கருப்பு வெள்ளை யுகத்தின் ஆளுமைகள் – 1
‘புதிய பறவை’ எனக்கு பிடித்த படம். அந்தப் படம் போல படத்தின் இயக்குனர் பெயரும் ஈர்த்திருந்தது. நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு பெயர். அதனாலேயே அவர் பெயர் நினைவில் நின்றுவிட்டது.
பின்னாட்களில் தான் அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் தெரிந்தது. ‘புதிய பறவை’ படத்தை இயக்கிய இயக்குநரின் மற்றப் படங்கள் எப்படியாக இருக்கும் என்கிற ஆர்வம் தான் அவர் இயக்கிய படங்களைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது. தமிழ், இந்தி, தெலுங்கு படங்கள் இயக்கியிருக்கிறார். நான் தமிழ்ப் படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன்.
இவருடைய படங்களில் சில ஒற்றுமைகளைப் பார்க்க இயலும். இரண்டு உதாரணங்களைச் சொல்லலாம். மிராஸியே எழுதிய கதை, ரீமேக் செய்தது, வேறு கதையாசிரியர்களிடமிருந்து பெற்ற கதைகள் எதுவாக இருந்தாலும் அதில் ஒரு அம்சத்தைத் தொடர்ந்து கவனிக்க இயலும். எல்லாக் கதைகளிலும் குற்றஉணர்வு என்பது கதையின் அடிநாதமாக அமைந்திருக்கிறது.
திருட வந்த வீட்டில் அன்பாக நடத்தப்படும் கைதிகள் மூவர், தாங்கள் சிறைச்சலையில் இருந்து வந்தவர்கள் என்பதை நினைத்து ஒவ்வொரு கணமும் மருகுவது – மூன்று தெய்வங்கள். தன்னைப் படிக்க வைப்பதற்காகவே அண்ணன் இறந்து போனான் என்று குற்றஉணர்வில் சிக்கியிருக்கும் தம்பி – அண்ணனின் ஆசை
தேசத்துக்காக ஒருவனைக் கொலை செத்துவிட்டு அந்த வீட்டிலேயே தஞ்சமடைகிறபோது அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பது – இரத்த திலகம். மனைவியைக் கொலை செய்துவிட்டு அதனை மறைத்துக் கொண்டு மற்றொரு பெண்ணுடன் காதலில் விழுகிற ஒருவனின் குற்றஉணர்வு – புதிய பறவை. தான் ஏமாற்றியது தெரிந்ததும் தற்கொலைக்கு முயன்ற காதலியை குற்ற உணர்வு காரணமாக காதலன் மீட்கப் போராடுவது – பூவும் பொட்டும்
இவை சில உதாரணங்கள்.
இந்தக் கதாபாத்திரம் இந்தச் செயலை செய்யாது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும்போது அந்த எதிர்பாராத செயலை அந்தக் கதாபாத்திரம் செய்யும்.
உதாரணமாக அண்ணாவின் ஆசை, இரத்தத் திலகம், புதிய பறவையை சொல்லலாம்.நேர்மையான ஒருவன் தம்பிக்காக தான் இறந்தது போல் நடித்து இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுத் தருவது – அண்ணாவின் ஆசை. மிகுந்த கலாரசிகனும், நல்லவனாகவும் உள்ள ஒருவன் மனைவியைக் கொலை செய்வது –புதிய பறவை. தேசத்தைத் தன் உயிர் போல் நினைக்கும் ஒரு பெண் சீனா இந்திய போரின் போது ஒரு சீன தேசத்தவனை மணப்பது.
இப்படி நாம் முற்றலும் எதிர்பாராதத் திருப்பங்கள் அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாக நடக்கும். சொல்லப்போனால் அந்தக் கதாபாத்திரத்தை எவ்வளவு உயர்வாக காட்டுகிறார்களோ அதற்கு நேர்மாறாய் அவர்கள் நடந்து கொள்வதும் அதற்கு பின்னணியில் இருக்கும் நியாமுமே கதைகளாக இவரது படங்களில் அமைந்திருக்கின்றன.இது தவிர இவருடைய படங்களில் தொடர்ந்து அப்போதைய நாட்டினுடைய நடப்பு விஷயங்களை ஒரு இடைச்செருகலாக சொல்லிக் கொண்டிருப்பார்.
இந்திய சீன யுத்தம், பீகார் பஞ்சம், இன்சூரன்ஸ் பற்றிய பிரச்சாரம் இப்படியாக..
ஒரு
ஆங்கிலப்படத்தின் தழுவல் தான் என்றபோது அதைத் தமிழுக்கு ஏற்றது போல் மாற்றின விதத்திலும்,படத்துக்கென்று ஒரு ‘mood’ கொண்டு வந்ததிலும் ஒரு தேர்ந்த இயக்குநராக புதிய பறவையில் தாதா மிராசியைக் காணலாம்.
புதிய பறவை குறித்தே தனியாக அவ்வளவு எழுதலாம். ஒரு ஸ்டைலிஷ் மூவி என்று சொல்லக் கூடியது. சிவாஜியைத் தவிர வேறு யாரையும் கோபாலாக நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் சௌகார் ஜானகியை அந்தப் பாத்திரத்தில் கற்பனை செய்திருந்தது அசாத்தியம். ஆனால் தாதா மிராசி சௌகார் ஜானகியை உறுதியாக நம்பியிருக்கிறார்.தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர்களுள் ஒருவரென தாதா மிராசியை சொல்ல முடியும். பொழுதுபோக்கு, நல்ல காதல் காட்சிகள், சரியான திருப்பங்கள், நல்ல பாடல்கள், படத்துக்கான மனநிலைக்கு பார்வையாளர்களைத் தயார் செய்வது என இவரிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இது அவர் படங்கள் குறித்த அறிமுகம் மட்டுமே.
– ஜா தீபா
ஆசிரியர் தொடர்புக்கு : deepaj82@gmail.com
யாவரும்.காம். தொடர்ந்து செயல்படவும், புதிய பாதை மற்றும் சிந்தனைகளுடனும் பயணத்தைத் தொடர வாழ்த்துகள்!
அநேகமாக இது திரைப்பட நடிகர்களை மட்டுமே மையமாகக் கொண்டிராமல், துணைக் கதா பாத்திரங்களை – இயக்குநர்களை – இசை அமைப்பாளர்களை – ஒளிப்பதிவாளர்களை – பாடலாசிரியர்களைத் தொடர்ந்து திரைத்துறையின் பலவித ஆளுமைகளையும் வெளிப்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு, ‘கருப்பு வெள்ளை ஆளுமைகள்’ தொடரை வரவேற்கிறேன். கருப்பு வெள்ளை என்றீர்கள்; ஆனால், துவக்கமே வண்ணத்தில்தான் வந்திருக்கிறது. இருந்தும் அருமை ஜா.தீபா அவர்களே!