Saturday, November 16, 2024
Homesliderதூரங்கள் – ஹூலியோ கோர்த்தஸார்

தூரங்கள் – ஹூலியோ கோர்த்தஸார்

லேஹானாஸ்‘ என்ற சிறுகதையின் ஸ்பானிய மூலத்திலிருந்து தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ்

[மொழிபெயர்ப்பாளன் குறிப்பு: அலீனா ரேயெஸ் என்ற பணக்கார தென்னமெரிக்கப் பெண்ணுக்கு ஹங்கேரியின் புதாபெஸ்ட் நகரத்தில் பல துன்பங்களுக்கிடையில் வாழும் பிச்சைக்காரப் பெண்ணின் தோற்றம் அடிக்கடி மனதில் வந்து போகிறது. அந்தப் பிச்சைக்காரி துன்பப்படும் போதெல்லாம் இவளும் துன்பப்படுகிறாள். உண்மையில் அந்தப் பிச்சைக்காரியாக இருப்பதுதான் தன்னுடைய உண்மையான அடையாளம் என்று நம்ப ஆரம்பிக்கின்றாள். பிச்சைக்காரியைச் சந்திக்க அலீனா புதாபெஸ்ட் நகரத்துக்குப் போகிறாள். அங்கு அந்தப் பிச்சைக்காரியை ஒரு பாலத்தின் மீது சந்திக்கிறாள். இருவரும் தழுவிக் கொள்கிறார்கள். தழுவலுக்குப் பின்னால் பிச்சைக்காரப் பெண் அலீனாவின் உடலோடு அந்தப் பாலத்தைவிட்டுப் போகிறாள். அலீனா குளிரில் நடுங்கியபடி பாலத்தின்மீது தனியாக நிற்கிறாள். ஜூலியோ கோர்த்தஸார் தன் கதைகளில் அடையாளக் குழப்பத்தைப் பற்றியும் இரட்டைகளைப் பற்றியும் சிறுகதைகளில் அதிகம் எழுதியவர். இந்தக் கதை அடையாளம் என்பது நமக்குள் இருந்து தீர்மானிக்கப்படுகிறதா அல்லது வெளிப்புறச் சூழல்களால் கட்டமைக்கப்படுகிறதா என்று அலசுகிறது.]

அலீனா ரெயெஸ்ஸின் நாட்குறிப்பு

ஜனவரி 12

நேற்றிரவு அது மீண்டும் நடந்தது. கைக்காப்புகள், முகஸ்துதிகள், இளம்சிவப்பு ஷாம்பெயின் மது, ரெனாட்டோ வீனியஸ்ஸின் முகம் – குழறலாய் மூச்சிரைக்கும் நீர்யானையைப் போன்ற அந்த முகம், கடைசி கட்டத்தில் டோரியன் கிரேயின் படத்தைத் போல – என்று எல்லாமும் என்னைச் சலிப்படையச் செய்திருந்தன. அம்மா சாம்பலேறிப் போன முகத்தோடு கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க (அவள் எப்போதும் அப்படித்தான் விருந்து கொண்டாட்டங்களிலிருந்து வீட்டிற்குத் திரும்புவாள், சாம்பலேறிப் போய் அரைத்தூக்கம் நிறைந்த முகத்தோடு, பிரம்மாண்டமான மீன் கணக்காய், அதுகூட இல்லை) ரெட் பேங்க் பூகியைக் கேட்டபடியே, சாக்லேட் மிண்ட் பானத்தைக் குடித்தபடி படுக்கையில் விழுவது பேரானந்தமானதாக இருந்தது.

அவள் சகோதரி உடைகளைக் களைந்தபடியே சொல்லும் கதைகளை நோரா கேட்டுக் கொண்டிருக்கிறாள். நோரா இருட்டுவதற்கு முன்பாகவே தூங்கப் போய்விட வேண்டும் என்று சொல்பவள். கதையின் இடையில் தெருவிலிருந்து சத்தம் எழ ஆரம்பிக்கிறது. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று நினைத்தபடியே விளக்குகளையும் கைகளையும் அணைத்துவிட்டு, காலைநேரக் கூச்சல்களுக்கும் அசைவுகளுக்கும் பதிலாக எனது உடைகளைக் கழற்றிப் போடுகிறேன். எனக்குத் தூங்க வேண்டும் போல் இருக்கிறது, ஆனால் நான் மிகக்கொடூரமாக ஒலிக்கும் மணியாக இருக்கிறேன், அலையாக, இரவெல்லாம் கம்பிவேலி மீது நாய் சரசரவென்று இழுத்துப் போகும் கழுத்துச் சங்கிலியாக… தூங்க வேண்டுமென்றால் நான் சில கவிதைகளை எனக்கு நானே முணுமுணுத்துக் கொள்ள வேண்டும், அல்லது ‘A’ என்ற எழுத்தை உடைய வார்த்தைகளையோ, ‘E’ என்ற எழுத்தை உடைய வார்த்தைகளையோ பட்டியலிட வேண்டும், ஐந்து உயிரெழுத்துக்கள் உள்ள வார்த்தைகளை, நான்கு உயிரெழுத்துக்கள் உள்ளவற்றை. இரண்டு உயிரெழுத்தும் ஒரு உயிர்மெய் எழுத்தும் உள்ள வார்த்தைகளை (obo, emu), நான்கு உயிர்மெய் எழுத்துக்களும் ஒரே ஒரு உயிரெழுத்தும் உள்ளவற்றை (crass, dross). பின்பு மீண்டும் கவிதைகள். ‘நிலா கிரினோலின் துணியால் நெய்யப்பட்ட சம்பங்கி மலர்களை அணிந்து கொண்டு/பட்டறைக்கு வந்தது/பையன் பார்க்கிறான், பார்க்கிறான்/பையன் அதைப் பார்க்கிறான். பிறகு மூன்று உயிரெழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகளும் மாற்றி மாற்றி, bolero, pavane, Canada, repose, regale.

இப்படியே சில மணிநேரங்கள் கடக்கின்றன: நான்கு உயிரெழுத்துகளோடு, பிறகு மூன்றும் இரண்டும், அதன் பிறகு முன்னிருந்து படித்தாலும் பின்னிருந்து படித்தாலும் ஒரேமாதிரி இருக்கும் பாலிண்டிரோம்களை மனதில் போட்டு உருட்டிக் கொண்டு: முதலில் hah, bob, mom, did, dad, gag, radar என்ற எளிய வார்த்தைகளை யோசித்தபடி. பிறகு இன்னும் கொஞ்சம் சவாலான அல்லது வேடிக்கையான பாலிண்டிரோம் சொற்றொடர்களோடு: oho Eve oho, அல்லது நெப்போலியனைக் குறித்துச் சொல்லப்பட்ட நகைச்சுவையான வாசகம் “able was I ere I saw Elba”. பின்னர் ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளை மாற்றிப்போட்டு என்கிராம்கள் என்ற புதிய அழகிய வார்த்தைகளாக மாற்றிக்கொண்டு: Salvador Dali, avida dollars, Alina Reyes, es la reina y [ராணியும்…] இந்த கடைசி வார்த்தை புதிய சாத்தியங்களை மூடிவிடாமல் ஒரு பாதையைத் திறந்துவிடுவதால் எனக்குப் பிடிக்கிறது. ராணியும்…அவளும்…la reina y.

இல்லை, இது அருவருப்பான விஷயம்தான். ராணியாக இல்லாத ஒருத்திக்கு, இரவில் நான் மறுபடியும் வெறுக்கப்போகும் ஒருத்திக்குப் பாதையைத் திறந்து விடுவதால் அது அருவருக்கத் தக்கதாக இருக்கிறது. அவள் அலினா ரேயஸ்தான். ஆனால் அவள் அழகிய என்கிராம்களின் ராணி அல்ல. அவள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், புதாபெஸ்ட் நகரத்தில் பிச்சைக்காரியாக, ஜூஜுய்யில் உள்ள விபச்சார விடுதியில் ஆரம்பநிலை ஊழியக்காரியாக, கெட்ஸால்டெனாகோ நகரத்தில் வேலைக்காரியாக, ஏதேனும் தூரமான இடத்தில்., ராணியாக மாத்திரம் இல்லாமல் இருந்தால் போதும். ஆமாம், அலினா ரெயெஸ்தான். இதனால்தான் நேற்றிரவு அது மீண்டும் நடந்தது, அவளை உணர்வதற்கும் வெறுப்பதற்கும்.

ஜனவரி 20

சில நேரங்களில் அவளுக்குக் குளிர்கிறது என்பதும், அவள் துன்பப்படுகிறாள் என்பதும், அவர்கள் அவளை அடிக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரிகிறது. அவளை நான் இந்தளவுக்குத்தான் வெறுக்க முடியும், அவளைத் தரையில் எறியும் கைகள் மீதும் அவள் மீதும் இதுவரைக்கும்தான் எரிச்சல் கொள்ள முடியும். அடிவாங்குவதால் அவளை இன்னும் கொஞ்சம் அதிகமாக வெறுக்கிறேன், நான் இப்படித்தான் என்பதாலும், அவர்கள் அவளை அடிக்கிறார்கள் என்பதாலும். தூங்கும்போதோ, ஆடைகளைத் தைக்கத் துணியைக் கத்தரிக்கும்போதோ, அம்மா விருந்தினர்களை வரவேற்று உபசரிக்கும் நேரங்களின்போது திருமதி ரெகுலெஸ்ஸுக்கோ, ரிவாஸ்ஸிலிருந்து வந்த பையனுக்கோ தேநீர் பரிமாறும்போதோ நான் இப்படியெல்லாம் நம்பிக்கை இழந்து காணப்படுவதில்லை. இவற்றைச் செய்து கொண்டிருக்கும்போது அவள் காரியம் எனக்கு அவ்வளவு முக்கியமாகப் படுவதில்லை, கொஞ்சம் அந்தரங்கமான காரியமாக, நான் எனக்குள் வைத்துக்கொள்ளும் விஷயமாகவே தோன்றும்; அவள் தனது துன்பத்திற்கு எஜமானியாக இருக்கிறாள் என்று எண்ணிக்கொள்வேன். தூரத்தில் தனியாக இருக்கிறாள், ஆனால் அவள்தான் எஜமானி. அவள் துன்பப்படட்டும், குளிரால் உறைந்து போகட்டும். நான் இங்கிருந்தபடியே சகித்துக் கொள்கிறேன். அப்படிச் செய்யும்போது நான் அவளுக்கு ஏதோ கொஞ்சம் உதவுவதாகவே நினைக்கிறேன். போரில் இன்னமும் அடிபடாத போர்வீரனுக்குத் தேவையான கட்டுகளை ஆயத்தப்படுத்தி வைப்பதைப்போல, தெய்வாதீனமாக அவனுக்கு அடிபடுவதற்கு முன்னாலேயே அவனுக்குப் பணிவிடை செய்வதை ஏற்றுக் கொள்வதைப்போல்.

அவள் துன்பப்படட்டும். திருமதி ரெகுலெஸ்ஸுக்கு கன்னத்தில் முத்தம் தருகிறேன், ரிவாஸ்ஸிலிருந்து வந்த பையனுக்குத் தேநீர் தருகிறேன். “இப்போது ஒரு பாலத்தைக் கடக்கிறேன், பாலமே பனியில் உறைந்து போயிருக்கிறது, இப்போது பனி என் காலணிகளுக்குள் வருகிறது, என் காலணிகள் கிழிந்திருக்கின்றன” என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். அவள் எதையும் உணரவில்லை என்று இல்லை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது, நான் ஒரு பக்கமாகப் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கும் அதே தருணத்தில் ரிவாஸ் பையன் என்னிடமிருந்து தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டு செல்லம் கொடுத்துக் கெடுத்த குழந்தையைப்போல் முகத்தைக் கோணலாக்கிக் காட்டுகிறான், மனிதாபிமானமில்லாத இந்த மனிதர்களுக்கிடையே நான் தனியாக இருப்பதாலும் நான் அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்காதவள் என்பதாலும் எதுவும் சொல்லாமல் இதையெல்லாம் சகித்துக் கொள்கிறேன். நோரா நேற்றிரவு அதிர்ந்து போனாள். “உனக்கு என்ன நடக்கிறது?” என்று என்னிடம் கேட்டாள். ஆனால் அந்த மற்றொருத்தித்தான் ஏதோ ஒன்று நிகழ்ந்திருந்ததாய் உணர்ந்தேன். அதாவது அவளாக இருந்த எனக்கு. அவளுக்கு ஏதேனும் மிகக் கொடுமையான விஷயம் நடந்தேறியிருக்க வேண்டும். பியானோவில் நான் அமர்ந்தபடி அதன்மீது தனது முழங்கைகளை வைத்துச் சாய்ந்து கொண்டிருக்கும் ஆணழகனான லூயிஸ் மரியாவை மகிழ்ச்சியாகப் பார்க்க, அவனும் அகலமான அழகிய கண்களால் என்னைப் பாரத்து இருவரும் நெருக்கமாகி ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கவும் நோரா ஃபௌரேயின் பாடலைப் பாடவும் போகும் நேரத்தில் ஒன்று அவர்கள் அவளை அடித்துக் கொண்டிருக்க வேண்டும், அல்லது அவளுக்கு உடம்பு சுகவீனம் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படி நடக்கும்போது தான் உண்மையிலேயே கொடுமையானதாக இருக்கிறது. லூயிஸ் மரியாவோடு நான் நடனமாடிக் கொண்டிருக்கும்போதோ, அவனை முத்தமிட்டுக் கொண்டிருக்கும்போதோ, சும்மா அவன் பக்கத்தில் இருக்கும்போதோ அவளைப் பற்றி எதையேனும் நான் தெரிந்து கொள்வது. ஏனெனில் தூரங்களில் உள்ளவர்கள் என்மீது – அவள்மீது பிரியம் கொண்டிருக்கவில்லை. இதுதான் அவர்களுக்குப் பிடிக்காத விஷயம். உள்ளே மிகச்சிறிய துண்டுகளாக நான் கிழிக்கப்படுவது போலவும் அவர்கள் என்னை அடிப்பதைப் போலவும் என் காலணிகளுக்குள் பனி புகுந்தது போலவும் உணர்வது எனக்கு உவப்பில்லாத காரியங்கள் என்பதால் லூயிஸ் மரியா என் இடுப்பில் கை வைத்து நாட்டியமாடும் நேரத்தில், அவன் கைகளிலிருந்து ஆரஞ்சுகள் போலவும் வெட்டிய வைக்கோலைப் போலவும் மணம் எழுந்து எனக்குள் நண்பகல் வெப்பம்போல் ஒன்று ஓங்கி நிற்க, அவர்கள் அவளை அடிக்கிறார்கள் என்பதை உணர்ந்த நான், எதிர்த்துப் போராடுவது வீண் வேலை என்று அறிந்து லூயிஸ் மரியாவிடம் எனக்கு உடம்பு சுகமில்லை என்று சொல்ல வேண்டியவளாகி, அதற்குக் காரணம் இந்த வெக்கைதான், சுற்றியிருக்கும் குளுமையான பனிக்கிடையே எழும் இந்த வெக்கைதான் என்று சொல்கிறேன். ஆனால் அதை என்னால் உணரவே முடியவில்லை, ஆனால் அது என் காலணிகளின் வழியாக உள்ளே வந்து கொண்டிருக்கிறது.

ஜனவரி 25

எதிர்பார்த்தது போலவே நோரா என்னைப் பார்க்க வந்து மிகப்பெரிய அலப்பறை செய்தாள். “பாரு, கண்ணு, இனிமே நான் பாடுறப்ப உன்னை எனக்குத் துணையாகப் பியானோ வாசிக்கக் கூப்பிடவே மாட்டேன். நீயும் நானும் எவ்வளவு அற்புதமான ஜோடியா இருந்தோம்.” ஜோடிகளைப் பற்றி எனக்கென்ன தெரியும். என்னால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவள் பாடும்போது பியானோ வாசித்தேன். அவள் குரல் வெகு தூரத்திலிருந்து வருவது போலவே என் காதுகளில் கம்மி ஒலித்தது. ‘உன் ஆன்மா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம்’… பியானோ கட்டைகளின் மீது இருந்த என் கைகளை உற்றுப்பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். சரியாகத்தான் வாசிப்பதாகப் பட்டது எனக்கு. நோராவின் பாட்டுக்குச் சரியாகத்தான் பியோனோ இசை போய்க் கொண்டிருந்ததாக நினைத்தேன். பாவம் லூயிஸ் மரியாவும் என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தான். என் முகத்தைப் பார்ப்பது அவனுக்கு எந்த விதத்திலும் மகிழ்ச்சியைத் தராததால்தான் அவன் என் கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் என்று நினைக்கிறேன். என் முகம் அவனுக்கு ஏதோ ஒருவகையில் மிக விசித்திரமாய்த் தோன்றியிருக்க வேண்டும்.

பாவம் நோரா. வேறு யாரேனும் அவளுக்காகப் பியானோ வாசிக்கட்டும். (ஒவ்வொரு முறையும் இது மேலும் கடுமையான தண்டனையாகத் தோன்றுகிறது, நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகும் நேரத்தில் மட்டும்தான் நான் அங்கு என்னை அறிந்து கொள்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நோரா ஃபௌரேயைப் பாடும்போது, நான் அங்கு என்னை அறிந்து கொள்கிறேன், அப்போது வெறுப்பு மட்டுமே மிஞ்சி இருக்கிறது.)

இரவு

சில நேரங்களின் மென்மையான பிரியம் தோன்றுகிறது, ராணியாக இல்லாமல் அங்கு உலவிக் கொண்டிருக்கும் அவள்மீது திடீரெனவும் அத்தியாவசியமுமான ஒரு மென்மையான பிரியம். அவளுக்கு ஒரு தந்தியடிக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றுகிறது. எனது வணக்கங்கள், அவளுடைய மகன்கள் நலமாக இருக்கிறார்களா என்று அறிந்து கொள்ள, அல்லது அவளுக்கு மகன்களே இல்லை என்று அறிந்து கொள்ள – ஏனென்றால் அங்கே எனக்கு மகன்கள் இல்லை என்று நினைக்கிறேன் – அதனால் அவளுக்கு ஆறுதலும், அனுதாபமும், மிட்டாய்களும் தேவைப்படும். நேற்றிரவு நான் அனுப்ப வேண்டிய தந்திகளைப் பற்றியும், நாமிருவரும் சந்திக்கத் தோதான இடங்களைப் பற்றியும் யோசித்தபடியே தூங்கப் போனேன். வியாழன் வருகிறேன். ஸ்டாப். பாலத்தில் சந்திக்கலாம். எந்தப் பாலத்தில்? புதாபெஸ்ட் நகரம் மீண்டும் மீண்டும் வந்து போவதுபோல் ஒரு யோசனை மீண்டும் மீண்டும் வருகிறது, நிறைய பாலங்களும் சுற்றிச்சுழலும் பனிப்பொழிவுகளும் உள்ள புதாபெஸ்ட் நகர பிச்சைக்காரியின் இருப்பை நான் நம்ப வேண்டும் என்பதாக. படுக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து, கதறி அழாத குறையாய், ஓட்டமும் நடையுமாகப் போய் அம்மாவைக் கடித்து எழுப்புகிறேன். நான் அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். அதைச் சொல்வது இப்போதுகூடச் சுலபமானதாக இல்லை. நான் உண்மையிலேயே விரும்பினால், எனக்கு அப்படித் தோன்றினால், உடனே புதாபெஸ்ட் நகரத்துக்கு என்னால் போக முடியும் என்று நம்புகிறேன். அல்லது ஜூஜுயிக்கோ கெட்ஸால்டெனாகோவுக்கோ கூட. (அந்தப் பெயர்களைச் சரிபார்த்துக் கொள்ள இந்தக் கதையின் முதல் பக்கத்தைத் திருப்பிப் பார்த்துக் கொண்டேன்). வீண் வேலை. இந்த நகரங்களின் பெயர்களைச் சொல்வதும் ஒன்றுதான், த்ரெஸ் அரோயோஸ் என்றோ, கோபே என்றோ, நானூறாவது பிளாக்கில் இருக்கும் ஃப்ளோரிடா தெரு என்று சொல்வதும் ஒன்றுதான். அங்கே குளிராக இருக்கும் என்பதாலும், அங்கே என்னை அடிப்பார்கள், சித்திரவதை செய்வார்கள் என்பதாலும் புதாபெஸ்ட் நகரம் எனது நினைவில் நிற்கிறது. அங்கே (இதை நான் கனவில் கண்டேன், கனவுதான், ஆனால் அது எனக்குள் நீங்காமல் நின்று என் விழிப்புக்குள் தன்னைப் புகுத்திக்கொள்கிறது) ராட் என்றோ எராட் என்றோ ரோடோ என்றோ பெயருடைய ஒருவன் இருக்கிறான் – அவன் என்னை அடிக்கிறான், நான் அவனைக் காதலிக்கிறேன். அவனை நான் காதலிக்கிறேனே என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் என்னை அடிக்க அவனை அனுமதிக்கிறேன். இது மீண்டும் மீண்டும் நடந்தேறுவதால் நான் அவனைக் காதலிப்பதாகவே நினைக்கிறேன்.

பிறகு

ஒரு பொய். நான் ராட்டைப் பற்றிக் கனா கண்டேன், இல்லையென்றால் தேய்ந்துபோன அல்லது கைக்கு எளிதில் அகப்பட்ட பழைய கனவு உருவம் ஒன்றிலிருந்து அவனை உருவாக்கிக் கொண்டேன். ராட் என்று யாருமில்லை. அங்கே அவர்கள் என்னைத் தண்டிக்கிறார்கள். ஆனால் அது ஓர் ஆணா, கோபமான அம்மாவா அல்லது வெறும் தனிமையா யாருக்குத் தெரியும்.

என்னைத் தேடிக் கண்டுபிடியுங்கள். லூயிஸ் மரியாவிடம் இப்படிச் சொல்லலாம்: “திருமணம் செய்துகொள்ளப் போகிறோம், அதன் பிறகு நீ என்னைப் பனிப்பொழிவும் யாரோ ஒருத்தனும் இருக்கும் புதாபெஸ்ட் நகரத்துக்குக் கூட்டிப் போவாய்.” அதுதான் சொல்கிறேன்: நானே என்றால்? (இதையெல்லாம் உண்மையில் நம்பாத ஓரிடத்தில் இருந்துதான் பேசிக் கொண்டிருப்பதாக நினைக்கிறேன். நானே என்றால்?) சரி, நானேதான். சுத்தப் பைத்தியம், சுத்தம்…? எப்படிப்பட்ட தேனிலவு!

ஜனவரி 28

விநோதமான எண்ணம் ஒன்று எனக்குத் தோன்றியது. மூன்று நாட்களாய்த் தூரங்களிலிருந்து என்னிடம் எதுவும் வரவில்லை. ஒருவேளை அவர்கள் இப்போது அவளை அடிக்காமல் இருக்கலாம். அல்லது அவளுக்கு ஏதேனும் குளிராடை கிடைத்திருக்கலாம். அவளுக்குத் தந்தியடிக்கலாமா, அல்லது காலுறைகளை அனுப்பி வைக்கலாமா என்று யோசித்தேன்… ஒரு விசித்திரமான எண்ணமும் தோன்றி மறைந்தது. அந்தக் கொடுமையான நகரத்தில் ஒருநாள் பிற்பகல் போய்ச் சேர்ந்தேன். பிற்பகல்களைப் பற்றிக் கவனமாக யோசித்து உதவாத பட்சத்தில் பிற்பகல்கள் எப்படி ஈரமானவையாகவும் பச்சை நிறமானவையாகவும் இருக்குமோ அப்படி அந்தப் பிற்பகல் இருந்தது. தோப்ரினா ஸ்தானாவுக்கு அடுத்தாற்போல் ஸ்கோர்தா சாலையில் குதிரைமீது அமர்ந்திருப்பவர்களின் சிலைகளின்மீது ஊசிகளாகப் பனியும் சிலைகளின் பக்கத்தில் விறைப்பான போலீஸ்காரர்களும் உறைந்து போயிருந்த காட்சி கண்ணுக்குத் தெரிந்தது. அரைக்காத தானியங்களால் சமைக்கப்பட்ட சூடான ரொட்டிகளுக்கிடையே சுழன்றடிக்கும் காற்று அவ்வப்போது சன்னல்களின் மீது ஊதிக்கொண்டிருந்தது. தோப்ரினாவைத் தாண்டி சுற்றுலாப் பயணியைப் போன்று மெல்ல நடந்து போனேன். நகரத்தின் வரைபடம் என் நீலநிற ஆடைக்குள் இருந்தது (இந்த உறையவைக்கும் குளிரில் என் மேலங்கியை புர்க்லோஸில் விட்டு வந்திருந்தேன்). ஆற்றுக்கு ஓரமாய் இருந்த சதுக்கம் வரை நடந்தேன். உடைந்த பனிக்கட்டிகளும் படகுகளும் ஒருவகையான மீன்கொத்திப் பறவைகளும் ஏற்படுத்திய இரைச்சலோடு நதி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த மீன்கொத்தியை அந்த ஊரில் ஸ்புனாய்யா த்ஜேனோ என்றோ அதைவிட மோசமான பெயர் ஒன்றை வைத்தோ அழைத்தார்கள்.

சதுக்கத்துக்குப் பிறகு பாலம் வரும் என்று எண்ணியிருந்தேன். அதைப் பற்றி யோசித்தபிறகு மேலும் நடக்கத் தயங்கினேன். ஓடியனில் எல்ஸா பியாஜ்ஜியோ டி தாரெல்லியின் இசைக்கச்சேரி நடக்கவிருந்த பிற்பகல் நேரம். வேண்டா வெறுப்பாக, பெரும் அலுப்போடு, இதற்குப் பிறகு இரவெல்லாம் கொட்டக் கொட்ட விழித்திருக்கத்தான் போகிறேன் என்று நினைத்தபோது உடைகளை அணிந்து கொண்டேன். இரவைப் பற்றிய இந்த நினைவு, மிக விஸ்தாரமான இரவு…நான் அதில் தொலைந்து போவேனா மாட்டேனா என்று யாரால் சொல்ல முடியும். பயணப்படும் நேரத்தில் பெயர்களை உருவாக்குவதும், சிந்திப்பதும், கணத்தில் அவற்றை நினைவுக்குக் கொண்டு வருவதும், இயல்பான காரியங்கள்: தோப்ரினா ஸ்தானா, ஸ்புனாய்யா த்ஜேனோ, புர்க்லோஸ். ஆனால் எனக்கு அந்தச் சதுக்கத்தின் பெயர் தெரியவில்லை. புதாபெஸ்ட் நகரத்தில் ஒரு சதுக்கத்துக்குள் நுழைந்து சதுக்கத்தின் பெயர் தெரியாததால் தொலைந்து போனது போலவே அந்த விஷயம் இருந்தது. பெயர் இல்லையென்றால் அந்த இடத்தில் எப்படிச் சதுக்கம் ஒன்று இருக்க முடியும்?

நான் வருகிறேன், அம்மா. உனக்குப் பிடித்த பாக் இசையை நிச்சயம் பிடித்துவிடுவோம். உன் பிராம்ஸ்ஸையும்தான். சதுக்கம் இல்லை, ஹோட்டல் புர்க்கோஸ்ஸும் இல்லை. நாம் இங்கு இருக்கிறோம். எல்ஸா பியாஜ்ஜியா அங்கு இருக்கிறாள். இதை இடைமறிப்பதுபோல் பேசுவது வருந்தத்தக்கதுதான் (ஆனால் அது இன்னமும் உறுதியாகவில்லை, நான் சதுக்கம் இல்லை என்று நினைக்கிறேன், அவ்வளவுதான். இது காசு பெறாத விஷயம், அதைவிட மதிப்பில் குறைவானது என்றுகூட சொல்லலாம்). சதுக்கத்தின் இறுதியில் பாலம் ஆரம்பமாகிறது.

இரவு

ஆரம்பமாகிறது, தொடர்ந்து போகிறது. இசைக்கச்சேரியின் முடிவுக்கும் அவர்கள் வாசித்த முதல் இசைக்கூறுக்கும் இடையிலிருந்த நேரத்தில் பெயரையும் செல்லும் வழியையும் கண்டுபிடித்தேன். வ்ளாதாஸ் சதுக்கம், சந்தை பாலம். நான் வ்ளாதாஸ் சதுக்கத்தைத் தாண்டி பாலம் ஆரம்பமான இடத்துக்கு மெதுவாக நடந்தேன். சில சமயங்களில் வீடுகளையும் கடைச் சன்னல்களையும் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும்போல் தோன்றியது, குளிருக்கெதிராகப் பலவிதமான ஆடைகள் சுற்றப்பட்டிருந்த சின்ன பையன்களை, வெள்ளையாகிப்போன மேலங்கிகளை அணிந்திருந்த தாதேயோ அலாங்கோ, வ்ளாதிஸ்லாஸ் நேரோய் போன்ற வீரர்களின் சிலைகளைச் சுமந்து கொண்டிருந்த நீரூற்றுகளை, மது குடியர்களை, தெருவோரமாய் சிம்பாலோன் இசை வாத்தியங்களை வாசித்துக் கொண்டிருந்தவர்களை. எல்ஸா பியாஜ்ஜியோ ஒரு ஷோப்பான் வாசிப்புக்கும் அடுத்ததற்கும் இடையில் கைதட்டல்களால் கொண்டாடப்படுவதைக் கவனித்தேன், பாவமாக இருந்தது. இசைக்கச்சேரியில் எனக்குத் தரப்பட்ட இருக்கை சதுக்கத்துக்கு நேரெதிராக இருந்தது. பாலத்தின் தொடக்கம் பிரம்மாண்டமான தூண்களுக்கு இடையில் இருந்தது. ஆனால் நான் இப்படி யோசித்துக் கொண்டிருந்தேன், கவனியுங்கள், அலீனா ரெயெஸ் என்ற பெயரில் உள்ள எழுத்துக்களை வைத்து எனது பெயருக்குப் பதிலாக es la reina y என்ற என்கிராம் ஒன்றை உருவாக்குவது போலவும் அம்மாவை என்னருகில் இருப்பதைப் போலில்லாமல் சுவாரெஸ்ஸின் வீட்டில் இருப்பதைப்போல் கற்பனை செய்து பார்ப்பதைப் போலத்தான் இதுவும் இருந்தது. இந்தப் பைத்தியக்காரத்தனத்தில் விழாமல் இருப்பதுதான் நல்லது, அது முற்றிலும் என் சொந்த விஷயம், என் விருப்பத்தை – என் உண்மையான விருப்பத்தை – நானே நிறைவேற்றிக் கொள்வது. ஏன் உண்மையென்றால் அலீனா என்பவள், சரி, போகலாம் – அந்த விஷயம் அல்ல. அவள் குளிரில் நடுங்குவதையும் அடித்துத் துன்புறுத்தப்படுவதையும் உணர்வதைப் பற்றி அல்ல இது. இதற்காக நான் ஏங்கித் தன்னிச்சையாகவே இது எங்கே போய் முடியும் என்று தெரிந்துகொண்டே இதைத் தொடர்கிறேன், லூயிஸ் மரியா என்னைப் புதாபெஸ்ட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்வானா என்று அறிந்து கொள்ள. நானே வெளியே சென்று அந்தப் பாலத்தைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் சுலபமான காரியம், என் தேடலில் நானே வெளியேறி என்னைக் கண்டுகொள்வது. இப்போது பாலத்தின் நடுப்பகுதியை அடைந்திருந்தேன். இசைக்கச்சேரி ரசிகர்களின் உரத்த குரல்களும், கைதட்டல்களும், ‘அல்பென்ஸ்’ என்றும் ‘போலோனேஸ்’ என்றும் அவர்கள் கேட்க விரும்பும் இசையை அவர்கள் சத்தம்போட்டுச் சொல்வதும் என் காதுகளில் ஒலித்தன. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமில்லாதவையாகத்தான் எனக்குத் தோன்றின. சாட்டை போல் என்னைச் சுழன்றடித்த பனி காற்றின் வேகத்தால் என் முதுகில் தள்ளியது. கனமான துண்டைப் போன்ற அதன் கைகள் எனது இடுப்பில் கை வைத்து என்னைப் பாலத்தின் நடுப்பகுதிக்குத் தள்ளிச் சென்றன.

(இப்போது நிகழ்காலத்தில் பேசுவதுதான் வசதியாக இருக்கிறது. எட்டு மணி அடித்திருந்தது. எல்ஸா பியாஜ்ஜியோ கச்சேரியின் மூன்றாவது இசைக்கூறாக ஜூலியன் அகுவெய்ரையோ கார்லோஸ் குவாஸ்தாவினோவையோ, விரிந்த பண்ணைத் திடல்களும் சின்ன பறவைகளும் நிறைந்திருந்த ஏதோ ஓர் இசையை வாசித்துக் கொண்டிருந்தாள். நாளாக என் உணர்வுகள் மங்கிப் போயிருந்தன. இப்போது அவள்மீது எனக்கு மதிப்பில்லாமலே போயிருந்தது. ஒருநாள் நான் யோசித்த ஒன்று என் நினைவில் இருக்கிறது: “அங்குதான் என்னை அடித்தார்கள். அங்குதான் பனி என் காலணிகளுக்குள் வருவதை அதே நொடியில் நான் உணர்ந்தேன். அங்கு நடப்பதை என்னால் உடனுக்குடன் உணர முடிகிறது. ஏன் அதே நேரம் என்று நினைக்கிறேன். ஒரு வேளை நான் தாமதமாகக்கூட வரலாம். அல்லது அது இன்னும் நடக்காமல்கூட இருக்கலாம். ஒருவேளை அடுத்த பதினான்கு ஆண்டுகளுக்குள் அவர்கள் அவளை அடிக்கலாம், அல்லது அவள் இந்நேரத்துக்கெல்லாம் செயிண்ட் உர்சுல் இடுகாட்டில் சிலுவையாகவும் கல்லறை வாசகமாகவும் மாறியும் இருக்கலாம்.” இது எனக்கு உவப்புள்ளதாகவும், சாத்தியமானதாகவும், கொஞ்சம் முட்டாள்தனமானதாகவும் தோன்றியது. ஏனென்றால் அடிப்படையில் எல்லோரும் காலங்களை ஒன்றோடொன்று பொருத்திக் கொள்ளவே பார்க்கிறார்கள். ஒருவேளை இந்த நிமிடத்தில் அவள் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கிறாள் என்றால் அதை இங்கிருந்தபடியே எனக்குள் என்னால் உணர முடியும் என்று நான் அறிந்திருந்தேன்.  கெட்டுப்போன மெயோனேஸ்ஸைப்போல் பாலத்தின் அடியிலுள்ள கற்களின்மீது மிகப்பெரிய கோபத்தோடும், சத்தத்தோடும், வன்முறையோடும் மோதிக்கொண்டிருந்த நதியை ஒருகணம் நின்றபடியே நான் கவனித்தது என் நினைவுக்கு வருகிறது. (இந்தக் கடைசி விவரிப்பு உண்மையில் நான் யோசித்து வைத்துக்கொண்டது.) பாலக்கம்பிகளின் விளிம்பில் சாய்ந்து கீழே பனிக்கட்டிகள் அரைபடும் ஓசையைக் கேட்க விரும்பினேன். சுற்றியிருந்த காட்சியை உள்வாங்கிக் கொள்ளத்தான் நின்றேன் என்றாலும், உள்ளிருந்து எழுந்த பயத்தாலும் அப்படிச் செய்தேன் என்பதுதான் உண்மை – அல்லது மேலங்கியைத் தங்கும் விடுதியில் விட்டுவிட்டு அணிந்திருந்த சட்டைமீது மெல்லிய பனிப்பொழிவு உருகி ஓடிக்கொண்டிருந்ததால்கூட இருக்கலாம். உண்மையைச் சொல்லப் போனால் நான் எந்த விதமான பெரிய சொகுசையும் எதிர்பார்க்காத பெண்தான், எந்தவிதமான சின்னக் கர்வங்களும் இல்லாதவள்தான். ஆனால் வேறு யாரேனும் ஒரு பெண் ஓடியனின் நடுவில் ஹங்கேரிக்குள் இப்படிப் பிரவேசித்திருப்பாள் என்று அவர்கள் என்னிடம் வந்து சொல்லட்டும். அந்த யோசனையே யாரையும் நடுங்க வைத்திருக்கும்!

ஆனால் அம்மா என் ஆடையின் விளிம்பை இழுத்து என் கவனத்தை ஈர்க்க முனைந்து கொண்டிருந்தாள். இசைக்கச்சேரி இருக்கைகளில் யாரும் இல்லை. அந்த இடம்வரைக்கும் மட்டும் எழுதுகிறேன். மேலும் நான் என்னவெல்லாம் யோசித்தேன் என்பதை நினைவுக்குக் கொண்டுவர எனக்கு விருப்பமில்லை. தொடர்ந்து ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றேன் என்றால் நான் நோய்வாய்ப்படுவேன். ஆனால் அது உண்மைதான், உண்மைதான்: விநோதமான எண்ணம் ஒன்று எனக்குத் தோன்றத்தான் செய்தது.

ஜனவரி 30

பாவம் லூயிஸ் மரியா. என்னைத் திருமணம் செய்து கொள்ள அவன் எவ்வளவு பெரிய முட்டாளாக இருக்க வேண்டும். பரந்த மனப்பான்மை உள்ளவன் போல் காட்டிக் கொள்வதால் இதற்குமேல் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதை அவன் அறியமாட்டான். இதற்குக் கீழும் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்பதையும் அறிய மாட்டான் என்று நோரா சொல்கிறாள்.

ஜனவரி 31

நாங்கள் அங்கே போகப் போகிறோம். என் கோரிக்கையை அவன் அவ்வளவு முழுமனதாக ஏற்றுக் கொண்டதைப் பார்த்து எனக்கு வாய்விட்டு அலற வேண்டும்போல் தோன்றியது. இந்த விளையாட்டில் அவன் யோசிக்காமல் கவனமின்றிப் பிரவேசித்ததாக எனக்குப்பட்டது. மேலும் அவனுக்கு ஒன்றும் தெரியாது. சதுரங்க விளையாட்டில் வெற்றிக்காகப் பலி கொடுக்கப்படும் ராணியின் பகடைக்காயாகவே அவன் இருந்தான். அவனுடைய ராணியின் பக்கத்தில் பகடைக்காய் லூயிஸ் மரியா. ராணிக்கும் – க்கும் ஓரமாக…

பிப்ரவரி 7

இப்போது குணமடைவதுதான் முக்கியம். இசைக்கச்சேரியின் இறுதியில் நான் என்ன நினைத்தேன் என்பதை எழுதப் போவதில்லை. நேற்றிரவும் அவளுடைய துன்பத்தை நான் உணர்ந்தேன். என்னை அங்கே அவர்கள் அடிக்கிறார்கள் என்பது எனக்குத் தெரிகிறது. அதை அறிந்து கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது, ஆனால் இந்தக்கதை இதோடு போதும். இதையெல்லாம் ஒரு பொழுதுபோக்காக, மன ஆறுதலுக்காக எழுதினேன் என்றாலும் பரவாயில்லை…ஆனால் அதைவிட மோசமாக, இதை மறுபடியும் மறுபடியும் படித்து உண்மையைப் புரிந்து கொள்வதற்காகவும், ஒவ்வொரு வார்த்தையிலும் பூட்டப்பட்டுள்ள புதிரை அந்த இரவுகளுக்குப் பிறகு மீண்டும் வாசித்து விடுவிக்கவும்தான் இதை எழுதி வைத்திருக்கிறேன். அந்தச் சதுக்கத்தைப் பற்றியும், கிழிந்த அந்த நதியைப் பற்றியும், அந்தச் சத்தங்கள், பின் நடந்தவை பற்றியும்…இல்லை அதைப்பற்றி எழுதப் போவதில்லை. அதைப்பற்றி எப்போதுமே எழுத மாட்டேன்.

கன்னி கழியாமல் இருப்பது எனக்கு நல்லதல்ல என்பதை எனக்கு நானே நிரூபிக்க நான் அங்கே போனது அப்படி ஒன்றும் நல்ல காரியமில்லைதான். இருபத்தேழு வயதாகியும் எந்த ஆடவனையும் அனுபவிக்காததைத் தவிர இதில் வேறெந்த விஷயமும் இல்லை. இப்போது அவன் என் நாய்க்குட்டியாக, என் பெங்குவின் பறவையாக, நினைப்பதற்கும் இருப்பதற்கும், கடைசிவரைக்கும் நிரந்தரமாகவும் இருப்பான்.

எது எப்படி இருந்தாலும் நான் இப்போது இந்த நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்திவிடப் போகிறேன். ஒருத்தி ஒன்று திருமணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது நாட்குறிப்பு வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. இப்போதுகூட நம்பிக்கையின் மகிழ்வோடு, மகிழ்ச்சி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இதை முடித்துவைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் அங்கு போகத்தான் போகிறோம். ஆனால் இசைக்கச்சேரியின் இரவில் நான் நினைத்தது நடந்தே தீர வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. (அதை எழுதுவேன், அதன்பிறகு இந்த நாட்குறிப்பைத் தலைமுழுகிவிட வேண்டியது தான்.) நான் அவளைப் பாலத்தில் சந்திப்பேன். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வோம். இசைக்கச்சேரி நடந்த இரவில் பாலத்தின் கீழே நதியில் பனிக்கட்டிகள் அரைபடுவது என் காதுகளில் எதிரொலித்தது.  அது கேடு செய்யும் ஒரு உறவிற்கு எதிராக, சத்தமேயில்லாமல் சட்ட விரோதமாக நடந்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒரு ராணியின் பூரண வெற்றியாக இருக்கும். நான் உண்மையில் நான்தான் என்றால் அவள் விட்டுக்கொடுப்பாள், அவள் எனது வெளிச்சம் மிகுந்த பகுதியோடு, அழகும் ஸ்திரத்தன்மையும் வாய்ந்த என் வாழ்வோடு வந்து இணைந்து கொள்வாள்; நான் அவளிடத்தில் போய் அவள் தோளில் கை வைத்தால் போதும், இது நடந்து விடும்.

அலீனா ரெயெஸ் அராவோஸ்ஸும் அவள் கணவரும் புதாபெஸ்ட் நகருக்கு ஏப்ரல் ஆறாம் தேதி வந்தார்கள். ரிட்ஸ் ஹோட்டலில் தங்கும் அறைகளை ஏற்பாடு செய்து கொண்டார்கள். இது, அவர்கள் விவாகரத்துக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்தது. இரண்டாம் நாள் பிற்பகல் அலீனா நகரத்தோடு பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்ளவும், கொஞ்சம் கொஞ்சமாய்த் திரும்பிக் கொண்டிருந்த வெயிலை அனுபவிக்கவும் வெளியே போனாள். தனியாக நடப்பது அவளுக்குப் பிடித்திருந்தது. விரைவாகவும் எல்லா திசைகளிலும் அறிந்து கொள்ளும் ஆவலோடு கண்களைச் செலுத்தியபடியும் அவள் நடந்தாள். இன்னதென்று சொல்ல முடியாத ஏதோ ஒன்றைத்தேடி அவள் இருபது திசைகளில் நடந்தாள். ஆனால் அந்த விஷயத்தைப் பற்றி அவள் அதிகமாக யோசித்து அலட்டிக் கொள்ளவில்லை. தனது எண்ணங்களின் ஓட்டத்தின்படி தனது கால்களை நடக்கவும், திடீரென்று போகும் திசையை மாற்றிக் கொள்ளவும் அனுமதித்தாள். இது அவளை ஒரு கடைச்சன்னலிலிருந்து வேறொரு கடைச்சன்னலுக்கும், சாலைகளைத் தாண்டியும், ஒரு விற்பனை அங்காடியிலிருந்து மற்றொரு அங்காடிக்கும் அழைத்துச் சென்றது.

பாலத்துக்கு வந்து அதன் நடுப்பகுதிக்கு நடந்தாள். அவள் நடை இப்போது மெதுவடைந்திருந்தது. பனிப்பொழிவும் தனூப் நதியிலிருந்து தூண்டில்களைப் போலவும் சாட்டை விளாசல்களைப் போலவும் திடீரென்று எழுந்த காற்றும் அவள் நடையைக் கடினமாக்கின. அவள் பாவாடை தொடைகளோடு ஒட்டிக்கொண்டது போல் அவள் உணர்ந்தாள் (குளிர்காலத்திற்குத் தோதான உடைகளை அவள் அணிந்திருக்கவில்லை). திடீரென்று திரும்பி பரிச்சயமான நகரத்துக்குள் போய்விட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு எழுந்தது. ஆளற்று இருந்த அந்தப் பாலத்தின் நடுவில் கிழிந்த ஆடைகளை அணிந்திருந்த நேரான கறுப்பு மயிரை உடைய அந்தப் பெண் சுருக்கம் விழுந்த முகத்தில் கடுமையும் கவலையும் நிறைந்தவளாக நின்றிருந்தாள். அவள் கரங்களின் மடிப்பிலும் லேசாய் மூடி அதே சமயம் முன்னால் நீட்டப்பட்டிருந்த கைகளிலும் அதே கடுமையும் கவலையும் நிறைந்திருந்தன. அலீனா அவள் பக்கத்தில் வந்திருந்தாள். முன்னெப்போதோ ஒத்திகை பார்த்திருந்த முகபாவனைகளையும் தூரங்களையும் மீண்டும் செய்து காட்டினாள். எந்தவிதமான அச்சமும் இல்லாமல், தன்னைக் கடைசியில் விடுவித்துக் கொள்பவளைப்போல் – ஒரே பயங்கரமான, கொண்டாட்டம் நிறைந்த, குளிர்ந்த தாவலில் – அந்தப் பெண்ணின் பக்கமாகப் போய் யோசிக்க மறுத்தவளாகத் தனது கைகளையும் நீட்டினாள். பாலத்தில் நின்றிருந்த அந்தப் பெண் அலீனா தனது மார்போடு அணைத்துக் கொண்டாள். இருவரும் பாலத்தின் அடியில் சிதறுண்டு போய்க்கொண்டிருக்கும் நதி பாலத்தின் மீது மோதும் சத்தத்தைக் கேட்டபடி விறைப்பாகவும் ஒற்றை வார்த்தையில்லாமலும் ஒருவரை ஒருவர் நெஞ்சாரத் தழுவியபடி நின்றார்கள்.

அலீனாவுக்கு வலித்தது: அவள் பணம் வைக்கும் பர்ஸின் கொக்கி பலமான அந்த அரவணைப்பினால் அவள் மார்புகளின் மத்திக்கு நகர்ந்து குடைய ஆரம்பித்திருந்தது. ஒல்லியான அந்தப் பெண் தனது அரவணைப்பில் முழுமையாவதை உணர்ந்தவளாய் அலீனா அவளை ஆரத் தழுவியபடி நின்றாள். அவளுக்குள் இருந்து ஆனந்தம் தேவாலயப் பாடலாக, சட்டென்று விடுதலையாகி எழும் மேகம் போன்ற புறாக்களின் கூட்டம் போல, நதியின் பாடலைப்போல எழுந்தது. ஈருடல்களும் ஒன்றான அந்த உணர்வை அனுபவித்தவளாய் வெளியிலிருந்து வரும் எந்தப் புலன் உணர்ச்சியையும் மாலை வெளிச்சத்தையும்கூட மறுத்தவளாய் அலீனா கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால் அவள் வெற்றி உறுதிதான் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் அந்த வெற்றியைப் பற்றிய கொண்டாட்டத்தைவிட அது இறுதியில் தனக்குச் சொந்தமானதே என்ற உணர்வுதான் அவளுக்கு ஏற்பட்டது.

இருவரில் ஒருவர் அழுது கொண்டிருப்பதுபோல் அலீனாவுக்குத் தோன்றியது. அழுதது அவளாகத்தான் இருக்கவேண்டும். அவள் கன்னங்கள் நனைந்திருந்தன. கன்னமேடுகள்கூட யாரோ அங்கு ஓங்கி அறைந்ததுபோல் வலித்தன. தொண்டையும்கூட. திடீரென்று எண்ணிலாத சுமைகளைத் தூக்கி வைத்ததுபோல் அவள் தோள்கள் நோக ஆரம்பித்தன. கண்களைத் திறந்து பார்த்தபோது (இந்த இடத்தில் அவள் அலறியிருக்கவும் கூடும்) அவர்கள் இருவரும் பிரிந்திருந்ததைக் கண்டாள். இப்போது அவள் உண்மையிலேயே இரண்டு காரணங்களுக்காக அலறினாள். குளிரால், கிழிந்திருந்த அவளது காலணிகளின் வழியாக பனி உள்ளே வந்து கொண்டிருந்தது. அடுத்ததாக, சதுக்கத்தை நோக்கி அலீனா ரேயெஸ் நடந்துபோய்க் கொண்டிருந்தாள். அப்படிச் சதுக்கத்தை நோக்கி நடந்து கொண்டிருந்த அலீனா சாம்பல் நிற ஆடையில் மிக அழகாக இருந்தாள். காற்றில் அவள் தலைமயிர் லேசாய் கலைந்திருந்தது. அவள் முகத்தைத் திருப்பிப் பார்க்கவில்லை. அப்படியே போய்க் கொண்டிருந்தாள்.

***

  • சித்துராஜ் பொன்ராஜ் – இவர் சிங்கப்பூரில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பு பணிகளுடன், படைப்புகள் (கதை, கவிதை, நாவல்), விமர்சனங்கள், இலக்கிய உரைகள் என பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இவரது படைப்புகள் வெளிவந்துள்ளன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular