அப்படி ஒரு கனவு இல்லை என்றார்கள்
அப்படி ஒரு கனவு இல்லை என்றார்கள்
மலைகளுக்கு மேல் கழுகுகள் பறக்காது;
பறந்தாலும் அவற்றின் சிறகுகளுக்குப்
பனியின் பாரத்தைத் தாங்க முடியாது என்றார்கள்.
கனவுகளின் பாரம்
காதலரும் தாங்க முடியாத ஒற்றைத் தனிப் பாறை என்றார்கள்.
கனவற்றவர்கள் போய் இறக்குமிடம்
அந்தீசு மலையின் தெற்குப் புறம் என்றார்கள்.
காற்று, தண்ணீராய் மாறும் மலை அது என்றார்கள்
ஒவ்வொரு மலைக்கும் ஒரு கதை
ஒவ்வொரு ஆற்றுக்கும் ஒரு கதை
ஒவ்வொரு கனவுக்கும் ஒரு கதை
கவிஞனுக்கு மட்டும் கவிதை
***
ஒளிக்கும் இருளுக்கும் அப்பால்
பித்தன், பாவலன், காதலன் மூவரும்
காலடி மண்ணையும் காதலி கண்ணையும்
முத்தமிட முடியாமல் தோற்றுப் போனோர்
ஆயிரம் கால்கள் அவர்க்கிருந்தாலும்
நடக்க மறந்து தடுமாறுகிறர்கள்
அறம் முறிந்த கற்பனைகளுடன்
புதிய வடிவங்களைச் செதுக்குகிறார்கள்
அவர்களில் பலர்
ஊனம் ஞானத்தைத் தருகிறது என்கிறார்கள்
உண்மைதான்.
பார்வை இழந்தவர்கள்
ஒளி பற்றித் தருகிற படிமங்களுக்கு
மற்றவர்கள் கவிதை இணையாகாது
காலற்றவள் தனது எந்திரக் குதிரையை
குதிரையாக மாற்றுகிறாள்
அவளுக்கு எஞ்சியிருக்கும்
இரண்டே இரண்டு பொன்னிறச் சிறுவிரல்களால்
தானியங்களைக் கொய்கிறாள்
“என்னே விரைவு!” – எனப்
பின்னே ஒதுங்குகின்றன கிளிகள்
அழகுதான். அழகுதான்.
என்றாலும்
வெற்று வார்த்தையும் வசனமும்
அலங்காரமும் எங்களுடைய போலி
உணர்வுத் தோழமையும்
காலற்றவர்களை நடைபாதைகளிலிருந்தும்
எமது சிந்தனைகளிலிருந்தும்
வெளியேற்றுகின்றன.
அவர்களுக்கு ஒளி
உங்களுக்கு இருள்
கவிஞனோ இரண்டுக்கும் அப்பால்.
***
நீர் விளக்கு
ஒன்பது நிமிடங்கள்
ஆயிரம் ஆயிரம் அகல் விளக்குகள் ஏற்றுகிறோம்.
அலை எழுப்ப மறுத்தன.
மண்ணிலிருந்தும் மாடங்களிலிருந்தும்
அவை மேலெழுகின்றன.
ஒளியை விட மேலோங்கும் நீலப் புகை
மந்திர வனப்பும் கடவுளர் விருப்பும் கூட வர
அவை
சென்ற இடமும் ஒளிர்ந்த இடங்களும்
இறங்கிய நிலமும்
தொழுநோய் வராத புண்ணிய பூமி
என்பது ஐதீகம்
அதை நம்பியவர்களின்
வீட்டிலும் நாட்டிலும் மாளிகைகளிலும்
அவை இறங்கவில்லை
துயரம் தெருக்களாய் விரிந்த
பாலை வனங்களிலும்
எல்லோருடைய வியர்வையும்
எல்லோருக்கும் மணக்கும் அகதி முகாம்களிலும்
பள்ளிவாசல்களின் மேலும்
கையறு நிலையில் மருத்துவமனையில் இருந்து
வீசப்பட்ட கறுப்பு மக்களின் இறுதி விருப்பின் மீதும்
மீன்களற்ற கடலின் மீதும்
அவை இறங்கின.
நீரில் எரியும் விளக்கு.
***