1) தேவதாவின் ஆனந்த நடனம்
*
உயிர்வளி யேற்றி
செஞ்சுடர் பிழம்பாய்
முழுதழலென
துளசி மாடந்தனில்
ஓரகலென
பிரகாசிக்கும்
சிற்றொளியா நீ
மெழுகிலை வழுக்கி
வற்றாத
குளத்துள் இறங்கும்
ஒற்றைத் திவலையின்
பரப்பு இழுவிசையா நீ
அடர் பொருள்
அண்டமொடுங்க
ஒற்றைக் கரும்பொருளில்
வெடித்துச் சிதறும்
குள்ளங் குறுகோளா நீ
தரையெங்கும் தலைகீழ்
மயிர் பரப்பி
நுண்புழைகளேறித்
ததும்பும்
பெருங்கானகமொன்றின்
பசுமையா நீ
கூகை ஆந்தை கோட்டான்
உடும்பு பூரான்
கடுந்தேள் நட்டுவாக்கிளி
நத்தை நாய் நரிகள் திரியுமோர்
இடுகாட்டிடை
மலரும் மலையரளியா நீ
***
2)
உன்
பெருந்தொடைகளிலேறி
ஊறும் மச்சப் பாம்புகளை
என்
பாடல் மகுடியினால்
மடியவைக்கத் தவறியதன்
விளைவால்
விடமேறி அலைகிறாய்
தலையெங்கும்
சிசு விழுந்த
பசுக்களின்
பிசுபிசுப்பு நினைவுகளை
வெண்சிறகேந்திய மயில்கள்
உதிர்த்த இறகுகளாய்
இறைத்துச் செல்கிறேன்
உஷா காலத்து
பிரளயத்தின் போது
ஓடமொன்றைச் செய்து வைத்தால்
நீயென்ன அதில் ஏறிவிடவா
போகிறாய்
சுதைமண் மூடிய
சாம்பல் மேடுகளில்
துளிர்த்திருக்கும்
ஊமத்தங்காயின்
முட்களாய்
எனை வருடிப் போகுமவை
என்றோ நீ தந்த முத்தங்கள்தான்
நீரெரியும் இரவுகளில்
பாழும் காமத்தின்
மனக் கதவங்களை
மறுப்பின் நுகங்களால்
மடைமாற்றியவள் தானே நீ
உழாத நிலமதனில்
பரிதிகளின் வெடிப்புகளால்
உலர்ந்த உதடுகளில்
உமிழ்நீரையிட்டு
தாகந் தீர்த்துவிட்டுப் போயேன்
உன்னிடம்தான் இருக்கிறதே நிறைய
உய்யவும் உயிர்ப்பிக்கவும்
***
3)
மறுபிறப்பிதனில்
மீண்டும்
முளைவிடும் மருத்தாம்பாக நானும்
பற்றியேற உதவும்
கொழுகொம்பாக நீயும்
இருப்பதாக
காற்றிலாடி அசையும்
ஆடிக் காற்றின்
முதிர் நெல்வயல்கள்
பரிகசிக்கின்றன
நீர்மம் திரவம் பால்மம் கூழ்மம்
எல்லாம் நெளிகின்ற பாய்மத்தின்
பல்வேறு பெயர்களேயன்றி
வடிவொன்றுதான்
அணங்கு பேய் பிடாரி பிசாசு
செஞ்சடைக்காட்டேரி
சடாமுனி எல்லாம் தீமையின்
பல்வேறு வடிவங்களின்றி
குணமொன்றுதான்
உன் போல
ஒரே ஆற்றின்
இரு கிளைகளால் உருப்பெறும்
ஆற்றுத் தீவென
உனது இறுக்கத்தால்
உன்னுள் திணறுகிறேன்
திணறுமென்னை நகைக்குமுன்
சிரிப்பலையைத்தான்
தாங்கவே முடியவேயில்லை
***