயிர்கொடுக்கும் போது அது கவிதையாகிறது….
செங்கல்கள் சாகும்போது எழுப்பும் அலறலை கேட்பவன் கவிஞனாகிறான்….
செங்கல் கவிதையாய் மாறி நிற்கிறது என்றென்றைக்குமாய்…..
பி.கு: I agree that two and two make four is an excellent thing; but to give everything its due, two and two make five is also a very fine thing.
Fyodor Dostoevsky
— Notes from Underground
***
சிவசங்கர்.எஸ்.ஜே
புனைவெழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். அம்பேத்கர் கடிதங்கள் போன்ற மொழியாக்கங்களைச் செய்தவர். குமரிமாவட்ட பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார். யாவரும் பதிப்பகம் வாயிலாக யா-ஓ மறைக்கப்பட்ட மார்க்கம் 1&2 வெளிவந்திருக்கிறது. மின்னஞ்சல்: prismshiva@gmail.com