தமிழில் – செள.வீரலெக்ஷ்மி
தோகென் சென்சி (Dogen zenji) 19 சனவரி 1200 முதல் 22 செப்டம்பர் 1253 வரை வாழ்ந்தவர். ஜப்பானின் உயரிய குடும்பத்தில் பிறந்த தோகென்னின் வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாக இருந்தது. ஏனெனில் அவர் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டார்.பெற்றோரின் இழப்பு வாழ்வின் நிலையாமையைப் பற்றிய தேடலை தோகென்னுக்குள் ஏற்படுத்தியது. தோகென்னின் பதின்மூன்றாவது வயதில், அவர் புத்த சமயத் துறவியானார். 24 வயதில் தோகென் சீனா சென்று, புத்த சமயத்தைப் பயின்று, அதை ஜப்பானுக்குக் கொண்டு வந்தவர். தோகென் சீனாவிற்குச் சென்று புத்த சமயத் தத்துவத்தை பயில்முறையைக் கற்று, ஜப்பானில் சோட்டோ சென் என்ற புத்த சமயப்பிரிவைத் தொடங்கினார். தோகென் , சீனாவின் புத்த கோட்பாட்டைப் பின்பற்றாது இந்தியாவிலிருந்து சீனா வழியாக வந்த சாக்கியமுனியின் வழிமுறையைப் பின்பற்றினார். வாழ்வியலில் மட்டுமல்லாது எழுத்தின் வழியே சென் தத்துவத்தை விளக்கியவர். தோகென் பன்முக ஆளுமைகளை கொண்ட கவிஞர், எழுத்தாளர், தத்துவ அறிஞர், புத்த சமயத் தத்துவக் கருத்துக்களை ஜப்பானிய மொழிக்குக் கொண்டு வந்தவர். கி.பி.13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தோகென்னின் கவிதைகள் சீன, ஜப்பானிய மொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1.
புலம்பெயரும் பறவை
எந்தத் தடயத்தையும் விட்டுச் செல்வதில்லை
அதற்கு ஒரு வழிகாட்டியும் தேவையில்லை.
2.
நீர்ப்பறவைகள்
வருகின்றன போகின்றன
அவற்றின் தடங்கள் மறைந்துவிட்டன
ஆனால் எப்போதுமே
அவை பாதையை மறப்பதில்லை
3.
இரவின் இதயத்தில்,
நிலவொளி சூழ்ந்திருக்க,
ஒரு சிறு படகு மிதக்கிறது,
அலைகளால் ஆடவுமில்லை
தென்றலால் அசையவுமில்லை.
4.
நம் வாழ்நாளில் தவறும் சரியும் நன்மையும் தீமையும்
குழம்பியுள்ளன.
நிலவுடன் விளையாடி, காற்றை மறுதலித்து, பறவைகள் ஒலியை
கேட்கும்பொழுது,
பல்லாண்டுகளாக நான் மலையில் பனியிருப்பதை வெறுமனே பார்த்தேன்.
இந்த குளிர்காலத்தில் சடுதியில் உணர்கிறேன் பனிகள் மலைகளை
உருவாக்குகின்றன.
5.
வசந்த காலக் காற்றால்
என் சொற்கள் சிதறிப்பறக்கின்றன
மக்கள் அவற்றைப் பார்க்கலாம்
பூக்களின் பாடலாய்.
6.
நீண்ட காலம் பற்றின்றி இவ்வுலகில் வாழ்கிறேன்,
தாளையும் எழுதுகோலையும் விடத் தொடங்கியதிலிருந்து
அதீத உணர்வுகளின்றி மலர்களைப் பார்க்கிறேன் , பறவைகள் ஒலியைக் கேட்கிறேன்,
மலைகளில் வசிக்கிறேன், இலகுவான இம்முயற்சிகளை நினைந்து வெட்கமடைகிறேன்.
—
சௌ.வீரலெக்ஷ்மி, இவர் மதுரையைச் சேர்ந்தவர். தஞ்சை தமிழ் பல்கலைகழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையின் தலைவராகப் பணியாற்றி வருகிறார். ஜென் மற்றும் கீழைத்திய மரபுக் கவிதைகள் மீது பெரும் ஈர்ப்பு கொண்டவர். இவரது ஆய்வுக் கட்டுரைகள் பல இதழ்களில் வெளியாகியுள்ளன.