Saturday, November 16, 2024
Homesliderதமிழ் எழுத்தாளன்

தமிழ் எழுத்தாளன்

வேணி

மன் ஐந்தாவது நாளாக தலைமை அலுவலகத்தில் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கான தண்டனையை நிறைவேற்ற இன்னும் சில மணிநேரங்களே மீதமிருந்தது. தலைமையதிகாரி அவனை கண்டும் காணாதது போல போய்வந்துக் கொண்டிருக்கிறார். அவனுடைய அம்மா இங்கு இருந்திருந்தால் அவனை இப்படித் தவிர்த்திருக்க மாட்டார், மேலும் அவன் இப்படி இங்கு காத்துக் கொண்டிருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்காது. ஏமனுடைய அம்மாவுக்கு இச்சமூகத்தில் உயர்ந்த மதிப்பு உண்டு.

இந்நிலையை அடைய அவள் உழைத்த உழைப்பையும், செய்த ஏவல் வேலைகளையும், பட்ட பாடுகளையும் சொல்லி மாளாது. ஏமனின் அம்மா ஏமரியா தற்பொழுது சமூகத்தில் மிகுந்த மதிப்புடைய முந்நூறு ஆண்டு காலம் வாழக்கூடிய ஆலமரமாக பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள் .

தொடக்கத்தில் எல்லா சமூகத்தைச் சார்ந்தவர்களும் மனிதனாக பிறப்பதில் ஆர்வம் காட்டத்தான் செய்தனர். ஆனால் எப்போது பூமியில் நாகரீகம் தோன்றி வளர்ந்து, வாழுதல் கடினமானதோ அப்போதிலிருந்து மனிதனாகப் பிறப்பதென்பது குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் தண்டனையாக மாறிப்போனது. எல்லாச் சமூகங்களை போலவே இங்கும் சமூகப்படிநிலையில் கீழே உள்ள மக்களுக்கே அவர்கள் செய்த மற்றும் செய்யாத குற்றங்கள் என அனைத்தும் விரைவில் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது, மேலும் இங்கு குற்றங்கள் எளிதாக நடப்பதற்கான சாத்தியங்களையும் உருவாக்கி வைத்துள்ளனர். ஏமரியா இங்கிருந்துதான் முன்னேறி வந்துள்ளாள்.

அவளும் துவக்கத்தில் சில முறை மனிதராகப் பிறப்பெடுத்து உள்ளாள். ஆனால் அதன்பிறகு முன்பே கூறியதுபோல தனது கடும் உழைப்பினால் செடி, கொடி என ஆரம்பித்தவள் தற்போது ஆலமரத்தில் வந்து நின்றுள்ளாள். ஆனால், அவள் இத்தோடு நிற்கப்போவதில்லை. புத்தர் ஞானம் பெற்ற இரண்டாயிரம் ஆண்டு வாழக்கூடிய அரசமரமாக பிறப்பெடுப்பதே அவள் இலட்சியம், அதற்கான வேலைகளையும் அவள் தொடங்கி விட்டிருந்தாள்.

மேலும் அவளுக்கு மற்றவர்களை நிர்வாகம் செய்யும் இடத்தில் ஒரு அதிகாரியாக இருக்க வேண்டும் என்பது தீராத ஆசை. துரதிர்ஷ்டவசமாக முறையான கல்வி இல்லாததால் அவளுக்கு அது சாத்தியமில்லை. எனவே தனது மகன் மூலம் அந்த ஆசையை தீர்த்துக்கொள்ள முடிவு செய்தாள்.

நிர்வாகத்தின் எந்த ஒரு பணிக்கு தேர்வு நடைபெற்றாலும் அதில் ஏமனின் பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்கும், அதேபோல தேர்வு முடிவுகளில் அவன் பெயர் நிச்சயம் இடம்பெற்றிருக்காது. காலங்கள் கடந்து கொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால் ஏமனுக்கு தேர்வு எழுதுவதற்கான வயதுவரம்பு முடிவடைய ஒரு நூற்றாண்டுக்கும் கொஞ்சம் அதிகமான காலமே எஞ்சி இருந்தது. அச்சமயத்தில்தான் ஏமரியாவின் நேரம் வந்தது. அவள் இம்முறை ஆலமரமாக பிறப்பெடுத்து ஆக வேண்டும். சென்றால் திரும்ப எப்படியும் முந்நூறு ஆண்டுகள் ஆகும். அவள் அதனை தள்ளிப்போட எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை.

இதனை எண்ணி அவள் சோகமாக தனது தலையில் கைவைத்து அறையில் உட்கார்ந்திருந்த ஒரு இருள் சூழ்ந்த வேளையில் ஏமரியாவின் கணவன் தனது பிறப்பை முடித்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். ஏமரியாவின் கணவன் ஏமரியாவின் சமூகத்தைச் சார்ந்தவன். ஏமரியாவுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வளர்ந்தவன். அவளைப் பின்பற்றி அவளுடனையே மேலே ஏறி வந்தவன். தற்போது சமூகத்தில் ஓரளவுக்கு மதிப்புள்ள பறவைகளாகப் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கிறான். ஆனால், ஏமரியாவுக்கு திருப்தியில்லை, அவன் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டுமென சொல்லிக்கொண்டே இருப்பாள். அவனோ, தான் தற்போது இருக்கும் நிலையிலே திருப்தியாக உள்ளதாகக் கூறுவான். இதை முன்னிட்டு, அவர்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு சண்டை ஏற்படும்.

கடைசியாக ஏற்பட்ட சண்டை இருவரும் பிரிந்து செல்லும் நிலைக்குச் சென்று கடைசியில் ஏமனின் கண்ணீரால் தீர்த்து வைக்கப்பட்டது. வந்தவன் ஏமரியாவின் நிலையையும், அவளின் துயரத்திற்கான காரணத்தையும் தெரிந்து கொண்டு அவள் முன் சென்று மண்டியிட்டு அவளின் கைகளை எடுத்து தனது உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டு, “ஏமரியா ! கவலைப்படாதே, நிம்மதியாக சென்று வா.. நீ திரும்பி வரும்போது நமது மகன் நிச்சயம் தலைமையகத்தில் அதிகாரியாக இருப்பான். அதற்கு நான் உறுதியேற்கிறேன்” என்று சொல்லி ஏமரியாவின் நெற்றியில் தனது உதடுகளை அழுந்தப் பதித்து ஒரு முத்தமிட்டான்.

ஏமரியாவுக்கு தன் கணவனும் தனது கனவை பகிர்ந்து கொள்வதில் அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அவனை அப்படியே இறுக்கமாக அணைத்து கட்டிலில் கிடத்தினாள். அன்று இருவரும் அவர்கள் வாழ்வின் மிகச்சிறந்த கலவியை அனுபவித்தனர். அடுத்த நாள் ஏமரியா சந்தோஷமாக ஏமனை தனது கணவனின் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றாள்.

ஏமரியாவின் கணவனுக்கு தனது மகன் மக்கு என்று தெரியும் ஆனால் இவ்வளவு மக்கு என்று தெரியாது. ஏமனின் மண்டையில் இவனால் ஒன்றையும் புகுத்த முடியவில்லை. ஏமரியாவின் கணவனுக்கு தற்போது தனது மகனின் மண்டையில் களிமண்ணாவது உள்ளதா என்ற சந்தேகம் வரத்தொடங்கியிருந்தது.

நூற்றியிருபது வருடங்கள் கடந்துவிட்டன. ஒன்றிலும் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஏமனுக்கு தேர்வு எழுத பத்து வருட காலமே அவகாசமே இருந்தது. இனியும் இவன் தேறமாட்டான் என நிச்சயம் ஏமரியாவின் கணவனுக்குத் தெரிந்தது. ஏமரியாவுக்கு தான் செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்ற வேறு ஏதேனும் மாற்று வழிகள் இருக்கிறதா எனத் தேடத்தொடங்கினான். ஒருவன் தான் தேடுவது எது என்று தெரிந்து தேடும்போது அது நிச்சயம் கிடைத்துவிடுகிறது.

அவனுக்கும் கிடைத்துவிட்டது. ஆள் மாறாட்டம், கொஞ்சம் பழைய முறைதான் ஆனால் நூறு சதவீத வெற்றி. அந்த இடைத்தரகன் அப்படித்தான் சொன்னான். மேலும் அவன் தனது வாடிக்கையாளர் என உதிர்த்த பெயர்களெல்லாம் உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் இருந்தவர்கள்தான். செலவு அதிகம்தான், இருப்பினும் அவனுக்கு வேறு வழியில்லை. ஏமனும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டான். தேர்வு வந்து சென்றது, ஆள்மாறாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்து,  தேர்வு முடிவும் வெளியானது.

ஏமன் தலைமையகத்தில் வாழ்நாளை தீர்மானிக்கும் பிரிவில் அதிகாரியாக தேர்வானான்.  தனது முதல்நாள் பணிக்கும் சென்று வந்தான். அன்று ஏமன் பணியில் இருந்து திரும்பியதும் ஏமனின் தந்தை அவனுக்காக ஒரு பெரிய விருந்தே ஏற்பாடு செய்திருந்தான். அச்சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படக்கூடிய அனைவரும் வந்திருந்தனர். விருந்து மிகச்சிறப்பாக நடைபெற்றது .

ஏமனை அவன் வயதையொத்த பெண்களில் சிலர் சூழ்ந்துகொண்டனர். ஏமரியா இங்கிருந்திருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பாள் என ஏமரியாவின் கணவன் நினைத்துக் கொண்டான், இப்போது மட்டும் என்ன அவள் எப்போது திரும்பி வந்தாலும் நிச்சயம் ரொம்ப சந்தோஷப்படத்தான் போகிறாள், அன்று இதைவிட பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்வாள், அன்று என்னை முன்பை விட இன்னும்  இறுக அணைத்துக் கொள்வாள் என்று நினைத்துக் கொண்டான். விருந்து நிறைவாக நடந்து முடிந்தது.

அமைதியைத் தொடர்ந்து வரும் புயல்போல, நேற்றிருந்த மகிழ்ச்சியைக் குலைக்கும் வகையில் விடியலில் செய்தி வந்தது.  ஆள் மாறாட்ட குழுவில் உள்ள ஒருவன் மாட்டிக்கொண்டான், அவன் ஒன்றும் போராளியல்லவே. விரைவிலேயே அனைவரும் காட்டிக் கொடுக்கப்பட்டனர். ஒட்டுமொத்த ஆள் மாறாட்ட குழுவும், அந்த தேர்வில் ஆள் மாறாட்டம் செய்த பத்து பேரும் பிடிபட்டனர். இந்த சம்பவம் நிர்வாகத்தின் நம்பிக்கை தன்மையையே அசைத்துப் பார்த்தது.

அனைவருக்கும் அன்றே குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மனிதராக பிறப்பெடுக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் அங்கு அவன் பிறக்க போகும் இடமும், தொழிலும், வாழும் காலமும் தீர்மானிக்கப்பட்டது.

அதிலும் ஏமனோடு தண்டனை பெற்றவர்களில் அதிகாரத்துக்கு நெருக்கமான சிலருக்கு, அற்பாயுளில் இறந்து போகும் சிசுவாக பிறப்பது போன்ற எளிய தண்டனை அளிக்கப்பட்டது.

மீதி இருந்தவர்களுக்கு நீதிபதியின் மனநிலைக்கு ஏற்ப தண்டனை நிர்ணயிக்கப்பட்டது. ஏமனுக்கு பிறக்கும் இடமாக தமிழ்நாடாகவும், தொழில் தமிழ் எழுத்தாளன் எனவும், வாழும் காலம் அறுபத்தியெட்டு வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டது. இன்னும் ஐந்து நாட்களில் தண்டனை நிறைவேற்றப்படும். இவனது மேல்முறையீடும் உடனே நிராகரிக்கப்பட்டது.

தண்டனை உறுதியான பிறகு ஏமன் இந்தத் தொழிலைப் பற்றி அறிந்து கொள்ள தொழிற்பட்டியலில் தேடிப் பார்த்தான், அது மோசமான தொழில்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. அது இவனுக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது. பூமிக்கு போனவுடன் எதுவும் ஞாபகம் இருக்கப் போவதில்லை,

இருப்பினும் மேலும் தெரிந்துகொள்ள விரும்பி நூலகம் சென்று  இதுவரை தமிழ் எழுத்தாளராகப் பிறப்பெடுத்தவர்களின் குறிப்புகளை தேடி எடுத்துப் படித்தான். அந்த குறிப்புகள் அவனுக்கு தெம்பூட்டுவதாகத் தெரியவில்லை. எடுத்துக்காட்டாக ஒருவரின் குறிப்பு இப்படித் தொடங்குகிறது, “நான் இதுவரை பலமுறை மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறேன், ஆனால் இவ்வளவு போலியான வாழ்வை வாழ்ந்ததில்லை”, இன்னொருவரோ “மோசம்” என்ற ஒரே வார்த்தையோடு தனது குறிப்பை முடித்துக்கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் சென்று வந்திருந்தவரின் குறிப்பு ஒரு நீண்ட சோகக்கதை போலிருந்தது, “அங்கு இருக்கும்வரை என்னை ஒருவன் சீண்டவில்லை எனது படைப்பைப் பற்றி ஒருவன் வாய்திறந்து பேசவில்லை. ஆனால், இப்போது நான் இறந்தவுடன், ஒவ்வொருவனும் என்னைத் தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறான். எனது படைப்பில் எனக்கே தெரியாத நுணுக்கங்களையெல்லாம் கண்டுபிடித்து பேசுகிறான், என்னை இதுவரை சந்தித்தேயிராதவனெல்லாம் என்னுடன் கழித்த பொழுதுகளைப் பற்றி அனுபவக்கட்டுரை எழுதுகிறான், இரங்கற்பா எழுதுகிறான், கவிதை எழுதுகிறான், எனது பெயரில் இலக்கியப்போட்டி நடத்தி  பரிசுத்தொகையெல்லாம் கொடுக்கின்றனர் . ஆனால் அங்கு நான் வாழ்ந்த எண்பதாண்டு ஜீவனத்தையும் சோற்றுப் பிரச்சனையிலேயே கழித்தேன், ஒருவனும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை” என்று இன்னும் நிறைய எழுதியிருந்தார்.

இவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. கிட்டத்தட்ட இவன் படித்த மற்றவர்களின் குறிப்பும் இதை ஒத்தே இருந்தது.  எப்படி அறுபத்தியெட்டாண்டுகள் கடத்துவது என்று கவலை கொண்டான். தண்டனையை இரத்து செய்ய முயற்சியெடுக்கத் தொடங்கினான்.

ஏமன் இதுவரை புவியில் முழுமையான அர்த்தத்தில் பிறப்பெடுத்ததில்லை, ஒரேமுறை படிக்கும்போது செய்முறை பயிற்சிக்காக காகமாக ஒரு மூன்று மாதம் பிறப்பெடுத்துள்ளான், அவ்வளவுதான். அது பறப்பது, தின்பது, கரைவது, விளையாடுவது என மகிழ்ச்சியாகவே இருந்தது. இது அப்படி இல்லை, இவனுடைய தாய் இந்த பிறப்பெடுக்கும் பிழைப்பே வேண்டாமென்றுத்தான் இவனை அதிகாரியாக்க முயன்றாள்.

ஆனால் மொத்தமும் பாழாய்ப்போகி இப்படி தண்டனை பெற்று அதுவும் மனிதனாகப் பிறக்கப் போகிறான்.

இப்போது இவனுக்கு இருக்கும் ஒரே வழி தலைமையதிகாரிதான். அவர் நினைத்தால் கருணை அடிப்படையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க முடியும். மேலும் அவர் ஏமரியாவுக்கு நெருக்கமானவர் வேறு. அவரை அணுகி உதவுமாறு வேண்டினான்.  அவரோ இந்த வழக்கை அனைவரும் உற்று கவனிப்பதாகவும், இந்த வழக்கிலிருந்து விடுதலை அளித்தால் அது மற்றவர்களின் கோபத்தைக் கிளறி, தனது நற்பெயரை கெடுத்துவிடும் எனக்கூறி விலக்களிக்க மறுத்து விட்டார். இவனும் விடாமல் எப்படியும் கடைசிவரை முயற்சித்து பார்த்துவிடலாமென அவரின் அறை வாயிலிலேயே தினமும் காத்துக் கொண்டிருக்கிறான்.

இன்னும் சில மணிநேரங்கள் தான் இருக்கிறது.

இவன் இப்படி காத்துக்கொண்டிருக்கும்போது ஏமனின் தந்தை உள்ளே வந்து அவனது கையைப் பிடித்து வெளியே இழுத்துச் சென்றார். இழுத்துச் சென்றவர் தன்னை பின்தொடருமாறு சொல்லிவிட்டு முன்னே சென்றார். இவன் எங்கே என்று கேட்டதற்கு அமைதியாக தன்னை பின்தொடருமாறு சொன்னார். அந்த பின்தொடர்தல் எளிதில் முடிவதாகத் தெரியவில்லை. இவனுக்கு கால்கள் வலியெடுத்தன.

ஒன்னரை மணிநேரத்திற்குப் பிறகு அவர்கள் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள் வசிக்கும் ஒரு குடியிருப்பு பகுதிக்கு வந்து சேர்ந்தனர். ஏமனின் தந்தை அங்கிருந்த ஒரு பழைய சிறிய வீடொன்றைக் காட்டி அவனிடம், “ஏமன், அந்த வீட்டின் கதவைத்தட்டு உனது மாமன் ஏமன் திறப்பான். உனது நிலையைக்கூறு. நிச்சயம் அவன் உதவுவான்” என்றான்.

“மாமன் ஏமனா?”

“ஆமாம், உனது அம்மாவின் தம்பி”

“அவரது பெயரும் ஏமனா?”

“ஆமாம், அது உங்கள் குடும்ப வழக்கம் பிறக்கும் முதல் பெண்ணுக்கு ஏமரியா எனவும், முதல் பையனுக்கு ஏமன் எனவும் பெயரிடுவார்கள்”

“அது சரி, ஆனால் இவர் பற்றி நீங்கள் இருவரும் என்னிடம் இதுவரை வாய் திறந்ததேயில்லையே”

“ஆம், அதற்கு பொறுப்பு உனது அம்மாதான். அவளது நிலை உயர்ந்ததும், இவர்களுடனான தொடர்பை முற்றிலும் துண்டித்துக் கொண்டாள்”

“ஏன்?”

“ஏனென்றால், இவர்கள் அவளுடைய முந்தைய நிலையைத் தொடர்ந்து நினைவுவூட்டிக் கொண்டேயிருப்பார்கள் என்பதால்”

“அப்படியென்றால், அவர்களின் பெயரை மட்டும் எதற்கு வைத்தாள்?”

“அதை நீ அவளிடன்தான் கேட்க வேண்டும்”

“சரி, கேட்கிறேன். ஆனால், தலைமையதிகாரியாலேயே ஒன்றும் செய்ய முடியாதபோது இவர்களால் என்ன செய்து விட முடியும்”

“இவர்களால் செய்ய முடியாததே இல்லை, இவர்களுக்கு இருக்கும் தொடர்புகளெல்லாம் தெரிந்தால் நீ நிச்சயம் ஆச்சரியப்படுவாய். எதற்கும் கடைசி முறையாக இவர்களிடமும் கேட்டுத்தான் பார்த்துவிடுவோமே. முயற்சிப்பதில் ஒன்றும் தவறில்லையே”

‘நீங்கள் சொல்வதெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், இவர்கள் எப்படி நமக்கு உதவுவார்கள் அவர்களை நாம் முழுதாகப் புறக்கணித்திருக்கிறோமே”

“ஏமன் மிகவும் நல்லவன், உனது அம்மாவின் மேல் அதிகம் பிரியம் வைத்துள்ளான். நிச்சயம் மறுக்க மாட்டான்”

“அப்படியென்றால், நீங்களும் என்னுடன் வரலாமே”

“அவனுக்கு என்னைப் பிடிக்காது, நான் வந்தால் நன்றாகயிருக்காது. ஏமரியாவின் மகன் என்று சொல் நிச்சயம் உதவுவான்”.

சரி என்று சொல்லிவிட்டு ஏமன் அந்த வீட்டை நோக்கி நடந்தான். அவன் செல்லும் வழியிலிருந்தவர்கள் இவனையே உற்றுப்பார்த்தனர். இவன் அந்த வீட்டை அடைந்ததும் கதவைத் தட்டினான். கிட்டத்தட்ட ஏமரியாவின் முகச்சாயலில் இருந்தவன் கதவைத் திறந்தான். ஏமன் தனது மாமன் ஏமனிடம் தான் ஏமரியாவின் மகன் ஏமன் என்றான். மாமன் ஏமனின் முகம் பரவசத்தில் ஒளிர்ந்தது. ‘மாப்பிள்ளை’ என்று சொல்லி கட்டியணைத்துக் கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டான்.

தனது கைகளால் அவனது முகத்தை அளவெடுப்பது போல முகம் முழுவதும் அளந்தான். ஏமனுக்கு இது புதிதாக இருந்தது. மாமன் ஏமன், ஏமனை உள்ளே அழைத்து உட்கார வைத்து முகத்தில் புன்னகையுடன் ஏமனையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் ஏமன் தனது மாமனிடம் தயங்கித் தயங்கி தான் வந்த காரியத்தை சொன்னான்.

சிலநொடிகள் யோசித்த மாமன் ஏமன், ஏமனை அங்கு காத்திருக்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்றான். ஒரு அரைமணி கழித்து வந்தவன் கையில் ஒரு சிறிய பன்றி சிலை இருந்தது. அதை ஏமனின் கையில் கொடுத்துவிட்டு பேசத்தொடங்கினான்.

“ஏமா, இதை கொண்டுபோய் உனது தலைமையதிகாரியின் முன்பு போடு அவன் முதலில் அதிர்ச்சியடைவான், அப்போது அவனிடம் “அபேலியா” என்று சொல்லு அவன் நடுங்குவான், மேலும் அவனிடம் “கனிமேடா நட்சத்திரம்” என்று சொல்லு. உனது காலடியில் மண்டியிட்டு கதறுவான். அப்போது அவனிடம் நீ என்ன கேட்டாலும் செய்வான். இந்த தண்டனையிலிருந்து விலக்கு நிச்சயம் உனக்கு கிடைக்கும்” என்றான்.

“இது மிரட்டுவதாக உள்ளதே. ஏற்கனவே ஒரு தவறு செய்துள்ளேன். இது மேலும் மேலும் தவறு செய்வதாக ஆகாதா”

“தவறுதான். ஆனால் ஒரு தவறை இன்னொரு தவறால்தான் சரி செய்ய முடியும்”

“இதெற்கெல்லாம் என்ன அர்த்தம். பன்றி சிலை, அபேலியா, கனிமேடா நட்சத்திரம்”

“அதெல்லாம் பெரியவர்கள் சமாச்சாரம். உனக்குத் தெரியவேண்டிய அவசியமில்லை. இதைக்கொண்டு போய் காட்டு. நிச்சயம் உன் காரியம் முடிந்து விடும்”.

“இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும், இங்கே இருந்து கொண்டு”

“மேலே உள்ளவர்களெல்லாம் தங்கள் அழுக்கை இங்கேதானே வந்து கொட்டுகிறார்கள், நாங்கள்தானே அதை சுத்தம் செய்கிறோம்.. அல்லது அதற்கு பலி ஆகிறோம். எங்களுக்குத் தெரியாமல் எப்படி”

“மாமா, இதைப் பயன்படுத்தி நீங்கள் இங்கிருந்து தப்பித்திருக்கலாம் தானே”

“அது, நீ சொல்லும் அளவுக்கு எளிதல்ல. இந்த சுழலில் மாட்டிக் கொண்டவர்கள் வெளியே செல்வது மிகக்கடினம். அப்படி வெளியே சென்றவர்கள் மிகக்குறைவு, உனது அம்மாவை போல. ஆனால் அவர்களும் வெளியேறியதும் இந்தச் சுழலையும், அதில் சிக்கிக் கொண்டிருப்பவர்களையும் மறந்து விடுகிறார்கள்”

“அப்படியென்றால், அம்மாவும் இந்த முறைகளைப் பயன்படுத்திதான் முன்னேறினாளா?”

“இல்லை, இல்லை. அவளுக்கு இதெல்லாம் பிடிக்காது இதெல்லாம் வேண்டாமென்றுதான், நேர்வழியில் கடினமாகப் பயணித்து, தான் இப்போது இருக்கும் இடத்திற்கு வந்துள்ளாள்.”

ஏமனுக்கு பெருமிதமாக இருந்தது. அந்த பன்றிச்சிலையை எடுத்துக்கொண்டவன், அதையே சில நொடிகள் உற்றுப் பார்த்தான். பின்னர் தனது மாமனை நோக்கி, “மாமா, நீங்கள் மனிதனாக பிறப்பெடுத்துள்ளீர்களா” என்று கேட்டான்.

அவன் சிரித்தப்படி, “நூறு முறைக்கும் மேல்” என்றான். “எங்களுக்கு வேறு வழியுமில்லை”

“எழுத்தாளனாக?”

“ம்.. இருந்திருக்கிறேன்”

“எப்படி இருந்தது?”

“ம்.. மற்றவற்றை விட கொஞ்சம் மேல் என்று சொல்லலாம். நான் அங்கு வாழ்ந்து இருநூறு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இன்னமும் என்னை அங்கு படிக்கிறார்கள், நினைவுகூர்கிறார்கள். எனது படைப்புகள் அங்கு திரைப்படமாக ஆக்கப்படுகின்றன. ஐரோப்பாவில் ஒரு கிராமத்துக்கே எனது பெயர் சூட்டப்படுள்ளது, நிறைவான வாழ்வு தான்” என்றார்.

“தமிழ் எழுத்தாளனாக” என்று கேட்டான். அவர் இல்லை எனத் தலையை ஆட்டினார். மேலும் அவன் தனது மாமாவிடம், “சொல்லுங்கள் மாமா! ஏன் எல்லோரும் மனிதனாக பிறக்க பயப்படுகிறார்கள்” ஏமனின் மாமா ஒரு அலட்சியமான புன்னகையை வீசிவிட்டு பேசத்தொடங்கினார்.

“நம்மவர்களைக் கேட்டால் மனிதர்களை இழிப்பிறவிகள், வாழ்க்கையை வாழத் தெரியாதவர்கள், அவர்களின் கணநேர வாழ்க்கையை உண்மையென நம்பி ஓடிக்கொண்டிருப்பவர்கள், வாழ்வதற்காக உழைக்காமல், உழைப்பதற்காக வாழ்பவர்கள், மூடர்கள்  என குறை கூறுவார்கள்.

உண்மையில் சொல்லப்போனால் நம்மவர்கள் சோம்பேறிகள், பயங்கொள்ளிகள். இங்கு வாழத்தேவையான புள்ளிகளுக்காக பூமியில் பிறக்கிறார்கள்.

அதில் எதற்கு சவால் நிறைந்த மனிதனாக பிறக்க வேண்டும் என நினைக்கிறார்கள். மனிதர்களின் வாழ்வு சவால் நிறைந்தது. மனிதர்களின் பிரச்சனைகள் இவர்களை பயமுறுத்துகிறது. விலங்காகப் பிறந்தால் வெறும் சோற்றுப் பிரச்சனை மட்டும்தான்.

அதுவே மரம், செடி கொடியாகப் பிறப்பெடுத்தால் இவர்களுக்கு இன்னும் நிம்மதி. ஓட வேண்டியதில்லை, ஆட வேண்டியதில்லை, பாட வேண்டியதில்லை, ஏமாற்ற வேண்டியதில்லை, பொய் சொல்ல வேண்டியதில்லை, துரோகம் செய்ய வேண்டியதில்லை, கொலை செய்ய வேண்டியதில்லை, காதலிக்க வேண்டியதில்லை, கலவிகொள்ள வேண்டியதில்லை, வேலை செய்ய வேண்டியதில்லை, சேர்த்து வைக்க வேண்டியதில்லை, சேர்த்தை பாதுகாக்க வேண்டியதில்லை, புரட்சி செய்ய வேண்டியதில்லை, கதைகள் எழுத வேண்டியதில்லை, ஒன்றுமே செய்ய வேண்டியதில்லை வெறுமனே நின்றால் போதும், எல்லாம் தானாக நடந்து விடும்.

அதிலே இவர்களுக்கு பெருமிதம் வேறு.. த்தூ” காறி உமிழ்கிறான். “அதை ஏதோ தீண்டதகாததாக்கி தண்டனையாக்கி விட்டனர். ஏமன்! நான் இதுவரை நூறுமுறைக்கும் மேலே மனிதனாக பிறப்பெடுத்திருக்கிறேன், அதைவிட அதிகமாக விலங்காக, அதைவிட அதிகமாக செடி, கொடியாக. நான் சொல்கிறேன் மற்ற எல்லாவற்றையும் விட மனிதனாக இருந்ததுதான் எனக்கு சுவாரசியமாகவும், பிடித்தும் இருந்தது.

இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் இவர்கள் என்னை தண்டிக்கட்டும். அது எனக்குத் தண்டனையே அல்ல. நான் அத்தனை முறையும் மனிதனாகப் பிறப்பதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்” என்று சன்னதம் ஆடி முடித்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது.

ஏமனுக்கு ஒரு நொடி மனிதனாகப் பிறந்துதான் பார்க்கலாமே என்ற ஆசை தோன்றியது. பின்னர் ஏமரியாவை  நினைத்ததும் முடிவில் இருந்து பின்வாங்கிக்கொண்டான். தனது மாமனிடம் இப்போது கட்டியணைத்து விடைபெற்றான். மாமன் ஏமன், ஏமனை அடிக்கடி வருமாறு கேட்டுக்கொண்டான். இவனும் நிச்சயம் வருவதாக உறுதியளித்தான். கடைசியாக ஒருமுறை மாமன் ஏமன் அவன் செய்ய வேண்டியதை நினைவூட்டினான் பன்றிசிலை, அபேலியா, கனிமேடா நட்சத்திரம்.

ஏமன் அங்கிருந்து விடைபெற்றுக் கிளம்பி தனது தந்தை காத்துக்கொண்டிருந்த இடத்திற்கு வந்தடைந்தான். இவனது தந்தை இவனது முகக்குறிப்பை வைத்தே கண்டுபிடித்து விட்டான். போன காரியம் வெற்றியென்று. இன்னும் ஒருமணி நேரமே உள்ளது. தலைமையகத்தை நோக்கி விரைந்தனர்.

ஏமன் தலைமையதிகாரியின் அறைக்கதவை தனது காலால் எட்டி உதைத்து திறந்தான். தலைமையதிகாரியின் முகம் கோபத்தில் சிவந்தது, அப்போது இவன் தனது பையிலிருந்து அந்த பன்றிச்சிலையை எடுத்து அவரின் மேசை மேல் எறிந்தான் மாமன் ஏமன் சொன்னது போலவே தலைமையதிகாரி அதிர்ச்சியடைந்தான். தொடர்ந்து அபேலியா என்றவுடன் அந்த அதிகாரி நடுங்கினான், அடுத்து கனிமேடா நட்சத்திரம் என்று சொன்னதுதான் தாமதம் அதிகாரி இவன் முன் மண்டியிட்டு கைகூப்பி கெஞ்சலனான், “அய்யோ, இதற்கு மேல் எதுவும் சொல்லாதே. நீ என்ன சொன்னாலும் செய்கிறேன்” என்று கதறினான்.

இவன் தனது தண்டனையை நீக்கச்சொன்னான். அதிகாரி இப்போது அவனது காலை தனது இரண்டு கைகளால் இறுக்கிப் பிடித்துக்கொண்டு தற்போது நேரம் கடந்துவிட்டதாகவும், அதை தன்னால் செய்ய முடியாதென்றும் கூறினான். சரி, நான் ஆனதை பார்த்துக்கொள்கிறேன் என்று ஏமன் வெளியில் கிளம்பினான். அவனை அங்கிருந்து நகர விடாமல் காலை கெட்டியாக பிடித்தவாறே தலைமையதிகாரி பேசத் தொடங்கினார்.

“ஏமா! நான் உண்மையாகச் சொல்கிறேன், நேரம் கடந்து விட்டது. இனி என்னால் தண்டனையை தடுக்க இயலாது. ஆனால் ஒன்று செய்கிறேன் உன் பிறப்பு முடிந்து நீ திரும்ப வந்ததும் உனது பழைய வேலையையே உனக்கு திரும்ப தருகிறேன்”

“ஆனால், நான் மனிதனாக பிறப்பெடுத்தது எனது அம்மாவுக்கு தெரிந்தாலே துடிதுடித்துப் போவாளே” என்றான் ஏமன்.

“கவலைப்படாதே, நீ இப்போது எடுக்கப்போகும் பிறப்பை உனது பதிவேட்டிலிருந்தே எடுத்து விடுகிறேன். யாருக்கும் தெரியாது” என்றான்.

இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த ஏமனின் தந்தை ஏமனை அழைத்து, “ஏமா, இது ஒரு நல்ல வாய்ப்பாக தெரிகிறது. உனது அம்மா வருவதற்கு எப்படியும் குறைந்தபட்சம் இருநூறு வருடங்களாகும், உனக்கோ அறுபத்தியெட்டு வருடங்கள்தான் ஆயுட்காலம். எனவே, அவள் வருவதற்குள் நீ திரும்பி வந்துவிடுவாய், அதிகாரி பணியும் உன் கையில் இருக்கும். எல்லாம் நல்லபடியாக முடிந்துவிடும். ஏமரியாவுக்கும் மகிழ்ச்சி. ஒப்புக்கொள்” என்றார்.

ஏமனுக்கும் இது சரியாகவே பட்டது, இருப்பினும் கடைசி கோரிக்கையாக, “என்னுடைய தொழிலையாவது மாற்றித்தர முடியுமா, தமிழ் எழுத்தாளானாகப் பிறப்பது மிக மோசம். அதை நினைத்தாலே பயமாக இருக்கிறது” என்று தலைமையதிகாரியிடம் கேட்டான்.

“துரதிர்ஷ்டவசமாக உனது தொழிலை என்னால் மாற்ற முடியாது ஏமா, உனக்கு தமிழ் எழுத்தாளானாக பிறப்பதுதானே பிரச்சனை”

இவன் ஆம் என்று தலையையாட்டினான்.

“என்னால் உனது தொழிலைத்தான் மாற்ற முடியாது, ஆனால் உனது பிறக்கும் இடத்தை மாற்ற முடியும், தமிழ்நாட்டில் பிறந்தால் தானே தமிழ் எழுத்தாளனாக மாறுவாய். கவலைப்படாதே உன்னை எழுத்தாளர்களை பெரிதும் மதிக்கும் ஒரு தேசத்தில் பிறக்க வைக்கிறேன், போதுமா” என்றான்.

ஏமனும் சந்தோஷமாக ஒப்புக்கொண்டான். இருபக்கமும் ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏமன் தண்டனைகள் நிறைவேற்றப்படும் நகரும் படிகள் கொண்ட வரிசையில் சென்று நின்றான். ஏமனின் தந்தை வழியனுப்ப வந்திருந்தார், ஏமன் தன் கண்களில் இருந்து மறையும்வரை கையசைத்துக்கொண்டே இருந்தார். அவரது கண்களில் சாதித்துவிட்ட பெருமிதம் இருந்தது.

ஏமன் இடி, மின்னல், காற்று என அடர்மழை பெய்து கொண்டிருந்த ஒரு இரவில் பிரான்ஸ் தேசத்தின் ஒரு மருத்துவமனையில் ஏழாவது மாடியில் வீல் என்று அலறியபடியே பிறந்தான்.

பிறந்து சிறிது நேரத்திலேயே அவனது தந்தையும், அங்கிருந்த புலம்பெயர்ந்த பள்ளிகளில் ஒன்றில் கண்டிப்பான தமிழ் ஆசானாகவும் பணிபுரியும் சதாசிவ செல்வநாயகம் தனது மகனுக்கு தான் முன்பே முடிவு செய்திருந்தப்படி செழியன் என்று பெயரிட்டார் .

அடுத்தநாள் காலை அந்த மருத்துவமனை வளாகத்தில் நூற்றியிருபது ஆண்டுகளாக வீற்றிருந்த ஆலமரம், இரவு பெய்த அடைமழையில் வேரோடு சாய்ந்திருந்தது.  

வேணி – ஆசிரியர் தொடர்புக்கு – veniwrites11@gmail.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. தமிழ் நாட்டில் பிறந்த. தமிழ் எழுத்தாளர்களின் அனுபவக் கசப்பை எல்லாம் உமிழ்ந்து தீர்த்து விட்டார் வேணி. ஆனால் தமிழை மறக்கவில்லை. வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular