க.ரா
முதல் கதை
மதியம் மணி இரண்டு ஆகியிருந்தது. சூப்பர் மார்க்கெட்டில் உள்ளே நுழைந்தபோது இரண்டு பில்லிங் கவுண்டர்களில் நின்றிருந்தவர்களைத் தவிர யாரும் அங்கில்லை. அவனுடைய குழந்தைக்கு சர்க்கரையும் விளக்கேற்றும் எண்ணையும் மட்டும் வாங்க வேண்டியிருந்தது. அந்த இரண்டும் இருக்கும் இடம் தெரிந்தாலும் அவனது கண்ணிற்கு தெரிந்த முதல் வரிசையில் நுழைந்தான். அங்கே கடையில் வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் ரேக்குகளில் அடுக்க பிஸ்கட் பாக்கெட்டுகளை தரையில் பரப்பிக் கொண்டிருந்தனர். அவர்களைத் தாண்டிட முடியாமல் அதற்கு அடுத்த வரிசையில் நுழைய முற்பட அங்கே ஏற்கனவே ஒரு குடும்பம் தள்ளுவண்டியில் பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்.
பக்கத்திலேயே இன்னொரு வண்டி நிறைய பொருட்களிருந்தன. அங்கேயும் அவர்களைத் தாண்டிப்போக முடியாமல் போகவே, பின்னே வந்து இடது புறம் இருந்த முதல் வரிசையில் நுழைந்தான். அந்த வரிசையில் கடைசியில்தான் அவன் வாங்க வந்த இரண்டு பொருட்களும் இருந்தன. ஆனால் எப்போது கடைக்கு வந்தாலும் மொத்த கடையையும் சுற்றிப் பார்ப்பது ஒரு பொழுதுபோக்காகவே மாறி விட்டது. வேண்டிய இரண்டு பொருட்களையும் கைக்கொன்றாக எடுத்துக்கொண்டு பில்லிங் கவுண்டர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தால் இருந்த நான்கு கவுண்டர்களில் மூன்றில் ஆளே இல்லை.
முதலில் கடைக்குள் நுழைந்த போது பார்த்த இருவரில் ஒரு பெண் மட்டும் பில்லடித்துக் கொண்டு இருந்தார். அவனுக்கு முன்பு நின்றிருந்த இரண்டு பேரும் முகக்கவசம் அணியவில்லை. அதிலொருவர் அடிக்கடி மூக்கை வேறு சொரிந்து கொண்டிருந்தது அசூயையாக இருந்தது. அவனுக்குப் பின்னால் ஆளே இல்லை.
அந்த இரண்டு பேரும் பணம் கொடுத்துக் கிளம்ப பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. அவர்கள் நகர்ந்ததும் அவனது பொருட்களை அங்கிருந்த மேசை மேல் வைத்தான். அடுத்த சில நொடிகளில் கவுண்டரிலிருந்த பெண் பில்லை அடித்துக் கையில் கொடுத்தாள். பையில் இருந்த பர்சை எடுத்துக் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்துவிட்டு, பொருட்களை எடுத்து கொண்டு வந்த பையில் வைத்துவிட்டு மிச்ச காசை சரியாக இருக்கிறதா என எண்ணிப் பார்த்தான். பின்னர் பர்சை பாக்கெட்டினில் வைத்துவிட்டு.. இன்னொரு பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் இருக்கிறதா என சரிபார்க்க ஒரு ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டான்.
அதற்குள் பின்னால் இடிப்பது மாதிரி, ஒரு தள்ளுவண்டியைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது அந்த குடும்பம். பின்னே திரும்பி பார்த்தான். ஒரு ரெட் கலர் டீ-சர்ட்டும் வேஷ்டியுமாக சற்றே ஒடிசலாக இருந்தவர் அப்பாவோ தாத்தாவோ தெரியவில்லை. பக்கத்தில் ஒரு பெண் குழந்தை நின்றிருந்தது. கூடவே ஒரு பெண். முப்பது வயதிருக்கலாம். அவன் அவர்களைப் பார்ப்பதை அந்த ஆள் முறைத்துக் கொண்டிருந்தான்.
எல்லாவற்றையும் சரிபார்த்துக் கிளம்ப எத்தனிக்கையில் சரியாக அந்தப் பெண், அவனைப் பார்த்து சொன்னாள்.
“சார் பின்னாடி ஆள் நிக்கிறாங்க.. கொஞ்சம் கிளம்பறிங்களா”
சட்டென்று கோபம் கிளம்ப முணுமுணுத்தான்.
“இங்கயேவா குடும்பம் நடத்த போறாங்க”
அதற்குள் பின்னால் நின்றிருந்த அந்த ரெட் டீ-சர்ட் சொன்னார்.
“லேடிஸ்ட மரியாதையா பேசுங்க”
கோபம் இன்னும் அதிகமாக ரெட் டீ-சர்டையும் பில் கவுண்டர் பெண்ணையும் அவன் கோபமாக முறைக்க “என்னாச்சு சார்?” என்று உள்ளே வந்தார் அந்தக் கடையின் மேனேஜர்.
“கிளம்பச் சொன்னதுக்கு லேடிஸ்ட மரியாதை இல்லாம பேசறான் சார். பார்க்கிற பார்வை வேற சரியில்லை”
இது ரெட் டீ-சர்ட்.
அதைக் கேட்ட அந்தப் பெண்ணின் கண், வீட்டில் ஒழுகும் குழாயென மாறத் துவங்க.. அவள் குனிந்த தலையை நிமிர்த்தவே இல்லை. அவன் அணிந்திருந்த முகக்கவசம் அவனது கண்களையே மறைக்கிறதோ என்று ஒரு சந்தேகம் அவனுக்கு இருக்கையில், ’எவனுக்கோ.. நாம் எங்கே எப்படி என்ன பார்க்கிறோம் என எப்படித் தெரியும்?’ என்று நினைக்கையில்..
“சார் அதெல்லாம் இல்லை.. சார், எங்க ரெகுலர் கஸ்டமர்தான்”
மேனேஜர் சொல்ல ஆரம்பிக்கையில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். பின்னால் அவர் அந்தப் பெண்ணிடம் ஏதோ கோபமாகப் பேசுவது கேட்டது.
கடையை விட்டு வெளியே வந்தான். பாக்கெட்டில் மொபைல் அடித்தது. எடுத்துப் பார்த்தான். ஏதோ ஒரு அனாதை இல்லத்திலிருந்து அழைப்பு. எரிச்சலாக இருந்தது. தான் ஒரு மாதசம்பளக்காரன் எனச் சொல்லிச் சொல்லி அலுத்துப்போய் விட்டது. வேறு வேறு நம்பரிலிருந்து ஒரு மாதத்துக்கு குறைந்தது பத்து பதினைந்து அழைப்புகளாவது வந்து விடுகின்றன. இவ்வாறு வருவது அவனைக் குழப்புகிறது, எது உண்மை எது பொய் எனத் தெரியவில்லை என ஒருநாள் ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டிருந்தான். அதில் நண்பர்கள் பலபேர் வந்து அப்படி வரும் அழைப்புகளில் முக்கால்வாசி பொய்தான் என கமெண்டு போட்டார்கள். அதற்கப்புறம் அந்த நம்பர்களை எல்லாம் பிளாக் செய்தாலும் வேறு வேறு நம்பர்களிலிருந்து அவனுக்கு அழைப்புகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. மொபைல் அடித்தபோது அவன் நான் எதிர்பார்த்ததே வேறு. மனைவிதான் அழைப்பாள் என நினைத்தான்.
*
ஒரே வீட்டிலிருந்து கொண்டு பேசி மூன்று நாட்கள் ஆகிவிட்டது. இருவருக்கும் இடையேயான தூது மூன்று வயது மகன்தான். வாட்ஸப்பில் கூட பிளாக் அவனை செய்துவிட்டாள். வழக்கம் போல வரும் சண்டைதான். அவன் இவன் பெரும்பாலும் பேச மாட்டான். அவள் விடாமல் பேசிக்கொண்டே இருப்பாள். அதிலும் எப்படா எதில் தப்பு செய்வான் எனப் பார்த்துக்கொண்டே இருப்பது மாதிரி இருக்கும். அவளுக்குத் தப்பென்று தோன்றிவிட்டால் போதும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஈட்டி மாதிரி குத்தும். அவன் சிறிது நேரம் விட்டு விடுவான். பொறுத்திருந்து பார்த்துவிட்டு கொஞ்சம் கெட்ட வார்த்தைகளில் திட்டி விடுவான். அதற்கப்புறமும் விடாமல் அவள் முணுமுணுத்து கொண்டே இருப்பதைப் பார்த்து எரிச்சலில் மீண்டும் கத்துவான். இப்படியே கத்திக்கத்தி ஒரு கட்டத்தில் கையை நீட்டி விடுவான். இந்த தடவை கொஞ்சம் அதிகமாகி ஏறி மிதிக்கப் போனான். நடுவில் குழந்தை வந்து விட்டான். எங்கே கால் குழந்தை மீது பட்டு விடுமோ என்ற பயத்தில் குழந்தையை இழுத்துக்கொண்டு ஒரு மாதிரி சரிந்ததில் சமையல் மேடை தலையில் இடித்து மூன்று நாட்களாக வீட்டில் மௌனம் தான்.
*
வெளிக்கதவைத் திறந்து கொண்டு வெளியேறும் சத்தம் கேட்டது. அவன் தான் போகிறான் போல, போகட்டும் என விட்டுவிட்டாள். தினம் ஒருமுறை கிச்சனில் உள்ளே நுழைந்து எல்லாம் இருக்கிறதா எனப் பார்ப்பது அவனது வேலை. எது ஒழுங்காக நடக்கிறதோ இல்லையோ, கடந்த இரண்டு வருடங்களாக இதுவும் சண்டையும் நாள் தவறாமல் நடக்கிறது. எழுந்து போய் கதவை மூடக்கூடத் தோன்றாமல் படுத்தே இருந்தாள். பக்கத்தில் பையன் தூங்கிக் கொண்டிருந்தான். ஓசை எழுப்பாமல் எழுந்து பக்கத்து மேசையில் வைத்திருந்த மொபைலை எடுத்து நோண்ட ஆரம்பித்தாள். ஃபேஸ்புக் போனவள் நோட்டிபிக்கேஷனில் போய் பார்த்தாள். நிறைய நண்பர்களின் போஸ்டுகளுக்கு அவன் லைக் போட்டிருந்தான். அதெல்லாம் அவளுக்கு நோட்டிபிக்கேஷனாய் வந்திருந்தன. அவனது ஃபேஸ்புக் புரோஃபைலில் போய் பார்த்தாள். நேற்றைக்கும் இன்றைக்கும் எதுவும் எழுதியிருக்கவில்லை. அதற்கு முந்தின நாள் மட்டும் ஏதோ ஒரு வீடியோவைப் பகிர்ந்து இப்படி எழுதியிருந்தான்.
“ஆண்களோட basic expectation என்ன தெரியுமா.. ஆண்கள் காலைல ஆபிஸ் போறதுக்கு முன்னாடி நீங்க எந்திரிக்கணுங்கிறதுதான்.”
அந்த வீடியோவில் எவனோ ஒருவன் ஏதோ உளறி இருந்தான். அவனின் அந்த போஸ்ட்டுக்கு ஒரு இருபது பேர் சிரிப்பு ஸ்மைலியையும் இன்னும் சிலபேர் வெறும் விருப்பக் குறியையும் இட்டிருக்க ஒரே ஒருவர் மட்டும் ஆர்டின் விட்டிருந்தார். இன்னும் சில போஸ்ட்டுகளைப் பார்த்தாள். எல்லாமே பெண்களைக் கிண்டல் அடித்து போட்டிருந்த போஸ்ட்டுகளாய் இருந்தது. மிகவும் சலிப்பாக இருந்தது. ஆண்களே இப்படித்தானா?
ஃபேஸ்புக்கிலிருந்து வெளியே வந்தவள் யூ-ட்யூபில் சாவிஸ் பொட்டிக் என்ற சேனலில் வந்திருந்த வீடியோக்களைப் பார்த்தாள். மொபைலில் சவுண்டை கம்மி பண்ண மறந்துவிட்டாள் போல, யூட்யூப்பில் சவுண்டு வர பக்கத்தில் படுத்திருந்த குழந்தை சத்தத்தை கேட்டு அழ ஆரம்பிக்க, ஒரு கையால் மொபைலில் சவுண்டை கம்மி செய்தவள், மற்றொரு கையால் குழந்தையின் முதுகில் தட்ட குழந்தை தூங்க ஆரம்பித்தது..
*
அப்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தவுடன் மெயில் பாக்ஸில் அவனுக்கு ஏதாவது தபால் வந்திருக்கிறதா எனப் பார்த்தான். பக்கத்தில் இருந்த ஜவுளிக்கடையிலிருந்து அவள் பெயருக்கு ஒரு தபால் வந்திருந்தது.. ஒருமுறை எங்கேயோ கீழே விழுந்து எழுந்ததில் ஒரு சிறு காயம். வலது கையில் கட்டு போட்டுக்கொண்டு திரிந்தான் என பக்கத்திலிருக்கும் அம்மன் கோயிலுக்குப் புடவை தருவதாக வேண்டியிருக்கிறேன் என்று அவள் சொன்னபோது அந்தக் கடைக்கு அவளைக் கூட்டிப்போய் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்திருந்தான். அந்தக் கடிதத்தைப் பார்த்தபோது எரிச்சலாக வந்தது. ஏற்கனவே எப்போது பார்த்தாலும் மொபலை வைத்துக்கொண்டு புடவை விளம்பரங்களாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதில் இது வேறா என எரிச்சல் வர அதை அங்கேயே கிழித்து எறிந்தான்.
வாசலுக்குப் போய் வெளியே செருப்பைக் கழட்டிவிட்டு, கதவில் கையை வைக்க அது அப்படியே திறந்து கொண்டது. அங்கே இருந்து பார்த்தபோது, அவளும் குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த அறைக்கதவு திறந்திருந்தது. கட்டிலில் படுத்தபடி ஒரு கையில் மொபலையும் இன்னொரு கையால் குழந்தையையும் தட்டிக் கொண்டிருந்தவள் கண்ணில் பட்டாள். அவனுக்கு மீண்டும் கோபமாக வந்தது. என்ன பொறுப்பற்ற தன்மை இது எனக் கத்த வேண்டும் போல தோன்றியது. மூன்று நாட்களுக்கு முன்னால் போட்ட சண்டை நினைவுக்கு வர அறைக்குள் புகுந்து கொண்டான்.
அந்த அறை என்பது பத்துக்கு பத்து அளவிலான அவனது பிரமாண்டமான உலகம். அங்கேயே ஒரு பக்கம் ஒரு சின்ன கப்போர்டு வைத்து அதில் உடற்பயிற்சி சாதனங்களை அடுக்கி இருந்தான். பக்கத்திலேயே இன்னொரு பெட்டி நிறைய குழந்தையின் பொம்மைகள். அதனருகில் ஊரில் இருந்து அவளுடைய அப்பா அனுப்பி வைத்த அரிசி மூட்டைகள் இரண்டு, ஒரு பெரிய பலசரக்கு பெட்டி. இன்னொரு பக்கம் சுவரோடு சுவராக அறையப்பட்ட ஒரு புத்தக அலமாரி. அது நிறைய புத்தகங்களை வாங்கி அடுக்கியிருந்தான்.
இது போக மிச்சம் இருந்த இடத்தில்தான் கடந்த இருபது மாதங்களாக வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். கொரோனாவின் காரணமாய் உலகத்தில் எல்லா தொழில்களும் முடங்கிப் போயிருந்தன. அவன் வேலை பார்த்த நிறுவனம் சேவைத் துறையைச் சார்ந்தது. உலகில் இருந்த பல்வேறு நிறுவனங்களுக்கு இந்தியாவிலிருந்து மென்பொருள் துறையில் அவர்களுக்குத் தேவையான மென்பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாதலால் ஆளுக்குக் கையில் ஒரு மடிக்கணினியைக் கொடுத்து வீட்டிலிருந்தே வேலையைத் தொடர பணித்திருந்தது. அவன் தன் அலுவலகம் போகும்போது, வீட்டிலிருந்து அலுவலகம் முப்பது கிலோமீட்டர் தொலைவு. காலை மாலை பிரயாணமே இந்தப் பெருநகர போக்குவரத்தில் மூன்று மணி நேரங்களை எடுத்துக்கொள்ள, அலுவலகத்தில் இருக்கும் நேரம் நாளொன்றுக்கு ஒன்பது மணி நேரமாக இருந்தது.
இப்போது வீட்டிலிருந்தபடியால் அலுவலக நேரத்துடன் பிரயாணத்துக்குரிய நேரத்தையும் பல நாட்கள் அதையும் தாண்டி வேலை செய்ய வேண்டியிருந்தது.
லேப்டாப்பில் நேரம் மதியம் மூன்று மணி எனக் காட்டியது. உட்கார்ந்திருந்தபடியே திரும்பிப் பார்த்தான். அறையில் இன்னும் வெளிச்சம் வரவில்லை. இன்னும் பதினைந்து நிமிடத்தில் Conflict Management என்ற தலைப்பில் ஒரு பயிற்சி இருந்தது. அவனது அணியினருக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை எவ்வாறு களைவது என்பதைப் பற்றிய பயிற்சி அது. அதை யோசிக்கையில் வீட்டினுள் இருந்த கருத்தொற்றுமையைப் பற்றி அவனக்குச் சிரிப்பாக வந்தது. இப்போது ஒரு காப்பி குடித்தால் தேவலாம் என அவனுக்குத் தோன்றியது. வெளியே எட்டிப் பார்த்தான்.
ஹால் இன்னும் இருட்டாகத்தான் இருந்தது.
*
மொபலை நோண்டிக் கொண்டிருந்தவளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. நேரத்தைப் பார்த்தவளுக்கு மணி மூன்றரை ஆனது தெரியவர பரபரப்பு தொற்றிக் கொண்டது. சிங்க்கில் விழுந்திருந்த பாத்திரங்களைக் கழுவ வேண்டும், குழந்தையின் சாயங்கால சிற்றுணவு, குழந்தையை வெளியே அப்பார்ட்மெண்டில் இருக்கும் குழந்தைகளோடு விளையாடக் கூட்டிப் போவது என அவளுடைய மனது பரபரப்பானது. எழுந்து வெளியே வந்தவள் தனது அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தாள். அழைத்திருந்தது அவளது அம்மா.
*
லேப்டாப் திரையில் ட்ரைனர் எதையெதையோ விளக்கிக் கொண்டிருந்தார். அவனது மனம் இன்னும் காப்பி வராததில் இருந்தது. வெளியே வெளிச்சம் இல்லாமல் இருந்து.. ஏதோ பேச்சு சத்தம் குசுகுசுவெனக் கேட்டுக் கொண்டிருந்தது. அவள் அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்திருக்கலாம். லாக்டவுனுக்கு முன்னால் வரை அவனது அப்பா அம்மாவுடன் இருக்கும்போது பெரும்பாலும் தொலைபேசியை வெளியே எடுத்துக்கொண்டு தான் போய் பேசுவாள். அம்மா இருக்கும் வரை அவனது பாடு எளிமையிலும் எளிமையாக இருந்தது. எல்லாம் கையில் கிடைத்தது. கொரோனா முதல் லாக்டவுனுக்கு முன்னால் ஏதோ ஒரு உறவினர் வீட்டு விசேஷத்துக்கு ஊருக்குப் போனதுதான் அப்பாவும் அம்மாவும்.. பின்னர் திரும்பும் வழி தெரியவில்லை. இந்தப் பெருநகரத்தில் தொற்று பரவும் வேகத்தைப் பார்த்தவன் அவர்களை அப்படியே அங்கயே இருக்கச் சொல்லிவிட்டான்.
அவர்கள் போன புதிதில் எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. பால், பழம், கறி எல்லாம் வாங்கி வந்து கொடுக்க அவன் மட்டும் தினமும் வெளியே போய் வந்தான். தினமும் மூன்று பேருக்கும் மூன்று விதமான காய்கள் செய்ய வேண்டி இருந்தது. அவன் சாப்பிடும் காயை அவன் சாப்பிடுவது மாதிரி அவளுக்குச் சாப்பிடப் பிடிக்காது. அவள் அவளது முறையில் செய்யும் எதையும் பார்க்கவே அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு கேரட்டை துருவிப்போட்டு வதக்கி தேங்காய் சேர்த்துச் செய்ய வேண்டும். இப்படித்தான் ஒருமுறை, கேரட்டை துருவாமல் காரத்துக்கு பச்சை மிளகாய் தாளிக்காமல், வெறும் மிளகாய் பொடியைப் போட்டுச் செய்து வைத்திருந்தாள்.
அப்படியே தூக்கிக் கொட்டியதில்தான் சண்டைகள் ஆரம்பமானது.
“இவனை கவனிக்கவே நேரம் போதலை எனக்கு. உனக்கு பிடித்த மாதிரி பண்ணணும்னா நீதான் பண்ணிக்கணும்”
அப்படிச் சொன்னவளை அவனால் முறைத்துப் பார்க்கத்தான் முடிந்தது. குழந்தைகளை எந்த அளவுக்குக் கேடயமாய் உபயோகப்படுத்த முடிகிறது பெண்களால்!
*
ட்ரைனிங் முடிந்து ஹெட்போனை கழற்றி வைத்தான். சமையலறையில் பாத்திரம் உருளும் சத்தமும் அறையில் ஏதோ ஒரு பஜனைப் பாடல் ஓடும் சத்தமும் கேட்டது. அவளுக்குப் பிடிக்கும் ஆனால் அவனுக்குப் பிடிக்காதவைகளில் இன்னொன்று இது. திருமணத்துக்கு முன்பு பேசுகையில் பேச்சுவாக்கில்..
“உங்களுக்கு சங்கீதம் பிடிக்குமா?”
“கர்னாட்டிக் ம்யூசிக் கூட நிறையக் கேட்பேன்”
“நான் பாடுவேன்” என்றபடி உரையாடலை முடித்தவளிடம் காதல்.
அவனது கல்லூரியில் கேண்டினில் இலையில் கட்டித்தரும் சூடான தக்காளி சாதத்தின் பொட்டலத்தைப் பிரிக்கும்போது நாசியைத் தாக்கும் வாசனை மாதிரி மனது முழுமையும் நிறைந்திருந்தது.
ஆனால் இப்போது தினமும் ஒலிக்கும் இந்த பஜனைப் பாடல்கள் அவன் ஆன்மாவை அல்லலுறச் செய்கின்றன. முதல் லாக்டவுனில் வீடடைந்த பின்னர் காலை மாலை இரவு என எல்லா வேளைகளும் இதே பாடல்கள்தான்.
ஒருநாள் கேட்டான்.
“பஜனை பாடலுக்கும் கர்னாடக இசைக்கும் என்ன சம்பந்தம்?”
பதிலே சொல்லாமல் நகர்ந்தவள் நகர்ந்தவள்தான். இதில் மகனின் ராஜ்யமும் தொடங்கியது. பாதி நேரம் பஜனைப் பாடல்கள். மீதி நேரம் ரைம்ஸ்.
இந்த வன்முறைக்கு பயந்து அந்த அறையிலேயே ஒடுங்கி கிடந்தான்.
*
சமையலறையில் பாத்திரங்களை அலம்பி அடுக்கினவள், அடுத்ததாக குழந்தைக்குத் தர ஆப்பிளின் தோலை நறுக்கிவிட்டு அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி ஆப்பிளை வேகப் போட்டாள். அடுப்பில் தண்ணீர் கொதிக்கும் சத்தத்தைக் கேட்டபோது தான் அவனுக்கு இன்னும் காப்பி தராதது ஞாபகம் வந்தது. அடுப்பில் பாலை எடுத்துக் கொதிக்க வைத்தவளுக்குப் படுக்கையில் குழந்தை எழுந்து அழும் சத்தம் கேட்க, கொதிக்கும் பாலை மறந்துவிட்டு குழந்தையைப் பார்க்க ஓடினாள்.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என நினைத்தவன் எழுந்து வெளியே வந்தான். காலையில் கொடியில் உலர்த்தியிருந்த துணிகளை எடுத்து வந்து தரையில் போட்டிருந்தாள்.
“தோய்த்த துணிகளை சேரில் போட முடியாதா?”
பக்கத்திலேயே குழந்தையின் பொம்மைகளும் இறைந்து கிடக்க அறையைத் தாண்டி சமையலறைக்குள் போனால் ஒரு அடுப்பில் பாலும் இன்னொரு அடுப்பில் ஆப்பிளும் கொதித்துக் கொண்டிருக்க, பார்த்துக்கொண்டு அப்படியே நின்றான்.
*
குழந்தையைத் தூக்கிக்கொண்டு அறைக்கு வந்தவள் சமையலறையில் அவன் நின்றிருப்பதைப் பார்த்து அப்படியே சேரில் உட்கார்ந்தாள். சிறிது நேரத்தில் அவனே தனக்குக் காப்பி கலந்து கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆப்பிளைப் பார்க்க அவள் கிச்சனுக்குள் போனாள். வெந்திருந்த ஆப்பிளை மூடி வைத்திருந்தான். சிங்க்கில் மீந்திருந்த சில பாத்திரங்களைத் தேய்த்து கூடையில் அடுக்கி இருந்தான். சமையலறை மேடையில் சீவிப் போட்டிருந்த ஆப்பிள் தோளும் குப்பைக் கூடைக்குப் போயிருந்தன.
ஒரு நிமிடம் நின்று யோசித்து விட்டு அறைக்கு வந்தாள். எடுத்துப் போட்டிருந்த துணிகள் ஒருபுறம் கிடக்க மற்றொருபுறம் குழந்தை இறைத்து விட்டுப் போயிருந்த பொம்மைகள் கிடக்க, முணுமுணுப்பாய்..
“இதெல்லாம் சரிபண்ணி வச்சுட்டு போக முடியாதா!?”
*
காப்பி போட்டு வந்து குடித்துவிட்டு உட்கார்ந்த உடனே அடுத்தடுத்து அவனக்கு அழைப்புகள் வந்துகொண்டே இருந்தன. அழைப்புகளுக்கு பதிலளித்துக் கொண்டே ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தவன், வழக்கமாக அலைந்து கொண்டிருக்கும் பூனை அமர்ந்திருக்கிறதா என.. எதிரே இருந்த ஜன்னலைப் பார்த்தான் எப்போதும் அந்தப் பூனையை அவனது மேனேஜர் என நினைத்துக் கொள்வான். இன்றைக்கு வந்தமர்ந்த பூனை அவளை மாதிரி தோன்றியது ஒரு கணம்.
எழுந்து முன்னறைக்குப் போனான். சாயங்காலம் எடுத்துப் போட்டிருந்த துணிகள் அங்கேயே இருந்தன, பொம்மைகளும். அவன் வந்து செய்யட்டும் என விட்டுப்போனது மாதிரி தெரிந்தது. முணுமுணுப்பு அவளிடம் இருந்து இப்போது அவனிடம் தொற்றிக் கொண்டது. இந்த நேரத்தில் கத்தினால் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தை எழுந்து விடுவான் என நினைத்து சத்தம் வராமல் பிரிட்ஜை திறந்து அடுத்த நாளுக்கான காய்கறிகளை எடுத்து வெட்ட ஆரம்பித்தான்.
*
ஹாலில் ஏதோ சத்தம் கேட்க, வெளிச்சமும் தெரிந்தது. குழந்தையும் தூங்கியிருந்தான். எழுந்து வெளியே வந்து படுக்கையறை நிலைப்படியில் சாய்ந்து கொண்டு பார்த்தாள். அறையில் உட்கார்ந்து அவன் காய்களை வெட்டிக் கொண்டிருந்தான். தோய்த்துப் போட்டிருந்த துணிகளும் மடித்து அடுக்கப்பட்டிருந்தன. முகத்தில் தோன்றிய புன்முறுவலை அவனுக்குத் தெரியாமல் முன்னறையிலயே விட்டுவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள்.
*
அவள் வந்து போனது தெரிந்தாலும் நிமிர்ந்தே பார்க்காமல் அவனது வேலையை முடித்துவிட்டுப் போய் படுத்தான். தூக்கம் வராமல் போகவே மொபலை எடுத்து நோண்ட ஆரம்பிக்க, எதை எதையோ பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மத்தியம் சூப்பர் மார்க்கெட்டில் பார்த்த அந்தப் பெண் நினைவுக்கு வந்தாள்.
ஏனோ அந்த நேரத்தில் “கடைசியாக முத்தமிட்டது எப்போது” என ஒரு நினைப்பு வந்தது. வீடடைந்தே கிடக்கும் இந்த காலத்தில் வெறும் மோதல் மட்டுமே. படங்களில் மட்டும் காலத்துக்கும் காதல் செய்யும் ஜோடிகளை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. நிஜ வாழ்வில் சாத்தியமற்றவைகளே திரைப்படங்களாகின்றன என்று நினைத்துக் கொண்டான்.
மொபைலை பக்கத்தில் போட்டுவிட்டு படுத்தவனுக்கு ’எனது அறைக்கும் அவளிருந்த அறைக்கும் இருக்கும் தூரம் மகனின் வயது’ எனத் தோன்றியது.
தூக்கம் வராமல் போக மொபைலை மறுபடியும் எடுத்து சிறிது நேரம் ஃபேஸ்புக்கில் உலாத்திக் கொண்டிருந்தவனுக்கு மெசெஞ்சரில் அவளது பெயருக்கு பக்கத்தில் ஒளிரும் பச்சை வண்ணம் கண்ணுக்குத் தெரியவே..
ஒரு ரோஜாப்பூவையும் ஹார்ட்டினையும் தொடர்ந்து ஒரு முத்தத்தையும் அனுப்பியவன் வரப்போகும் பதிலுக்காக மொபைலயே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
***
இராமசாமி கண்ணன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர். சென்னையில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார். இணையத்தில் 2010-ல் இருந்து எழுதி வருகிறார். 2015-ல் அகநாழிகை பதிப்பகம் மூலம் ஒரு கவிதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இது இவருடைய முதல் சிறுகதை.
மின்னஞ்சல்: ramasamy.kannan@gmail.com