.
திட்டமிட்ட சொற்களால் கீறிச்சுவைக்கும்
அநாதரவற்ற கவிதையின் குருதிகள்
உன் கால் தடங்களில் வழிந்தோடக்கூடும்
அநாதரவற்ற ஆன்மாக்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும்
துளிக் காலம் யுகக்கணக்கானது.
நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை
என் விரல்கள் தீண்டிய முதல் ஸ்பரிசம்
உன் நெற்றிப்பிறை
அந்தரங்கத்தின் ஆன்மா முதற் காதலை
உன்னிடம் பாட நினைக்க
செவிப்புலனற்ற
இருட்டுப் பூனையொன்றாய் என்னை உருட்டிச் செல்லுகிறாய்.
காதலுக்கான காமத்தின் அதிகாலையும்
காமத்துக்கான காதலின் அதிகாலையும்
கிழக்கில் விடிய
அநாதரவற்ற அன்பின் பாதைகளில்
விசா் பிடித்த நாயாய் புறக்கணிப்பை கக்கிப் போகிறாய்
எப்போது உணரக்கூடும் காமத்தை தாண்டிய
குப்பி விளக்கில்
ஒளிருமெனது காதல் பெரும் சோதியை
.
சாளரத்தின் திரைச்சீலைகளை
மௌனங்களின் தென்றல் தீண்டிச்செல்ல
உடை பட்டு ஓடும் காதலின் இசையை
அணைகட்டி வைக்கிறது உன் காற்சலங்கை
விண் மீன்கள் குத்திய வானம்
மேகத்தின் மேலே நகர
மூக்குத்தி அணிந்த படி அலைகிறது
உன் நிலா முகம்
ஜீவித பெரு வெளியில் செட்டைகள் கழற்றும் பாம்பென
ஊர்ந்து செல்லும் உன் விழிகளின் நளினங்கள்
இதயத்தின் சிசுவை
பல முறை தீண்டிச்செல்கிறது
காதலின் ரேகைகள் உதடுகளில் புலம் பெயர
முத்த நிவாரணங்கள் கேட்கிறது யாருமற்ற
அகதியின் கவிதை.
காதலின் இசை மீட்டுமென் தனிமைகளின் மர்மம்
பச்சிளம் குழந்தையென
உன் மவுனங்களில் கதறுகிறது
ஏணைகளற்று
சிருஷ்டியின் பூரண அழகால்
புறக்கணித்த ஆயிரம் கவிதைகளின் புதுச் சொற்கள்
வெந்தணளில் துடிதுடித்து மாய்கிறது .
.
துயர இடுக்குகளிடையே ஊறிக்கசியும்
நிராதரவற்ற மழலையின் குறியீடாய்
கதிரைக்குள் புதைந்து மாலையை பார்க்கிறாள் சானு.
விடுதலையின் கிழக்குகளில்
உதயமாகியிருந்த தந்தையின் முகத்தினை
மேற்குகளுக்கு கையசைத்து தந்து விடச் சொல்லும்
அவள் கண்களில் பனிக்கும்
கண்ணீரின் வாதை
துயர வெளியின் ஒழுங்கைகளில்
பூவரசம் மரமென வேரூன்றி நிற்கிறது.
துவக்குகள் வாழ்வெழுதிய தலைவிதிகளோடு
பரிதவிப்பின் சிரிப்பு வரிசையில்
அனுதாபத்தின் லாபங்களை வேர் பிடுங்கி எறிய
முட்கம்பிகள் வரியப்படுகின்றது
இவள் விடியல்களில்
நிகழ்கால வாசல் எங்கும்
தந்தையற்றவள் எனச் சொல்லி
அநாதை எனும் தலைப்போடு
உலவித்திரியும் அவள் மனத்தில்
கோழைகளென தலைப்பு வைத்திருக்கக்கூடுமெனக்கு .
மண்ணுக்காய் மடிந்த புனிதனின் பிள்ளை.
.
துயிலுரியும் கனவுகளின் மேனிகளில்
தாபங்கள் செதில்களென படரும்
ராத்திரி மேல்
நிர்வாணமாக வீழ்கிறது
நிராயுதபாணியான சொற்கள்
தலையணைகளை ஆக்கிரமிக்கும்
முத்த இராணுவங்களின்
கரங்களில் பேரன்பு சுடர
சரணடைதல் தவிர்க்கமுடியாததாய்
கைகளில் விலங்குகள் மாட்டி
பிரபஞ்சம் தாண்டி காதலின் சோதியெரியும்
சிறைகளில்
என்னைச் சேர்க்கிறது
உன் கூந்தலின் ஒற்றை இறகு
இதயக் கங்கைகளில் உன் கால் சலங்கை ஒலிக்க
ஈரத்தோடு வேர்விடுமென்
காதலின் ஓசைகளை
வானத்தின் விண்மீன்கள்
அணிந்து கொண்டு நீந்துகின்றது
விரல்கள் தொட உருகும் வினோத உயிராகி
வெட்கங்களை கொடையளித்து
உதடுகளால் என்னை உலரச் செய்யும்
உன் புன்னகையை போர்த்து
கானலை தேன் என பருகுமெனக்கு.
– சு. அகரமுதல்வன்