பிறந்துவிட்டதால் மட்டுமே ஒரு நிலம் எனக்கானதாகிவிடுமா என்ன? அல்லது என்னைப்போன்றே சூழல் காரணமாக சென்னையில் வசிக்கும் எண்ணற்ற மக்களுக்கு எதுதான் நிலம் ஆகும்? காயல்பட்டினத்தின் அரசு மருத்துவமனையில் இன்றும் வேரூன்றி நிற்கும் ஆலமரத்தின் பாழும் வேரொன்றில் சர்வ நிச்சயமாக என்முதல் அழுகுரல் பதிவாகியிருக்கும். இந்த உலகத்தால் பெரிதாக வரவேற்கத்தயங்கியும் என் அன்னையின் பிடிவாதத்தாலும் நம்பிக்கையாலும் கிடைத்த பிறப்பு இது.
மூர்க்கத்தனமாக என் மண்ணை நான் முகர்ந்திருக்கிறேன் (அது சுவையான கதை ). மணலோடும் புழுதியோடும் விளையாடிய தலைமுறையில் இருந்திருக்கிறேன். மழைத்துளிர்த்த மண்ணை அள்ளித்தின்றுருக்கிறேன். பெயர்ந்த பானையோடுகளின் ருசி எந்த உணவிலும் இனம்காண இயலாதது. பால்யத்தின் முதல் படிப்பினையாக காலம் பிரிவைக்கற்றுத்தந்தது. பிரிவென்றால் எதுவும், யாரும் நிரந்தரமில்லை என்ற மந்திரத்தோடுக்கூடிய பிரிவு அது. சிறகு முளைக்காத பறவையின் தலையில் வைத்த பனங்காயைப்பொன்ற பாரத்தோடு வாழ்வு சென்னைக்குத் தாவியது. எந்த நிலம் என் மனதைப் பாறாங்கல்லாகக் கனக்கச்செய்ததோ அதையே உயரளவு நேசிப்பேனென நினைத்துப் பார்க்காத பருவம். நியாயமாக நான் சென்னையைப் பற்றித்தான் எழுதியிருக்க வேண்டும் ஆனால் நான் பிறந்ததுமான காயலைப்பற்றி பகிர்கிறேன்.
பூந்தளிர், இரத்தினமாலா, அம்புலிமாமா, சிறுவர்மலரில் தொடங்கிய வாசிப்பு. வெகு இயல்பாக ஆராய்ச்சிக்கட்டுரைகளில் கவனத்தைச் செலுத்த இந்த சமூகத்தின்மீது எனக்கிருந்த கேள்விகளே காரணமாக இருந்தது. கேள்விகளை என்னிலிருந்தே தொடங்கினேன். நான் யார்? இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறேன்? பிறகு எங்கே போகப்போகிறேன்? யாருக்கான வாழ்வு யாருக்கான பாதை இது? தோண்டத் தோண்டத் தீராக்கேள்விகள். கிணறு வெட்டக் கிளம்பிய பூதம் இன்னமும் என் பிடரியை விட்டு இரங்கியபாடில்லை.
காயல்பட்டின வாழ்வியல் பெரும்பாலும் மற்ற தளங்களின் வாழ்வியலிலிருந்து வேறுபட்டது. இஸ்லாமியக் கொள்கையைப்பின்பற்றும் மற்ற தென்மாவட்டங்களுக்கும் காயல்பட்டினத்திற்குமிடையே திருமணம், தொழில், கல்வி சார்ந்த பழக்கங்கள் வேறுபாடானதுதான். என் சிறுபிராயத்தில் காயலை ஒரு தனித்தீவென்றே கருதும் அளவிற்கு உணவு, வீடுகள், சாலைகளின் அமைப்பு, வட்டார மொழி இப்படி எல்லாவற்றிலும் காயலர்களுக்கு ஒரு தனித்துவம் இருக்கும். திரையரங்குகள், காவல் நிலையம் இல்லாத ஊரில் மாநகராட்சிகளுக்கு சற்றும் சளைத்திடாத பெண்களின் வாழ்வு, கல்வி, சுதந்திரத்தைக் கண்டு வியந்திருக்கிறேன்.
இரசாயணக்கழிவுகளால் ஆண்டு தோறும் அதிகரிக்கும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கையும் ஆரோக்கியக் குறைபாடும் சூழ்ந்திருக்கும் காயலுக்காக மட்டுமே குரல் கொடுப்பதை விடவும் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் இயற்கை வளங்களைச் செல்லரித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவ ஆதிக்க ஆக்கிரமிப்புக்காக கொடுக்கப்படும் குரலாக எனது எழுத்துக்கள் பயன்பட வேண்டுமென்பதிலும் கவனம் செலுத்துகிறேன். காயல்பட்டினம் பாண்டியர்களின் ஆட்சிக்காலத்தில் துறைமுகமாக இருந்தது. பாண்டியர்களின் அரசவைப்புலவராக எங்கள் முப்பாட்டர் வரகவி காசிம்புலவர் இருந்தார். சரித்திரத்தின் மிக முக்கிய இடத்தைப்பெற்றுள்ள மண்ணில் பிறந்ததால் தமிழுக்கும் கவிதைக்கும் எனக்குமான உறவு விரிவுரைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது.
நம்மைச்சுற்றிலும் நடக்கும் அரசியலுக்கு இன்றைய சூழலில் பன்முக அவதாரம். ஓரிரவில் வெற்றுக்காகிதங்களாகிய ரூபாய் நோட்டுக்களைப் போல நிரந்தரமற்ற சூழலில் ”நழிஜத்” என்னும் பெயரில் உண்டு, கேட்டு, கண்டு, உறங்கும் வாழ்வை மட்டுமே வாழ நான் தயாராகவில்லை. ”பாலைவன லாந்தர்” எழுதிவிட்டால் மட்டும் இவையெல்லாம் மாறிவிடுமா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை தான். ஆனால் எண்ணற்ற லாந்தர்கள் இணையும் ஒரு புள்ளியில் விடிவுக்கான மைக்ரோ ஒளித்தோன்றினாலும் எனக்குத் திருப்தி கிடைத்துவிடும்.
பொதுவாக இஸ்லாமிய வாழ்வியலைக் கதைகளாக எழுதினாலும் திரைப்படமாக எடுத்தாலும் முழு முற்றிலுமாக உள்ளடுக்குகளைக் காட்டிவிட முடியாது. கருப்பு வெள்ளைக் காலந்தொட்டு இஸ்லாமியப் பெண்கள் என்றாலே புருவங்களை கறுப்பு மையால் சேர்த்துவிடுவதைப் பார்க்கும் போது சிரிப்பு வரும். பள்ளிக்காலத்தில் வடமாநில ஹிந்தி நண்பர் தெளிவாகத் தமிழ் பேசியதை ஆச்சரியமாகப்பார்த்து கேட்டேன் “ நீங்கள் ஹெய்ன் ஹெய்ன் என்று சொல்லவில்லையே” அவரும் சிரித்தபடியே “எல்லாம் சினிமாக்காரங்க செய்தது மற்றபடி நாங்கள் நிலாவே தமிழ் பேசுவோம்” என்றார். யாரோ ஒருசிலரின் தவறானப்புரிதலை “போலச்செய்யும்” மற்றவர்களும் பின்பற்றியதால் வந்த பிழைகள் இவை.
இலக்கியத்தில் மிகமுக்கிய எழுத்தாளரான ”இஸ்மத் சுக்தாய்” அவர்களின் கதைகளை வாசித்துவிட்டு இஸ்லாத்தில் அனைத்து பெண்களின் நிலையும் அவ்வாறுதான் இருக்குமெனப் பிறர் தீர்மானிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது. ஆயிரத்துத் தொள்ளாயிரங்களில் குடும்பங்களின் முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்புகளை வீட்டின் மூத்த பெண் உறுப்பினர்கள் எடுத்த வரலாற்றை நாம் அறியவேண்டும். சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் ஆபரணங்களைக் கழற்றிக்கொடுத்த பெண்களும், கலந்துகொண்ட பெண்களும் ஏராளம்.
வைக்கம் பஷீரின் நிலமும் தாமிராவின் நிலமும் அர்ஷியாவின் நிலமும் என் நிலமும் ஒன்றையொன்று தொடர்போடிருக்கும் வெவ்வேறு நிலங்கள். அரசியல் சுயலாபங்களுக்காகவும் சிறுபான்மை இனத்தின் மீதான வெறுப்பினாலும் இஸ்லாமிய பெண்களின் ஆடைகுறித்து கல்வியறிவைக்குறித்தும் தொடர்ந்து வைக்கப்படும் தெளிவற்ற விமர்சனங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறேன் காலம் அனுமதித்தால் இன்னமும் விரிவாக நிச்சயமாக எழுதுவேன்.
– பாலைவன லாந்தர், பிறப்பு காயல்பட்டினத்தில், வளர்ந்தது சென்னையில். கவிஞர், ஆவணப்பட இயக்குனர், எழுத்தாளர் என பல முகங்கள் உண்டு. இதுவரை மூன்று கவிதைத் தொகுதிகள் வெளியாகியுள்ளன. நான்காவது கவிதைத் தொகுதியும் இவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இந்த ஆண்டு வெளிவர இருக்கின்றன. தொடர்புக்கு palaivanam999@gmail.com