சென்னை தங்கசாலையில் இருந்து தங்க நாற்கர சாலை வரை….

0

-யவனிகா ஸ்ரீராம்

    சென்னை சென்ட்ரல் நிலையமருகில் இருக்கும் வால்டாக்ஸ் சாலையில், மேலே தங்கும் விடுதியுடன் கூடிய உடுப்பி விலாஸ் உணவகங்களில் நான் ஒரு காலத்தில் வியாபார நிமித்தம் சென்று தங்க வேண்டியிருந்தது. யானைக்கவுரி தாண்டி வலதுபுறம் கொத்தவால் சாவடியில், எனக்கு வணிகம். மின்ட் ரோடு எனும் தங்க சாலையில் ஏராளமான வடநாட்டவரின் மொத்த வியாபர கடைகளும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லாரிகளில் வந்திறங்கும் காய்கனி, கருவாடு, கொட்டைப்பாக்கு முதல், மிட்டாய்கள், பான் வெற்றிலைகள், பீடாச் சரக்குகள், உலர் பழங்கள், மூலிகைச் சாமான்கள், பழைய பேப்பர்கள் என நாலாவிதச் சாமான்கள் நாள் முழுக்க விற்றுத் தீரும். மாலையில் நான் வசூலுக்காக குடவுனில் உட்கார்ந்திருப்பேன். காலருகே எலிகள் வந்து விளையாடிவிட்டு, பெரும் கிடங்கு பொந்துகளில் மறைந்து போய்விடும். மறுநாள் காலை சாவடி முழுக்க மெத்தை போல நிரம்பிக் கிடக்கும் காய்களின் கூளங்களையும், கழிவுகளையும், அள்ளிப் போக வரும் கார்ப்பரேஷன் லாரி மனிதர்கள் தெருக்களைச் சுத்தமாக்கிவிட்டுப் போய்விடுவார்கள்.

    மூத்திர வாசனையும், பழைய மஞ்சள் கட்டிடங்களும், உப்புக் கிட்டங்கிகளும், கிளாஸ்காரர்களின் கை வண்டிகளும், காட்டு யானைகள் போல உறுமும் ‘பார்கோ’ லாரிகளும் சாவடியின் முடக்குகளில் திரும்ப முடியாமல் நிற்க, பாதசாரிகள் தவிர யாரும் கடந்து போய் விட முடியாதபடி நெரிசல் போக, மழைநாளில் சொல்ல வேண்டியதே இல்லை. சகதி மயம், நாற்றம் வினோதமாயிருக்கும். பலகோடி ரூபாய்கள் செலாவணியாகும் தென்னகத்தின் மிகப் பெரிய சந்தையாய் அது இருந்தது.

download

    இடையில் எங்காவது ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரர் குத்துக்காலிட்டு அமர்ந்து பீடியை வாயில் வைத்துக் கொண்டு, தூ…..வெனக் காறி உமிழ்ந்தபடி ‘தே….பசங்க….எங்கிருந்தோ வந்து இங்க புழைக்கிறானுவ….’ என்றபடி கைலியை நிர்வாணம் தெரிய அவிழ்த்துக் கட்டுவார். புரோக்கர்கள், கமிஷன் மாப்புகள், தங்க நகைக்கடைகள், லேவாதேவிக்கடைகள், சாயப்பொருட்கள் என பலதும் விற்கும் குறுக்கு நெடுக்குமான சந்துகளின் கிழே கடைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க, அவற்றின் மேல் மாடிக் காரை வீடுகளில் மார்வாடிப் பெண்கள் துணிகளைக் காயப் போட்டுக் கொண்டும், சப்ஜிகளை தயார் செய்து கொண்டும் இருப்பார்கள் வலதுபக்கம் மாராப்பு சேலை அணிந்து, உதடுகளில் லிப்ஸ்டிக் மினுங்க கை நிறைய வளையல்களுடன், கால்களில் மெகந்தி பூசி அவர்கள் பிளாஸ்டிக் வாளிகளில் கோதுமை அளக்கப்போகும் அழகே தனி.

   சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், போக சேலம் பகுதியில் இருந்து அதிகம் பிழைப்பிற்காக வந்தவர்கள் பிளாட்பாரங்களில் வசிப்பது போக, சிலர் வட்டிக்கு வாங்கிய குறைந்த கொள்முதலில் காய்கறிக் கடைகளை தெருவிலேயே பரத்தி சில நூறு ரூபாய் லாபம் பார்த்து வாழ்க்கையை ஓட்டுவார்கள். பூக்கடை போலிஸ் ஸ்டேசனில் மாமூல்கட்டுவது அவர்களது வழக்கம்.

    நடுத்தரக் குடும்பத்தார்கள், அலுவலகவாசிகள் இத்தகைய மார்க்கெட்டிற்குள் புகுந்து மலிவாகப் பேரம் பேசி மொத்தமாக பை நிறைய வாங்கிக் கொண்டு பாரிஸில் டவுன் பஸ் பிடித்துப் போய்க்கொண்டிருப்பார்கள். கார் கம்பெனிகளும், மோட்டார் சைக்கிள் விற்பனையகங்களும், சீட்டுக் கம்பெனிகளும், துறைமுக ஏற்றுமதி இறக்குமதி அலுவலகங்களும் பெருகி, சென்னை பெருந்தொழில்களுக்கு மாறிக்கொண்டிருந்த நேரம்.

    வேஷ்டிகள் குறைந்து, பேண்ட் டீசர்ட் என மார்டன் ஆண்கள் பலவிதமான கேச அலங்காரங்களுடன் வீதி கடப்பார்கள். சட்டையணியாத உழைப்பாளிகளையும் பார்க்க முடியும். முதியவர்கள் கை இல்லாத கதர் பனியன் அணிந்து நெற்றியில் திருநீறுடன் கடைகளில் கல்லாவில் இருப்பார்கள். எங்கிருந்தாவது நெற்றியில் நாமம் போட்டவர்கள் வந்த படியே இருப்பதைப் பார்க்கலாம். குடும்பத் தெருக்கள் குறைந்து நிறுவன நகரமாக சென்னை 80களில் அகலச்சாலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.

    டம்பப்பைகளுடன் நவநாகரீக நார்மணிகள் (ஆனந்த விகடன் உபயம்) கவுன், மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுகள் அணிந்து, லோஹிப்புடன் நடைபாதைகளில் செல்லும் சென்னை நகரம் அந்நாளில் இரவு நடன விடுதிகளையும், குதிரைப்பந்தயங்களையும் கொண்டிருந்தது. கபாலி, ரங்கன், முனியம்மா என்று பெயர் இருந்தால் அவர்கள் பூர்வீக சென்னைவாசிகள்.

   அந்நாளில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களின் உடையலங்காரம் தன்னிச்சையாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். பலவிதமான கொண்டைகள், காது வளையங்கள் என மவுண்ட் ரோடும் மெரினா பீச்சும் இரசனைமிக்கதாக இருந்தது. ரஷ்ய, ஜெர்மனி, பிரஞ்ச் பண்பாட்டு மையங்கள், தூதரகங்கள் என ஒருவிதக் கலாச்சாரப் பரிவர்த்தனைகள், மேல்தட்டு, மத்திய தரம் வரை பெண்களின் தோற்றங்களில் பல்வேறு ஈடுபாடுகளைக் காட்டின. இசை, ஓவியம் என ஒரு புறமும், சினிமா ஒரு புறமும் சென்னையைத் தலைநகரமாக நிற்பதற்க்கு ஏதுவாய் இருந்ததையும் நினைவு கூர்கிறேன். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற கிளாசிக் இன்றும் பாடலாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    இன்றைய சென்னைப் பெண்கள் அனைவரும் வடக்கத்திய சுடிதாரில் நுழைந்துவிட்டார்கள். வடநாட்டு முகலாய உடையான அது முழு உடலையும் மறைக்கக் கூடியதாக, கூட்டத்தில் கலந்து போகும் ஒரேபடித்தான, தனித்தன்மைகள் ஏதுமற்று நிறைந்து விட்டதையும் யோசிக்க வேண்டியதிருக்கிறது. எல்லா வர்க்கப்பிரிவுகளிலும் சுடிதார் அத்தியாவசியமானதாகிவிட்டது. கல்லூரி, பள்ளி ’யுனிபார்ம்’-லும் அது முழு அடையாளத்தையும், வணிக அடையாளத்தையும் பெற்றுவிட்டது. அதையடுத்து ஜீன்ஸ் பேண்டும், ஆண்களின் சட்டை போன்ற முக்கால் கை மெல்லிய பருத்தி ஆடைகளையும் அணிந்து கூந்தலை இரப்பர் பேண்டு போட்டு பெண்கள் எளிமையாக காது வளையங்களோடு தோற்றமளிக்கிறார்கள்.  உலகம் முழுக்க அமெரிக்க மயம் ஆக்கிரமித்து விட்டது என்பதற்கு இன்றைய சென்னையும் சாட்சி. இப்பெண்களை வீட்டில் போய்ப் பார்த்தால் பனியன் துணியிலான லெக்கின்ஸும் காலர் வைத்த சட்டைகளுமாய், அல்லது பிரில் பாவடைகளில் இருப்பதைக் பார்க்க முடிகிறது. எல்லாம் நண்பர்களின் தங்கைகள் தான் என்கிறான் மணி !

     எனக்கு ஒருகாலத்தில் இருந்த வளமையான திரேகத்துடன் வாலிபமான அழகுடன், சருமங்கள் இயற்கையாய் மின்னிய ஐந்தரை அடிக்கும் குறையாத பெண்களின் உலகம் எங்கேயென கேட்கத் தோன்றுகிறது.

     மிகவும் ஒல்லியாக அல்லது அதிகம் பருத்த ஆண் X பெண் உடல்களின் சமச்சீரின்மை குறித்தும் இவர்களின் ஆரோக்கியம் குறித்தும் வீட்டு நலன்கருதி வெளியே விடுதிக் கலாச்சாரங்களில் ஏற்படும் உடலியல், மற்றும் விருப்ப வேட்கைகள் எவ்வாறு நோய்த் தன்மை அடைகிறது என்பது குறித்தும், பல்வேறு கைவினை  மற்றும் நெசவு, ஆபரணங்கள் செய்து பிழைத்த பல்வேறு தொழிலாளர்களின் நிலைகுறித்தும், மறைந்து விட்ட பல உற்பத்திகள் குறித்தும் இந்த ஒற்றைமயமான கலாச்சாரத்தின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை கேள்விகளாக எஞ்சுவதைத்தான் குறிப்பிட வேண்டியதிருக்கிறது.

    ஆக பெண்களுக்கான ஆடை மற்றும் முகப்பூச்சுக் கிரீம்கள், சோப்புகள் என காஸ்மெட்டிக்ஸ்-ல் வருடம் 23 ஆயிரம் கோடிகளைச் சுருட்டுகிறது அமெரிக்க பண்பாட்டு நிறுவனங்கள் என்கிறது ஒரு புள்ளி விபரம்.

    சௌகரியமான உடை, தேவைக்கேற்ற அலங்காரங்கள், நறுமண திரவியங்கள் அதற்கான விளம்பரங்கள் ஓருபுறமிருக்க, தூசு, மாசு தவிர்ப்பதற்காக முகமூடி போட்டுக் கொண்டு ஸ்கூட்டிகளில் பறக்கும் ஆவியுலகப் பெண்களைக் கண்டால்தான் பதற்றமாக இருக்கிறது.

    மற்றபடி இந்தக் கட்டுரை ஒரு பிரதேச மக்களின் வாழ்வின் பண்பாட்டு ஞாபகங்களை (சாதிமதம் தவிர்த்து) வேளாண், வணிக விழுமியங்களை, தன் தனித்த கலைப்பண்புகளை எப்படி தன் உணர்வில் ஒரு வரலாற்று நடத்தையாகக் தக்க வைத்திருக்கிறது என்பதையே அதன் ’கிளாசிக்கல்’ மேலும் “நியொ கிளாசிக்கல்” வழியே பார்க்க முயல்கிறது.

      தமிழ் நிலம் என்பது சங்க இலக்கியம் தொட்டு திருக்குறள் வழியாக தொல்காப்பியனின் விரிந்த சொல்லாடலிலும், முற்கால, பிற்கால, சேர,  சோழ, பாண்டியர்களோடும், அவர்கள் தழுவிய சமயங்களோடும், சிலப்பதிகாரம், ஔவை, கபிலர், பரணர் வழி பக்தி இலக்கியங்களையும் கொண்டு ராமாயண, மகாபாரத நிகழ்வுகளையும் சுமந்து, கூத்து, தொன்மம், நாட்டார் கலைகள் எனவும் உட்சென்று சுதந்திர கீதங்கள், வள்ளலார் பாரதி, பாரதிதாசன் எனவும் பற்றுக் கொண்டு பெரியார், அண்ணா போக கல்கி, சாண்டில்யன், ஜெயகாந்தன், சோகமித்திரன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயாணன் எனவும் நவீவினமடைந்து இடையே பட்டிமன்றங்கள், சொற்பொழிவுகள், ஜல்லிகட்டு, சிலம்பாட்டம், அம்மன் கொடைகள், எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதசான்,   டி.எம்.சௌந்தரராஜன், கலைஞர், ஜெயலலிதா எனவும், மேற்கத்திய வரவான இந்தியாவில் 1939-ல் ஆரம்பித்த சினிமாத் தியேட்டர்கள் வழியேயும் சில பாவனைகளோடு காங்கிரஸ், திராவிட, பார்ப்பன இந்தி எதிர்ப்புப் போராட்டம் எனவும் மக்கள் கிளாசிசத்தை வகுத்துக் கொண்டிருப்பதாய் நினைவு கூர்ந்தால் 1990-களுக்கு பிறகு உலகமயமாதலின் விளைவுகளில் உண்டான நியோ கிளாசிசம் எவற்றைத் துண்டித்துக் கொண்டிருக்கிறது எனவும் பார்க்க வேண்டியதிருக்கிறது.

  மேற்சொன்னவை சம்பந்தப்பட்ட நூல்கள், ஆவணங்கள் இன்று எத்தனை பேர் வீட்டில் எடுத்துப்பார்த்துக் கொள்ளும்படியாக இருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறேன். வீட்டுப்பத்திரமும், பிள்ளைகளின் புத்தகங்களும் போக வீடு முழுக்க சாமான்களும், பண்டங்களும், வங்கி மற்றும் ATM கார்டுகள், வாகனங்கள், செல்பேசிகள், யுனிபார்ம்கள், போக மக்கள் அனைவரும் எதோ ஓரு யூக பேர முயற்சிகளில் ஒருவரையொருவர் ஏமாற்றவும் முயல்கிறார்கள். தமிழ் நாட்டில் இன்றும் சினிமா, பிம்ப, ஊடக அழகியல் முயற்சிகளே பாலியலாக அரசியலைத் தீர்மானிக்கிறது.

    மேற்சொன்னவை வழியே மட்டும் தமிழ் மன அமைப்பு உருவாகி இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. அவை முற்றிலும் வேறு மாதிரியாகவும் இருக்கலாம். பல்வேறு கட்சி அரசியல்வாதிகள், சிறுபான்மை மதத்தவர், சிறுபான்மை மொழியினர், தலித்துக்கள், பெண்கள், சாதியத் தலைமைகள், தமிழ் தேசியவாதிகள், நவின தொழிற் நுட்ப வல்லுனர்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என இன்றளவில் தமிழ் நிலம் என்பது எத்தனை வரைபடங்களில் இருக்கும் என்பதை யார் ஊகிக்க முடியும். பி.ஜே.பி க்கும் தமிழ்நாட்டு அக்கறை இருக்கிறது !

    மீண்டும் சென்னைக்குத் திரும்பினால் இன்றைய சென்னை படைப்பாக்கமற்ற உளவியலற்ற யந்திர நகரமாக, புறநகர் எங்கும் தொழிற்சாலைகள் நிரம்பி, வேகமெடுத்து பான் கார்டு அடையாளமாய், எண்களாய் உறைந்து விட்டிருப்பதைக் காண்கிறோம். பன்னாட்டு நிறுவன அலுவலகங்களும், மாநில நிர்வாகக் கட்டிடங்களும், நீதி மன்றங்களும், துறைமுகங்களும், பெரும் உணவு விடுதிகளும், வானுயர்ந்த கட்டிடங்களுமாய் பெருகி பாதுகாக்கப்பட்ட பகுதிகளும், குடியிருப்புகளும், வந்துவிட்டன. IT எனும் ஒரு பொருளியல் பெல்ட் சென்னை நகரை வளைத்துக்கொண்டு விட்டது. கேளிக்கை நிலையங்களில் மூலதன உயர்வை கரைத்து குடித்து கிராமங்களைச் சுரண்டும் டெர்மினேட் நகரம் தான் சென்னை.

   சென்ட்ரல் ரயில் நிலையம், வண்டலுர் விலங்குப்பண்ணை, வடபழனி முருகன் கோவில், கன்னிமரா நூலகம், மெரினா பீச், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, கோடம்பாக்கம் AVM, அம்பட்டன் வாராவதி, ரத்னா மெஸ், ராயர் கிளப் ஒற்றைவாடைத் தியேட்டர், ராஜகுமாரி திரையரங்கு, இராயப்பேட்டை மேன்ஷன், மௌண்ட் ரோடு மசூதி, காவேரிப்பட்டினம், சாந்தோம் கிறித்துவ ஆலயங்கள், அடையாறு ஆலமரம், எல்லாம் போக வருகிறவர்களுக்கும், வந்து போகிறவர்களுக்கும் உதவிய ரிக்‌ஷா தொழிலாளிகள், கண் மை பூசிய பழைய பாலியல் தொழிலாளிகள், திருநங்கைகள், குப்பங்கள், கஞ்சா வியாபாரிகள் என யாவும் கிளாசிக்குகளாக இருந்து வந்த நிலையில், இன்றைய சென்னை அதிக மேம்பாலங்களைக் கொண்டும், பன்னாட்டு விமான நிலையங்களோடு உலகின் மிகப்பெரிய நகரங்களோடு போட்டி போட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ரூ.17000-த்திற்கு சென்னப்பன்  என்பவரிடம் பிரிட்டிஷ்காரன் வாங்கிய கடலோர சென்னையின் இன்றைய மதிப்பை யாராலும் கணித்து விட முடியுமா?. பிறகு நான் அந்த குடவுனில் இருந்து ஊர் வந்துவிட்டேன்.

    புதிய நவதாராளவாத மைய அரசுகள் வலுவடைந்து வரும் வேளையில் மக்களின் மனமாற்றமும், தகவலமைப்பும், புதிய போட்டிகளில் நுழையும் தொழில்  நூட்ப அரசும் ஒரு ஆற்றலாக மாறி மூலதனத்தை நோக்கிப் பாயும் போது யூக பேர வணிகங்களின் குற்ற நிலமாக தமிழ் நிலம் நவீனமடைந்திருப்பதை என்ன சொல்ல..?. தர்மமிகு சென்னை மிரட்டல்களையும், பங்கு வர்த்தகத்தையும் ஒருங்கே பெற்று NGO நகரமாக மாறிவிட்டது. தமிழ்நாட்டின் அத்தனை மாவட்டங்களும், இப்படி மாறுவதிலும், பிளவுமனம் கொள்வதிலும் நில அடிப்படையில், சாதீய அடிப்படையில், சலனம் கொள்வதையும் கவனிக்க வேண்டும். எங்கும் அமெரிக்கமயம் துவக்கமாகி விட்டபின் சென்னையை வைத்து, ஒரு நாவலை நியோ கிளாசிசமாக எழுத முடியுமா? கோணங்கி, ஜெயமோகன், ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா தொடர்ந்து பலரும் நியோ கிளாஸிஸம் வகையில் எடுத்து வரும்போது பேரளவும் வாசகர்களை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை நவீன இலக்கிய வளர்ச்சியாக எடுத்துக் கொள்வதில் ஒரு உண்மை இருக்கிறது என்றாலும் மார்க்குவஸ், குந்தர் கிராஸ் என பலரும் தங்கள் தேசத்தின் மைய நகரங்களை வைத்து எழுதிய நாவல்கள், உலகளவில் போற்றப்படுவதை இங்கு ஞாபகமூட்டலாம். உலகின் மிகச் சிறந்த செவ்வியல் மொழி ஒன்றைக் கையில் வைத்திருக்கும் தமிழன், கப்பலோட்டிய தமிழன், கடல் கடந்த தமிழன், கிரேக்கம், ரோம், என வணிகம் கண்ட தமிழன், உண்பது நாழி உடுப்பது இரண்டே என்ற தமிழன், சாதிகடக்க முடியா தமிழன் இன்றைய உலகமய சூழலில் எந்த மன அமைப்பில் இருக்கிறான் ?.

– யவனிகா ஸ்ரீராம்

1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here