கஞ்சிப் பாடல்-01
மாட்டு வண்டியைக் கொத்தி
விறகாக்கிய ஓர் ஊரிலே
அரிசியிருந்தது; நெல்லிருந்தது
அன்னமிருக்கவில்லை
மலத்துக்கும் பிணத்துக்கும்
விலகிநடந்தவொரு நெய்தல் நிலத்திலே
கடலிருந்தது படகிருந்தது
மீனிருக்கவில்லை
ஆலமிலை பாலையிலை பனையோலை தவிர
பச்சையாக இருந்த எல்லாவற்றையும்
சமைத்த ஒரூரிலே
கஞ்சி இருந்தது; வாய்ப்பன் இருந்தது
பசி இருக்கவில்சலை
நீரிலே தொடங்கி
ஒரு நீரேரியில் முடிந்த ஒரு போரிலே
கடைசி மூன்று நாட்களும்
நீர் இருக்கவில்லை
தாகமிருந்தது
***
நோவாவின் பேழை
ஊழிக் கடற்கரையில்
நோவா
தன்பேழையைஇணக்கினான்
ஒரு பிரளயத்தைப் பற்றிய துர்க்குறிகளால்
அவனிதயம் பாரமாக இருந்தது
அவனுக்கு காட்டப்பட்டது
மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டது
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான
இறுதி உடன்படிக்கையும்
காலாவதியானது
யுத்தத்தின் நாய்கள்
ஒரு சமூகத்தின் மனச்சாட்சியைக்
கடித்துக் குதறின
யுத்தப் பிரபுக்கு பிள்ளைக்கறி கேட்டது
சிலுவையில் அறையப்பட்ட
மனித குமாரனுக்கு
தாகமாய் இருந்தது
பாலற்ற உப்பற்ற கஞ்சியை
பருகக் கொடுத்தான் ஒருவன்
சரணடைந்த பெண்ணின் சீருடையை
உரிந்தான்இன்னொருவன்
எறிகணைக் கருக்கில்
கிழிந்தது
காலம்
கடலில்மலமாகமிதந்தது
கனவு
நோவா
சப்தரிஷிகளையும் ஏற்றிக்கொண்டு
தன் பேழையை
பாற்கடலில் செலுத்தினான்
—–
1 -நோவா- பைபிளில் வரும் ஒரு பாத்திரம். இறைவனுக்கு விருப்பமானவன். இறைவனால் தேர்ந்தெடுக்கபட்டவன் ஒரு யுக முடிவில்அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் இறைவன் தப்பிச்செல்ல அனுமதிக்கிறார். அதற்காக ஒரு மரப்பேழையை இணக்கச் சொல்கிறார். பிரளய நாளில் நோவா தெரிந்தெடுக்கபட்ட மனிதர்கள் மற்றும் ஜீவராசிகளோடு தன் மரப்பேழையில் தப்புகிறான். பிரளயத்தின் முடிவில் ஒரு புதிய யுகத்தின் முதலாவது வானவில் தோன்றுகிறது. அது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான முதலாவது உடன்படிக்கையாகவும் இருந்தது.
2- இந்து சமயப்புராண நம்பிக்கைகளின் படி ஒரு யுக முடிவில் மகா விஷ்ணு கூர்ம அவதாரமெடுத்து ஒரு படகில் சப்தரிஷிகளைப் பத்திரமாகத் தப்ப வைக்கிறார். ஒரு புதிய யுகத்துக்காக. நோவாவும் சப்தரிஷிகளும் யுக முடிவின் கரையில் படகேறி மற்றோடு புதிய யுகத்தில் கரையேறுகிறார்கள்.