Sunday, November 17, 2024
Homeபுனைவுகவிதைநறுமுகை தேவி கவிதைகள்

நறுமுகை தேவி கவிதைகள்

1.

 

 

 

 

 

 

மாநகரும் 4ரூபாய் நாணயங்களும்

 
மாதக் கடைசி இன்னும் சம்பளம் ஆகவில்லை
அலுவலகம் சென்றேயாக வேண்டும்.
கையில் இருப்பதோ 4 ரூபாய் நாணயங்கள்
புறப்பட்டு வெளியே வருகையில்,
பிசுபிசுப்பாய் உணர்ந்தேன்.
அவசரமாய் நாப்கின் தேடுகையில்,
தீர்ந்து போயிருந்தது.
அவசரத்திற்கு பழைய துணியைத் தேடிக்
கிழித்தேன்.

லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில்,
நின்றிருந்த போது பழக்கமில்லாததால்
உள்ளே நழுவுவது போல சிக்கலாயிற்று.
எதிரேயும்
ஒரு வாலிபன் என்னை சைட் அடித்துக்
கொண்டிருந்ததைப் பொருட்படுத்தக் கூடவில்லை.

வந்த பேருந்தெல்லாம் தாழ்தள சொகுசுப் பேருந்துகள்.
4ரூபாய்க்கும் அதிகக் கட்டணம்,
சொகுசுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்.
வேண்டுமென்றே அவற்றைத் தவற விட்டேன்
அருகில் நின்றிருந்தவர்கள் விசித்திரமாகப் பார்க்கத் துவங்கினர்

உள்ளில் நழுவல் அதிகரித்ததை பீதியுடன் சமாளித்தேன்
அனத்தியபடி வந்து சேர்ந்த பேருந்தில் ஏறி விட்டேன்.
அத்திப்பாளையம் பிரிவுக்குப் பயணச்சீட்டு எடுத்துக்
கிடைத்த இருக்கையில் அமர்ந்தாயிற்று.
செல்ல வேண்டிய பாதையில் இருந்து
சின்னவேடம்பட்டிச் சாலையில் வண்டி திரும்பியது.
அதிர்ந்தேன்..நடத்துனரை அழைத்து
அத்திப்பாளையம் என்று பயணச்சீட்டெடுக்கையில்
அந்த வழியில் போகாதென
ஏன் சொல்லவில்லை? என்று சீறினேன்
அவரோ பேந்தப்பேந்த விழித்தார்
வண்டியில் இருந்து இறங்கி நின்றேன்

கையில் காசில்லை
உள்ளே வைத்திருந்த கந்தலோ
படக்கென கழன்று விழுந்தது
என் தன்னம்பிக்கையும் கூட…..

——————————————————————————————–
2.

 

 

 

 

 

 

 

திரும்புதல் இல்லாத ’திருப்புதல்

———————————————————-

உங்களுக்கும் எனக்குமிடையே தான் எத்துனை
திருப்புதல் தேர்வுகள்?
முதலாம் திருப்புதல் தேர்வில்,
எனக்குப் பாடங்கள் புரியவில்லை,
அடிக்கடி கதவோரமாய் நிறுத்தி
சோதனைகளுக்குட்படுத்தப்பட்டேன்.
இறுதியில்,
விசும்புதல்களுக்கு
மதிப்பெண் இல்லையென்று
நான் தோற்கடிக்கப்பட்டேன்.

இரண்டாம் திருப்புதல் தேர்வில்
உங்கள் பச்சை நிறப் பொத்தான்
கண்டுகொள்ளப்படாமல்
காயடிக்கப் பட்டதில்
நீங்களாக உங்களை என்னிடம்
ஒப்புக் கொடுத்தீர்கள்.

இது மூன்றாம் திருப்புதல் தேர்வு.
மறைக்கப்பட்ட பாடங்களில் இருந்தும்,
வழங்கப்படாத விடைகளிலிருந்தும்,
கேள்விகள் கேள்விகள் கேள்விகள்….
இப்போது என்னிடம்
கேள்வித் தாள்கள் மட்டுமே இருக்கின்றன.
விடைத் தாள்கள் வழங்கப்படவில்லை,
நீங்களோ எனக்கு மதிப்பெண் வழங்கிக்கொண்டே இருக்கிறீர்கள்.

கடைசியில்,
சிவப்பு நிற மையில் அடர்த்தியாய்
எழுதுகிறீர்கள் ”அனைத்துப் பாடங்களிலும் கவனம் தேவை” என்று….
இது திருப்புதல் தேர்வா?
திரும்புதல் தேர்வா?

நறுமுகை தேவி

RELATED ARTICLES

2 COMMENTS

  1. ஒரு நடுத்தர வர்க்கத்தின் அவல வாழ்க்கையை என்ன சொல்ல? எப்போதும் ஏதோ வொரு துன்பத்தைச் சுமந்துகொண்டேயிருக்கிறது சம்பளவர்க்கம். அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் நறுமுகை. இன்னும் கொஞ்சம் கவித்துவம் ஏற்றியிருக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular