1. கள்ளினும் காமம் இனிது
புங்கை அளித்த நிழல் சுவை
நித்திரையை தருவித்தது.
மீன்கள் கால்களை மொய்க்க
விழித்தவன் விக்கித்தான்
தவளையால் விழுங்கப்பட்டிருப்பதை அறிந்து.
நீர் சூழ்ந்த பாறையில் அமர்ந்திருந்தவள்
அறிவேன் வருவாயென
நீர் தெளித்து விளையாடினாள்.
ஆடை கலப்பற்ற உடலாகி
மீன்களோடு மீன்களானோம்.
வெட்கத்தில் சூரியன்
தன்னை ஒளித்துக்கொண்டது.
2. காமன் ஈந்த கனி
தான் விரும்புபவள்
தன்னையே விரும்புகிறாள்
அறிந்த கணத்தில்
அவன் அவனற்றவனாகி
தடையற்று சுவையை சுகித்திருக்க
இருவருக்குமாக
விதையில்லாக் கனி ஈந்த
காமனை மனம் துதித்து
காற்றில் நடனமிட்டான்
பூக்களின் மகரந்தமாகி.
வானுக்கும் பூமிக்கும்
மகிழ்வை விரிக்க மழையானான்.
தடுப்பில்லாது கொண்டாட
மீனாகி நீந்தித் திரிந்தான்.
கொண்டாட்டம் போதாமையோடிருக்க
பறவையாகி மிதந்தலைகிறான்.
3. கனவினான் உண்டாகும் காமம்
சிலையின் கண் திறக்கும் தச்சனாகி
சிறுக சிறுக செய்து முடித்தேன்
அழகிய கூடொன்றை.
வந்துபோக தோதான
இடம் கண்டு சூடினேன்.
பசியாற்ற வைக்கப்பட்ட
நீரோடும் உணவோடும்
தாய்மையை விட்டு வந்தேன்.
மறுநாளின் விடியலில்
ஆர்வம்கொண்டு மேகமானேன்
மழையற்று போனது
எக்குருவியும் இரை தீண்டாதிருக்க.
அடுத்தடுத்த நாட்களிலும்
அதே நிலை.
வானத்தை தோழனாக்கி
நம்பிக்கையை விதைத்து வந்தேன்.
குருவி கூடடையும் நாள்
கனவில் தினம் தோன்றி
உயிரை ஊட்டிக்கொண்டிருப்பவள்
நனவில் என்னுள் அடைவாள்.
4. மாயும் என் மாயா உயிர்
இருந்தேன் கடலாக
அவனை கண்ட நாளில்
அலையாக மாற்றம் கொண்டேன்
நம்பிக்கையூட்டும் காலையும்
ஏமாற்றமளிக்கும் மாலையும்
வந்தபடியேதான் இருக்கின்றன
வரவேண்டியவனை வரவழைக்காது
என் துயர்களை விதைகளாக்கியிருப்பின்
பெற்றிருக்கும் இவ்வூர்
பெரும் வனம் ஒன்றை
பறவையாகி மிதந்தலைகிறது
என்னுள் திரண்ட காமம்
சொல்லித் தொலையடி தோழி
கல்லிலிருந்து கயிற்றை
திரித்து வரச் சென்றானோ.
5. குடை
வானம் சிந்தத் துவங்கியது.
சட்டைப் பையின் கவிதையிலிருந்து
வெளியேறிய குடையால்
எரிச்சலடைந்தவன்
மடக்கி எறிந்தான்.
துளிகள் மீண்டும்
உடலுள் பூத்துக் கொண்டிருக்க
கவிதையின் இறுதி
வரியிலிருந்த பெண்
துப்பட்டாவை விரித்தாள்.
பிணைந்த வெப்பம்
ஈரத்தை உலர்த்திக் கொண்டிருந்தது.
***