Saturday, November 16, 2024
Homesliderதூர முகங்களின் புறப்பாடு

தூர முகங்களின் புறப்பாடு

அய்யப்பன் மகாராஜன்

மேல்வானம் திறந்தமேனியாய் கிடந்தது. மேகங்கள் பாறைத்திட்டுகளைப் போல உறைந்து தெரிந்தன.மாலை நேரமாயினும் வெக்கை குறையாத அதன் கசப்பினை பொறுக்க இயலாது செல்லாத்தாள் திண்ணையில் எழுந்து உட்கார்ந்தாள். சூடுமறைப்பிற்காக தொங்க விடப்பட்டிருந்த சாக்கினை உயர்த்திப் பிடித்து வெளியே பார்த்தாள். காற்றற்ற வெளி சலிப்பை உண்டாக்கியது.

“வெயிலு எறங்குனப் பொறவும் என்ன எழவுக்காக்கும்னு இப்படி அவியிது?. மழைக்கானக் கோளு ஒண்ணுத்தையும் காணலையே?”

தலைமாட்டில் யாரோ பூவும், மஞ்ஞணையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். இசக்கிக்கு சாற்ற வேண்டும். கையில் தந்தால் சாற்றுகிறவளுக்கு ஏதாவது கைக்கூலி கொடுக்கவேண்டும். வைத்துவிட்டுப் போய்விட்டால் எதுவும் தரவேண்டாம். தான் இசக்கிக்கு வேலை பார்க்கிறோமா? அல்லது மக்களுக்கு வேலை பார்க்கிறோமா? என்ற சந்தேகம் செல்லாத்தாளுக்கு அடிக்கடி பொருமியபடி வரும். ஒரு தாளை எடுத்துத் தருவதற்கு அத்தனை மடி இந்த எரப்பாளிகளுக்கு என்று திட்டிக் கொள்வாள் இப்போது போல. ஒருபுட்டமது வைத்தால் கூட அவளுக்கு எஞ்சாது. அவளுக்குக் கிடைத்ததா என்று கூடக் கேட்காது விரல் நக்கிக் கொண்டு போகும் கொதிப் பிடித்த சனங்கள் என்று அவள் முனங்குவது பதிவு.

ஒருமுறை ஊர்க்காரர்களிடம் சொன்னாள்.

“யே யப்பா… இனிமே என்னால முடியாது. வேற ஆளைப் பாத்துக்கிடுங்கோ… நா இப்பவோ அப்பவோன்னு கெடக்கேன்… கழியல்ல…பூசை கீசை எல்லாம் நம்மளால முடியாது. முடியலேன்னா ஏதாவது அய்யரப் பாத்துக்கிடுங்கோ…”

ஊர்க்காரர்கள் திகைத்து விட்டார்கள். வேற ஆளுக்கு எங்கே போவது? ஒருவரும் ஒத்துக் கொள்ளவில்லை. அய்யரைக் கூப்பிட்டால் அதற்கு என்று ஒரு செலவு வரும்.

சில பேருக்கு வேறு ஒரு அச்சமும் இருந்தது. “எவனாவது வீட்டில் சுகக்கேடு என்று நேர்ந்து எதையாவது தலையைச் சுற்றிக் கொண்டு வருவான். இதுபோன்று பூசை வைப்பவனுக்குத் தலைமாட்டிலோ வீட்டு இடைநடையிலோ வைத்து விட்டுப் போவான் பிணத்திற்கு வைப்பது போல. அவன் வீட்டுக் கழிப்புகள் நமக்கு ஏறி விட்டால் என்ன செய்வது? எதற்கு இந்த வேலையத்த வேலை?” என்று ஒதுங்கிக்கொண்டார்கள்.

“நீ செய்தா வருக்கத்தா செய்வே ஆத்தா…”என்று செல்லாத்தாளையே பூசை செய்யும் படி பணித்தார்கள். இன்னொரு காரணம் இருந்தது. “சாமி காரியம்!.நாம அப்படி இப்படி இருப்போம். அங்ஙன இங்ஙனப் போவோம். சவம் சரிப்பட்டு வராது.” ஆளாளுக்கு கழன்று கொண்டார்கள்.

அடுத்த மாதம் கொடை வருகிறது. நிறைய வசூலிப்பார்கள். அப்போது மட்டும் பூசாரியை மாற்றி விடுவார்கள். ஆனால் என்ன செய்வது. இதை வைத்து நாலு பேரிடம் கைநீட்டலாம். யார் வீட்டுத் திண்ணையையும் கிடக்க உபயோகித்துக் கொள்ளலாம்.

செல்லாத்தாள் விலாப்புறம் வழிந்த வியர்வையினை கையால் துடைத்தாள். பத்தாது என்று தனது சேலைத் தலைப்பாலும் துடைத்தபோது ஒரு பிடித்தமில்லாத வாடை வந்தது. கையைப் பரத்தி தனது ஊன்றுகோலினைத் தேடி எடுத்துக் கொண்டாள். அதைத் தரையில் ஊன்ற தலைப்பட்டபோது மண்ணில் கோல் சறுக்கிவிட, அவள் சாக்கினைப் பிடித்து கொண்டாள். சுமை தாங்காத சாக்கு ஒருபுறமாக கிழித்துக் கொண்டு போனது. பிடிவிட்ட செல்லாத்தாள் திண்ணையில் குண்டியடிக்க விழுந்தாள்.

அச்சத்தில் அவளுக்குத் தொண்டை வறண்டது. தன் வயிற்றை எக்கிக் கொண்டு மீண்டும் எழ முயன்றாள். மூச்சடக்கியபோது விழுந்த இடத்தின் வலி உறைத்தது.

“சும்மச்சும்ம விழுந்து வலியெடுக்கதுக்கு கொண்டு போவக்கூடாதா?” இசக்கியைத் திட்டிக் கொண்டே நகர்ந்தாள். சிமென்ட் தொட்டியின் பலகையை நீக்கிவிட்டு வாய்வைத்து முடிந்த மட்டும் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தாள். நீர் தொண்டையில் இறங்குகையில் கமறியது. தண்ணீரில் ரத்த வாடை வந்தது. உடனே சத்தத்துடன் தண்ணீரை துப்பினாள். இசக்கியை மீண்டும் திட்டிக் கொண்டாள்.

தணுப்பு சுகமாக இருந்தது. எனினும் மீண்டும் வேர்த்தது. இசக்கிக்கான துணியை எடுத்து வைத்த போது வழக்கமாக தேடிவரும் நாயினைக் காணவில்லை. மனிதர்களுடன் சேர்ந்து அதுவும் வர வரக் கெட்டுப் போய் விட்டது என ஏசினாள்.

அந்நேரத்தில் தூரமுகமாக ஆட்கள் சிலபேர் ஒரு கூட்டம் போல ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் வேகத்தைக் கணித்தால் ஊரைத் தாண்டி வெகுதூரம் செல்பவர்களாக இருக்க வேண்டும். நடுவில் ஒருவனின் தலையில் ஒரு பெட்டி இருந்தது. அதை அவன் தனது கைகளால் அழுத்தமாக பிடித்திருந்தான். அவனுக்கு இருபுறத்திலும் தனியாக இரண்டுபேர் காவலுக்கு வைத்தது போல வந்து கொண்டிருந்தார்கள்.

கூட்டத்தில் சிறுவர்களும் குழந்தைகளும் கூட காணப்பட்டார்கள். இளைஞர்கள் தங்கள் கைகளில் தடிகளையும் வயதானவர்கள் பூண் வைத்த பிரம்புகளையும் வைத்திருந்தார்கள். அக்கூட்டத்தில் பெண்கள் என்று யாருமே இல்லை. கவனித்தால் அனைவரின் முகங்களிலும் ஒருசேர துயரத்தைக் காண முடியுமாக இருந்தது.

ஊரின் மையத்தை வந்து சேர்ந்து விட்ட அவர்களை அவ்வூர்க்காரர்கள் தடுத்தார்கள். கருக்கல் சமயம் ஊருக்குள் வருவதோ ஊரின் வழியாக செல்வதோ குற்றம் என்றும், அதை அனுமதிக்க முடியாது என்றும் நிர்பந்தம் செய்தார்கள்.

கூட்டத்தினர் முன்பே தெரிந்து வைத்திருந்தது தான். தாங்கள் அறிந்த உலகத்தில் மிக மோசமான திருடர்களைக் கொண்ட ஊர் இது என்பதும், இந்த ஊர்க்காரர்கள் சர்க்காரின் மையத்தில் பாம்புகளை நுழைய விட்டு அதிகாரம் செலுத்துபவர்கள் என்பதும்.

வயது முதிர்ந்த கிழவர் தனது பூண் பிரம்பு நடுங்க முன்னே வந்தார்.

“உங்க ஊர்மேல வெகுமானம் உண்டு. ஆனா நீங்க சொன்ன சட்டதிட்டம் எதுவும் எங்களுக்குத் தெரியாது. இப்போ நாங்க அவசரமாப் போயிட்டு இருக்கோம்…சமயம் தப்பினா,வேளைக்குப் போயி சேர முடியாது. பெரிய மனசக் காட்டி எங்களப் போக அனுமதிக்கணும்”

“அதெப்படி?” அவர்கள் மறுக்க, ஊர்க்கூட்டம் சேர்ந்தது. இவர்கள் சற்றுக் கலவரமானார்கள்.

“மொத்தம் எத்தன பேரு?”

“நூத்தி நாப்பத்தி நாலு”

“அது சரி!”

அந்த ஊர்க்காரர்கள் ஒருவரை ஒருவர் சந்கேதத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.

கிழவர் நடக்கப் போக, மற்றவர்கள் பின் தொடர, ஊர்க்காரர்கள் சுற்றி வளைத்தார்கள். அவர்களின் கண்கள் பூ விழுந்திருப்பதைப் போல ஒரு அறிகுறியுடன் தென்பட்டதை கூட்டத்தினர் பார்க்கத் தவறவில்லை.

அதே நேரம் ஊர்க்காரர்களின் பார்வை கூட்டத்தினரின் பெட்டியின் மீதே இருந்ததை கிழவர் கவனித்தார்.

“பெட்டிக்குள்ள என்ன இருக்கு?”

ஊர்த்தலைவர் கேட்க, அச்சத்தில் கூட்டத்தினர் நெருங்கி இணைந்து கொண்டார்கள். அதன் இளைஞர்கள் தடிகளை இறுக்கிக் கொண்டார்கள். அதை கண்ட ஊர்த்தலைவர்,

“ஊரை அடையுங்க” என்றார்.

ஊரில் தடுக்குகள் போடப்பட்டன. வழிகள் அடைப்புகள் கொண்டு மறிக்கப்பட்டன. எந்த வழியிலும் தப்பிக்க முடியாதவாறு அவர்கள் அந்தத் திருடர்களின் ஊரில் சிக்கிக் கொண்டார்கள்.

கிழவரும் அவரது ஆட்களும் தங்களுக்குள் கூடிப் பேசினார்கள். “நடக்கக் கூடாதது என நினைத்திருந்தது எதுவேனும் நடக்க நேரிட்டால், நிகழ விருப்பதில் நல்லது எதுவோ அதில் மட்டுமே நமது நோக்கம் இருக்க வேண்டும். கண்டறிந்து அதை மட்டுமே வசப்படுத்த வேண்டும். மற்றபடி அல்லாதவைகளுக்காக முடிந்த வரையில் போராடக்கூடாது” என்பதை நினைவுப்படுத்திக் கொண்டார்கள்.

“ஐயா! நாங்க உங்க கூட விவகாரம் பண்ண வரல. சீக்கிரம் போய்ச் சேர வேண்டி, அவசரத்துல உங்க ஊரு வழியா வந்துட்டோம். அதுக்காக வருத்தம் தெரிவிச்சிக்கிறோம். எங்க அவசரத்தைப் புரிஞ்சிக்கிட்டு நீங்க வழி விடணும்”

“நூத்தி நாப்பத்தி நாலு எங்களை எச்சரிக்கிற எண்ணம். அது தெரியாதா உங்களுக்கு? அது ஒரு கெட்ட குறி. அந்த எண்ணிக்கையோட வர்றவங்க எங்க சந்தோஷத்த அழிச்சி போட்டுட்டு துயரத்த தான் தந்துட்டுப் போவாங்க… பெட்டியில எங்களுக்குண்டானது என்ன இருக்கு?”

“அப்படி எதுவும் இல்லையே அய்யா…”

ஊர்த்தலைவர் சாடைக் காட்ட சட்டென இரண்டு பேர் பெட்டியை நோக்கி விரைந்தார்கள். வேறு சிலர் கூட்டத்தினரை தாக்கத் தயாராக அவர்களுக்குள்ளே  ஊடுருவினார்கள்.

பெட்டியை வைத்திருந்தவன் ஆவேசமாக அதைத் தூக்கிக் கொண்டு ஓடினான். அவனுடன் இருந்தவர்கள் பறிக்க வந்தவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். கூட்டத்தினரில் சிலபேர் பெட்டியைக் காத்துக் கொள்ள அதன்பிறகே ஓடினார்கள்.

சூழல் கூட்டத்தினருக்கு கைகொடுக்க மறுத்தது. பெட்டியை வைத்திருந்தவனை இசக்கியின் கோயிலருகே வைத்து கல்லால் அடித்து நிறுத்தினார்கள் ஊரார். இசக்கி மஞ்ஞணையோடு கலந்த ரத்தம் பூத்து நின்றாள். ஊர்க்காரர்களின் கூட்டமும் வன்மமும் அதிகமானதால் வந்தவர்களால் எதிர்க்க முடியாது திகைத்தார்கள். கிழவர் நடப்பதில் நல்லது எதுவென சிந்தித்துக் கொண்டிருந்தார்.

செல்லாத்தாள் இலையில் வைத்திருந்த மஞ்ஞணையில் தவறி விழுந்த பூச்சரத்தினை எடுக்கப் போகையில் அது முற்றிலும் மஞ்ஞணையோடு ஒட்டிக் கொண்டு விட்டது. இளக்கி எடுத்த சரம் முழுக்கவும் ரத்தத்தோடு வந்தது கண்டு மன வேதனை கொண்டாள். அவள் இசக்கியைத் திட்டினாள்.

கூட்டத்தினர் கயிற்றினால் கட்டப்பட்டார்கள். பெட்டி அவர்களுக்கு முன்பாக சற்றுத் தள்ளி வைக்கப்பட்டது.

“கருக்கல் எறங்கற நேரத்துல பெட்டியத் தொறக்கக் கூடாது… அதுல எங்களோட விதைகள போட்டு வச்சிருக்கோம். அதுக மேலே மொதக்கருக்கல் பட்டா ஆவாது. அப்படிப் பட்டா அது சர்வ நாசத்த உண்டாக்கும். அது எங்க நம்பிக்கை….”

ஊர்த்தலைவர் பெட்டியைத் திறப்பதில் மட்டுமே விருப்பம் கொண்டு அருகில் போய் கை வைத்தார்.

செல்லாத்தாள் ரத்தத்திலிருந்து விலக்க முடியாத மஞ்ஞணையை இலையோடு மண்ணில் கவிழ்த்தாள். கழுவியும் போகாத பூவின் சிவப்பினையும் இசக்கியின் சிவந்த முகத்தினையும் மாறிமாறிப் பார்த்தாள்.

“கடைசியா ஒங்க நல்லதுக்காவையும் சொல்லுதேன்… நாங்க யாரு? எங்களுக்கு என்ன நடந்ததுங்கறதையாவது கேப்பீங்களா?” கிழவர் சபிப்பது போலக் கேட்டார்.

ஊர்த்தலைவர் திரும்பி வந்தார்.

கிழவர் தனது பிரம்பினை ஒருமுறை ஓங்கிக் கீழேத் தட்டினார். உடனே பெட்டியை வைத்திருந்தவன் குத்துக் காலில் அமர்ந்து வாயிலிருந்து வடிந்த ரத்தத்தினை மண்ணில் வடித்து மலை நோக்கி குலவையிட்டான். அது நாற்புறத்திற்குமாக எதிரொலிப்போடு சென்று விட்டுத் திரும்பி வந்து ஊர்க்காதுகளை சன்னமாக அடைந்தது.

இப்போது ஊர்க்காரர்களின் கண்களில் திகிலும் குழப்பமுமான கலப்படம் தெரிந்தது. கிழவர் கை காட்ட பெட்டி வைத்திருந்தவன் சொல்லத் துவங்கினான்.

“ஆதியில நாங்க தெம்மலைக்கு மேட்டுலேருந்து வந்தவங்க… காலங்காலமா நன்மைக் கூட்டு மேல ஒரே சனமா வாழ்ந்துக்கிட்டு வந்தோம்.. எங்க சாமி ஆதியாபதி. எங்க சாமியக் கும்பிட எங்கேருந்தெல்லாமோ சனங்க வந்தும் போயிட்டும் இருந்தாங்க.

ஒரு எடவாடு காரணமா ஒண்ணா இருந்த எங்க மக்களுக்குள்ள பிரிவு வந்து போச்சி. ஒரு கூட்டம் மேக்கேப் போயிக் குடியிருந்து மேக்கேப்புற மக்களாவும் நாங்க கெழக்கேயே இருந்ததால கெழக்கேப்புற மக்களாவும் ஆனோம்.

எங்க தெய்வம் ரெண்டு ஊருக்கும் நடுக்கால இருந்துச்சி. ஊரு ரெண்டா இருந்ததால படப்பு, சிறப்பு,கொட எல்லாமே ரெண்டாப் பிரிஞ்சிது. ஆறுமாசம் மண்ணும் நீரும் வச்சி நாங்க கும்பிடுவோம். ஆறுமாசம் மலரும் நீரும் வச்சி அவங்க கும்பிடுவாங்க… இடையில ஒரு கொட. அது பொதுக்கொடையா இருக்கும்.

ஒரு நாளு மேக்கேப்புற ஆளுங்க புதூசாக் கொஞ்ச பேரக் கூட்டிட்டு வந்தாங்க. அவங்கக் கையில பட்டய முத்திர குத்தியிருந்திச்சி. அவங்க ஊரு பூராக்  கொர்னாக்கேடு போலயாம். அது சாவுக்கேடாம். வந்தா கொண்டுட்டுத்தான் போவுமாம். எல்லா எடத்துக்கும் பரவுதும்னும் சொன்னாங்க.

சரி, அதுக்கு நாங்க என்னச் செய்யிதுன்னு கேட்டோம். வந்த அவங்க சோவியக் குலுக்கிப் போட்டுப் பாத்துட்டு அந்த தீனத்துக்குக் காரணமே எங்க சாமிதான்னு சொன்னங்க.எங்க தெய்வம் நிலைக்கு நிக்கிறது சரியில்லயாம். உடனே அத எடம் மாத்தணும்னு சொன்னாங்க.

அது நாங்க வச்ச சாமி இல்ல. எங்க தாத்தாதி தாத்தனுக்க தாத்தன் வச்ச சாமி. அதுக்க வேரப் புடுங்கச் சொல்லுதேளே… சம்மதிக்க ஏலாது…வாரது வரட்டும்னோம்…

அவங்கக் கேக்கல. நாங்களும் விடல. அப்படீனா எங்களுக்கில்ல மொதல்ல சோக்கேடு வந்திருக்கணும்? இத்தர வருசமா சாமி நின்ன நிலைக்கு எங்களுக்கு எதுவும் ஆகலயே. இல்லாத்தசோலியெல்லாம் பாக்காதியோன்னு சொன்னோம். அவங்கப் போயிட்டாங்க…

ஆனா சும்மப் போவாம மேக்கேப்புறத்து மக்களை எளக்கி விட்டுட்டுப் போனாங்க.நாங்க எவ்வளவோ சமாதானமும் வெளக்கமும் சொல்லியும் அவங்க பயம் தீரல. அவங்க தீனம் வரும்னு உறுதியா நம்பிட்டாங்க…

கடைசியா பட்டய முத்திரைக்காரங்களோட மேக்கேப்புறத்து ஆளுங்களும் சேந்துக்கிட்டு எங்க சாமியத் தூக்கி மாத்தி வச்சிட்டாங்க…

அது மட்டுமில்லாம இனி மேலாட்டுசாமிக்கு ஒங்க இஸ்டம் போல கொடையெல்லாம் குடுக்கக் கூடாதுன்னு சொல்லிட்டு கல்லு எழுப்பி கதவும் வேற போட்டு பூட்டிட்டாங்க.

தாங்க முடியாத நொம்பரத்துல ஒருநா கதவ எடுத்துச்சாடி உள்ள நொழஞ்சிட்டோம். பூட்டயும் ஒடச்சி எங்க சாமிய பாத்தோமா….”

கிழவர் சற்று நிறுத்தச் சொல்ல கதை சொன்னவன் நிறுத்தினான். அதுவரையில் கேவிக் கொண்டிருந்த கூட்டத்தினர் உடனே வாய்விட்டு அழுதார்கள். அந்த அவகாசத்திற்குப் பிறகு மீண்டும் தொடரும்படி கையசைக்க வேறொருவன் உட்புகுந்து,

“எம்மூத்தோனே… ஒனக்கு எம்ம மீச இல்ல…

எந்தாத்தோனே  ஒனக்கு எம்ம நெறத்த இல்ல…

எம்மகத்தோனே ஒனக்கு எம்மக் கொடியுமில்ல…

எம்மாசானே…. எம்பாட்டாவே…

நீ எமக்க சாமியுமில்ல….!”

அவர்கள் மீண்டும் அழுதார்கள்.

கதை சொன்னவன் மீண்டும் தொடர்ந்தான்.

“கண்ணவிஞ்சுப் போவதுக்கா, நெலையழிஞ்சுப் போவதுக்கா நாங்க எங்க சாமிய விட்டுக் குடுத்துட்டோம்…?

தொண்டும் மூடும் அழிஞ்சத் தெங்கப்போல பாண்டும் பீச்சலும் அழிச்ச தேசம் போல கொலமழிஞ்ச மனியனாயிட்டோம்…!…”

அழுது தொழுது பாத்தும் பட்டயக்காரங்க விடல. அவங்க எங்க சனங்களுக்குள்ள கொலைக்களத்த உண்டாக்கிப் புட்டாங்க. ஒரே சண்ட… ரத்தக் காவு…

எல்லாத்தையும் விட … “

கிழக்கேப்புற கூட்டத்தினர் தங்கள் தலைகளைக் கைகளாலும் கம்பாலும் கற்களாலும் மாறிமாறி அடித்துக் கொண்டார்கள். சிலர் தரைமீது தலையாலடித்தும் அரற்றினார்கள்.

இப்போது மற்றவர்களால் பேச முடியாமல் போக, கிழவர் பேசினார்.

‘எங்க சனத்துல பொண்ணுங்கதான் துலாக்கோல்னு, ஒருபொட்டுப் பொடிசுன்னு விடாம அத்தன பொம்பளைகளையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க…

காடுகளுக்குள்ளேருந்தும்… புதர்களுக்குள்ளே சப்புசவருக்குள்ளேருந்தும் தான் துண்டுதுண்டா துண்டுதுண்டா எங்க பெண்கள நாங்க கண்டுபிச்சோம்…

எல்லாம் போயிருச்சு…! இப்போ நாங்க எங்கேருந்து வந்தோமோ அதே தெம்மலைக்கேப் போறோம். அங்கதானே போக முடியும்? திரும்ப மொதல்லேருந்து தான் எல்லாம் ஆரம்பிக்கப் போவுது. திங்கிற ஆகாரம், குடிக்கிறத் தண்ணி, வாசிக்கிற காத்து எல்லாத்துலயும் இயற்கையோட உளவு இருக்கு… யாரும் இதுக்கு மேலயும் தப்பிக்க முடியாது… எங்கள விட்டிருங்கோ..”

கிழவர் நம்பிக்கையோடு எழுந்தார். கூட்டத்தினர் பொருமலுக்கிடையில் தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்கள்.

ஊர்த்தலைவர் மீண்டும் பெட்டியினருகில் சென்றார்.

“நீ சொன்ன கதையெல்லாம்.. எங்கூரு செல்லாத்தாளுக்கு… எங்களுக்கு வேண்டியது இல்ல. பெட்டியத் தொறங்கடா…”

என்று அவர் சத்தமிட முன்னே நின்ற ஊர்க்காரர்கள் இரண்டுபேர் பெட்டியில் கைவைத்தார்கள். மறுநிமிடம் கிழவரின் பிரம்பு நீண்டது. அது இழுத்து வீசப்பட்ட விசைபோல அவர்களின் பின்புறத்தை சாத்த அதன் பூண் பட்டு இருவரும் தீப்பட்டதைப் போல துள்ளி விழுந்தார்கள். கூட்டத்தார் தங்கள் தடிகளைச் சுழற்றினார்கள். பூண் வைத்த பிரம்புகள் பறந்தன. ஊர்க்காரர்கள் தெறித்துப்போய் விழுந்தார்கள். சிலர் ஓடி ஒதுங்கினார்கள்.

ஊர்த்தலைவர் இசக்கி இருந்த இடத்தின் பின்புறக் கிடுகில் எரவாணத்தில் செருகி வைத்திருந்த திருக்கைவாலை எடுத்தார். செல்லாத்தாள் அது கூடாது எனத் தடுக்க வேண்டி வந்தும் தடுக்காது எடுத்துக் கொடுத்தாள்.

கிழவர் அதிர்ச்சியடைந்தார். திருக்கையின் வாலை வாங்கி பல தவணைகளாக ஊறப்போட்டும் காயப்போட்டும் பதப்படுத்தி வைக்கப்பட்ட இறுகிய ஆயுதம். அது ஒன்று போதும். அதன் முனைகளால் பதம்பார்க்கபட்ட ஒருவன் ஆயுளுக்கும் மீந்த மாட்டான். தலைவர் எடுப்பதைக்கண்டதும், சரகப்பிரதிகள் அனைவருமே ஆளுக்கொரு வாலை எடுத்துக் கொண்டு வந்தனர்.

வெகு நாட்களாகப் போராடி சீவனைக் களைத்திருந்த கிழக்கேப்புறக் கூட்டத்தினர் தங்கள் கடைசி முயற்சியாக திருக்கையின் முன்னாள் உயிர் கொடுத்துப் போராடியும் தோற்றுப் போனார்கள்.

கட்டிக் கிடத்தப்பட்ட அவர்களின் முன்பாக ஊர்க்காரர்கள் அப்பெட்டியினைத் திறந்தார்கள். உட்புறம் வெண்பட்டு போன்ற நிறத்தில் ஒரு துணியால், மூடப்பட்டிருந்தது. அதனைக் களைந்தார்கள். உள்ளே ஒரு பை போன்று தெரிந்தது. அதனுள்ளே அசைவதும் பிதுங்குவதுமாக ஏதோ தெரிய அதனை வெளியே எடுத்துப் பிரித்தார்கள். கிழக்கேப்புறத்தார் தாங்க இயலாது தங்கள் கண்களை மூடிக் கொண்டார்கள். கிழவர் மட்டும் பார்த்துக் கொண்டேயிருந்தார் அசைவற்று.

பிஞ்சு உடல்களைப் போல பலவிதமான பெண் மார்பகங்கள் திறந்த பையின் உள்ளிருந்து துடித்துக் கீழே விழுந்தன. அந்நிய கைச்சூடு பட்டு தன் உயிர்விடும் முயற்சியாக தப்பித்து விழுந்த அவைகளைக் கண்டதும் ஊர்க்காரர்கள் மகிழ்ச்சியால் மிகவும் ஆர்ப்பரித்தார்கள். ஆடினார்கள். பாடினார்கள்.

உடனே ஆளுக்கொரு முலையாய்ப் பார்த்து எடுத்துக் கொண்டார்கள். ஊர்த்தலைவர் தனது விரல்களால் நன்றாகத் துள்ளுவதாகப் பார்த்து ஓரிரண்டினைப் பற்றித் தனியாக எடுத்து வைத்துக் கொண்டார். புடைப்பும் திண்மையுமாக வேண்டி இளைஞர்கள் தங்களுக்குள் சண்டையிட்டார்கள். கிடைக்காத சிலர் அடித்துக் கொண்டார்கள். அதன் நிமித்தம் சொல்லத் தகாத தாக்குதல்கள் நடைபெற்றன. அது பற்றிய எந்தக் கவலையுமில்லாமல் விரும்பியது கிடைத்தவர்கள் தங்கள் கையிலிருப்பவைகளுடன் திருப்தியாக ஒதுங்கிக் கொண்டார்கள்.

ஒரு முலை பிதுக்கப்பட்டதில் பால் நிறைந்தது. அதை வைத்திருந்தவன் கைகளை விரித்துக் கொண்டு ஓட, கட்டப்பட்டிருந்த நிலையில் ஒரு குழந்தை தன் அம்மாவை அழைத்து அழுதது.

அதைக் கண்டு, ஓடியவன் அருகில் வந்து குழந்தையிடம் அதனை நீட்டினான். அது வாய் குவித்துக் கதறியது. அவன் குழந்தையை அவிழ்த்து விட்டு மீண்டும் ஓடினான். அவன் பிறகில் அந்தக் குழந்தை அழுதபடி சென்றது. காணாமல் போயிருந்த நாய் அக் குழந்தையை விரட்டத் துரத்தியது.

இது அத்தனையையும் கண்டுகொண்டிருந்த செல்லாத்தாள் அச்சப்பட்டு சேலைத் தடுப்பினால் தனது முலையினை மூடிக்கொண்டாள்.

சிலர் தங்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று மனைவிமார்களிடம் அவர்கள் முலைகளுடன் சேர்த்து பத்திரப்படுத்தி வைக்கும்படி கட்டளையிட்டார்கள். கடந்து போன இரவுகளின் சலிப்பு மேவியிருந்த பெண்கள் இரவுச் சள்ளைகளில் இருந்து விடுபடும் பொருட்டு அதனைத் தங்கள் படுக்கையின் இடையில் வைத்துக் கொண்டார்கள். சில பெண்கள் கொண்டு வந்தவர்களை துரத்தியடித்தார்கள். முலையிழந்த பெண்களில் சிலர் அவற்றைத் தங்களுடன் ஒற்றுப் பார்த்து விட்டு வெறுப்புடன் நகர்ந்தார்கள். சில முலைகள் தூக்கி வீசப்பட்டன.

இரவு கிழக்கேப்புறத்துக் கூட்டத்தினரைப் போர்த்தியது. கை மீறிய நாளின் மீது அவர்கள் கொதிப்புடன் இருந்தார்கள்.

“சாவும் சவமும் எங்கே? சாமி எங்கே?…

கொல்லக் கொண்டு போயே…!”

கிழவர் வானம் பார்த்து விசும்பினார்.

“தாத்தாதித் தாத்தனுக்கத் தாத்தா….”

ஒருவன் கத்தினான். மறுகணம் அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூக்குரலிட்டார்கள். அச்சமயம் அவர்களின் குரல்கள் மேல்நிலையில் ஒலிக்கும் சத்தம் போன்று ஒன்றாக அதிரக் கேட்டன. அவர்கள் தொடர்ந்து சத்தமிட்டார்கள். அது ஒரு முடிவில்லாத ஊளையாக மாறி இரவு முழுக்க பெருக்கெடுத்து நீண்டது. அது அச்சமூட்டுவதாகவும் எண்ணங்களைக் குலைப்பதாகவும் இருந்தது. அதனைக் கேட்ட விலங்குகள் காடுகளுக்குள்ளிருந்து எதிர்த்து ஒலியெழுப்பத் துவங்கின. அன்றைய இரவைக் கழிக்க முடியாமல் ஊரார் மிகவும் துன்பப்பட்டார்கள். செல்லாத்தாள் இசக்கியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முதல் முறையாக அழுதாள்.

இரவின் விடுப்பின் போது முந்தைய நாள் ஊரிலில்லாமல் தொழிலுக்கு சென்றிருந்த ஒரு திருடன் தனக்கு மட்டும் யாதொரு முலையும் கிடைக்கவில்லையென்ற அங்கலாய்ப்புடன் வந்து கிழவரின் கட்டினை அவிழ்த்துக் கேட்டான்.

கிழவர் அவனைப் பார்த்து புன்னகைத்தபடி வானத்தை உற்று நோக்கினார். வானம் வெளுப்பில் மீண்டிருந்தது. மேலே சில காகங்கள் பறந்தவாறு தென்பட்டன. கூட்டத்தினர் கிழவரையே தளர்வாக கவனித்தனர்.

கிழவர் தனது பிரம்பினை காற்றுவாக்கில் ஒருமுறை வீசிப் பார்த்துக் கொண்டார். பின்பாக தனது உடுப்பைத் தூக்கி தனது மடியினை அவிழ்த்தார். அதனுள்ளே இருந்தது ஒரு காய்ந்த முலை. அவர் அதனைத் தனது விரல்களால் நுள்ளி எடுத்துச் சற்றுத் தூரே எறிந்தார். அதன்பிறகு சில கட்டளைகளை முனங்கி அதனை நோக்கி ஊதினார். மறுகணம் காய்ந்து போயிருந்த அந்த முலை சட்டென சுருக்கம் நீங்க ஊதிப் பெருகியது.

திருடன் உடனே அதனை எடுக்கப் போக, அந்நேரம் வேகமாய்ப் பறந்து வந்த ஒரு காகம் இடையே போய் அதனைக் கொத்தியது. ஆவேசமான திருடன் அதன் மீது பாய்ந்து பிடுங்கப் பார்க்க, புரண்டதில் காகம் சத்தம் போட்டபடி செத்துப் போனது. கிழவர் குரூரமாக சிரித்தார்.

செத்த காகத்தின் கரைதலை உணர்ந்த மற்ற காகங்கள் ஒன்றன்பின் ஒன்றென   இடையறாத சத்தத்துடன் பறந்து வந்தன. செத்த காக்கையோடிருந்த திருடனைக் கண்டன. வேகமாகச் சென்ற அக்காகங்களில் ஒன்று அவன் தலையில் ஓங்கிக் கொத்தியது.

அவன் அக்காகத்தினை அடித்துத் துரத்த முற்பட்டான். உடனே மற்ற காகங்கள் அனைத்தும் அவனைச் சுற்றிவந்து கொத்தத் துவங்கின.அவன் வலி தாங்காமல் அலறிக் கொண்டு ஓடினான். காக்கைகள் அவனை விடாது துரத்தின.

வீட்டினுள்ளே இருந்தவர்கள் வெளியே ஓடிவந்தார்கள். ஒத்த மாமிசத்தின் வாடையை அறிந்த காக்கைகள் மேலும் மேலும் சத்தமிட்டு பிற காக்கைகளைக் கூட்டின. வீடுகளுக்குள் புகுந்து கொத்தின. படுக்கையறைகளில் கிடந்தவர்கள் கொத்துப்பட்ட திறந்தமேனியோடு இறங்கி ஓடினார்கள். ஆண்கள் பெண்கள் என அனைவரின் உடல்களும் ரத்தம் கண்டது. ஒருவரையொருவர் முண்டியடித்துக் கீழே விழுந்து கொத்துப்பட்டார்கள். மண்டைகள் உடைந்தன. ஊர் பிணக்காடு போலக் கிடந்தது.

கிழவரை நனைத்துக் கொண்டு ஊருக்குள் மழை பெய்தது. தெருவில் ரத்தம் பெருக்கெடுத்தது.

இசக்கியின் முகத்தில் இன்னமும் காயாதிருந்த மஞ்ஞணை மழை நீரில் கரைந்து போக, அவளுடைய உடமையான முகம் துலங்கித் தெரிந்தது. செல்லாத்தாள் கீழே கிடந்தாள்.

காக்கையிடமிருந்து எடுத்த முலையினை கிழவர் எடுத்து கையில் பத்திரப்படுத்திக் கொண்டார். பெட்டியினை எடுத்தார். அதன் அடிப்பகுதியில் ஒரு இடைவெளி இருந்தது. அதனுள்ளே கைவிட்டுப் பார்த்தார். ஆதிபதியின் மீசையும், கண்களும் அவரது கொடியும் பத்திரமாக இருந்தன. அதைக் கண்டதும் அதன் பாதுகாவலுக்கு தனது கையிலிருந்த காய்ந்த முலையினை பதமாக வைத்து மூடினார்.

குழந்தையைத் தூக்கித் தோளில் அமர்த்தினார். அவர்கள் தங்கள் திசை நோக்கிப் பயணிக்க, காக்கைகளின் ஓயாமை தொடர்ந்து கேட்டது.

***

அய்யப்பன் மகாராஜன்

நாகர்கோயிலைச் சேர்ந்த இவர் தற்போது திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரைகள், தொடர், என பல்வேறு படைப்புகள் இதழ்களில் வெளியாகி வந்துள்ளன. – imaharajan@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular