ரம்யா
முதன்முறையாக அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பு பேருந்து ஏறி அமர்ந்த கணம் தோன்றியது. அவளின் தாட்டீகமான விரிந்த மார்பையும், கட்டுமஸ்தான தேகத்தையும் கணீரென்ற குரலையும் மேடையையே ஆக்கிரமித்து நடிக்கும் அவளின் ஆளுமையையும் அவளின் நாடகத்தை நேரில் கண்டவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.விளம்பரப்படங்களில், செய்தித்தாள்களில் அவளைப் பார்த்திருக்கிறேன். அழகி, வடிவானவள் என என்வரையில் சொல்லிவிட முடியாது. அவளுடைய அழகெல்லாம் அவளின் ஆணவத்திலிருந்து வருவது என்று மட்டும் சத்தியமாகச் சொல்ல முடியும். குழைந்து உருகும் பெண்கள் எத்தனை அழகானாலும் ஆண்களுக்கு துச்சம்தான். பாலாமணிக்கு உடல் மேலான போதம் இருப்பதாக எந்த புகைப்படத்திலும் நான் கண்டதில்லை. அப்படியொரு கர்வமாக நின்றிருப்பாள். விரிந்த மார்பு கொண்ட அத்தனை பெண்களிலும் தெரியும் இயல்பான நிமிர்விற்குமேல் அவள் தன் கலையையும் செல்வத்தையும் சேர்த்துக் கூட்டிய ஆணவம் ஒன்றைக் கை கொண்டிருந்தாள் என்றே எப்போதும் நினைப்பேன். அதுதரும் சீண்டலே என்னை அவளிடமிருந்து விலக்கி வைத்திருந்தது.
நாடகக்காரர்கள் அனைவரும் இப்படி புகழையும் பணத்தையும் அடைந்துவிடுவதில்லை. என்னைப் போன்றவர்களும் இருக்கிறார்கள்தானே என்ற பொறுமல் எப்போதும் என்னிடமுண்டு. வேலை நிமித்தமாக எத்தனை முறை பாலாமணி சூப்பர் எக்ஸ்பிரஸில் கும்பகோணம் போயிருந்தாலும் அவளின் நாடகத்தைக் காணத் தோன்றியதேயில்லை. நிர்வாணமாக ஒரு காட்சியில் தோன்றுவதாக விளம்பரம் செய்யப்பட்ட அவளின் நாடகத்தை நான் பார்க்கச் செல்கிறேன் என வெளியில் சொல்லிக்கொள்வதை கெளரவக் குறைச்சலாகக் கருதியவனாக இருக்கலாம். ஆனால் என்னைப் போலவே அப்படி வெளிக்காட்டிக் கொண்ட பலரும் திருட்டுத்தனமாகப் பார்த்துவிட்டார்கள் என்ற விஷயமும் தெரிந்துதான் இருந்தது.
தாராஷஷாங்கம் நாடகத்தில் பாலாமணி நிர்வாணமாக நடித்தபின் அனைவரும் பேசும் பொருளாக மாறிப்போனாள். அதன்பின் ஆவளின் வளர்ச்சி அசுர வேகமாக இருந்தது.“பெண்களே ஆண் வேடம் போடுகிறார்களே அதைப் பார்க்க!, பெட்ரோமாக்ஸ் லைட்டுன்னு புதுசா அறிமுகப்படுத்தியிருக்கா அதைப் பார்க்க! மனைவிக்கு பாலாமணி சாந்து வாங்க” என எத்தனையோ காரணங்களைச் சொல்லி அவளைப் பார்க்க வைக்கத்தான் அவளும் தினுசு தினுசாக நாடகங்களைப் போட்டுக்கொண்டிருந்தாள். என்னுடன் இருக்கும் நண்பர்கள் அவளின் நாடகத்திற்கு மெனக்கெட்டு ரயிலேறிச் சென்று பார்த்தார்கள். ஆனால் எந்த நாடகக்காரனுக்கும் அல்லது அறிவாளி என காட்டிக் கொள்பவனுக்கும் அவளை, அவள் நாடகத்தை வெளியில் புகழ்வதில் சிக்கல் இருந்தது.
எனக்குக்கூட ஏன் இந்த வீம்பு என அண்ணாச்சி சொன்ன போதுதான் புரிந்தது. அண்ணாச்சி கொடுத்த கடுதாசி இருக்கிறதா என சட்டைப் பாக்கெட்டை சரிபார்த்துக் கொண்டேன். சுவாமிகளின் மரணத்திற்குப் பின் நொடிந்துபோன நாடகக் கம்பெனியை மீட்க அண்ணாச்சி மிகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது நாடகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் பாலாமணியை நாடகம் போட அழைக்கலாம் என்ற யோசனையை அண்ணாச்சி எடுத்ததற்குப் பின்னால் என்ன காரணம் என என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லா முடிவுகளிலும் அவர் காட்டும் தீர்க்கம் போலவே இதிலும் தீர்க்கமாக நின்றிருந்தார்.
“அவள கூப்பிடத்தான் வேணுமா? அவ பொம்பள ஒரு மாதிரி. ஏற்கனவே அவள பத்தி இருக்கற சேதியெல்லாம் உங்களுக்கு தெரியாம இல்ல. இப்ப நீங்க நாடகம் போட கூப்பிட்டீங்கன்னா கத கட்டீருவானுக” என முகத்தை சலிப்பாக வைத்துக் கொண்டு சொன்னபோதும் அவர் சலனமடையவில்லை.
“எந்த நாடகம் நடிக்கற பொம்பளய பத்தி தான் நம்ம ஆளுங்க நல்லா பேசிருக்காங்க. நாம கூப்பிடணுமா வேணாமான்னு இல்ல இங்க கேள்வி. அவ ஒத்துக்கிடுவாளா இல்லயான்னு தான் கேள்வி” என்றார் சுருக்கமாக.
அண்ணாச்சி அவளுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஒத்துக்கொள்ளும் அளவு என்ன பெரிய இவளா என மனதில் தோன்றியது.“ஆனா…” என நான் இழுத்துக் கொண்டிருந்தபோது இடையில் புகுந்து, “என்ன ஆனா… கம்பெனி நட்டத்துல போய்கிட்டு இருக்கு. சினிமா பக்கம் போய்ட்டு இருக்கற மக்கள நாடகத்துல இன்னும் கட்டிப்போடற வித்தய அவட்ட மட்டும் தான் தெய்வம் விட்டு வச்சிருக்கு. அவ மனசு வச்சா தான் இந்த கம்பெனி பொழைக்கும். நமக்கு தேவைப்படற அளவுக்கான பணத்த அவ நாடகம் போட்டாத்தான் இப்ப நெலமைக்கு வசூல் பண்ண முடியும்” என்றார்.
“அண்ணாச்சி… சுவாமிகள் கிட்ட நீங்க நாடகம் போட ஆரம்பிச்சதிலிருந்து உங்கள பாக்கறவன்ற மொறைல சொல்றேன். பொண்ணு வேஷத்தையும் ஆம்பளைங்கள போட வச்சு பய பக்தியா நாடகம் போட்டுட்டு வந்தவரு அவரு. தீட்டு பட்டுடக் கூடாதுன்னா சொல்றேன்” என தலையைக் கீழே போட்டுக்கொண்டே வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னேன்.
“பிள்ளே… பொண்ணு வந்தாலே தீட்டுன்னா கதைல ஏன் ஆம்பளைகள மட்டும் வச்சு எழுதவேண்டியது தானே. எல்லாத்துக்கும் நமக்கு பொம்பள வேண்டியிருக்கு. வெளில காட்டிக்கணும்னா தீட்டு. அப்படித்தானே.” என்றார். அதிர்ச்சியடைந்தவனாக நின்றுகொண்டிருந்தேன்.
“நெலம ரொம்ப மோசமா போயாச்சு பிள்ளே. மொதல்ல இங்கயிருந்து கிளம்பணும். திருப்பாதிரிபுலியூருக்கு ட்ரூப்ப அழச்சிட்டு போகலாம்னு இருக்கேன். என் நடிப்பு மேல நம்பிக்க இருக்கு. ஒரு நாடகத்த நடத்துற செலவுக்கான பணம் கிடச்சிடுச்சுன்னா போதும். மீண்டுடலாம். இன்னும் கடன் வாங்கி குவிச்சு செய்யற அளவு மனத்தைரியம் எனக்கில்ல. இந்த நாடகத்தால வாழ்ந்தவன விட கெட்டவன் தான் அதிகம். எனக்கு வாழணும்னு இல்ல. இந்த கலைய கடைசி வரைக்கும் செய்யணும். அவ்ளோதான். இதைத்தவிர வேற எதுவும் எனக்கு தெரியாது” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே என் கைகளைப் பிடித்துக்கொண்டார். கொஞ்சம் உணர்ச்சிவயமாகிவிட்டார் என்று புரிந்தது. மென்மையான இளம் கைகளே அந்த பதட்டத்தைக் கடத்தியிருந்தது. இத்தனை இளையவரை நான் அண்ணாச்சி என்பது எப்போதும் துருத்தித் தெரிந்ததில்லை. நடிப்பாலும் குணத்தாலும் எல்லோருக்கும் அவர் அண்ணாச்சி மட்டுமே. அவர் கைகளை இறுகப்பற்றி, “புரியுது அண்ணாச்சி” என்றேன்.
“நீயே நேர்ல போய் நம்ம கம்பெனி நெலமையையும், நாடகக்காரங்க நெலமையையும் எடுத்துச் சொல்லி அவகிட்ட நேரடியா சம்மதம் வாங்கிட்டு வரணும் பிள்ளே. இந்தக் கடுதாசிய நீதான் அவ கைல கொண்டு சேக்கணும்” என்று சொல்லி என் கைகளில் அந்த கடுதாசியைத் திணித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார். சிறிது தூரம் முற்றத்தை நோக்கிச் சென்றவர் திரும்பாமலேயே, “அங்க ஷாமண்ணா இருக்கார். அவர் பாத்துப்பார். இல்லைனாலும் அவ பெரிய மனச நம்பித்தான் உன்ன அனுப்பறேன் பிள்ளே. ஒனக்கு அவமானம் ஏதும் நடக்காது” என்று சொல்லிவிட்டு வேகமாகச் சென்றுவிட்டார். அந்த ஒரு காரணத்துக்காகவே நான் என்னை சமாதானம் செய்துகொண்டு அவளைப் பார்க்க இப்போது பஸ் ஏறியிருக்கிறேன்.
நாடகத்துறையில் பெண்கள் நுழைந்ததிலிருந்தே எல்லாம் கெட்டுவிட்டதாக நினைப்பவன் நான். இன்றும் கூட அந்த நினைப்பு மாறவில்லை.“தேவடியாள்கள் போடும் கூத்து” என நானே கிண்டல் செய்திருக்கிறேனே. அவளுடைய சாதியைக் குத்திக் காண்பிக்கும் பொருட்டு நண்பர்கள் சபையில் அவ்வாறு சொல்லி ஆற்றாமையை போக்கிக்கொள்வதுண்டு. எல்லாம் இந்த சபலபுத்தி கொண்ட ஆண்களை மூலதனமாக வைத்துப் போடப்படும் ஆட்டம் என்ற எண்ணம்தான் எனக்கு. தாங்கள் சந்தையாகிறோம் என்ற சிரத்தையே இல்லாமல் அவளை நோக்கி பெரும் படையுடன் இந்த வெட்கங்கெட்ட ஆண்கள் கூட்டம் மோதிக்கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதும் என் கையறு நிலையைச் சொல்வது போல கூத்துப்பட்டறையில் சொல்லிக்கொள்வேன்.
பேருந்தின் எதிர்காற்று முகத்தில் அறைந்து கொண்டிருந்தது.“கையில் கால் துட்டு கூட இல்லை. பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வயிற்றுப்பாட்டைப் பற்றிய சிந்தனையில்லாத நிலையை அடைய வேண்டும். இத்தனைக்கும் மத்தியில் நாடகம், கலை, மண்ணாங்கட்டி வேறு.” என எண்ணங்கள் தறிகெட்டு ஓடியது. கலைந்து கலைந்து முகத்தில் அறைவது போல நான் நடித்த பல நாடகங்களின் காட்சித்துணுக்குகள் மின்னி மின்னி மறைந்துகொண்டிருந்தன.
“யோவ் நானும் பாக்கறேன் டிக்கட் கேப்பிருன்னு. ஒம்பாட்டுக்கு சொகுசா ஒக்காத்துக்கிருக்கயே” என்று கண்டக்டர் கேட்டபோது எங்கிருந்தோ விழித்துக்கொண்டது போல எல்லா எண்ணங்களையும் உதிர்த்து பரபரப்பானேன்.
“மன்னிச்சிடுங்கண்ணே. பாலாமணி ஸ்டாப்புக்கு ஒரு டிக்கட்” என்று சொல்லி அவசர அவசரமாக சட்டைப் பையிலிருந்த அரையணாவை எடுத்துக் கொடுத்தேன். சொன்னதும் ஒரு நிமிடம் பார்வையை நிறுத்தி “அங்க எங்க” என கனிவாகக் கேட்டான்.
“பாலாமணிய பாக்க” என்ற அலட்சியத் தோரணையில் சொன்னேன். அவனுக்கு நான் அவள் பெயரைச் சொன்னது அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும். அதற்காகத்தான் அப்படிச் சொன்னேன். எல்லோரும் மதிக்கும் ஒருவளை அலட்சியப்படுத்தும் போது கிடைக்கும் கிளுகிளுப்புக்கு நிகர் இந்த உலகில் ஏது. அதுவும் எல்லோரும் அழகி என்றும் ட்ராமா குயின் என்று புகழும் ஒருவளை. பிற ஆண்கள் மதிக்கும் ஒருத்தியை தனக்கு நெருக்கம் என்று காண்பித்துக் கொள்வதில் வரும் ஒருவகை விவஸ்தை கெட்ட மகிழ்ச்சி உள்ளூரப் பொங்கி வழிந்துகொண்டிருந்தது எனக்கு. அதற்குப்பின் டிக்கெட் கொடுக்கும்போது ஒரு பவ்யமான தோரணை அவனிடம் வந்துசேர்ந்திருந்தது.
பாலாமணியைத் தெரியாதவர் கும்பகோணத்தில் இருக்க முடியாதுதான். ஆனாலும் இத்தனை மரியாதையாக நடந்து கொள்ளுமளவு என்ன செய்திருப்பாள் என்றே தோன்றியது. அவளின் வள்ளல் குணத்தைப் பற்றி பிறர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நடிகர்கள் புகழின் உச்சத்தில் இருக்கும்போது கட்டப்படும் கதைகளை நான் பெரும்பாலும் உண்மை என்று நம்பியதில்லை. எல்லாம் புகழுக்காக போடப்படும் வெளிவேஷம் என்றே எப்போதும் நினைப்பேன். எத்தனை பேரை அப்படிப் பார்த்திருக்கிறேன். பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பாலாமணி வீட்டுக்கு வழி கேட்க நினைத்தபோது “பாலாமணி வீட்டுக்குச் செல்லும் வழி” என எழுதியிருந்தது. வழிநெடுக மக்கள் நின்றிருந்தனர்.
“தம்பி ஏன் இங்க நிக்கறீங்க” என்று மாட்டுவண்டியில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இளைஞனிடம் கேட்டேன்.
“இந்நேரத்துக்கு பாலாமணி தலை காயவைக்க மாடிக்கு வருவா. அவள பாக்க தான்” என்றான். அங்கிருந்த அனைவரும் கூட அதைப் பார்க்கத்தான் வண்டி கட்டிக்கொண்டு வந்திருப்பது புரிந்தது. ஒருவகையான அருவருப்பு உடலில் பரவியது. கேள்விப்பட்ட கதைகள் யாவும் உண்மை என்று தெரிய வரும்போது அடையும் ஒருவகை திகைப்பு கலந்த வியப்போடு வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தேன். அந்த வீட்டின் காம்பவுண்ட் கேட்டு வரை கூடியிருந்த மக்களின் வழித்தடத்தைக் கொண்டே ஒருவழியாக வந்து சேர்ந்தேன். நான் கட்டியிருந்த மங்கலான பட்டு வேட்டி சட்டை, சந்தனப்பொட்டு, கையில் வைத்திருந்த செல்லப்பெட்டியைக் கண்டு காவலாளி ஓரளவு ஊகித்திருக்க வாய்ப்புண்டு. அவன் என்னைக் கண்டதும் சுற்றி நின்று உள்ளே அனுமதிக்க வாக்குவாதம் செய்து கொண்டிருந்தவர்களை விரட்டியடித்தபடியே ஓடிவந்து, “அம்மா இன்னும் ரெண்டு மாசத்துக்கு டிராமா எதுவும் ஒத்துக்கறதில்லன்னு சொல்லிருக்காங்க” என என்னையும் துரத்திவிடும் பாவனையில் கை காட்டினான். சற்றே அவமானகமாக இருந்தது.
“அண்ணாச்சி குடுத்துவிட்டதா இந்த கடுதாசிய குடுங்க” எனப் பதட்டத்தை வெளியில் காண்பிக்காமல் நீட்டினேன். அவன் வாங்கிப் பார்த்துவிட்டு உணர்ந்துகொண்டவன் போல ஓடிப்போய் அந்த கேட்டைத் திறந்தான். மிக உயரமான அந்த கேட்டைத் திறந்தபோது யானையை மிக அருகில் கண்டது போன்ற பிரம்மாண்டத்தை அந்த மாளிகை அளித்தது. நான் கற்பனையில் கட்டிக்கொண்டதை விட பிரம்மாண்டமான மாளிகை இது. வாயை மட்டும்தான் பிளக்கவில்லை, ஆனால் அந்த உணர்வோடுதான் நடந்தேன். பின்புறம் சலசலப்புகளும் கூச்சல்களும் கேட்டது. யாரும் செல்ல முடியாத இடத்திற்குள் நுழையும் பெருமித உணர்வோடு அனைவரும் பார்க்கும்படி உள்நுழைந்தேன். கேட்டை பூட்டிவிட்டு மாளிகையை பிரமித்தவாறு பார்த்துக்கொண்டிருந்த என்னை மீண்டும் அழைத்த காவலாளி, “இங்க ஓரமா நில்லும். உள்ள போய் அம்மாக்கிட்ட சொல்லிட்டு வந்து கூப்ட்டு போறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான்.
உள்ளே திருவிழா போல ஆட்களின் நடமாட்டம் இருந்தது. மாளிகைக்கு முன் மார்பிளால் அலங்கரிக்கப்பட்ட வட்ட வடிவமான நீரூற்றும் அதைச் சுற்றிலும் நன்கு கத்தரிக்கப்பட்ட செடிகளும் அந்த மாளிகைக்கு பிரம்மாண்டத்தைக் கூட்டியது. காம்பவுண்டிலிருந்து மாளிகையைச் சுற்றி மிக அடர்த்தியான மரங்களும், அதன் நிழலில் வண்ண வண்ணப் பூச்செடிகளுமென பச்சை சூழ்ந்திருந்தது. குருவிகள், மயில்கள், மான்கள், மனிதர்கள் என உயிர்ப்பான இடமாக சூழல் இருந்தது. தோட்டத்தைப் பார்ப்பதற்கு மட்டுமே பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டதை விடவும் அதிக நபர்கள் அங்கு வெட்டுவதும், சரிசெய்வதுமாக பல வேலைகளில் ஈடுபட்டிருந்தனர். இடது மூலையின் ஓரத்தில் நான்கு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட வெள்ளிச் சாரட்டு வண்டி குதிரைகளின் சிறு அசைவுகளுக்கு ஏற்ப சற்றே அசைந்துகொண்டிருந்தது. வண்டிக்காரன் அடுத்தவேளை பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் ஆயாசமாக உட்கார்ந்து கொண்டிருந்தான். ஒட்டுமொத்த கும்பகோணத்தில் பாலாமணியின் அரண்மனை மட்டும் வேறோர் காலத்தில் நிகழ்ந்துகொண்டிருந்தது போல துண்டாக இருந்தது. மகாராணி ஒருத்தி கும்பகோணத்தை மட்டுமல்ல, நாடக உலகையே ஆள்பவள் போல மையமாக அரண்மனை இருந்தது.
சுடுசாதத்தின் ஒருவகை இனிமையான மணமும், பருப்பு வெந்து சாம்பாராக மாறும் அந்த தருணத்தின் மணமும் எங்கோ வலது மூலையின் ஓரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. வயிறு உடனடியாக பசிக்க ஆரம்பித்தது. என் வறண்ட நாவை எச்சிலைக் கொண்டு ஈரப்படுத்திக்கொண்டேன். தூரத்திலிருந்து யாரோ முக மலர்ச்சியோடு ஓடி வந்துகொண்டிருந்தார். கட்டாயமாக என்னை நோக்கியதாக இருக்காது என்ற நம்பிக்கையில் பின்னால் திரும்பிப் பார்த்தேன். எனக்குப் பின்னால் யாருமில்லை.
“செல்வண்ணே உங்களத்தான்.” என்றார் சத்தமாக. எனக்கு அடையாளம் தெரியவில்லை. நான் பொதுவாகச் சிரித்து வைத்தேன்.
“சுவாமிகள் ட்ரூப்பு தானே நீங்க. பாத்திருக்கேன். உள்ள வாங்க. அம்மா உங்கள கூட்டியாரச் சொன்னாங்க” என்றான். நான் தலையை ஆட்டிக்கொண்டே அவனுடன் நடந்தேன். வரும்வழியில் பார்ப்பவர்களிடமெல்லாம், “யாரு தெரியும்ல. சுவாமிகள் ட்ரூப்பு” என்று பெருமிதமாகச் சொல்லிக்கொண்டே வந்தான். அதே பெருமிதத்தோடு நானும் சற்று நிமிர்ந்து நடக்க ஆரம்பித்தேன். எங்கும் வேலையாட்களா, நாடகக்காரர்களா என தெரியாதவண்ணம் பேச்சுகளும் சிரிப்புகளும், அதனூடாக ஏதேதோ வேலைகளும் நடந்துகொண்டே இருந்தன. அதிகமான பெண்கள் இருக்கும்போது அடையும் ஒருவித பயமும் பதட்டமும் உடன் தொற்றிக்கொண்டது. அனைத்து கண்களும் என்னையே பார்ப்பது போன்ற பிரமையில் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைத்தேன். வராண்டாவில் எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் போல ஒரு கூட்டம் மாளிகையின் வாயிற்கதவையே பார்த்துக்கொண்டிருந்தது.
வாயில் கதவை அடைந்த போதுதான் மெல்ல மாளிகையின் உட்புறம் தெரிய ஆரம்பித்தது. ஏதோ மூச்சடைப்பது போல இருந்தது எனக்கு. மிக உயரமான உத்தரம் கொண்ட முகப்பு. அடிபருத்த தேக்குத்தூண்கள் நிறைந்த விசாலமான வரவேற்பறை. சிவப்பும் பொன்னிற வண்ணமும் அதிகம் தென்படும் தன்மை அரண்மனையின் சாயலையே கொடுத்தது. சாயல் என்ன! அரண்மனைதான். மோகனா பாப்பாவிற்கு ஒரு வாரம் இரவில் கதை சொல்லி தூங்கவைப்பதற்கு இவை போதுமே என்று நினைத்துக்கொண்டேன். உள்ளிருந்த சாடிகள் தோறும் மலர்ந்த மஞ்சள் நிறப்பூக்களும் சாம்பிராணி இலைகளும் விளக்கமுடியாத ரம்மியமான வாசனையும் கமழ்ந்துகொண்டிருந்தது. இனி எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளப் போகும் வாசனை என்று முதற்கணம் தோன்றியது.
“இங்க ஒக்காருங்க. அம்மாகிட்ட தாக்கல் சொல்லிட்டு ஓடியாந்திடறேன்” என துண்டை கையில் இடுக்கிக்கொண்டே ஓடினான். மாடிப்படியின் அருகில் நின்றுகொண்டிருந்த பெண்ணிடம் அவன் தகவல் சொல்லிக்கொண்டிருந்தான். நான் உட்கார்ந்திருந்த சிவப்புநிற வெல்வட் சோஃபா என்னை மடியில் குழந்தை போல புதைத்துக்கொண்டிருந்த உணர்வை அளித்தது. எனக்கு நேர் எதிரான சுவரில் பல படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அதில் பாலாமணி விருது வாங்கிய புகைப்படங்கள்தான் அதிகமிருந்தன. அதற்கு கீழேயே கண்ணாடிப்பேழையில் விருதுகளும் கேடயங்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. என்னுடைய மெடல்களும் விருதுகளும் பரணில் எந்தத் தகரப்பெட்டியில் உறங்கிக்கொண்டிருக்கிறதோ என்று நினைத்து பெருமூச்சு விட்டுக்கொண்டேன். ஒரு நாடகக் கலைஞனுக்கு விருது தரும் மோகம் என்ன என்பதை நன்கு அறிந்தவன் நான்.
அந்தப் புகைப்படங்களில் நீளவாக்கில் ‘பாலாமணி மலபார் உடையில்’ என்று எழுதப்பட்ட படம் இருந்தது. வெண்பட்டில் வலது புறம் மிக அகலமான வெள்ளிச்சரிகை மலையாளிகள் கட்டுவது போல மார்பைச் சுற்றி முண்டு கட்டியிருந்தாள். ப்ளவுஸ் அணியாத பாலாமணியின் அந்த போஸ் எந்த ஆணையும் சீண்டுவது. அந்த புகைப்படத்திற்காக அவளைத் திட்டிய பலரும் மறைமுகமாக டவுனுக்குச் சென்று செய்தித்தாளை வாங்கிவந்து ரசித்த புகைப்படமது. செய்தித்தாளில் நான் பார்த்ததை விட துல்லியமாக கலரில் மாட்டப்பட்ட இந்த புகைப்படத்தில் அழகாக இருந்தாள். பாலாமணியின் தாட்டிகமான மார்பில் அவள் கழுத்தை ஒட்டி அணிந்திருந்த நெக்லஸும், மார்புக்கு முன்பே நின்றுவிடும் உயரமும் கொண்ட தடிமனான மாங்காய் ஆரமும், கையை இறுக்கிக் கொண்டிருந்த மிகப்பெரிய தங்க வளையல்களும், நடுவிரல், கட்டை விரல் தவிற பிற விரல்களில் அவள் அணிந்திருந்த பெரிய வேலைப்பாடுள்ள மோதிரங்களும், காதில் கிளிஞ்சல் போல ஒட்டிக்கொண்டிருந்த தங்கக் கம்மலும், மூக்கில் அணிந்திருந்த புல்லாக்கும் பெண்களை மட்டுமல்ல ஒட்டுமொத்த வணிகச் சந்தையையே கவர்ந்திருந்தன.
பாலாமணி கம்மல், பாலாமணி வளையல் என கூவிக்கூவி விற்பதை நானே கேட்டிருக்கிறேன். அவள் ஒரு நாடகத்தில் கட்டும் புடவை பாலாமணி புடவை என்று சொல்லி தடபுடலாக விற்றுத் தீர்ந்தது. என் மனைவியே கூட கும்பகோணத்திற்குச் செல்கிறேன் என்று சொன்னபோது பாலாமணி புடவை ஒன்று வாங்கிவரச் சொல்லியிருந்தாள்.அவள் குதூகலம் காட்டியபோது அதை சட்டை செய்யாதவன் போல் இருந்தேன். அதில் வெளிப்படும் ஆண்மையின் பொருட்டும், எப்பேற்பட்ட அழகியென்றாலும் விழுபவனல்ல என என் மனைவியிடம் பறைசாற்றிக் கொள்வதற்கும் நடித்த நடிப்பு அது.
பாலாமணி திருமணம் செய்துகொள்ளவில்லை. பொதுவாகவே நாடகக்காரர்களுக்கு அந்தக் குடுப்பினை சரியாக அமைவதில்லை. அதிலும் பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.“திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை” என்ற பேட்டியை என் கூட்டு நண்பர்கள் எத்தனை ஆபாசமாக விவாதித்தோமென்று நினைவிருக்கிறது. ஒரு பெண் திருமணமாகிவிட்டால் ஒரு பார்வை, குழந்தை பிறந்துவிட்டால் ஒரு பார்வை என ஆண்களின் உள்ளம் செல்லும் போக்கை அறிந்தவன் நான். திருமணம் செய்யாமல், குழந்தை பெற்றுக்கொள்ளாது கட்டுக்குலையாத பெண்ணின் மேல் கிழவியாவது வரை இருக்கும் ஒருவகை ஆபாசப் பேச்சுக்களை இங்கே தவிர்க்க இயலாது. வீட்டினுள் ஒடுங்கிக் கிடக்கும் பெண்களுக்கே இந்த நிலமை என்றால் நாடகக்கார பெண்களுக்கு கேட்கவே வேண்டாம்.
எனக்கும் ஒழுக்கம் சார்ந்து யார்மேலும் எந்த மதிப்பும் இல்லை. எல்லோர் மேலும் எப்போதும் ஒரு சந்தேகக்கண் இருக்கும். தொடர்ந்து இது போன்ற செய்திகளைப் பேசிக்கொண்டிருக்கும் கும்பல்களை அருகில் வைத்திருப்பதால் ஆழப்பதிந்து விட்ட உணர்வு இது. மாற்றுவது சிரமம்.
எனக்குப் பின்புறம் சலசலப்புகள் அதிகம் ஆனதும் திரும்பிப் பார்த்தேன். பாலாமணி வருவதை அறிவிக்கும் குரல்கள் என்று புரிந்தது. மனம் அவளை நேரில் பார்க்கப் போகிறோம் என்ற பரபரப்பை அடைந்தது. ஆறு பெண்கள் சுற்றிலும் ஏதேதோ சலசலக்க மாடிப்படியிலிருந்து இறங்கி வந்தாள். மணிகள் குலுங்கும் ஒலி கேட்டது. அவள் காலில் அணிந்திருந்த தண்டையினுள் இருந்த பரல்களின் ஒலியாக இருக்கலாம். மிகத்தடிமனான அதைக் கொடுத்தால் கூட கம்பெனியை மீட்டுவிடலாம் என விவஸ்தை கெட்ட மனம் சொன்னது. கழுத்தை ஒட்டிய நெக்லசும், அதற்குக் கீழே பச்சைக்கல் மாங்காய் ஆரமும், நீண்ட காசுமாலைச் சங்கிலியும், தட்டையான கனமான வளையலும் அணிந்திருந்தாள். மூக்கின் நுனியைக் கூர்மையாக்கிக் காட்டும் புல்லாக்கும், மூக்கின் ஒருபுறம் சிவப்புக்கல் மூக்குத்தியும் மறுபுறம் மூக்கில் வெண்கல் மூக்குத்தியும் அணிந்திருந்தாள். காதுகளை ஒட்டியவாறு வைரத்தோடு அணிந்திருந்தாள்.
எல்லா அணிகலன்களையும் தெய்வத்தன்மையாக்கும் சிவப்புப் பட்டுச்சேலையை கொசுவம் வைத்துக் கட்டியிருந்தாள். விரைவும் கம்பீரமுமாக படியில் இறங்கி வந்துகொண்டிருந்தாள். எங்கிருக்கிறோம், ஏன் வந்தோம் என ஒரு கணம் மறந்து மீண்டு வந்தேன். புகழையும் செல்வத்தையும் தாண்டிய ஐஸ்வரியமான முகமலர்ச்சியுடன் என் கண்களைச் சந்தித்தாள். எனக்கு கால்கள் சற்றே நடுங்க ஆரம்பித்தது. என்னை நோக்கி கையெடுத்து கும்பிட்டு.“வாங்கண்ணே” என்றாள். அந்தச் சொல்லில் என் மனக்கசடுகள் கண நேரம் அமிழ்ந்தது போல இருந்தது.
“வணக்கம்மா” என்றேன். கையை ஏற்கனவே கும்பிடும் பாவனையில் வைத்திருந்தேன். அநேகமாக அவள் மாடிப்படியில் இறங்கி வரும்போதே கைகளைக் கூப்பியிருப்பேன். அதற்குள் வெளியிலிருந்த கூட்டம் ஒன்று எனக்கு முன்னே சென்று அவளைச் சுற்றி வளைத்துவிட்டது. எல்லாம் புலம்பல்களும் யாசகங்களுமான சத்தங்களாக இருந்தன. கழுத்திலிருப்பதையும், கையிலிருப்பதையும், அருகில் தாம்பூலத்தில் வைத்திருந்த பணமும் என வாரிவாரிக் கொடுத்துக்கொண்டிருந்தாள். நேரமாகிக்கொண்டே இருந்தது.
அவள் திடீரென உணர்ந்தவளாக அருகிலிருந்த பணியாள் பெண்ணின் காதில் ஏதோ சொல்ல அவள் என்னை அடையாளம் கண்டுகொண்டு என்னை நோக்கி வந்தாள். என்னிடம் ஒரு கடுதாசியைக் கையில் கொடுத்து அதை அண்ணாச்சியிடம் பாலாமணி கொடுக்கச் சொன்னதாகச் சொன்னாள். கண்டிப்பாகச் சாப்பிட்டுவிட்டுப் போகச் சொன்னபோது தலையாட்டிக்கொண்டே வெளியில் வந்தேன். பசி முற்றிலும் இல்லாமலிருந்தது. கைகளும் கால்களும் குளிர்ந்திருந்தது. வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. கடுதாசியைப் பிரிக்கவும் மனமில்லை. அதைப் பையில் வைத்துக்கொண்டேன். அண்ணாச்சி மேல் ஆத்திரம் வந்தது.
*
“பிள்ளே, ஒருமுறை நாடக அரங்க சரிபாத்துட்டு வந்திடு. என்னென்ன பாக்கணும்னு யாரவிடவும் உனக்குத்தான் தெரியும்” எனப் பரபரப்பாகச் சொல்லிவிட்டு என்னைவிட்டு நகர்ந்தார் அண்ணாச்சி. என்னிடம் சொல்லிவிட்டால் அவர் அதன்பின் அந்த வேலையைச் சரிபார்த்துவிட்டேனா என்ற கவலை கூட இல்லாமல் இருப்பார். நான் எழுந்து குமரனைக் கூட்டிக்கொண்டு நாடகமேடை போடப்பட்ட இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். எங்கும் பாலாமணி ஸ்பெஷல் நாடகம், ‘டம்பாச்சாரி விலாசம்’ என்ற விளம்பரப் பலகைகள் ஒட்டப்பட்டிருந்தன. ஆனால் இந்த நாடகத்தில் பாலாமணி நடிப்பாளா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தது அண்ணாச்சியைத் தவிர. ஒன்றும் தீர்க்கமாகச் சொல்லப்படாத அந்தக் கடுதாசி வந்ததிலிருந்தே அண்ணாச்சி நம்பிக்கையாகவும் பரபரப்பாகவும் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். எனக்கு ஏதோ உள்ளூர உறுத்தலாக இருந்தது.
”செல்வண்ணே.. பாலாமணி என்ன வேஷம் கட்டுறா. தாசி வேஷம் தானே. அப்டி சொல்லித்தான் பத்து பேர கூட்டியாந்திருக்கேன். ஏமாத்திப் போட்றாதீங்கண்ணே” என இடதுபக்க மூலையில் கும்பலோடு நின்றிருந்த மணி உச்ச குரலில் கத்தியவாறு கேட்க, அருகிலுள்ளவர்கள் சிரித்தனர்.
“தாராஷஷாங்கம் நாடகம் இல்லையேன்னு காஞ்சு போயிருக்கவனுகள சந்தோஷப்படுத்தணும்ல. தாசி வேஷம் தான்.” என்றேன் நக்கலாக. எனக்கு ஏனோ அவள் வரமாட்டாள் என தீர்க்கமாகத் தோன்றியது. வந்தாலும் கூட அவள் நடிக்க மாட்டாள் என்றே நம்பினேன். தர்மத்துக்கு நடிப்பதற்கெல்லாம் மெனக்கெடமாட்டாள் என்று நினைத்தேன்.
“ஆனா ஒன்னு செல்வண்ணே.. எந்த வேஷத்தக் கட்டினாலும் கூட்டத்த கட்டி ஈர்த்திடுவா. இப்ப அவ அதிரடியா கூட்டத்த ஈர்க்கறது, பரபரப்பா பேச வைக்கறதத் தாண்டி வேற எங்கயோ போய்ட்டா. இன்னைக்கு இங்க பொம்பளைங்க தைரியமா நடிக்க வராங்கன்னா அவ ட்ரூப்பு இருக்க நம்பிக்கைல தான்” என உடன் வந்துகொண்டிருந்த குமரன் சொன்னான்.
“அதுக்குன்னு நிர்வாணமா நடிச்சு தான் இதெல்லாம் செய்யணுமா குமரா…” என்றேன் எரிச்சலாக.
“அந்த நாடகத்த நான் நேர்ல பாத்திருக்கேன் செல்வண்ணே… அது ஒரு உத்தி தான். தூரத்திலயிருந்து பாக்குறனுக்கு அந்த ஒரு நொடி நிர்வாணமா தெரியும். முனிவரோட தவம் கலைஞ்சதோ இல்லயோ ஒட்டுமொத்த நாடக ஒலகத்தையே கலக்கிட்டா. இனி காலகாலத்துக்கும் தாராஷஷாங்கம்னு சொன்னா பாலாமணி தான் ஞாபகம் வருவா. நல்ல விளம்பர உத்தி” என்றான்.
“ம்…” என பேச்சை முடித்துக் கொள்ளும் பாவனையில் சொன்னேன்.
யாரெல்லாம் ’பாலாமணி சிறப்பு நாடகம் போட்டுத்தான் இந்த நாடகக் குழுவ மீட்கணுமா’ என்று கேள்வி கேட்டார்களோ அவர்கள் அனைவரும் உற்சாகமாக நாடக மேடையைச் சுற்றி ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். இதற்கு முன் இத்தனை நடிகைகளையும் ஒரே இடத்தில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். அத்தனை பேரையும் ஒரே இடத்தில் சேர்க்க பாலாமணி போன்ற ஒருத்திதான் இங்கு வரவேண்டியிருக்கிறது. ”ம்… பெரிய இவ” என மனதில் சொல்லிக்கொண்டேன்.
அன்று மாலை கோலாகலமாக டம்பாச்சாரி விலாசம் சிறப்பு நாடகம் அரங்கேறியது. அதில் பாலாமணியே டம்பாச்சாரியாக கதை நெடுக நடித்திருந்தாள். வேசி மதனசுந்தரியாக வருவாள் என எதிர்பார்த்த ஏமாற்றம் சற்று அலையலையாக எழுந்து அவளின் நடிப்பில் அது அமிழ்ந்து போனது. அவளின் கணீரான குரலும், துறுதுறுப்பான நடிப்பும் அரங்கு முழுவதையும் கையில் எடுத்துக்கொண்டது. அவள் கையில் வைத்திருந்த டமாரச் சத்தத்தை விட “அதாகப்பட்டது என்னன்னா…” என்ற அவளின் குரலுக்குப் பின் கூட்டம் ”ட்ராமா குயின்! ட்ராமா குயின்!” என கூச்சலிடுவதை நிறுத்தியது. ஒட்டுமொத்த காலத்தையே ஸ்தம்பிக்க வைத்தது போல இருந்தது அவளின் குரலும் பாட்டும்.
டம்பாச்சாரி விலாசம் எத்தனை மேடைகளில் நடிக்கப்பட்டிருக்கிறது. நானும் கூட பார்த்திருக்கிறேன். ஆனால் பாலாமணி போல அரங்காற்றுகை செய்வதில் யாரும் தேர்ந்தவர்கள் அல்ல என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்தான். சில நாடகங்கள் அப்படி தங்களை சில கலைஞர்களிடம் ஒப்புக் கொடுத்துவிடுகின்றன. அவள் முன்னர் அரங்கேற்றிய அத்தனை டம்பாச்சாரி விலாசத்தை விடவும் இதுதான் சிறந்தது என பேசிக்கொண்டார்கள். எத்தனை முறை சுவாமிகளின் ஒரே நாடகம் பலமுறை அரங்காற்றுகையாவதைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் நடிகர்களாலோ, சூழலாலோ அல்லது விளக்கமுடியாத ஒன்றாலோ அது வேறொன்றாக ஆகிறது.
டம்பாச்சாரி விலாசத்தின் கதாநாயகி மதனசுந்தரியாக வடிவாம்பாள் நடித்திருந்தாள். பெயருக்கேற்றாற் போல வடிவானவள். அழகி. முத்தாய்ப்பாக சாமண்ணா ஐயர் பதினாறு வேடங்களில் தோன்றினார். சட்டிப் பரதேசியாக, கோமுட்டி செட்டியாராக, டாபர் மாமாவாக அவர் வந்த இடங்களில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஆர்ப்பரித்து சிரித்துக்கொண்டிருந்தனர். சாமண்ணா கவர்னர் வெல்லிங்டன் பிரபுவிடமிருந்து சார்லி சாப்ளின் பட்டம் பெற்றவர். எங்கள் நாடகக் குழுவிலிருந்த பலரும் அவரை ஒரே சமயம் பெருமிதமாகவும் பொறாமையாகவும் பார்த்துக் கொண்டிருந்தோம். நாடகம் முடிந்தபோது அண்ணாச்சி கலங்கியபடி விரைவாக எழுந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
இரவு முழுவதும் ரசிகர்களுடன் உரையாடுவதும், விருப்பமானவர்களும், பெரிய ஆட்களும் பாலாமணி நாடகக் குழுவினருக்கு பரிசுகள் வழங்குவதும் என அந்த இடமே கோலாகலமாக இருந்தது. மிகப்பெரிய வரலாற்று நிகழ்வொன்றைப் பார்த்துக்கொண்டிருப்பவன் போல அந்தச் சலசலப்புகளை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதியில் சம்பிரதாயமாக மொத்த நாடகக்குழுவும் எடுக்கும் புகைப்படம் முடிந்தவுடன் மெல்ல அனைவரும் கலைந்து செல்ல ஆரம்பித்தனர். பாலாமணியும் சாமண்ணாவும் நாடக மேடையைவிட்டு கிளம்பியவுடனேயே கூட்டம் வேகமாகக் கலைய ஆரம்பித்தது.
எல்லோரும் கலைந்து சென்ற பின் இருக்கும் ஒரு கலைந்த கலையற்ற தன்மை என்னை வெறுமையில் ஆழ்த்தியது. மேடைக்கு நேரெதிராக தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்து அதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அழுகையாய் வந்தது. ஏன் அழுகிறேன் என்று சொல்லத் தெரியவில்லை. மேடை ஒழிந்தபின் எல்லாமும் பொருளற்றுப் போகிறது. நடிகர்களும் பார்வையாளர்களுமே இந்த மேடைக்கும் இடத்திற்கும் உயிரூட்டுகிறார்கள். காலமும் இடமும் பொருள் கொள்வது இவர்களால்தான்.
எல்லோரும் ஒருநாள் இந்த நாடக மேடையை விட்டுக் கிளம்பவேண்டியதுதான். ஒருவகையில் நல்ல கலைஞர்கள் அனைவரும் இதை அறிந்திருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன். பாலாமணி பணத்தை வாரிவாரி தானம் செய்வதும், யாரையும் சட்டை செய்யாமல் வாழ்வதும் கூட இதை உணர்ந்ததனால் இருக்கலாம். அண்ணாச்சிக்கு பாலாமணி கட்டாயம் வருவாள் என்ற நம்பிக்கையும் கூட இதனால் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. மிகச்சரியாக எதையும் என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. எண்ணங்கள் கலைந்து முட்டினாலும், அவ ட்ராமா குயின்தான்,நடிகை… நடிகை.. என மனசு அடித்துக்கொண்டிருந்தது.
“எடீ… பாலாமணி… நீ ஒரு ட்ராமா குயின் தான் டீ…” என்று உலறலான நாக்கை சுழற்றிக்கொண்டே சாராய பாட்டிலை கீழே வைத்தேன். அழுகை முட்டிக்கொண்டு வந்தது. என்னை யாரும் நினைவு வைத்திருக்கப் போவதில்லை. ஆழத்தில் பாலாமணியையும் கூடத்தான் என்று தோன்றியது. ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். வலிந்து சங்கரதாஸ் சுவாமிகளை நினைத்துக்கொண்டேன். கண்களை மூடி, ஒருக்களித்து கைகளை தொடையிடுக்கில் வைத்து உடலைக் குறுக்கி பெஞ்சில் படுத்துக்கொண்டேன். இந்த நாடக மேடையும் கூட கண்களை மூடியவுடன் காணாமல் ஆனது. எங்கோ இருளான வானத்தில் வேகமாக நட்சத்திரங்களினூடாக பறந்துகொண்டிருந்தேன். என் உளறல்கள் அங்கே சிதறிக்கொண்டிருந்தன.
*
நாடகம் முடிந்த அடுத்த நாள் காலை அண்ணாச்சியைக் காண பாலாமணி சாமண்ணாவுடன் வந்திருந்தாள். நாங்கள் அனைவரும் பேச்சுச் சத்தங்களை நிறுத்திக்கொண்டு சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு ஓரமாக நின்றிருந்தோம். மஞ்சளும், குங்குமமும், மல்லிகையும் கலந்த வாசனையும், பெண்களின் சேலைக்கே உரிய ஒருவித மணமும் கூடத்தை நிறைத்தது. வந்து நின்றதும் ஒட்டுமொத்த கூடத்தையும் நிமிர்ந்த கண்களால் துழாவி என்னைக் கண்டுகொண்டதைக் காட்டும் பொருட்டு தலையை ஆட்டியவாறு திவ்யமாகப் புன்னகைத்தாள்.
எனக்கு பயல்கள் மத்தியில் அது பெருமிதத்தைத் தந்தது. சாமண்ணா வேகமாக வந்து அண்ணாச்சியின் கைகளை பிடித்துக்கொண்டார். அவர் அண்ணாச்சியின் தலையை, கன்னங்களை, தடவி தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டார். “பொடியனா இருக்கும் போது மொத மொறையா பவுடர் போட்டு விட்ட கன்னம். ஞாபகம் இருக்கா?” என்று அண்ணாச்சியிடம் கேட்டார்.
“ஞாபகம் இருக்கு சாமண்ணா” என்றார் அண்ணாச்சி கலங்கியபடி.
“இவன் பெரிய நடிகனா வருவான்” என பாலாமணியைத் திரும்பிப் பார்த்து சாமண்ணா சொன்னார். அவள் அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டிக்கொண்டே மெலிதாகப் புன்னகைத்தாள். அழகி என்று நினைத்துக்கொண்டேன். அருகில் வந்து கைகளில் வைத்திருந்த தாம்பூலத்தட்டை அண்ணாச்சியிடம் கொடுத்துவிட்டு கைகளைக்கூப்பி வணங்கினாள்.
”வசூலான முழுப்பணமும் இதுல இருக்கு” என்று சொல்லிவிட்டு மங்களமாகச் சிரித்தாள்.
***
ரம்யா – விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். எழுத்தாளர். நீலி மின்னிதழ் ஆசிரியர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர். மின்னஞ்சல்: ramya20080625@gmail.com
கதை தொய்வில்லாமல் நகர்கிறது. நலிந்து கொண்டிருக்கும் நாடகக் கம்பனியை மீண்டும் உயிர்பெறவைக்கும் பாலாமணியின் செயல் நினைவில் நிற்கும். கூடவே அவள் அழகும்.கதைசொல்லியின் காழ்ப்புணர்வும் பாலாமணியின் நடிப்புக்கு ஈடாக எழுதப்பட்டிருக்கிறது. வாசித்து மகிழ்ந்தேன் ரம்யா.