- துயில் எழுப்புதல்
அறுவை சிகிச்சைக்கு பின்னான துயில் எழுப்புதலில்
அவர்கள் கன்னத்தைத் தட்டுகிறார்கள்
கைகளில் கிள்ளுகிறார்கள்
பெயர் சொல்லி உலுக்குகிறார்கள்
வலி மின்னி வெட்டுகிறது
பின்னிரவுக் கலவிப் பொழுதொன்றை
ஒத்ததாய் இருக்கிறது
அது
பிரிக்க முடியா இமைகளுக்குள்ளே
கருவிழி இறைஞ்சுகிறது
இன்னும் கொஞ்சம் உறங்கட்டுமா
நான் அசையாமல் கிடக்கிறேன்
அவர்கள் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள்
கிள்ளிக்கொண்டே இருக்கிறார்கள்
2. நிதானித்திருக்கும் ஆயுதம்
என் உள்ளங்கைக்குள் இருப்பது
உனக்கெதிரான ஆயுதம் தான்
என்பதில் அத்தனை உறுதியுடன்
இருக்கிறாய்
நான் சில நேரம் பூக்களை வைத்திருக்கிறேன்
சில நேரம் பனிக்கட்டிகளை
சில நேரம் நறுமணத் தைலத்தை
சில நேரம் பளபளக்கும் ஆயுதத்தை
போர்க்களத்தில் நிற்பவனுக்கு
உறக்கம் வருவதில்லை
நீ விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான் உறங்கிக்கொண்டிருக்கிறேன்
நீராடிக்கொண்டிருக்கிறேன்
சோலையில் உலாப்போகிறேன்
எதிரியை களத்தில் இறக்கிவிட்டு
உப்பரிகையில் ஆப்பிள் சீவிக்கொண்டிருப்பது
அலாதி சுகம்
என் உள்ளங்கைக்குள் நிதானித்திருக்கிறது
உனை வீழ்த்தும்
அந்த ஒரு நிமிடம்
நீ
விழிப்புடன் விழித்திருக்கிறாய்
நான்
ஆப்பிள் தின்று கொண்டிருக்கிறேன்
3. மௌனத்தின் ஒலி
மண்டியிட்டு அமர்ந்து
நிலம் நோக்கித் தலை பணிகிறேன்
மடை உடைந்த வெள்ளமென
ரத்தம் தலை நோக்கிப் பாய்கிறது
என் இரவுகளை
ஓலங்களால் உண்டவர்கள்
கூடாரம்
இந்த மண்டையோடு
இவர்கள் குரல்வளையை
என் உதிரத்தால் நிரப்ப வேண்டும்
மடை உடைந்த பெருவெள்ளம்
திணறும் கானகம்
குய்யோ முய்யோ என்று
எழுந்து பறக்கிறது
கதறலின் முகங்களில்
ரத்தத்தைப் பீய்ச்சியடித்துச் சாய்க்கிறேன்
மெல்ல மெல்ல அடங்குகிறது வனம்
எழுந்து அமர்கிறேன்
குப் குப் என்று ஒரு ரயில்
சத்தமின்றி
நழுவி வெளியேறுகிறது
மௌனத்தின் ஒலி கேட்க
ஆனந்தமாய் தான் இருக்கிறது
4. சடலம்
நான் மலர் என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் நுகரத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் கனி என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் புசிக்கத் தருகிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் சிலை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் வருடத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்
நான் வீணை என்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் மீட்டத் தருகிறேன்
நீ இருள் எனகிறாய்
நான் அன்பென்கிறேன்
நீ இருள் என்கிறாய்
நான் முத்தமிடுகிறேன்
நீ புணரத் தொடங்குகிறாய்
நான் இருள் என்கிறேன்
***
சுஜாதா செல்வராஜ் – தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். “காலங்களைக் கடந்து வருபவன்” இவரது முதல் கவிதைத் தொகுப்பு .
நல்ல கவிதைகள்