கார்த்திக் புகழேந்தி
18 ஏப்ரல் 1936
கொல்லம்-செங்கோட்டை வழியாக மதராஸ் ராஜதானிக்குச் செல்லும் புகைரதம் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க திருநெல்வேலி வீரராகவபுரம் தண்டவாளத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தது. தண்டவாளத்திற்குக் கீழ்ப்புறமுள்ள ரயில்வே ஃபீடர் சாலையில் சாரிசாரியாக வண்டிமாடுகள் பாரச்சுமைகளோடு நகர்ந்து கொண்டிருந்தன. நாடு முழுக்க சுதேசி கோஷம் பரவலாகி, சுப்பிரமணிய சிவமும் சிதம்பரம் பிள்ளையும் கைதாகி, மொத்த ஊரும் அல்லோலப்பட்டபோது இதே சாலையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட உடலின் மிக அருகிலே நின்று கொண்டிருந்தேன்.
அப்போது எனக்கு எட்டு அல்லது பத்து வயது இருக்கும். இன்றும் நன்றாக நினைவிருக்கிறது. இந்துக் கல்லூரி மாணவர்கள் திரளாகக் குவிந்து ஹர்தால் பண்ணிக் கொண்டிருந்தார்கள். பாளையங்கோட்டை பூனிடிவ் போலீசாலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்துக் கல்லூரி முதல்வரையும் பாரி சாராய ஆலையைச் சேர்ந்த அவரது நண்பரையும் பொதுஜனம் மிரளடிக்கச் செய்து ஓட ஓட விரட்டிய காட்சியும், அன்று நடந்த கல்லெறிச் சம்பவமும், கீழரத வீதி முனிசிபல் ஆபீஸ் எரிப்பும், அதன் தொடர்ச்சியாக நடந்த துப்பாக்கிப் பிரயோகமும், அதில் கொல்லப்பட்ட என் வயதொத்த சிறுவன் முகமும் எல்லாமே பக்கம் பக்கமாகப் பேப்பரில் வந்தது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு தான் ஊரே மயான அமைதிக்குத் தள்ளப்பட்டு, பள்ளிக் கல்லூரிகள் திறக்கத் தடை விழுந்து, ‘எங்கேயும் கூட்டம் கூடக்கூடாது. ராத்திரியில் வெளியிலே வரக்கூடாது’ என்று அடக்குமுறை அதிகமானது. திருநெல்வேலி, தச்சநல்லூர் என்று எல்லா இடங்களிலும் ரிஸர்வ் பட்டாளத்தின் கடுங்காவல். அப்போதுதான் சர்ச் மிஷன் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த என்னை, படிப்பு கெட்டுவிடக் கூடாது என்று முதல்தடவையாக நாகர்கோவிலுக்கு இடம் மாறினார் தாத்தா தேசிகர். ஹர்தாலில் ஈடுபட்டுச் சுட்டுக் கொல்லப்பட்ட அவரது மூத்த மகன்வழி வாரிசின் எதிர்காலம் அப்போது முதல் அவர் தலையிலே விழுந்தது. அதன்பிறகு என்னுடைய படிப்பு, வளர்ப்பு எல்லாமே அவர் தீர்மானம் தான்.
ஏதோ நேற்று நடந்தது போல இருக்கிறது எல்லாமும்.
14 ஏப்ரல் 1936
“பரந்தாமா.. இங்கே இருக்கிறப்போ நீ எப்படின்னு ஊருக்கே தெரியும். அதேபோல போற இடத்திலும் பொழைக்கற இடம்ன்ற நினைப்போட இருக்கணும். சாதாரண உத்தியோகம் இல்ல, சர்க்கார் உத்தியோகம் உனக்கு கிடைச்சிருக்கிறது. முப்பது வருஷமா தாலுகா குமாஸ்தாவா லோல் பட்டதுக்கான பிராயசித்தம் உனக்கு இந்த உத்யோகம். ஜில்லா போர்டு ரெவன்யூ இன்ஸ்பெக்டர்ன்றது லேசுப்பட்ட வேலை இல்லே. மணல்லே எண்ணெய் பிழியும் கொம்பாதி கொம்பனெல்லாம் இந்த இடத்தைப் பிடிக்கத் தேவுடு காத்துட்டுத் திரியுறான்.
கண்ட சச்சரவிலயும் மூக்கை நுழைக்காம, பனிஷ்மெண்ட் வைக்காம, உங்கப்பனாட்டம் இல்லாம இருந்தியானா சர்க்கார் மாறுதோ இல்லையோ, உன் யோகத்துக்கு டெபுடி, ஸப்-கலெக்டர்னு ஆகக்கூடும். புரிஞ்சு நடந்துக்கோ. நீ போகப்போற ஜில்லா ஒன்னும் பாதாள லோகத்திலே இல்லை. திருநெவேலி போய் பொகவண்டி ஏறினா, இப்பல்லாம் மூனு பொழுது தானாம். சுக ஆயுசா, ஒரு இடத்தில இருந்து நல்லபடி உத்தியோகத்தைக் கவனி என்ன” தெப்பக்குளத்தெரு படிக்கட்டு வீட்டுத் திண்ணையின் வாசலில், சாய்வு நாற்காலி போட்டு வசதியாகச் சாய்ந்து கொண்டு, மடியில் வெத்தலைச் சீவல்பெட்டியும், தொடையில் கிருஷ்ண சந்த்ர பட்டாச்சார்யா எழுதின ஏதொவொரு தத்துவப் புத்தகத்தையும் தாழ்த்தி வைத்துக்கொண்டு, தன் நீண்ட வியாக்கியானத்தை நிகழ்த்தி முடித்தார் தாத்தா தேசிகர். அவர் ஆவி மொத்தம் சுருக்கம் கண்ட உடலுக்குள் இறுகிவிட்டது. பேச்சு மட்டுமே கெதி. படித்து முடித்து பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் காமர்ஸ் பாடம் எடுத்துக் கொண்டிருந்தவனை எப்படியாவது சர்க்காரில் சேர்த்துவிட வேண்டும் என்று பிடியாக இருந்து நினைத்ததைச் சாதித்து விட்டார்.
அவர் சொன்னது போல செங்கல்பட்டு ஜில்லா ஒன்றும் பாதாள லோகத்தில் இல்லைதான். ஆனால், “வேலை தயார். உடன் புறப்பட்டு வரவும்.” என்ற ஒற்றைவால் தந்தியை மட்டும் கொடுத்து, ஊரோடு உள்ள அத்தனை விவகாரங்களையும் பள்ளிக்கூடத்தோடு உள்ள எல்லா உத்ஸாகங்களையும் நொடிப்பொழுதில் கைவிட்டு, அதேகதியில் வண்டியேற்றியும் விட்டதுதான் தாங்க முடியாமலிருந்தது. தேசிகரை எதிர்க்கும் சொல் என்னிடம் இன்றுவரை உற்பத்தியானதில்லை.
விசாரித்தவரையில் செங்கல்பட்டு ஜில்லாவுக்கான தூரம் முந்நூற்று அறுபது மைல் இருக்குமாம். கொல்லம் வழியாகப் புறப்பட்டு திருநெல்வேலியில் வந்து தாகசாந்தி பண்ணிக் கொள்ளும் புகைரதத்தில் தடையேதும் இல்லை என்றால் அன்றிரவே திருச்சினாப்பள்ளி அடைந்து, மறுநாள் அகால வேளையில் செங்கல்பட்டு ஜில்லாவைச் சேரும் என்பது மட்டும் துல்லியம்.
தாத்தா சொன்ன இன்னொரு விஷயம் முக்கியமானது. கிடைத்திருக்கிற இந்த வேலை ஒன்றும் சாதாரணம் இல்லை. ‘ஜில்லா போர்டு ரிவின்யூ இன்ஸ்பெக்டர்!’ துரைமார் கைகளால் பெரும் பட்டங்களை வாங்கிச் சூட்டிக் கொண்டவர்களின் வாரிசுகளே இதே வேலைக்கு அடிபுடி போட்டுக் கொண்டிக்கிறார்கள். சர்க்கார் விரோதியின் வாரிசு என்று அறியப்பட்டிருக்க வேண்டிய அடைமொழியிலிருந்து தப்புவித்து, தாத்தா தேசிகர் எப்போதோ யாருக்கோ செய்த உபகாரத்தின் பேரில் அடியேன் சிபாரிசு பண்ணப்பட்டிருக்கிறேன்.
அதன்படி, சுக்லபட்சம் சப்தமி திதியன்று காக்கைச் சகுனம் பார்த்து, கிருஷ்ணன் கோவில் முகப்பிலிருந்து பெட்டிப் படுக்கைகளுடன் குதிரை வண்டியில் துவங்கிய புறப்பட்டுப் பிரயாணம் திருநெல்வேலி வந்தடைந்து, புகைரதம் மூலம் மூன்றாம் நாளில் இழைத்துக் களைத்து செங்கல்பட்டு ஜில்லாவில் முகாமாகியிருந்தது.
18 ஏப்ரல் 1936
ஊர் பெரியது தான். ராஜதானிக்குப் பக்கத்திலே வேறு இருக்கிறது. தாலுகாவும் அதுவேதான். பதினைந்து லட்சம் ஜனங்கள் உள்ள ஜில்லாவென்று அரசாங்கக் குறிப்பில் படித்திருக்கிறேன். கூடவே ஊரிலுள்ள பதினாலு சாதியர் பட்டியலும் அவரவர் செய்தொழில்களும் பிற விவகாரங்களும் ரத்தினச் சுருக்கமாகத் தொகுக்கப்பட்டிருந்தது. இரண்டு பெரிய குன்றுகளுக்கு நடுவே பள்ளத்தாக்கு போல அகன்று கிடப்பதால் தண்ணீர் தேக்கங்களுக்குக் குறைவில்லை.
ஒருபக்கம் அகன்று செல்லும் கப்பிபோட்ட கூடுசாலை. இன்னொரு பக்கம் இருப்புப்பாதை. நட்டநடுவிலே யோவான் துறவியாரின் தேவாலயம். கிழக்கு மேற்கு எங்கு பார்த்தாலும் பச்சைப் பச்சையென முழுக்க வயல்கள். காந்தியாரின் விடுதலை மார்க்கம் ஒருவழியாக இழுத்தடிக்கும் நேரத்தில், மந்திரி சபைக்குள் பெரும்பான்மை பெற்று ஆட்சி நடத்திய ஜஸ்டிஸ் பார்ட்டி இங்கே மிகப் பிரபல்யம்.
எந்தப் பற்றுக்கேடும் இல்லாமல் ஹோல்டாலைக் கையில் பிடித்துக்கொண்டு புகைரதத்தை விட்டு இறங்கி, புக்கிங் மாஸ்டரின் அறையை நோக்கி நடந்தேன். வந்த விபரம், அடைய வேண்டிய விலாசம், பிரயாண வசதி, உள்ளிட்ட விபரங்களை எல்லாம் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, ரயிலடியை விட்டு வெளியில் வந்தேன்.
பொழுது நன்றாக மசிந்திருந்தது. ரஸ்தாவின் லாந்தர் வெளிச்சத்தில் ரிஸர்வ் தொப்பியுடனும் மேவாய் கட்டையை இழுத்துப் பூட்டிய வார்பெல்டுடனும் சிவப்பு நிற உடையில் இரண்டு வெள்ளைக்காரச் சிப்பாய்கள் விடுவிடுவென மேற்கு நோக்கி நடந்து போவதைப் பார்த்த பிறகு வேறெதுவும் புது உலகத்துக்கு வந்துவிடவில்லை என்ற நம்பிக்கை பிறந்து விட்டது. இருவரும் என்னைத் தாண்டிச் சென்ற திசையில் ‘துருப்புகளுக்கு மட்டும்’ என்று எழுதிப்போட்ட கபே ஒன்று எடுத்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ’மாஸ்டர் மாஸ்டர் ஒன் அணா மாஸ்டர்” என்று சட்டையில்லாத சின்னப் பிள்ளைகள் சிலர் அந்த நேரத்திலும் வாசலில் நின்று கையேந்திக் கொண்டிருந்தார்கள். கபேவுக்கு மேற்புறம் செல்லும் சாலை சிறைக் கொட்டடிக்குச் செல்லும் வழி என்பதைப் புரிந்து கொண்டேன்.
ஜங்ஷனுக்கு எதிர்புறமுள்ள வெட்டவெளி மைதானத்தில், தம்பிடி பணத்துக்கு ஒரு குதிரைவண்டி பிடித்தேன். அங்கிருந்து முக்கால் மைல் தள்ளி, தங்குவதற்காக சர்க்கார் சாவடிக்குப் பக்கத்திலே வீடு ஒழித்துக் கொடுத்திருந்தார்கள். சிம்னி விளக்குகளின் வெளிச்சம் போதுமானதாய் இருந்தது. பசும் வேப்பமரச் சூழல், பழைய காலத்துச் சாவடி, சுவர்களில் அங்கங்கே காரை உதிர்ந்த தடம், மேற்கூரையில் செல்லரித்துப் போயிருந்த உத்திரக்கட்டைகள் பயமுறுத்தின. ஓடுகளில் மூஞ்சூறு நடமாட்டம் வேறு, வெளிவாசலில் பண்டிகைக் காலங்களில் பளபளவென்று மின்னி, ஊர்வலம் போய்வந்து ஓய்ந்த பிறகு, ஒதுக்குப்புறமாகச் சரிந்து கிடக்கும் சிறியதும் பெரியதுமான கேட்பாரற்ற தெய்வச்சிலைகள் வேறு அச்சத்தைக் கொடுத்தன. எப்படியோ அன்றைய இரவைச் சற்று மன தைரியத்துடன் தான் கடக்க வேண்டியிருந்தது.
19 ஏப்ரல் 1936
பொழுது புலர்கின்ற மாதிரி தெரியவில்லை. எழுந்து குளித்துப் புறப்பட்டு, வாசலுக்கு வந்தேன். நேற்று இரவு என்னை அழைத்து வந்த குதிரை வண்டி அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. ஒருவேளை இரவு இங்கேயே ஓய்வெடுத்துவிட்டாற் போல என்று சமாதானம் செய்து கொண்டேன்.
பொழுது கண்கூசச் செய்யும் நேரத்துக்கு முன்னதாக, கிராம முனிசீப்தான் முதல் ஆளாகத் தேடிவந்து சந்தித்தார். ‘மேற்படி பிரயாணம் எல்லாம் சுகம்தானா? ராவிலே வந்திருக்க வேண்டியவன் கொஞ்சம் வெளியூர் வேலையாகிப் போச்சு” என்று சுவாரசியமாக முகத்தை வைத்துக்கொண்டு தன்னை அறிமுகப்படுத்தினார். அவரிடம் வேலை அழைப்பாணைச் சிட்டையைக் கொடுத்தேன். இன்முகத்தோடு பெற்றுக் கொண்டார்.
முத்தையா பிள்ளை நேர்தோற்றத்தில் ஆள் வாளிப்பானவராக இருந்தார். கருத்த கனத்த உடம்பு. தொந்தியை வெளியே தள்ளும் ஒட்டக்கழுத்துச் சட்டை, மடித்த மல்வேட்டி, தோளில் கௌபீனத்தைவிட கொஞ்சம் நீளமான துண்டு. தலையில் மாட்ட வேண்டிய குல்லாவை அக்கத்தில் வைத்துக்கொண்டு துவாரபாலகரைப் போல கையில் தடியில்லாமல் வந்தார்.
”நமக்கும் பூர்வீகம் தெற்கேதான். நாங்குநேரி பக்கம். திருநவேலியிலிருந்து கல்லெடுத்து வீசுற தொலைவு. அங்க முத்தையா பிள்ளை குடும்பம்னே ஊரே சொல்லும். சித்தாந்த சைவம். ஜெமீன் சம்பந்தமா இங்கே பல தலைமுறையா இங்கே இருந்தாச்சு. தம்பி என்ன படிச்சிருக்கே. சைவமா வைணவமா? வேதத்துக்கு மாறினவர் இல்லையே!” நயமாக என்னைக் குறித்த விபரங்களைப் பிடுங்கிக் கொண்டார்.
அவர் கூடவே அழைத்து வந்திருந்த இன்னொரு கருத்த தடியான ஆள் குதிரை வண்டிக்காரனிடம் ஏதோ விவகாரம் பேசிக் கொண்டிருந்தார். முனிசீப் அவரைக் கைகாட்டிக் கிட்டே அழைத்தார்.
“இவன் இங்கே தலையாரி. பேரு முள்ளான். காது கொஞ்சம் மந்தம்; மத்தபடி ஊர்பட்டு எல்லா விபகாரமும் நாநுனி. இங்க உள்ள கிராமணில ஆரம்பிச்சு யார் என்ன வண்ணம்னு ஒன்னு விடாம சொல்லிருவான். சத்திரிய குலம்”
“டே கேட்டியா! தம்பிதான் புதுசா வந்திருக்க ரெவின்யூ இன்ஸ்பெட்டர். மேப்படி விவரங்களைக் கூடமாட இருந்து பாத்துக்க” என்று பரஸ்பரம் பண்ணினார் முனிசீப்.
“அப்புறம் தம்பி எனக்கு மாஜிஸ்த்ரேட்கிட்டே ஒரு சின்ன வேலை இருக்கு. கோட்டைக்குப் போகணும். இங்க என்ன வசதிக் குறைவுன்னாலும் எனக்குத் தனியாச் சொல்லு. எல்லாத்துக்கும் நல்ல வழி பண்ண ஆள் இருக்கு என்ன”
இடியும் மின்னலுமென எனக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சத்தமாயும், தலையாரி முள்ளானுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சைகையிலும் காட்டிவிட்டு, காத்து நின்ற குதிரை வண்டியில் ஏறிப் புறப்பட்டுப் போய்விட்டார் கிராம முன்சீப். முத்திரைச் சீட்டில் இருந்த அவரது பெயரைப் படித்தேன் ’முட்டயாபிளே’ என்று அச்சடித்திருந்தது.
’முனிசீப் உத்தியோகம் ராஜாமார் பதவி போல’ என்று தாத்தா தேசிகர் சொல்லிக் கேட்டதுண்டு. துரைகள் ஆட்சியிலே எதுதான் சாதாரணம். முனிசீப்புக்கு நேரம், காலம் என்று கட்டுப்பாடுகள் கிடையாது. நிலவரி வசூலிப்பது, ஊரில் ஏற்படும் பிறப்பு இறப்பைக் குறித்து வைப்பது, யாராவது தப்புத்தண்டா செய்தால் காவாலிகளைச் சிப்பாய்களிடம் பிடித்துக் கொடுப்பது. தண்டனை விதிப்பது, கிராம நிர்வாகம் என்று அவரது அதிகாரவரம்பு பெரியது. சிறுசிறு குற்ற வழக்குகளுக்கு விசாரித்து தீர்ப்பும் வழங்கும் அதிகாரம் உள்ளவரென்பதால் அவருக்கென வீடு, வாசல், அலுவல் பேதம் கிடையாது.
குறிப்பிட்டுச் சொன்னால் ஜில்லாவின் ரெவின்யூ, லோகல் என்று இரண்டு துறைக்கும் பொதுவான ஜவாப்தாரி முனிசீப்தான்.
தலையாரி முள்ளான் எந்தப் பித்தமும் இல்லாமல் ஒரு பெரிய துணிச்சாக்கு சுற்றிய பெட்டியில் வைத்து எடுத்து வந்திருந்த அடங்கல் பொஸ்தகங்களை, ஆண்டு வரிசை தப்பாமல் பிரித்தெடுத்து, மேஜையில் அடுக்கத் துவங்கினார்.
ஆளைப் பார்க்கும் பார்வையிலே புதுப்புளியா இல்லை பழகுன புளியா என்று கணித்துவிடுபவர் போலத் தன் முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் முள்ளான். எனக்கு எந்தச் சிரமமும் தராமல் ஒரு ரெவின்யூ இன்ஸ்பெக்டர் தெரிந்துகொள்ள வேண்டிய, ஜில்லா போர்டு மற்றும் தாலுகாக்கள் பற்றிய தகுந்த விபரங்கள் பலவும் அவர் அளித்த நோட்டுப் பொஸ்தகத்தில் கச்சிதமாகவும் ரத்னச்சுருக்கோடு குறிப்பெழுதப்பட்டிருந்தன.
ரெவென்யூ கிராமப் பட்டியல், அவைகளில் சுரோத்திரியம் பண்ணும் ஜமீன்களின் பெயர்கள், அவர்தம் ஆண்டுக் குத்தகை, வாரி, வசூல் மற்றும் நிலுவை விபரங்கள், நிதி ஆதாரக் கையேடுகள், ஊரிலுள்ள மிராசுகள், முக்கியப் புள்ளிகளின் பெயர்கள், பதினாறு தர நன்செய் நிலங்கள், புன்செய் நிலத்தீர்வைகள், விவசாய மராமத்து வேலைகளில் நிவர்த்தி செய்யப்படாதவை, கிராமங்களுக்குச் செல்லும் ரஸ்தாக்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள், பாலங்கள் உடைந்து போய் நேர் விஜயம் செய்ய முடியாத ஊர்கள், உப்புக் காய்ச்சும் இடம், சாராயம் வடிக்கும் இடம் தொடங்கி, அவுரிச் சாயம் போடும் பட்டறைகள் வரை நீண்டுகொண்டே போனது ஒரு நோட்டு. முன்பு பணியில் இருந்தவர்கள் விபரம் அவர்களால் செய்து முடிக்கப்படாமல் விடுபட்டுப்போன பணிகள் என ஒரு நாள் முச்சூடும் இந்தத் தாள்களைப் புரட்டுவதில் கழிந்தது.
27 ஏப்ரல் 1936
ஒரு வார காலம் நோட்டுப் புத்தகங்களுக்கு ஊடாகவே கழிந்து கொண்டிருந்தது. அன்றைக்கு விடியற் காலையிலே எழுந்து விட்டேன். இரவில் குளிர் வழக்கம் போல பிரமாதம். தூக்கம் பரவாயில்லைதான். சுத்துவேலைக்காக நியமிக்கப்பட்டிருந்த வேலையாள் பெரிய வெண்கலப் பானையில் வெதுநீர் போட்டு வைத்திருந்தார். குளித்து முடித்து உடை மாற்றியதும், எங்காவது வெளியே சென்று, கொஞ்சம் நேரம் பிந்தி கச்சேரிக்குப் போகலாம் என்று தோன்றியது. மாட்டிவண்டி கிடைத்தும் நடந்து போகவே விரும்பினேன்.
ஊரைச் சுற்றி பயிர்பச்சை விளைச்சல் அமோகம். நஞ்சையும் புஞ்சையும் தோட்டக்கால்களும் ஊரூராக இருந்ததினால் அந்த வட்டையில் குடிபடை கிராமங்களும், கிராம நத்தமும் அதிகம் போல என்று மனம் நோட்டுப் பொஸ்தகத்தில் அறிந்த விபரங்களைக் களவிவகாரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டது. ஜில்லாவில் பஸ் ரூட் உண்டு. தபால் வண்டிகளும் ஓடிக்கொண்டிருந்தன. ஜில்லா போர்டு ஆஸ்பத்திரியும் குஷ்ட ரோக சிகிச்சையும் பிரசித்தம். மேஜர் யூனியன் என்று இரண்டு பெரிய ஹை ஸ்கூல்கள், இது தவிர போலீஸ் ஸ்டேஷன், ஜெயில், சப்-ரிஜிஸ்டிரார் ஆபீஸ், சினிமா கொட்டகைகள் என ஒரு கஸ்பாவுக்கு என்னென்ன வசதிப்பாடுகள் உண்டுமோ அத்தனையும் செங்கல்பட்டு தாலுகாவுக்குள் ஏற்பட்டிருந்தது.
ஜில்லா சப்-கலெக்டரின் நிலையான இருப்பிடத்தின் அருகில் வந்துசேர்ந்திருந்தேன். யந்திரத் துப்பாக்கி கொண்ட காரும் ஐம்பது கெஜ தூரத்தில் மோட்டார் சைக்கிள்களும் சூழ சப்-கலெக்டர் வாகனம் எப்போது வேண்டுமானாலும் ஊரைச்சுற்றி வளைய வரலாம் என்று மனதுக்குத் தோன்றியது.
மேலிடத்தவர்கள் முகாம் வருகிறபோது அவர்களுக்குச் சலாம் அடிப்பதில் ஆரம்பித்து, சப்ளை கவனிப்பது வரை அனைத்து அசைவுகளும் சித்திரகுப்தனின் கண்கொண்டு குறிப்பு எடுக்கப்படும் என்று தேசிகரின் குரல் இப்போது காதுகளுக்குள் ஒலித்தது. என்ன நினைத்தேனோ தெரியவில்லை. லகான் பிடித்த குதிரை சேணம் போல கால்கள் நேராக ரெவின்யூ கச்சேரியை நோக்கித் திரும்பி நடந்தன.
29 மே 1939
என் கெட்ட நேரமோ, நல்ல நேரமோ பணியில் சேர்ந்திருந்த முதலாவது மாதத்தில் முதல்முறையாக ஜில்லா கலெக்டர் என்னுடைய பிர்க்காவிற்கு முகாம் வரப்போவதாக ஓலை அனுப்பியிருந்தார்.
வழக்கமாக ‘தாசில்தார்’ முகாம் வந்தால் அவரது உணவு விஷயங்களில் இருந்து எல்லா காரியங்களும் முனிசீப் கவனித்துக் கொள்வார். டெப்டி கலெக்டர் வருகிறார் என்றால் அவரது படை, பட்டாளத்துக்கான போஜனங்கள் தொடங்கி அத்தனை செலவுகளையும் ரிவின்யூ இன்ஸ்பெக்டர் தான் கவனித்துக்கொள்ள வேண்டும். இப்போது கலெக்டரே வரப்போகிறார் என்றால் இதைவிடப் பெரிய சோதனை எதுவும் இல்லை. ஏதாவது தத்துபித்து ஏற்பட்டாமல் இருக்க வேண்டும்.
நேராக முன்சீப் முத்தையா பிள்ளையை அவரது வீட்டுக்கே சென்று அவரைச் சந்தித்து என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும், இங்குள்ள நடைமுறைகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். பத்தாதற்கு தேசிகருக்குக் கடுதாசி எழுதிப்போட்டு அவரின் பதிலுக்கும் காத்திருந்தேன்.
‘கலெக்டர்களைக் கூடச் சமாளித்துவிடலாம். அவர்களது பட்லர்கள் பண்ணும் அழிச்சாட்டியம் தாங்க முடியாது’ என்று எப்போதோ அவர் சொன்ன விபரங்கள் மூளைக்குள் ஓடியது.
சப்ளைகளைச் சரியாகக் கவனித்தும், பட்லருக்கான தனிக்கவனிப்பு கொஞ்சம் பிசகினாலும் சமயம் பார்த்து பழிதீர்த்து விடுவான். ஒரு மந்திரவாதியின் சூட்டுக்கோல் போல பட்லர்கள் வரிசையாக அன்றைய நாளின் கனவில் வந்து சென்றார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது.
எனக்கு இந்த வேலை கிடைப்பதற்கே இதற்கு முன்னாள் பொறுப்பிலிருந்த டெப்டி கலெக்டருடைய பட்லரின் பழிவாங்கும் செயல்தான் காரணம்.
அப்போதிருந்த டெப்டி-கலெக்டர் இதே பிர்காவுக்கு முகாம் வந்தபோது ரெவின்யூ இன்ஸ்பெக்டர் எல்லோருக்கும் சப்ளைகளைச் சரிவரச் செய்துவிட்டு, பட்லரை மறந்துவிட்டார்.
டெப்டி கலெக்டர் முகாம் முடிந்து புறப்படுகிற அன்று காலையில் அவருக்குக் காபி கொடுக்காமல் நின்றிருக்கிறான் பட்லர். ஏன் என்று கேட்டதற்கு, ரிவின்யூ இன்ஸ்பெக்டர் கொண்டுவந்து கொடுத்த பால் செம்பில் இருக்கும்போதே திரிந்துபோய் வந்தது என்று பதில் சொல்லி இருக்கிறான்.
உடனடியாக ஆளனுப்பி, ரெவென்யூ இன்ஸ்பெக்டரை வரச்சொன்னார் டெப்டி கலெக்டர், திரிந்த பால் செம்பை அவன் தலையிலே கவிழ்த்துவிட்டு “வெளியே போ” என்று விரட்டி விட்டார்.
அவனும் கொஞ்சம் மானியாக இருந்ததால் பாலாபிஷேகம் நடத்தப்பட்ட அன்றைக்கே கால் கடுதாசியில் ராஜிநாமா எழுதி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டு ஊருக்கு வண்டியேறி விட்டான். அவன் விட்டுப்போன இடத்துக்குத்தான் நான் இப்போது வந்து சேர்ந்திருக்கிறேன்.
1 ஜூன் 1939
ஜில்லா கலெக்டர் வந்துசேர்வதாகச் சொல்லியிருந்த மூன்று நாட்களுக்கு முன்பாக அவரது குதிரை வந்து சேர்ந்தது. கூடவே குதிரைக்காரனும்.
இரண்டு நாட்களும் பராமரிப்பில் எந்தக் குறையும் வைக்காமல் குதிரையையும் குதிரைக்காரனையும் சரியாகவே கவனித்துக் கொண்டேன். மூன்றாம் நாளில் சொல்லி வைத்தபடி கலெக்டர் பரிவாரங்களோடு பிர்காவுக்கு வந்து சேர்ந்தார்.
பார்வைக்கு இறுக்கமான மனிதரைப் போலத் தெரியவில்லை. அவர் கவனித்த கோப்புகளை எல்லாம் திறந்துகாட்டி, நேரத்துக்கு பால், முட்டை என்று கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்து, நல்ல மரியாதையுடன் நடந்துகொண்டதற்கான பலன் அன்றைக்கு மாலையிலே அவரது முகத்தில் தெரிந்தது. பட்லரும் இசைந்து கொடுத்து நடந்து கொண்டது ஆதூரமாக இருந்தது.
கலெக்டர் வெளியில் எங்காவது ஆய்வுக்குச் செல்வார் என்று எதிர்பார்த்தபோது, இரண்டு நாட்களும் தன் நண்பர்களைச் சந்திக்க இருப்பதால் பிரயாண ஏற்பாடு எதுவும் தேவையில்லை என்று மறுத்துவிட்டார். முகாமின் கடைசி நாளில்தான் அடுத்தபடியாக பூந்தமல்லி செல்ல இருப்பதாகத் தெரிவித்தார்.
அன்றைக்கு மாலையில் மூன்று நாள் தங்கியிருந்தபோது செய்த செலவுகளுக்காக பில் எழுதிக்கேட்டார். விவரமாக கிராம முன்சீப் மூலம் மொத்த செலவு ஒன்றரை ரூபாய்க்கான பில்லை எழுதிக் கொடுத்தேன். கலெக்டர் முன்னிலையிலே காம்ப் கிளார்க் அந்தப் பணத்தை முனிசீப்பிடம் எடுத்து நீட்டினார்.
என்ன நினைத்தாரோ கொடு பில்லைப் பார்க்கலாம் என்று வாங்கிப் பார்த்த கலெக்டர் அதில் தன்னுடைய குதிரைக்குச் செய்த செலவுகள் எதுவும் இல்லாததைக் குறித்துக் கேட்டார். கொஞ்சம் ஜாக்கிரதையாக, ‘குதிரைக்கு அப்படி ஒன்று பெரிய செலவு ஆகவில்லை’ என்றேன். அவ்வளவுதான் கொந்தளித்து விட்டார் மனுஷன்.
‘அப்படி என்றால் மூன்று நாளாக என் குதிரையைப் பட்டினி போட்டிருக்கிறாயா?’ என்று விடுவிடுவென லாயத்துக்கே சென்றுவிட்டார்.
அங்கு குதிரை அதுபாட்டுக்குப் புல்லையும் கொள்ளையும் தின்று, அதைத் தாடையில் வைத்து ருசித்து அசைபோட்டுக் கொண்டு ஜலீரென நின்றது.
’தொர குதிரையை நல்லா பார்த்துக்கிட்டே தொரை’ என்று குதிரைக்காரனும் தானாய் முன்வந்து சாட்சி சொன்னான். உண்மையிலே அவனையும் சரிவர கவனித்து வைத்திருந்தேன்.
குதிரை வாயில் கானம் பாகாய் வடிவதைப் பார்த்த பிறகுதான் அமைதியானார் கலெக்டர். இருந்தும் ஓங்குதாங்கான குரலில் “குதிரைக்கு என்ன செலவு ஆனதோ அதைச் சரியாக கணக்கில் காட்டி, பணத்தை வாங்கிக்கொள்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனார். தலை தப்பித்தது.
‘தம்பி தொரைமார் ஆட்சியில, சர்க்கார் சேவகனா இருந்துட்டு, இதுக்கெல்லாம் அசந்தா எப்புடி’ என்று மெல்ல சிரித்துக்கொண்டே என்னைச் சீண்டினார் முன்சீப்.
7 ஜூலை 1939
தாத்தா தேசிகரிடமிருந்து நான்கு வாரங்களுக்குப் பிறகு நான்கு பக்கத்துக்கு இண்டு இடைவெளி விடாத அளவுக்கு நுணுகி நுணுகி கடிதம் வந்திருந்தது. ரொம்ப அவசரமாக வந்து சேர்ந்துவிட்டது போல.
பதிலுக்கு வேலை ஒன்றும் அவ்வளவு அவதி இல்லை. எல்லாம் நல்லபடி உள்ளது என்று எழுதிப் போட்டேன்.
உள்ளபடியே வேலையின் உறுத்தல்கள் மெல்லப் பழகிவிட்டது. புதிய அரசியல் சட்டம் வந்த பிறகு எல்லோருக்கும் ஆட்சி அதிகாரம் மாறிவிடும் என்ற அசையாத நம்பிக்கை வேறு வந்துவிட்டது. சிலர் ஆமாமென்றார்கள். சிலர் இல்லை இல்லை என்றார்கள். இதை வாய்ப்பாகக் கொண்டவர்கள் சர்க்கார் வரியில் ஆரம்பித்து தீர்வை கட்டுவது வரை அத்தனையிலும் இழுபறி வைக்க ஆரம்பித்தனர்.
மராமத்து இலாகா கேட்பாரற்றுக் கிடந்தது. ஜமீன்களின் உள்ளடி வேலைகளால் ரெவின்யூவுக்கு கீழே வரும் விவசாயம், ஏரி, பாலம், குளம், கால்வாய், உப்பளம், பொதுக் கட்டிடம் மட்டுமல்லாமல், லோக்கல் ரஸ்தா பழுது முதல் அத்தனை வேலைகளும் ரெவின்யூ இலாகாவின் தலையிலே வந்து விழுந்தன.
சர்க்கார் உத்தியோகம் ஒன்றும் மெத்தைப் படுக்கை இல்லை. அது முள் படுக்கை. எது எடுத்தாலும் தாமதம். சிவப்பு நாடா குற்றச்சாட்டுக்கள். அதிகார அழுத்தம். மேலிட பரோபகாரம்.
உத்தியோகத்தில் நல்லபேர் சம்பாதிக்கத் தெரியாவிட்டாலும் கெட்டபேர் அவ்வளவாக இல்லை.
27 டிசம்பர் 1940
முதல்முறை ஊருக்குப் போய் வந்திருந்தேன். நீண்ட ரயில் பிரயாணம் பழகியிருந்தது. கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி ஏற்படுத்திய வற்புறுத்தலைத் தள்ளிவிட்டதில் தாத்தா தேசிகருக்குத்தான் என்மேல் கடுங்கோபம்.
இன்னும் ஏதாவது சொன்னால் வேலைக்கு கால்கடுதாசி போட்டுவிடுவேன் என்று பார்வதி அத்தையின் வழியாக அவர் காதுக்குச் சொன்ன பிறகுதான் அவரைச் சமாளிக்க முடிந்தது.
அப்பனைப் போல ஏதாவது லட்சியவெறி வந்து, பார்க்கிற வேலையை எழுதிக் கொடுத்து விடுவானோ என்று அவர் உண்மையாகவே பயந்தார். தத்துவப் புத்தகங்களில் இருந்து இப்போது அவர் அரிஜன் வாசிக்க ஆரம்பித்திருந்தார். அதனாலேயே அவருக்குத் ‘தனிநபர் அறப்போர்’ மீதான பயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் எனக்கு ஒரு சின்ன பழிவாங்கல் திருப்தி மட்டுமே தேவையாயிருந்தது. கிட்டத்தட்ட அது ஒரு மிரட்டல்தான்.
ஊரில் நிறையவே மாற்றங்கள். எல்லா மூலையிலும் அரசியல் பேச்சுகள். சுயநிர்ணய உரிமை ஆதரவாளர் ஒருபக்கமும் மொழிப்போராட்டக்காரர் மறுபக்கமும் நின்று மோதிக்கொள்ள, நிறையபேருக்கு வாய்ப்பூட்டுச் சட்டம் போடப்பட்டிருந்தது. ஏற்கெனவே ஜஸ்டிஸ் பார்ட்டியினர் முன்னெடுப்பில் மூன்று வருடங்களாக தலைவிரித்து ஆடிய இந்திப் போராட்டம் இப்போதுதான் சற்று ஓய்வுக்கு வரவிருக்கிறது. தில்லி ராஜ்ஜியத்தில் இருந்து கதர் கட்சியார் விலகலை அடுத்து, மாகாணம் புதிய சஞ்சலங்களோடு இருக்கிறது. கிட்டத்தட்ட கவர்னரிடமிருந்து இந்தி ரத்து அறிவிப்பு வந்துவிடலாம் என்றிருக்கிறது நிலைமை. இருந்தாலும் எங்கே அசம்பாவிதம் என்றாலும் கூட்டம் திரட்டினாலும் அது அங்கே சுற்றி இங்கே சுற்றி நம் தலையிலும் ஒரு சிறு கல்லையாவது எறிந்துவிட்டுப் போய்விடும்.
2 ஜனவரி 1940
அன்றைக்கு காலை ரெவின்யூ கச்சேரியின் வாசலில் ஒரு முப்பது பேருக்கு மேல்கொண்ட கூட்டம் கூடி நின்றது.
கச்சேரிக்கு முன் சென்றதும் தான் கவனித்தேன். கூடி நிற்பவர்கள் தலையாரி முள்ளானிடம் அந்நியோன்யமாக நின்று பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மாரிக்காலம் வந்துவிட்டதால் ஏதாவது ஏரி உடைப்பு ஏற்பட்டு விட்டதோ, இரண்டுநாள் முன்புதான் ரஸ்தாவில் கடலரிப்பால் பாலம் கால் பெயர்த்துக் கொண்டு நிற்பதாகச் சொன்னார்கள். அதிலே ஏதும் பாதிப்பானவர்களாக இருக்குமோ?
தலையாரியை உள்ளே அழைத்து விவகாரம் கேட்டேன்.
“ஏரிப்பிரச்சனை சார்வாள்” என்றார்.
சரி விபரமான யாராவது ஒருத்தர் ரெண்டு பேரை உள்ளே வரச்சொல்லிட்டு மற்றவர்களைக் கூட்டம் போடாமக் கலைஞ்சு போகச் சொல்லிச் சொன்னேன்.
உள்ளே வந்த அந்த நபருக்கு எப்படியும் வயது நாற்பதுக்குள் இருக்கும். எழுத்து படிப்பு தெரிந்தவராக இருந்தார்.
“என்ன விஷயம்”
“ஐயா ஏரித்தண்ணி பாழாப் போகுதுங்க. கலங்கு ஒடஞ்சு, உள்வாய்க்காரங்க அதப் புதைச்சு விட்டதால இப்ப பள்ளத்துக்கே போயிருச்சிங்க…”
“எந்த ஊருன்னு சொன்னாதானே”
“பொன்விளைந்த களத்தூர் ஏரிங்க. பாலாத்தங்கரையிலருந்து ரண்டு மைல் கெழக்கங்க”
“ஏரி பள்ளமானா என்ன.. இன்னும் தண்ணி கட்டுமே..?”
“அய்யோ, பள்ளமாப் போனது தண்ணி கட்டுற எடம் இல்லைங்க. தண்ணி போற எடம். அதுதான் ரொம்ப பள்ளமாப் போச்சுங்க.”
“சட்டப்படி உங்க ஜெமீன்தான் செய்யணும். அவர் என்ன சொல்றாரு”
“கோடைக்கு முன்னாலே ஜமீந்தார்கிட்டச் சொன்னம்ங்க. சரிபண்ணித் தர்றம்ன்னாருங்க… அப்புறம் வரவேயில்லங்க..”
“யார் உங்க ஜமீனு..”
“அதுவந்து, முத்துரங்கம் முதலியாருங்க. சமஸ்தான காங்கிரஸ்ல இருக்காரில்லீங்களா அவருதான்..”
“ஓ! சரி அவர் வரலன்னா கலெக்டர்கிட்ட மனுப் போடலாமில்ல..”
“அதையும் ஏன் விடுவானேன்னு கலெக்டருக்கும் மனு போட்டோம்ங்க. மனு கேள்விக்கே வரலை.”
“ஏன்?”
”இடையில தாசில்தார்னு ஒருத்தர் இருக்காருங்களே. அவரு ஜெமீனோட தம்பிதானுங்க.”
தாசில்தாருக்கும் ஜமீந்தாருக்கும் ஏதோ ஒட்டுறவு இருக்கும் என்று எப்போதோ புரிந்திருந்தேன். இங்கிருக்கும் சங்கிலித்தொடருக்கு அந்நியமாய் இருப்பவன் நான் மட்டும்தான் என்பதை அவர்கள்தான் அடிக்கடி எனக்கு உணர்த்திக் கொண்டிருந்தார்கள்.
“….“
“அவருதான் கணக்கெல்லாம் பாப்பாரு. எங்க மனுவ மட்டும் மடிச்சு மேலிடத்துக்கு அனுப்பிருவாருங்களா?”
“அண்ணன் ஜமீன், தம்பி தாசில்தாரா..?”
“ஆமாங்க…”
“சரி இப்ப ஏரியோட மேனேஜ்மண்ட் யார்கிட்டத்தான் இருக்கு”
“யாராவது எதாவது பண்ணுனாதானங்க அவரா இவரான்னு சொல்லலாம். ஏரிக்கு காவாய் வெட்டி தண்ணி பாய்ச்சித் தரக்கூடியவங்க ஜமீனுதான். வருசக்கணக்கா வெட்டே விழல. பாதை கெட்டுப்போய் பத்து வருசமா வரவுகாலும் கிடையாது.”
“ஊர்க்காரங்களைத் திரட்டி எதாவது முயற்சி எடுத்தீங்களா?..”
“அங்கதாங்க சிக்கலு. எங்களுது ஜமீனுக்குச் சொந்த கிராமம்ங்க. பூராம் பட்டா உண்டு. ஜமீன மீறி, நாங்க காவாய் கட்டி எடுக்கப்போனா பக்கத்தூர் ஆள்ங்க எங்கள மண் அள்ளக் கூடாதுன்னு சண்டைக்கு நிப்பாங்க..”
“அவங்க ஏன் சண்டைக்கு வராங்க..”
“அவங்களது பெரிய கிராமம்ங்க. எங்கள மட்ட மனுசனாப் பாப்பாங்க. கிட்டக்கப் போனா வெட்டுக்குத்துன்னு வந்து நிப்பாங்க. நாம வெள்ளாம பாக்கணும்ங்களா, அருவா கம்பத் தூக்கிட்டு ஓடணும்ங்களா நீங்களே சொல்லுங்க.”
“…..”
“அதுல அவங்களுக்கு நன்ம இல்லாமயில்ல. கல்கட்டாம வுட்டு ஏரிக்குத் தண்ணி வரவு இல்லாம ஆனாதால, அவங்களே உள்ளுக்குள்ள பயிர் வச்சு அக்கிரமம் பண்ணுறாங்க. இப்ப அவங்களே அசல் கிராமமா ஆகிட்டு வராங்க. அவங்க பக்கம் கலங்கலும் கட்டிட்டாங்கனா நாங்க எதுமே செய்ய முடியாது.”
“இவ்வளவு சிக்கலை வச்சுக்கிட்டு எப்படி பயிர் வைக்கிறீங்க..”
“அந்தப் பாடு பெரும்பாடுதாங்க. ஏரிக்கு வழிசெய்யாட்டாலும் தீர்வ கணக்கு, காணிக்கு பதினோரு ரூவான்னு எண்ணி வாங்க தேதியானா குமாஸ்தா டான்னு வீடுதேடி வந்துடுவாருங்க..”
அவர் சொன்னது சுருக்கென்றுதான் தைத்தது. முகத்தைக் கொஞ்சம் விறைப்பாக்கிக் கொண்டேன்.
“சரி மொத்தம் எவ்வளவு வஜா இருக்கும் உங்க பக்கம்..”
“என்ன அவுங்களுக்கு ஒரு ரெண்டாயிரத்திலருந்து மூவாயிரம் வந்துரும்ங்க. நஞ்சையும் புஞ்சையும் இருக்கே. கொறைஞ்சது மூணர ரூவால இருந்து, பத்தே முக்கா ரூவா வரைக்கும் ஏக்கருக்குன்னு ஜமீனுக்கு வசூலாகுரும். அவுங்களுக்கு அயன் கிஸ்தி கம்மிதானுங்களே. என்ன ஒரு ஐநூறு நுவா கட்டுனா பெரிய விசயமுங்க.”
“புஞ்சை தீர்வை எப்புடி?”
“அது மானாவாரியா போடுறது தாங்க. அவுரி உளுந்தஞ்செடி இப்படி என்னமாது… அதுக்கும் ரெண்டு ரூவா தீர்வ. மொதல்ல எங்க ஐயாமார் காலத்தில வாரப் பட்டாவா இருந்துச்சு. இப்ப கொஞ்சங் கொஞ்சமா ரொக்கத் தீர்வைன்னு ஆக்கிட்டாங்க.”
“உங்களோடது மொத்தம் எத்தன கிராமம்?”
“ஒரே கிராம்ம்தாங்க… ஏழைக்குடிங்க, இந்தத் தண்ணி ஒன்னு தான் சாமி.”
நான் தலையாரி முள்ளானை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர் விஷயத்தைப் பிடித்துக் கொண்டவராக, “ஒரே இனத்தானுங்க சார்வாள்..” என்றபடி பறைத்தாளம் அடிப்பதுபோல கைசாடை அசைத்துக் காட்டினார்.
அது அவர்களை நிச்சயம் சங்கடப்படுத்தியிருக்கும்.
ஒருவிதக் குற்றஉணர்வு மேலோங்க அடுத்து அவர்களைச் சிரமமின்றி எதிர்கொள்ள கொஞ்சம் இணக்கம் மிகுந்த தொனியில் கேள்விகளைத் தொடர்ந்தேன்.
“ஒரே கிராமத்தாள்களா நீங்கல்லாம்… சரி உங்களுக்கு ஆளுக்கு எத்தனை ஏக்கர் தேறும்.”
“எனக்கு பத்து ஏக்கர் நஞ்சைங்க. ஏக்கரு தீர்வை நூறு ரூவா கட்டுறேனுங்க. இவரு மூக்காண்டி. மேல்பாட்டக்காரரு ஆறே முக்கா ஏக்கரு வச்சிருக்காரு. மத்தவங்களுக்கு நாலு அஞ்சுன்னு இருக்குதுங்க. தரிசும் கெடக்குதுங்க. அதை விட்டுக் கொடுக்கணும்னும் ரொம்ப அழிச்சாட்டியம் நடக்குமுங்க”
“உங்களுக்கு இந்தத் தீர்வை ஜாஸ்தியாப் படுதுன்னு எப்பவாச்சும் தாவா போட்டீங்களா?”
“அது ஒரு பத்து வருசம் முன்ன வியாஜ்யம் பண்ணமுங்க. ரெண்டு கோர்ட்டிலயும் எங்களுக்குத்தான் சாதகமா வந்துச்சு. மூனாவது கோர்டில அவங்கதான் ஜெயிச்சாங்க.”
“யாரு.. ஜெமீனா?”
“அவர்தானுங்க… அவரு நேரா ஆஜராக மாட்டாருங்க. குமாஸ்தா வந்து கேஸெல்லாம் பாத்துக்குவாருங்க”
“அந்த ஜட்ஜ்மெண்ட் காப்பி இருக்கா உங்கட்ட?”
“அதெல்லாம் பத்து முப்பது வருசத்து முந்தின தீர்மானம்ங்க. எதையும் பத்திரப்படுத்தாம விட்டோம்ங்களே.. காஞ்சாலும் தீஞ்சாலும் நிலத்துக்கு இவ்வளவு தீர்வையானு எங்க பெரியவரு வியாஜ்யம் போட்டதுங்க. துட்டுதான ஜெயிக்குது.”
“அப்படின்னா இப்ப கலங்கு கட்டித் தரணும்னு மட்டும் கேஸ் போட்டா, ஒங்க ஜமீன் தூசு தட்டுற மாதிரி தட்டிட்டுப் போயிருவார் அப்படித்தானே..”
“ஜமீன்கூட கட்ட வேணாம்ங்க, பொறுப்பெடுத்து உங்கள மாதிரி அதிகாரி ஒருத்தர் மனசு வச்சா போதும்ங்க. கிளியானூர் ஏரிப்பாதை குறுக்க பாலம் கட்டித் தந்தீங்களே அதுபோல அதிகாரி எங்களுக்குத் துணை நின்னா போதும்ங்க. எங்களுக்கு வேற கதி இல்ல பாருங்க”
“….”
“சின்ன ஏரிங்க எங்களுது. தாங்கல் மண் போட்டதே இல்ல. மாடு கண்ணு மேய்க்க ஊருள்ள ஒரு புறம்போக்கு கிடையாது. ஏரி உள்வாயானாலும் வெளிவாயானாலும் யார் எந்த எடத்தை மடக்கிப் போட்டாலும் பட்டா வாங்கிட்டுப் போய்ட்றாங்க..”
“என்ன, ஏரிக்குள்ள பட்டா கொடுத்தாங்களா..”
“அது எல்லா கிராமத்லயும் கொடுக்காங்களே.”
“ஒங்க கிராமத்துல உண்டா.. விபரமாச் சொல்லுங்க..”
“அது ஒரு இரனூறு முந்நூறு காணிங்க தேறும்ங்க.. பட்டாவ வச்சுக்கிட்டு ஆள் மாத்தி ஆள் கைமாத்திக்கிட்ட கதைல்லாம் இருக்கு. கதர்கட்சிக்காரங்களே ஏரிக்குள்ள இடம் வாங்கிப் போட்டிருக்காங்களே…”
“ஆமாங்க..?”
“ஆமாங்க, குமாஸ்தாவ வச்சு சொந்தப் பயிர் பண்ணினாருங்க. இப்ப கொஞ்சம் வரிகட்ட மாட்டாம ஏலத்தில வித்துட்டாருங்க.”
“இதெல்லாம் எப்போ நடந்தது?”
“போன வருசம் கூட ஏலம் நடந்துச்சே. ஆனா, வெளியாள் யாரும் வரமாட்டாங்க. அசல் ஊர்க்காரனே கிரையத்துக்குக் கேட்டா வித்துடுவாங்க. இப்படி இருபது காணி ஜமீன் தன்பேர்லயே பதிஞ்சிருக்காரு.”
“உங்க யார் பேர்லயாவது அப்படி வாங்கினது உண்டா?”
“அது பெரிய செலவுங்க. போக்குவரத்து எல்லாம் பாக்கணும். பட்டாவுக்கு செலவழிக்கணும். பாயுற மாட்டைப் பிடிக்கிற கதை. அதைப் புடிச்சுத்தான் கமலை ஓட்டணும்ன்னா மித்த கடனையெல்லாம் அடைக்க இந்த உசுரு போதாது…”
“சரி ஒரு விஷயம் மட்டும் சொல்லுங்க, எதுக்கு ஏரியை பட்டா போடுறாங்க.”
“அதுங்க.. ஊர ஒட்டித்தான் ரயில்ரோடு போவுது. பின்னாடி காலத்துல அங்க என்னென்ன வரும்னு சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க. அதுக்காக ஒழவு ஓட்டுறவன் பொழப்புல இப்படியாங்க மண்ணள்ளிக் கொட்டுறது”
“சரி நீங்க சொன்ன விபரமெல்லாம் வச்சு நான் மேலே எழுதிப் போடுறேன். மொத்தமா கலங்கல் கட்டுற வேலைக்கு என்ன செலவாகும்னு மட்டும் சொல்லுங்க.”
“அது ஆயிரம் ஆயிரத்தை நூறு ஆகும்ங்க.. எங்க சத்துக்கு நூறு நூத்தம்பதுன்னா பிரிச்சு கொடுக்கலாம்ங்க.”
“சரி உங்க கலங்கு கட்டித்தர வழியை நான் பண்ணுறேன். நீங்க வேற ஒரு உதவி மட்டும் பண்ணனும்..”
“என்ன செய்யணும்னு சொல்லுங்க”
“நான் ஒரு கடுதாசி தர்றேன்.. அதை நான் சொல்லும் முகவரிக்கு உங்க பேரிலே தபால் அனுப்பி விடுங்க”
“அப்படி செஞ்சா கலங்கல் கட்டித் தந்திடுவாங்களா”
15 ஜனவரி 1940
ஒரு நீண்ட கடிதத்தில் ஏரிப் பிரச்சனை குறித்து விலாவரியாக நான் இரண்டு கடிதங்கள் எழுதினேன். ஒன்று மேலிடத்துக்கும் இன்னொன்று கலங்கல் கட்டித்தரக் கேட்டவருக்கும். அதை அவர் பெயரிலேயே குறிப்பிட்ட ‘காஞ்சிபுர’ விலாசத்துக்குத் தபால் அனுப்பச் சொன்னேன்.
நான் எழுதிக் கொடுத்திருந்த அந்த முகவரிக்கு அவர் தபால் அனுப்பினார். அது எப்படிப் போய்ச் சேர்ந்தது என்பது குறித்து எல்லாம் நான் எதையும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் எதிர்ப்பார்த்தபடி அதே வாரத்திலே ’ஜஸ்டிஸ்’ ஆங்கில ஏட்டில் அந்த விவகாரங்கள் விலாவரியாய் வெளிவந்திருந்தன. ஜமீன் கட்சியினர் தொடங்கி, சர்க்கார் குமாஸ்தாக்கள், கதர்க் கட்சி மிராசுகள் வரைக்கும் ஆடிப்போய் விட்டனர்.
அரசாங்கப் பதிவேடுகளில் மட்டும் இருந்த புள்ளிவிபரங்களும் ஏரிக்குள் இருக்கும் இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விதமும், அது யார் யார் பேரில் எந்தெந்த காலகட்டத்தில் பதிவாகி இருக்கிறது என்ற விபரங்களும் எப்படி ஒரு கிராமத்தான் மூலம் பத்திரிகையில் வெளிவந்தது என்று ஆளாளுக்கு தவித்தனர். கூடுதலாக ஜமீன் ஒழிப்பு விவகாரம் பேசுபொருளாகி இருந்த நேரத்தில் இப்படி ஜமீனுக்குப் பாதகமாக திரியைக் கொளுத்தி விட்டது யார் என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். அவர்களுக்குக் கலங்கு கட்டிக் கொடுப்பதுகூட இப்போது பிரச்சனை இல்லை.
27 செப்டம்பர், 1967
கோட்டையில் இருந்து எனக்கு ஓர் கடிதம் வந்திருந்தது.
அப்போது சேலம் மாவட்ட சப்-கலெக்டராகப் பொறுப்புயர்வு பெற்றுப் பணியிலிருந்த நேரம்.
நாடு விடுதலை கண்டு, மாகாணங்கள் எல்லாம் பிரிக்கப்பட்டு, சர்க்கார் முறைமைகள் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன.
முதலமைச்சராக பழைய நீதிக்கட்சிக்காரர், திருவாளர். சி.என்.அண்ணாதுரை பதவியேற்றிருந்தார்.
கடிதம் அவர் பெயரிலே முத்திரையிடப்பட்டிருந்தது. அதுவொரு பிரத்யேக சந்திப்பிற்கான அழைப்பிதழாகவும் இருந்தது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியில் (28 செப்டம்பர் 1967) நான் அவரை ஓர் அரசு அதிகாரியாகச் சந்திக்கச் சென்றேன். தோளில் பருத்தித்துண்டு, முனைகளில் கட்சிக்கரை. கருப்பு பிரேம் கண்ணாடி, பொடி போட்ட முகத்துடன் சிரித்தபடி வரவேற்றார். ‘பரந்தாமன் சப்-கலெக்டர். சேலம். விசாரிச்சதில் பெரிய விஷயமெல்லாம் பண்ணிய ஆளாமே. எப்படி இருந்தது ரயில் பிரயாணமெல்லாம்?”
ஒரு முதல் அமைச்சருக்கான எந்தக் கர்வமும் இல்லாமல் என் நலம், பிரயாணம், ஜாகை, பணியில் இருந்த ஊர்கள் குறித்தெல்லாம் விசாரித்தார். காங்கிரஸ் சர்க்காரில் கிளியனூர் ஏரியைக் கடக்க பாலம் கட்டும் திட்டம் மூலம் பிள்ளைகள் தண்ணீருக்குள் நடந்து பள்ளிக்கூடம் போகும் நிலைமையை மாற்றியது குறித்தெல்லாம் தெரிந்தறிந்து பாராட்டிப் பேசினார்.
அந்தச் சந்திப்பில் சரியாக 27 ஆண்டுகளுக்கு முன்னால் செங்கல்பட்டு ஜில்லா பொன்விளைந்த களத்தூர் ஏரியில் கலங்கு கட்டித்தரும் விவகாரத்திற்காக நான் அவருக்கு மாற்றுப்பெயரில் அனுப்பியிருந்த கடிதமும் தற்போது அதே கிராமத்திற்கு நீர்த்தேக்கத் தொட்டி கட்டித் தருவதற்காக பதிவேடுகளில் ஏரி விவகாரம் தொட்டு மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட எனது கடிதத்தின் கையெழுத்தையும் அவர் அடையாளம் கண்டுகொண்டு என்னை நேரில் அழைத்துப் பேசியதையும் அறிந்து வெலெவெலத்துப் போனேன்.
“உங்களைப் போன்றவர்கள் எங்களோடு இணைந்து பயணிக்க வேண்டியவர்கள். எப்படி இருந்தாலும் அதிகாரத்தை மக்கள் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த நினைக்கிறவரை நீங்கள் எங்களோடே எப்போதும் இருப்பீர்கள்” என்றார். அவரது அந்த வாக்கியத்தை என் வாழ்நாளுக்கும் மறக்கவேயில்லை.
***
கார்த்திக் புகழேந்தி
பூர்வீகம் நெல்லை. தற்பொழுது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று சிறுகதைத் தொகுதிகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன. அண்மையில் இவரது புதிய சிறுகதைத் தொகுப்பு “வெஞ்சினம்” வெளியாகியுள்ளது. தொடர்புக்கு -writerpugal@gmail.com
அருமை கார்த்திக்…
உங்களின் ஜில்லா விலாசம் கதை இந்தியா சுதந்திர காலகட்டதுக்கே அழைத்துச் சென்றது. சூழலை பாதிரங்களைக் காட்சிப்படுத்துதல்
அபாரமாக இருந்தது. எளிமையான அக்காலத்துக்கு ஏற்ற மொழி. சிக்கலில்லாத நடை. நான் சமீபத்தில் படித்த கதைகளில் என்னைக்
கவர்ந்த ஒன்று இது.