தென்றல் சிவக்குமார்
ஜெமினி பாலத்தின் மீது ஆட்டோ ஊர்ந்து கொண்டிருந்தபோது வழக்கம்போல இடப்புறம் தெரிந்த, பாதியில் நிற்கும் பாழடைந்த ஒரு பிரம்மாண்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் சுபா. அதன் முன்னிருக்கும் வெற்றிடத்தில் எப்போதும் போல ஐந்தாறு சினிமா யூனிட் வண்டிகள் நின்றிருந்தன. “ஒரு நிமிஷம் லெஃப்ட் ஓரமா நிறுத்த முடியுமா?” ஆட்டோ நகரும் நிதானத்தைச் சலித்து அதே பிரம்மாண்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வினோத் “நிக்கலாம் மேடம், இப்போதைக்கு க்ளியர் ஆறாப்ல தெரில” என்றபடி ஒடித்து நிறுத்தினான்.
மூச்சடைத்தாற்போல சட்டென்று வெளிக்காற்றுக்குள் குதித்து இறங்கியவள், வினோத் கவனிப்பதற்குள்ளாக, கைப்பையிலிருந்த ரூபாய் நோட்டுகளைப் பாலச்சுவர் விளிம்பிலிருந்து எக்கி விசிறினாள். அடுத்த உந்துதலாக, கீழே விழும் தாள்களைப் பார்க்க முடிகிறதாவெனப் பார்க்கக் குனிந்தபோதுதான் வினோத் கவனம் இவள் பக்கம் திரும்ப, அருகில் ஓடிவந்தான். பார்க்க முடியவில்லையோ விருப்பமில்லையோ, இவன் ஓடி வருவதையும் உணர்ந்ததாலோ, திரும்பியவள், நேராக ஆட்டோவில் சென்று அமர்ந்து “போலாங்க” என்றாள். இவன் முழிப்பதைப் பார்த்து லேசாகப் புன்னகைத்து “வேற பணம் இருக்கு, போலாம்”
இதற்குள் வாகனங்கள் மெல்ல நகரத் தொடங்க, வினோத் ஓடிவந்து ஆட்டோவைக் கிளப்பினான். பாலத்துக்கடியில் வளைந்து திரும்பிய கார் வைப்பரில் ஒரு ஐந்நூறு ரூபாய் நோட்டு சிக்கியிருந்தாற்போலத் தோன்றியது நிஜம்தானா என்று யோசிக்காமலிருக்கத் தலையை உலுக்கிக் கொண்டான். “என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவை போல்” என்று பாட்டு தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. பாட்டை நிறுத்தவேண்டுமா, அதையும் எப்படிக் கேட்பது என்று குழப்பம் எழுந்தது. துணிந்து பக்கவாட்டுக் கண்ணாடியில் பார்த்தபோது, சுபா சத்தமில்லாமல் பாட்டை ரேடியோவுக்கு இணையாக முணுமுணுப்பது தென்பட்டது. நிம்மதியாக மூச்சுவிட்டான்.
ஆனந்த் தியேட்டர் அருகில் இறங்கிக் கொண்டவள், அலைபேசி செயலி பயணக்கட்டணத்தை அறிவிக்கக் காத்திருந்த இடைவெளியில், “மேடம் ஆஃபீஸ் இங்கதானா?” அரைக் குரல்தான் வெளிவந்தது. ஒரு முறை இருமிக் கொண்டான். தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். “ஆமாங்க வினோத், அதானே உங்க பேரு, அதான் ஆப்ல வந்துச்சு”. இவ்வளவு நேரத்தில் வினோத் முதல் முறையாகப் புன்னகைத்தான் “ஆமாங்க மேடம், க்ரவுண்ட் ஃப்ளோரா மேடம்” என்பதை முடிப்பதற்குள்ளாக சரியாக சில்லறை சுத்தமாக அவனுக்குப் பணம் கொடுத்துவிட்டு, “லிஃப்ட் வந்துருச்சு” என்று லிஃப்டை நோக்கி ஓடினாள்.
அடுத்த சவாரி அங்கிருந்து சேப்பாக்கத்துக்கு, பின் அங்கிருந்து திருவல்லிக்கேணி தபால் நிலையம். தேனீரா, பழச்சாறா என்று யோசித்து, தனியாகத் தேனீர் அருந்தும் அபிப்ராயம் இல்லாததால் பழச்சாறு வாங்கி அருந்திக்கொண்டிருந்தபோது அலைபேசி ஒலிக்கவும் லேசாக அதிரத்தொடங்கிய மனம், அழைப்பது பத்மாதான் என்பதைப் பார்த்ததும் அமைதியானது. “என்னம்மா?” என்றதும், “வண்டி ஓட்டிட்டிருக்கியா மாமா? இவதான் என்னவோ உங்கிட்ட பேசணுமாம்” என்று மகள் தீபிகாவிடம் கொடுத்தாள். அவளுக்கு ஐந்து நாட்கள் இருந்த காய்ச்சல் அன்றுதான் தணிந்திருந்தது. “அப்பா.. ப்பா.. ஃபைனல் எக்ஸாம் வருதுப்பா.. ஸ்கூலுக்குதான் போய் அஞ்சு நாளாச்சு.. இன்னிக்கு சரியாயிருச்சுல்ல.. ட்யூஷன் போறேன்பா.. ப்ளீஸ்ப்பா” என்றது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பிள்ளை. “ஏண்டா, இன்னிக்கு விட்டுட்டா இதோட திங்கக்கெழம போய்க்கலாம்ல” என்றால் சிணுங்கியது. “சரி, சரி.. நானே வந்து கூட்டிட்டுப் போறேன். அதுவரை ஒழுங்கா சாப்ட்டு தூங்கணும், சரியா” என்று வைத்தபோதுதான் லேசாக சிரிப்பே வந்தது.
பணத்தைப் பார்த்தாலே பாலத்தின் மேலிருந்து பறந்த பணத்தாட்களின் ஞாபகம் வந்தது. அமைதியாக இருக்கவே முடியவில்லை. அந்தப் பெண்ணைப் பற்றி நினைக்கும்போதெல்லாம் வருவது கோபமா, பரிதாபமா, பயமா, எல்லாம் சேர்ந்த உணர்வா என்று புரிந்துகொள்ளவே முடியவில்லை. சாப்பிடப் பிடிக்கவில்லை. மூன்று மணி வாக்கில் பெயர் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தபோது நல்ல உறக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்துகொண்டான். எடுத்துப் பேசி “பெர்சனல் லோன்லாம் வேண்டாங்க” என்று சொல்லுவதற்குள் இன்னும் வியர்த்துவிட்டது. விர்ரென்று கடந்த ஒரு பைக் சக்கரத்திலிருந்து பசுஞ்சாணம் இரண்டு தடங்களாகச் சாலையில் பதிந்திருந்தது. பின்னால் மெதுவாக மாட்டுவண்டி வந்துகொண்டிருந்தது. தனக்கு முன் பதிந்துவிட்ட தன் சாணத்தின் மீதே மாடு நடந்து சென்றது. வண்டி முழுக்க தொட்டிச் செடிகள்.
நல்ல வெயிலிலும், அவ்வளவு வியர்த்தபோதும், சூடாகத் தேனீர் அருந்தலாம் போலிருந்தது. வெங்கட்டை அழைத்தான். ஐந்தே நிமிடத்தில் லான்ஸி கஃபேவுக்கு வந்த வெங்கட் “ஏண்டா டீ குடிக்கவா இப்டி ஃபோன் பண்ணிக் கூப்புடுவ?” என்றுதான் ஆரம்பித்தான். குழம்பிய கண்களை ஒரு நொடியில் கண்டுகொண்டான். “என்னாச்சுடா? பாப்பா எப்பிட்றா இருக்கா?” “பாப்பா நல்லாருக்காடா, இன்னிக்கு ட்யூஷன் போறேன்னு ஒரே அடம், சரியாயிருச்சுல்ல அதான். ஆனா இது வேற சிக்கல்டா” என்றான்.
அலைபேசியை அவ்வப்போது பார்த்தபடி, காலை சவாரியைப் பற்றிச் சொல்லி முடித்து “பாலத்துலேருந்து குனிஞ்சு பாத்துட்டிருந்தாங்கடா. வெலவெலத்துப் போச்சு எனக்கு. எதாவது செஞ்சுகிட்டிருந்தா? எத்தனாவது மாடியில வேலையோ தெரியல? குதிச்சிட்டிருந்தா?” என்பதற்குள் வெங்கட் “ஏண்டா தேவல்லாம இவ்ளோ யோசிக்கறே?” கோபமாகவே கேட்டான்.
“என் பேர சொல்லி வினோத்னு சொல்லிச்சுடா அந்தம்மா. அவங்க கடசியா எனக்குத்தான ஃபோன் பண்ணாங்க? அதான் எதாவதுன்னா என் நம்பருக்கு ஃபோன் வருமோன்னு பயமா இருக்குடா. ஒண்ணும் சாப்டல. இந்த வெயில்ல தூங்கியிருக்கேன் பாரு. சரியான தலவலி” “தேவல்லாத” என்று எதோ சொல்லத் தொடங்கிய வெங்கட், “சரி டீயக் குடி, தலவலி சரியாப் போகும்” என்று மட்டும் சொன்னான்.
தேவையற்ற பயம் என்று எதுவுமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. தேவையற்ற பயம்தான் என்று நம்பவும் எதுவோ ஒன்று தேவைப்படுகிறது. தலைவலியை ஒரு காப்பியோ, டீயோ, மாத்திரையோ அப்போதைக்கு அடக்கிவைப்பதைப் போல எதையாவது செய்து இவன் சங்கடத்தை அமுக்கிவிட முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஐந்து நிமிடம் மட்டுமே பார்த்துக்கொண்டாலும் கலகலவென்று இருக்க வேண்டாமா? புதுசு புதுசாக எங்கிருந்துதான் இந்த சங்கடங்களெல்லாம் கிளம்புகிறதோ?
“எதனா சாப்பிட்றியா?” என்று கேட்டுப் பார்த்தான் “ம்ஹூம், அஞ்சு மணிக்கு ட்யூஷன், இப்ப கெளம்புனாத்தான் சரியா இருக்கும், இன்னிக்கு சைக்கிள்ல போகவேணாம்னு பாப்பாட்ட சொல்லிருக்கேன், கொஞ்சம் லேட்டானாலும் மூஞ்சிய தூக்கிட்டு சைக்கிள்ல கெளம்பிரும்” “சரி கெளம்பு. நானும் கூட வரேன். பாப்பாவ ட்ராப் பண்ணிட்டு அந்தம்மாவுக்கே ஃபோன் பண்ணிப் பாத்துடலாம். எப்டியும் கால் லிஸ்ட்ல உன் நம்பர் இருக்குதுதான? இன்னொரு வாட்டியும் பண்ணிப் பாத்துடுவோம்”
********************
அலுவலகத்துக்காக ஒலியமர்த்தி வைத்திருந்த அலைபேசி மெல்ல அதிர்ந்தது. வீட்டுக்கு வந்ததும் ஒலிகூட்ட மறந்துவிட்டது வியப்பாக இல்லை. எங்கேயோ பார்த்த எண், யாரென்று தெரியவில்லை. எடுத்ததும், “மேடம் நான் காலைல ட்ராப் பண்ணனே ஆட்டோல, வினோத் பேசறேன் மேடம்”
ஒரு நொடி மௌனம். “மேடம் நல்லாருக்கிங்களா மேடம்?”
“நல்லாருக்கேன் விவேக்”
“வினோத் மேடம்”
“ஆ ஆமா வினோத். நல்லாருக்கேன், வீட்லதான் இருக்கேன்”
“மேடம் ரொம்ப பயந்துட்டேன். இப்பயும் ரெண்டு வாட்டி ஃபோன் எடுக்கலையே, எதும் ப்ரச்சனையா? கேக்கலாமான்னும் தெரியல. ஆனா கேக்காம இருக்க முடியல”
அனிச்சையாக அலைபேசித் திரையைத் தள்ளி இரண்டு தவறவிட்ட அழைப்புகளக் கவனித்து, நாக்கைக் கடித்துக் கொண்டு, தன்னை மீறிப் புன்னகைத்தபடி சொன்னாள்,
“அது செல்லாத பணம் வினோத். அடகு வச்சு ஜ்வல் லோன் வாங்கலாம்னு ஒரு செட் வளையலை ஜ்வல் பாக்ஸ்லேருந்து எடுத்தப்ப, அதுக்குக் கீழ ஒரு பர்ஸ்லருந்து கெடச்சுது. பழைய ஐந்நூறு ரூபாய் நோட்டு, பன்னண்டு இருந்துச்சு வினோத். ஜ்வல் லோனுக்காக பர்மிஷன் கேட்டிருந்தேன். ஆனா பேங்க் மூடியிருந்துச்சு. செகண்ட் சேட்டர்டே. அதெல்லாம் நமக்கு எங்க ஞாபகம் இருக்கு? அலுப்பாயிடுச்சு. அதனாலதான் ஆட்டோ புக் பண்ணேன்”
“ஸாரி மேடம், தேவல்லாம கேட்டு…”
“இல்ல வினோத். பர்ஸ் கனமா இருக்காப்ல தோணுச்சு. கனம்னா கல்லு மாதிரி கனம்”
“புரியுது மேடம்”
“அதான் அங்கேருந்து விசிறிட்டேன். பதறிப்போய்ப் பாத்த எல்லாரையும் யாரோவா நெனச்சு பழிவாங்கிட்ட திருப்தி. ஆனா நல்லாருக்கிங்களான்னு கேட்டுட்டு நல்ல பதிலுக்குக் காத்திருந்த உங்ககிட்ட உண்மையத்தான் சொல்ல முடியும் இல்லியா?”
“ஸாரிங்க மேடம்”
“பரவால்லங்க. இப்ப சொன்னது இன்னொரு கல்ல விசிறிட்டாப்ல நிம்மதியாத்தான் இருக்கு”
மௌனம்.
மௌனம்.
மேஜை மேல் சிந்தியிருந்த தண்ணீரில் கிறுக்கிக் கொண்டிருந்த வினோத்தின் வலது கரத்தை இழுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டான் வெங்கட்.
“மேடம்”
“சொல்லுங்க வினோத்”
“ஆட்டோ வேணும்னா எப்பன்னாலும் கால் பண்ணுங்க மேடம்”
***
சென்னையில் வசிப்பவர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர். அண்மையில் “எனில்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியானது. ஆசிரியர் தொடர்புக்கு – thendralsivakumar@hotmail.com
//தேவையற்ற பயம் என்று எதுவுமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது. தேவையற்ற பயம்தான் என்று நம்பவும் எதுவோ ஒன்று தேவைப்படுகிறது. //💕
யாரோ தானே என்று அசட்டையாக இல்லாமல், அத்தனை குடும்ப பொறுப்புகள் இருந்தும் ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ள வைத்தது மனித நேயமா, பயமா, அல்லது உணர்வுகளின் கலவையா என எண்ணத்தோன்றுகிறது.
அழகான கதை தென்றல்…💜
கதையின் முடிச்சு நெகிழ்ந்து இறுகி பின் அவிழும் தருணமென அனைத்துமே அழகு…💜💐👌🎉
அருமையான பயம். மனித நேயம் தன் சோகத்தையும் மறைக்கச் செய்து விடுகிறது. இது போன்ற மனிதர்களால்தான் உலகமே சுழல்கிறது.