அருண்.மோ
மாலைக்கருக்கல் அலையலையாய் உடலைத் தழுவிச் செல்லும் மென்காற்று, மெல்லிய சாரல், ஒரு ரயில் நிலையத்தில் நுழைய இதைவிட வேறென்ன பெரிய காலநிலை வேண்டும். ஊரின் பெரிய, அழகிய ரயில் நிலையம் அது. சிதிலமடைந்த மஞ்சள் போலொரு நிறத்தில் இருந்த காரை பெயர்ந்த அந்த சுவற்றில் ஒரு காகம் நீண்ட நேரமாக உட்கார்ந்திருந்தது. அதன் அலகில் பழுப்பு நிறத்திலொரு பூச்சு. தலையைத் திருப்பி, இடதும் வலதும் பார்த்து மெதுவாக தலையைத் தாழ்த்தி, அதன் அலகை சுவற்றின் விளிம்பில் தேய்த்தது. சட்டென பறந்து தண்டவாளத்தில் தேங்கியிருந்த நீரில் அலகை இருத்தி கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தது. அதன் தலை அசையும் அசைவில் அது சுற்றுப்புறத்தை உற்றுநோக்குகிறதா அல்லது உதவிக்கு யாரையும் அழைக்கிறதா என்பது அங்கிருந்த மனிதர்களுக்கு விளங்கவில்லை. ஆனால் இரண்டு காகங்கள் அதன் அருகே வந்தமர்ந்தது. வலதுபக்கம் இருந்த காக்கா பெருங்குரல் எடுத்து கத்த, இடதுபக்கம் இருந்த காகம், அதன் அலகால் பழுப்பு நிற அலகு கொண்ட காகத்தின் அலகைக் கொத்தியது. பழுப்பு நிறம் அகன்றபாடில்லை. இன்னொருபக்கம் மாடப்புறாக்கள் பிளாட்ஃபார்மில் அமர்ந்து க்குரு.. க்கரு என்று சப்தமிட்டது. இரண்டு மாடப்புறாக்கள் காதல் கீதம் பாடிக்கொண்டிருந்தது. ஆண் புறாவின் அலகு பெண் புறாவின் அலகோடு இணைந்து, அதன் உடல் இரண்டும் சேர்வதும், பிரிவதுமாக இருந்தது. காகம் இன்னமும், பழுப்பு நிறம் கொண்ட அதன் அலகை தண்டவாள விளிம்பில் உரசிக் கொண்டிருந்தது. பச்சைக்கிளிகள் றெக்கைகளை விரித்து கூட்டமாக அந்திவானத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. குயில்களின் ஓசை ரீங்காரமாக மாறி மாறி ஒலித்தது. பறவைகள் சிறகை மடித்து தரையில் உட்கார்வதும், சிறகை விரித்து வானை நோக்கி பறப்பதுமாக இருந்தது. செந்நிற பூக்கள் தரையிலும் தண்டவாளத்தில் விழுந்து அந்த இடத்தையே அழகுபடுத்திக் கொண்டிருந்தது. செந்நிற பூக்களைக் கொண்ட மரம் அங்கே ஒன்று கூட இல்லை. ஆனாலும் பூக்கள் கீழே கொட்டிக்கிடந்தது. ரயில் நிலையமே ஏதோ ஒரு பாதுகாக்கப்பட்ட காடு போல மாறியிருந்தது.
ரயில் நிலையத்தில் இருந்த காவலர் ஒருவர், ‘இந்த மாதிரியெல்லாம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சுல்ல,, எவ்ளோ ரம்யமா இருக்கு பாரு, மனுசப்பயலுங்க ரொம்ப மோசம், மொத்தமா இயற்கையை அழிக்க பாத்தானுக, ஆனா என்ன நடந்தது பாத்தியா, ஒரு பயலும் வீட்டை விட்டு வெளியில வர முடியாம தவிக்கிறானுங்க, ஆனால் காக்கா குருவி, எல்லாம் இந்த நகரத்தையே ஏதோ காடு மாதிரில்ல மாத்திடுச்சு’, என்று சாரலோடு கூடிய அந்த மாலைப்பொழுதில் ஏகாந்தத்தை அனுபவித்துக் கொண்டே அருகில் இருந்த இன்னொரு காவலரிடம் சூழலை வர்ணித்துக் கொண்டிருந்தார். ரயில் நிலையத்தின் கடைசி பெஞ்சில் இருந்து, சிறு புள்ளியை போல அசைந்து ஒரு உருவம் முன்னோக்கி வந்துகொண்டிருந்தது. ஆங்காங்கே காதல் கீதம் பாடிக்கொண்டிருந்த புறாக்கள் சட்டென பறந்ததில் சடசடவென ஓசை எழுந்தன. சிறு புள்ளி ஒன்று கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மனித உருவமாகத் தெரிய ஆரம்பித்தது. காவலர்கள் இருவரும் அந்த மனித உருவத்தை நோக்கி நகர்ந்தார்கள்.
‘ஏய் இந்தாம்மா, நில்லு எங்க போற’
‘ஹ்ம்ம், டீ விக்கத்தான்’
‘டீ, விக்கவா, அறிவிருக்கா உனக்கு, யாரும் வீட்ல இருந்து வெளிய வரக்கூடாதுன்னு அரசாங்கம் சட்டம் போட்டிருக்குல்ல, உடனே இந்த இடத்தை விட்டு கிளம்பு, இல்லன்னா உன் மேல கேசு போட்டு ஜெயில்ல போட்டுடுவாங்க’
‘அட என்ன சார், எப்ப பார்த்தாலும் இதையே சொல்லிக்கிட்டு இருக்கீங்க, எத்தனை நாளுக்குத்தான் நாங்களும் வீட்டுக்குள்ளேயே இருக்கிறது, ஒரு நாளைக்கு நூறு இருநூறு ரூபாய்க்கு டீ வித்தாதான், எங்க புள்ளக்குட்டிங்க கஞ்சி குடிக்க முடியும், வீட்டுக்குள்ளேயே இரு வீட்டுக்குள்ளையே இருன்னு சொன்னா மட்டும் போதுமா, எங்க வயித்துப்பாட்டுக்கு யார் பொறுப்பு’
‘அய்யய்யோ இது என்ன வம்பா போச்சு, ஏம்மா.. அதெல்லாம் இங்க பேசாத, மொதல்ல வாய குறை, வீட்டை விட்டு வெளியில வரணும்னா இ பாஸ் வாங்கிட்டுதான் வரணும், மொதல்ல கிளம்பு இங்க இருந்து, போறதுக்கு முன்னாடி ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒரு கப் ல டீ கொடுத்துட்டு போ’,
அமைதியாக நின்று அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த பெண்மணி,
‘என்னம்மா, ரெண்டு டீ கொடுக்க சொன்னேன் ல’,
‘அது இல்ல, காசு’ என தயங்கித் தயங்கிக் கேட்டாள்.
‘நீ இ பாஸ் இல்லாம வீட்ட விட்டு வெளிய வந்ததுக்கே உனக்கு நூறு ரூபாய் அபராதம் போடணும், ஒழுங்கா ரெண்டு டீ கொடுத்துட்டு வீடு போய் சேர்’
‘அய்யய்யோ கொடுத்துட்றேன் ஏட்டய்யா, கோபத்துல ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் அடிச்சி கொன்னு போடாதீங்க’, என்று சொல்லிவிட்டு, காலியான இரண்டு டீ கப்களை எடுத்து கொடுத்தாள். இரண்டு காவலர்களும் அவளது முகத்தை வெறித்துப் பார்க்கவே, அவள் சிரிக்கத் தொடங்கினாள்.
அவளை பார்த்துக் கொண்டே இன்னொரு காவலர், ‘என்ன திமிர் பாத்தியா இவளுக்கு’, என்று சத்தம் போட்டுக்கொண்டே லத்தியால் அவள் கொண்டு வந்த டீ கேனை தட்டிவிட்டார். கீழே விழுந்த அந்த பாத்திரத்தில் ஒன்றுமே இல்லாமல் காலியாக இருந்தது. காவலர்கள் அவளை திரும்பிப் பார்த்தனர், வயிற்றுக்கும், நெஞ்சாங்கூட்டிற்கும் இடையே இருந்து எழுந்த பெரும் சப்தம் ஒன்று அவள் சிரிப்பொலி போல கேட்டுக்கொண்டே இருந்தது. இரண்டு கைகளையும் அவர்களை நோக்கி ஒழுங்கு காட்டி சிரிப்பது போல் சிரித்துக்கொண்டே இருந்தாள். காவலர் ஒருவர், அவளை நோக்கி லத்தியை ஓங்கினார். அதற்குள் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்யும் பெரியவர் ஒருவர் தள்ளுவண்டியோடு வந்து கொண்டிருந்தார்.
‘யோவ் இதென்னய்யா வம்பா இருக்கு, யோவ் பெரியவரே, எதுக்கு இப்ப இங்க வர, இங்கல்லாம் வரக்கூடாது, உடனே கிளம்பு’
‘ஐயா என்கிட்டே இ பாஸ் இருக்குதுங்கய்யா’
‘என்னய்யா சொல்ற, எங்க கொண்டா பார்க்கலாம்’, பெரியவரிடம் இருந்த காகிதத்தை காவலர் வாங்கிப்பார்த்துக் கொண்டிருக்கும்போதே ரயில் நிலையத்தில் இன்னும் பலர் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.
காவலர்கள் இருவரும் மேலதிகாரிக்கு அழைப்பு விடுத்தனர். பறவைகள் எல்லாம் அலறியடித்து பறந்தன. பழுப்பு நிற அலகு கொண்ட காகம் மட்டும் மஞ்சள் நிறம் போலிருந்த சுவற்றின் விளிம்பில் உட்கார்ந்திருந்தது.
மேலதிகாரி இன்னும் நான்கைந்து பேருடன் உற்சவர் உலா வருவது போல் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தார். ரயில் நிலையம் முழுக்க, டீ விற்போர், தள்ளு வண்டியில் உணவு விற்போர் போல் இன்னும் பல அன்றாடங்காய்ச்சிகளுமாக பெருங்கூட்டம் கூடியிருந்தது. எல்லார் கைகளிலும் இ-பாஸ் என்கிற காகிதம் இருந்தது. அதிகாரி ஒவ்வொருவரின் கையிலும் இருந்த காகிதத்தை வாங்கிப் பார்த்தார். அதற்குள் தூரத்தில் ஒரு ரயில் வேகமாக வந்து கொண்டிருந்தது. அதிகாரி நிலைகொள்ளாமல், ரயிலையே வெறித்துப் பார்த்தார், ரயில் நிலையத்தை மூடி நாலு மாசம் ஆச்சு, ரயில் எல்லாம் ஓடுறது இல்ல, திடீர்னு எப்படி ஒரு ரயில் வருது, எந்த அறிவிப்பும் இல்லாமல் ரயில் வேகமாக வருவதைப் பார்த்து அதிகாரி விக்கித்து நின்றார். ரயில் வேகம் குறையாமல் ஸ்டேஷனை நெருங்கியது. அதிகாரி கையில் இருந்த காகிதங்களை படிக்க ஆரம்பித்தார். ரயிலில் பாய்ந்து சாவதற்கான இ-பாஸ் என்று பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திடுக்கிட்ட அதிகாரி, நிமிர்ந்து பார்ப்பதற்குள்ளாக டீ விற்க வந்த பெண்மணி ரயிலின் முன்னே பாய்ந்தார். விடாமல் கேட்டுக்கொண்டிருந்த சிரிப்பொலி சட்டென நின்றது. ச்சக் ச்சக் என்று சப்தம் கேட்டது. நசுங்கிய உடலில் இருந்து ரத்தம் பீய்ச்சியடித்தது. அதிகாரியின் கையில் இருந்த காகிதத்தில் பட்டு, அவரது முகத்தில் தெறித்தது அவளது ரத்தம். என்ன நடக்கிறது என்று அதிகாரியும், காவலர்களும் சுதாரிப்பதற்குள் ஒவ்வொருவராக ரயிலின் முன்னே பாய்ந்தனர். பழுப்பு நிற அலகைக் கொண்ட காக்கையின் மீது தற்கொலை செய்துகொண்ட எல்லாருடைய ரத்தமும் தெறிக்கவே, காக்கையின் அலகில் இருந்த பழுப்பு நிறம் மாறி இப்போது காகம் மொத்தமாக சிகப்பாக மாறியது. மொத்த மனித ரத்தத்தையும் குடித்தது போல் பருத்த அந்த காகம் சிறு குன்று போல் பெருத்தது. ஹெலிகாப்டர் ஒன்றின் றெக்கை போல் காக்கையின் சிறகுகள் கனத்திருந்தன. மெதுவாக சிறகை விரித்து பறக்க ஆரம்பித்தது அந்த காகம், எழுந்த பெரும் சப்தத்தில் நகரமே அதிர்ந்தது.
தூக்கத்தில் இருந்து அலறியடித்து எழுந்தான் ரியாஸ். மேல் மூச்சு வாங்க, உடல் முழுக்க வியர்த்திருந்தது. அவன் கண்கள் இமைக்கவே மறந்திருந்தன. மங்கிய இரவின் முற்சாம நேரமது, அவன் அருகில் இருந்த பெரியவர், ‘என்ன தம்பி, ஏதாவது கெட்டக்கனவு கண்டியா; என்றார். ‘நீ கொடுத்து வச்சவன் தம்பி, தூங்கறது நடுரோட்ல, அவன் அவன் வீடு போய் சேர்வோமானு தெரியாம, தூக்கமே வராம ராக்கோழி மாதிரி முழிச்சிட்டு கெடக்கான், நீ கனா காண்ற அளவுக்கு தூங்கியிருக்க, நல்லது’ என்று சொல்லிவிட்டு குடிக்க கொஞ்சமாக தண்ணீர் கொடுத்தார்.
சூரியன் வானில் இருந்து பூமியை எட்டிப்பார்க்க இன்னும் சில நிமிடங்கள் இருக்கிறது. வானில் மேகங்கள் திட்டு திட்டாக விரவிக்கிடந்தன. சப்தமிடாத பறவைகள் வானில் கூட்டம் கூட்டமாக பறக்கத் தொடங்கின. பின்னர் அவற்றை தொடர்ந்து சப்தமிடும் பறவைகள் ஜோடிகளாக, கூட்டமாக எல்லா திசையை நோக்கியும் பறக்கத் தொடங்கின. ரியாஸ் எழுந்து இருந்த கொஞ்சம் நீரில் வாயை கொப்பளித்துவிட்டு விரல்களால் பற்களை தேய்த்து, தண்டவாளத்தில் காறித்துப்பினான். அருகே பெரியவரும் அவரது குடும்பமும் குத்துக்காலிட்டு கூட்டாக அமர்ந்து வானில் பறக்கும் பறவைகளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ரியாஸ் அவர்கள் அருகே வந்தமர்ந்தான்.
‘என்ன தம்பி, நேத்து ராவைக்கி என்ன கனா கண்டீரோ’,
‘அட ஒன்னும் இல்லைங்க, கொஞ்சமா நெனப்புல இருக்கு, ஆனா நிறைய மறந்துபோச்சு, நெனப்புல இருக்கிறது வரைக்கும் யோசிச்சி பார்த்தா, அது கெட்டக்கனா தான். அதுவும் இந்த மாதிரி எடத்துல அத பத்தி பேச வேண்டாம், விடுங்க’ என்று சொல்லிவிட்டு கனத்திருந்த ஒரு பையை முதுகிலும், லேசான ஒரு பையை கையிலும் பிடித்துக்கொண்டு நடக்க ஆயத்தமானான். பெரியவர் அப்படியே வானத்தை பார்த்துக்கொண்டு ‘பறவை போல் பறக்கும் சக்தி எனக்கிருந்தால் என் மொத்த குடும்பத்தையும் றெக்கைகளில் சுமந்து கொண்டு பறப்பேன்’ என்று சொல்லிக் கொண்டே தன் பேத்தியின் தலையைக் கோதினார்.
‘தம்பி, இன்னும் ஒரு ஐநூறு கிலோ மீட்டர் இருக்குமா உன் ஊருக்கு போய் சேர’,
‘தெரியல தாத்தா, தோ, நமக்கு முன்னாடிதான் இவ்ளோ ஆயிரம் பேர் போறாங்களே, அதுல யாராவது என் ஊருக்கு போற வழியிலதான் நிச்சயம் போவாங்க’,
பெரியவர் முன்னாடி நின்று கொண்டிருந்த ரியாஸிடம் கண்களை அகற்றி, சற்றே உடலை சாய்த்து முன்னாடி நடந்து சென்று கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தார். தண்டவாளத்தில் கிடக்கும் கற்களை விட அங்கே விரவிக்கிடந்த மனிதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. குழந்தைகளை தலையில் சுமந்தும், சிறுவர்களை கைகளில் ஏந்தியும், பெரியவர்கள் சூதானமாகவும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள். பறந்து விரிந்த பரப்பில் எங்கு காணினும் மனிதக்கூட்டம் தான். ஒரு பக்கம் தண்டவாளம், இன்னொரு பக்கம் அடர்காடு, கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடுகள் இல்லை, மனிதர்கள் வாழாத இந்த பகுதியை பெரும் மனித கூட்டம் ஒன்று கடந்தாக வேண்டும். இருபது நாட்களைத் தாண்டியும் அவர்களது பாதங்கள் பூமியை அளந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் வீடு வந்து சேர்ந்த பாடில்லை. சிலரது வீடுகள் நூறு கிலோ மீட்டரில், சிலரது வீடுகள் ஐநூறு கிலோ மீட்டரில், சிலரது வீடுகள் இரண்டாயிரம் கிலோ மீட்டரில், இன்னும் சிலரின் வீடுகள் எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர்கள் கழித்து வரும் என்பதே தெரியாமல் அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். கையில் காசில்லை, காசிருந்தாலும் உண்ண உணவில்லை. தண்டவாளத்தை ஒட்டியும், காடுகளைக் கடந்தும், மணல்பரப்புகளை தாண்டியும், மலைகளை பார்த்தவாறும், மழையில் நனைந்தும் நடக்கும் இந்த நடை பயணம் அவர்கள் வாழ்வில் இதுவரை கண்டிராதது. இடை இடையே இஸ்லாமியர்களும், தொண்டு நிறுவனங்களும் அவர்களால் இயன்ற அளவுக்கு உணவுகளை வழங்குவார்கள். ஆனாலும் பெரும்பாலான நேரம் பசியோடு, கூடடைந்துவிட மாட்டோமா என்கிற ஏக்கத்தில் அவர்களின் பயணம் தொடர்ந்தது.
‘சரி தாத்தா, நான் கிளம்புறேன்’ என்று சொல்லிவிட்டு ரியாஸ் பைகளை எடுத்துக்கொண்டு தயாரானான்.
‘அட, கொஞ்ச நேரம் இருந்து ஆற பேசிட்டு போனாதான் என்ன தம்பி, சீக்கிரம் போய் என்ன ஃபிளைட் பிடிக்கவா போறீங்க’, என்றார் தாத்தா.
அவரது பேரப்பிள்ளைகள் வலிகளை மறந்து சிரித்தனர். ரியாஸுக்கு சட்டென கோபம் வந்தாலும், பிள்ளைகளின் சிரிப்பில் அதனை மறந்து, ‘அப்படி இல்ல தாத்தா, எவ்ளோ சீக்கிரம் வீட்டுக்கு போய் சேர முடியுமோ, அவ்ளோ சீக்கிரம் போயிடணுமுனு பாக்கறேன், சாப்பாட்டுக்கு கையில காசும் இல்லை, பொணமா போனாலும், ஊரு பக்கத்துல போயிட்டா எடுத்து போடுற செலவாவது குடும்பத்துக்கு மிச்சம்ல’, வாட்டமான குரலில் சன்னமாக பேசினான் ரியாஸ்.
‘அட என்னப்பா நீயி நாங்கல்லாம் இருக்கிறோம் ல, ஆளுக்கு ரெண்டு கிலோ மீட்டர் தோள்ல தூக்கிட்டு போயாவது உன் வீட்டுல சேர்த்துடுறோம், அதுக்கு போய் சின்ன புள்ள கணக்கா வெசனப்பட்டுட்டு கெடைக்குறையே நீயி. நல்ல ஆளுப்பா, சின்ன புள்ளைங்கள பாரு, எவ்ளோ சிரிச்சிட்டு சும்மா கலகலன்னு அருவி மாதிரி புதுசா இருக்குதுங்க. உக்காரு, ரெண்டு வாய் சாப்பிட்டுட்டு எல்லாரும் ஒன்னா போகலாம்’ என்று சொல்லிவிட்டு அவன் பதிலையே விருப்பத்தையோ எதிர்பார்க்காமல் அவன் கையைப் பிடித்து உட்கார வைத்து சாப்பாடும் கொடுத்தார்.
‘பதினைஞ்சு பேர் தம்பி, நாங்க மொத்தம், ஒவ்வொருத்தரா, மாத்தி மாத்தி பொழப்பு தேடி வேற வேற ஊருக்கு வந்து, ஆளுக்கொரு ஊர்ல ஜீவனம் நடத்தி, கடேசியில இப்படி ஊர் ஊரா நடக்கும்போதுதான் எல்லாரும் ஒன்னு சேர்ந்திருக்கோம், அதான் பேர புள்ளைங்கள பாத்த உடனே உடம்புல தெம்பு வந்திருக்கு’ நகரத்துல தள்ளு வண்டியில சாப்பாட்டுக்கடை நடத்திட்டு இருந்தேன் தம்பி, திடுதிப்புன்னு கடையை மூடுன்னு சொல்லிப்புட்டாங்க, பத்து நாள் தாங்கும், இருபது நாள் தாங்கும், ஆனால் எப்ப முடியுமுன்னே தெரியாமல் வயித்துக்கு ஒன்னுமில்லாம எப்படி தம்பி பட்டணத்துல வாழ முடியும், ஒழுங்கா சாப்பிட்டு மாசக்கணக்குல ஆச்சு தம்பி, அதான் போற உசுரு ஊர்ல போகட்டும், குடும்பத்தோட ஒன்னா இருக்கலாம்னு ஊர தேடி கிளம்பிட்டோம், சாப்பிட்டுக்கொண்டே ரியாஸிடம் குடும்பக்கதையை சொல்லிக் கொண்டிருந்தார் பெரியவர்.
***
‘அய்யய்யோ என் சாமி’ நெஞ்சை பிளக்கும் அலறல் கேட்டு, நடந்துகொண்டிருந்த பல ஆயிரம் பேரில் சிலர் மட்டும் திரும்பிப் பார்த்தனர். எழுபது வயது பெரியவர் நடக்கும்போதே மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட, அவரது மனைவி அலறிக் கொண்டிருந்தார். நடந்து செல்வது ஆயிரக்கணக்கான பேராக இருந்தாலும், எல்லாருக்கும் அவரவர் வீடு போய் சேர்வதே முதன்மையாக இருந்தது. இடையில் பசியில் இறப்போரையும், வலியில் துடிப்போரையும், வலிதாங்காமல் உட்கார்ந்து கிடப்போரையும் பற்றி கவலைப்பட யாருக்கும் நேரமில்லை, உடலில் தெம்புமில்லை. ஆனாலும் குழு குழுவாக இணைந்து அவரவர் வேதனையை பகிர்ந்து கொண்ட கூட்டங்கள் சில இருக்கவே செய்தன.
பெரியவர் கொடுத்த சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு, கீழே விழுந்து கிடந்த தாத்தாவை நோக்கி ஓடினேன். கீழே விழுந்த பெரியவரை தூக்கி வாரி அருகில் இருந்த திண்டில் அமர்த்தி தண்ணீர் தெளித்து பார்த்தோம், அவர் எழவில்லை, உதட்டை சுருக்கிக்கொண்டு அவர் உயிருடன் இல்லை என்பதாக சொல்லிவிட்டு ஒரு கூட்டம் நகர்ந்தது. இன்னொரு கூட்டம் அருகில் வந்து துக்கம் விசாரித்துவிட்டு கொஞ்ச நேரம் அந்த பாட்டியுடன் இருந்து ஆறுதல்படுத்தியது. நடந்து நடந்து உடலில் சத்தில்லாமல், குரல் எழுப்பி அழ முடியாத நிலையில் அந்த பாட்டியும், நோஞ்சான் குருவி போல விக்கி விக்கி சத்தமே இல்லாமல் அழுது கொண்டிருந்தார். வானில் பறவைகள் கூட்டமாக இந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தன. அப்படிதான் நாங்கள் எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் வானில் வலசை போகும் பறவைகள் திடீரென ஓரிடத்தில் கூட்டமாகக் கூடி அந்த இடத்தை விட்டு நகரவில்லை என்றால் அங்கே கழுகு வருகிறது என்று பொருளாம். கழுகு வருகிறது என்றால் அங்கே மற்ற உயிர்களுக்கு ஆபத்திருக்கிறது என்று அர்த்தமாம். வாழ்வில் எப்போதும் கற்காத இந்த பாடத்தை அன்றுதான் நாங்கள் கற்றுக்கொண்டோம்.
பெரும்பாலான கூட்டம் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்ட நிலையில், விக்கித்து வேறு கதியற்று கிடந்த பாட்டியுடன் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு போகலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் என் கண்கள் அயர்ந்தன. ஒரு இளம்பெண் கையில் கைக்குழந்தையுடன் பாட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தார், என் கண்கள் மூடிக்கொண்டே இருந்தன. அரைமயக்கத்தில் கிடந்தேன். அந்தப்பெண் பாட்டியின் கைகளைப் பிடித்து ஏதோ பேசிக்கொண்டிருப்பதை மங்கலான காட்சியாக பார்த்தது வரைதான் எனக்கு நினைவிருக்கிறது.
சலசலவென சிறுத்து பெருத்த சப்தம் என் காதுகளில் ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. பறவைகள் அலறிக்கொண்டே வானில் நாலாபக்கமும் சிதறின. முன்னேறிச் சென்ற கூட்டத்தில் சிலர் மட்டுமே மீண்டும் நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளம்பெண் தண்டவாளத்தின் அருகில் நெஞ்சிலும், தலையிலும் அடித்துக்கொண்டு பெருங்குரலெடுத்து அழுது கொண்டிருந்தார். இடது கை முஷ்டியை உயர்த்தி, ஐயோ ஐயோ என்று நெஞ்சாங்கூட்டின் இடையில் வைத்து குத்திக்கொண்டே வானை நோக்கி கற்களை அள்ளி வீசினார். சுற்றி இருந்த மொத்த கூட்டமும் வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. அரை மயக்கத்தில் எழுந்து சென்று பார்த்தேன், கழுகு ஒன்று அந்த பெண்ணின் கைக்குழந்தையை தூக்கிச் சென்றுவிட்டது என்று அருகில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருந்தார். குத்துக்காலிட்டு உட்கார்ந்து தலையில் கைவைத்து விம்மி விம்மி அழுதேன். தேற்றுவார் யாரும் இல்லை என்றாலும், அழுவதை விட வேறு வழியில்லை எனக்கு. துக்கம் விசாரிக்க வந்த பெண், எல்லாரும் கிளம்பி சென்றுவிட்ட நிலையில் பாட்டியின் கைபிடித்து அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த வேளையில் குழந்தை தவழ்ந்து, தண்டவாளத்தின் அடுத்த பகுதிக்கு சென்றதை யாருமே பார்க்கவில்லை. பெரிய பறவை ஒன்று பூமியை நெருங்கவே தூரத்தில் இருந்த பார்த்த ஒருவர் ஓடி வந்திருக்கிறார், அவர் வருவதற்குள் குழந்தை கழுகின் கால்களில் பறந்து கொண்டிருந்தது. அந்த குழந்தையை சரியாகக்கூட நான் பார்க்கவில்லை, ஆனால் உள்ளத்தில் எழுந்த கனம் ஒருபோதும் குறையாது. இன்னும் எத்தனை மரணங்களைப் பார்க்க வேண்டுமோ என்று மனம் பரிதவித்தது. நெஞ்சில் அடித்துக்கொண்டே அழுது தீர்த்த அந்த இளம்பெண் தண்டவாளத்திலேயே மயங்கி வீழ்ந்தார். தண்ணீர் தெளித்து எழுப்பினோம், எழுந்தார், ஆனால் எழுந்தும் பிணம் போலத்தான் கிடந்தார்.
இறந்து கிடந்த பெரியவரை பிரேத பரிசோதனை செய்துதான் அடக்கம் செய்ய வேண்டும் என்று அங்கு வந்த அதிகாரிகள் கறாராக சொல்லிக் கொண்டிருந்தனர். அவர் இறந்ததே உங்களால்தான், அவரை நாங்களே இங்கே குழித்தோண்டி அடக்கம் செய்துக் கொள்கிறோம் என்று வாதாடினேன். ‘டேய், இன்னும் ஒரு வார்த்தை நீ பேசின, இந்த பெரியவரை நீதான் கொல பண்ணின, அவர்கிட்ட இருந்த ரெண்டு சவரன் சங்கிலியை திருடிக்கிட்டு அவரை கொலை செய்திருக்கேன்னு கேஸ் ஃபைல் பண்ணுவேன் பரவால்லையா’ என்றார். பாட்டி வாய்மேல் கைவைத்துக்கொண்டு அழுது கொண்டிருந்தார். காலையில் எனக்கு உணவு கொடுத்த பெரியவரும் அவரது குடும்பமும் அதிகாரி அருகே வந்து ‘நல்லா இருக்குதுயா உங்க நியாயம், இத்தனை லட்சம் பேர் ராத்திரி பகலா, மாசக்கணக்கா, வெயில், மழை பார்க்காம, நடந்து போய்ட்டிருக்கோம், வந்து என்னானு கேக்க நாதியில்லை, ஆனா செத்துப்போன கிழவனை மட்டும் போஸ்ட் மார்ட்டம் பண்ணனும் உங்களுக்கு, தோ அந்தா இருக்கே அந்த புள்ள, அவளோட கைக்குழந்தையை காலையில கழுகு ஒன்னு தூக்கிட்டு போச்சி, போய் மொதல்ல அந்த புள்ளைய மீட்டு வந்து அதுக்கு பிரேத பரிசோதனை பண்ணிட்டு கழுகுதான் தூக்கிட்டு போய் கொன்னுச்சா, இல்ல உங்க அரசாங்கம் கொன்னுச்சானு சொல்லுங்க, பிறகு பெரியவரை தூக்கிட்டு போகலாம்’, அவர் பேசி முடிப்பதற்குள் அங்கு மேலும் பலர் கூடினர். ஆயிரக்கணக்கான கூட்டத்தைப் பார்த்த காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து நின்றனர். பிறகு அவர்களே அருகில் இருந்த காட்டில் குழிதோண்டி பெரியவரை புதைத்தனர். எல்லாம் முடித்த பின்னர் அவர்களிடம் கேட்டேன்,
‘இவ்வளவு நடந்தும் கூட அந்த தாத்தாவோட பொணத்தையும், அந்த பாட்டியையும் ஒரு வண்டி வச்சி கொண்டு போய் அவங்க ஊர்ல விடணும்னு உங்களுக்கு தோணலையா’
‘ஏண்டா நாயே நீங்க ஊர் விட்டு ஊர் வந்து சம்பாதிப்பீங்க, ஆனால் உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை நா நாங்க ஓடிவந்து உதவணுமா, சம்பாதிக்கிற காசையெல்லாம் எங்கக்கிட்டயா கொடுத்தீங்க’ என்று கையை ஓங்கினார். தாத்தாவை பறிகொடுத்த பாட்டி நேராக வந்து அதிகாரியை நோக்கி ‘அட த்தூ ‘ என காறி உமிழ்ந்துவிட்டு என் கைகளைப் பிடித்து அழைத்து சென்றார். அதிகாரியுடன் வந்திருந்த இன்னொரு காவலர் நேராக என்னருகே வந்தார். ‘தம்பிக்கு கோபம் அதிகம் வரும் போல’, என்று கைகளை பிடித்துக் கொண்டே கனிவாக பேசினார். இந்த நாட்டுல எதுவும் சரியில்ல தம்பி, எல்லாமும் கெட்டுப்போய்க் கிடக்கு, அவ்வளவு சீக்கிரம் இதையெல்லாம் சரிப்பண்ணிட முடியாது, இவ்ளோ லட்சம் மக்கள் ஊர் ஊரா நடந்துபோறத பார்த்து பல நாள் சோறு திங்க முடியாம தவிச்சிருக்கேன், ஆனா என்ன பண்றது, இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுதான் வாழ வேண்டிக்கிடக்கு, இந்த ஆத்தாளையும், அந்த புள்ளையையும் பத்திரமா கூட்டிட்டுப்போய் அவங்க ஊர்ல விட்டுடுப்பா, ரெண்டு பேரும் துணையில்லாம நிக்கிறாங்க, கொஞ்சம் உதவி பண்ணுப்பா’, என்று பேசிக்கொண்டே என் கைகளை அழுத்தினார். பிறகு எழுந்து சென்றுவிட்டார். அவர் சென்றதும் என் கைகளை திறந்து பார்த்தேன். நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை கையில் திணித்திருந்தார். இந்நேரம் பல கிலோ மீட்டர்கள் நடந்து சென்றிருக்கலாம், ஆனால் இன்றைய இரவையும் இங்கேயே கடத்த வேண்டிய நிலை நேர்ந்துவிட்டது. காலையில் உணவு கொடுத்த பெரியவரின் குடும்பம், பாட்டி, இளம்பெண், நான் என சிலர் மட்டுமே அன்று இரவு அந்த ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் நேரம் ஆக ஆக கூட்டம் எங்கிருந்தோ வந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் அந்த வழியாக கூட்டம் வந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம்.
எல்லாரும் நடந்து வந்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்தனர். இளம்பெண்ணும், பாட்டியும் உறவுகளை பறிகொடுத்துவிட்டு செய்வதறியாது பித்துப்பிடித்தது போல் வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தனர். அவர்களையும் அறியாமல் தூக்கம் அவர்களை தழுவிக்கொண்டது. பெரியவரும் அவரது குடும்பமும் இரவு முழுக்க பேசிக்கொண்டே இருந்தனர். இனி பேசவே போவதில்லை என்பது போல, அன்று இரவு அவர்கள் அவ்வளவு பேசிக் கொண்டிருந்தார்கள். இடை இடையே எழுந்து பார்த்தபோதும் அவர்கள் தூங்கவில்லை. நள்ளிரவைத் தாண்டி அதிகாலையிலும் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். தண்டவாளத்திற்கு அந்த பக்கம் சென்று ஒன்னுக்கடித்துவிட்டு மீண்டும் வந்து படுத்தேன். ‘என்ன தாத்தா, இப்படியே தூங்காம இருந்தா நாளைக்கு எப்படி நடக்க முடியும், கொஞ்ச நேரமாவது தூங்குங்க’ என்றேன், நாளைய பத்தி இன்னைக்கு என்னப்பா கவலை வேண்டி கிடக்கு, அத நாளைக்கு பாத்துக்கலாம்’, மெதுவாக பேசிக்கொண்டே, சிரிக்கவும் செய்தார். வேறு ஏதும் பேசாமல் என்னை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்களில் வழக்கத்திற்கு மாறாக அவ்வளவு ஒளி தெரிந்தது. தீர்க்கமாக என்னை பார்த்தார். ‘நீ தூங்கு கண்ணு’ என்றார்.
அதிகாலையில் தூங்குவது எப்போதுமே தனிசுகம், அதுவும் நடந்த களைப்பில் இந்த அதிகாலை தூக்கம் இன்னமும் சுகமாகவே இருந்தது. கண்கள் அயர்ந்தபோது தூரத்தில் ஏதோ ஒளி தெரிந்தது. ஆனாலும் களைப்பில் தூங்கிவிட்டேன்.
சிறிது நேரத்தில் ஓ வென ஓசை எழுப்பிக்கொண்டே ரயில் ஒன்று தண்டவாளத்தில் வந்துகொண்டிருந்தது. மற்ற ஊர்களுக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் கூட்ஸ் வண்டிகளை இப்படி அவ்வப்போது பார்ப்போம். சிலர் அதில் தொற்றிக்கொண்டும் கொஞ்ச தூரம் செல்வார்கள். ரயில் முழுமையாக அந்த இடத்தை கடக்குமுன்னரே திடீரென பெரும் கூச்சல் எழுந்தது. திடுக்கிட்டு எழுந்தேன், இளஞ்சூட்டில் என் மீது ஏதோ தெறித்தது. சிறு குழந்தையின் கை ஒன்று துண்டாகி என் மேல் விழுந்தது. கூட்டம் கதறிக்கொண்டே ரயிலை நோக்கி ஓடி வந்தது.
பீதியில் உறைந்து நின்றான் ரியாஸ், துண்டான கைகளைப் பார்த்து பேச்சு வராமல் திக்கித் திணறினான். ரயில் அவர்களை கடந்தது, கூட்டம் மொத்தமாக கைகளில் அலைபேசி ஒளியைக் கொண்டு எதையோ தேடிக்கொண்டே இருந்தது. கைகளும், தலையும், கால்களும் ஆங்காங்கே துண்டு துண்டுகளாக தெறித்துக் கிடந்தன. ரத்த வாடை வீசியது. நிறைய பேர் தற்கொலை செய்துகொண்டார்கள் என்று கூட்டத்தில் சலசலப்பு கேட்டது. ரியாஸுக்கு மூச்சடைத்து கைகால்கள் உதறின. அச்சத்தில் தண்டவாளத்தை விட்டு தத்தித்தத்தி நகர்ந்து சென்றான். சூரியன் வருமுன்னே எழும் சிறு ஒளி எழுந்தது. சுற்றிலும் பெருங்கூட்டம், கூட்டத்தில் சிலர் மயங்கி விழுந்தனர். சிறு குழந்தை, பெண்கள், ஆண்கள், வயதானவர் என பலரது சடலங்கள் துண்டு துண்டாக சிதறிக்கிடந்தன. இளம்பெண்ணும், பாட்டியும் துடித்து எழுந்தனர். வெடித்து அழுதனர். வாந்தி எடுத்தனர். அழுகுரல்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. வானில் பெரிய பெரிய பறவைகள் சுற்றிக்கொண்டே இருந்தன. நூற்றுக்கணக்கான காகங்கள் அந்த இடத்தை வட்டமடித்து பறந்துகொண்டே இருந்தன. அருகில் இருந்த காட்டுக்குள் இருந்த காட்டு நாய்கள் குரைத்துக்கொண்டு சிதறிக்கிடந்த கைகளையும், கால்களையும் தேடி கோரைப்பற்களை காட்டி வந்து கொண்டே இருந்தன. கொஞ்சம் நேரம் கழித்து பாட்டி அழக்கூட சக்தியில்லாத சிறுகுரலில் ரியாஸிடம் கேட்டார், ‘தம்பி அந்த பெரியவரோட குடும்பம் எங்கப்பா’, சட்டென பெரியவரின் நினைவு வந்து அவரை தேடிக்கொண்டிருந்தான் ரியாஸ், தனித்த தலை ஒன்றில் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ‘அய்யய்யோ அய்யய்யோ, விழுந்து புரண்டு அழுதான், பலம் கொண்ட மட்டும் அழுதான், அவன் சட்டையில் தெறித்த ரத்தம் அந்த பெரியவரின் குடும்ப ரத்தம்தான். ‘விடியும் வரை பேசிக்கொண்டே இருந்தார்கள், என் தூக்கத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் அந்த குடும்பம் இப்படி சிதறியிருக்காது’ என்று அவன் மனம் குற்ற உணர்ச்சியால் துடித்தது. ‘அரை மணிநேரத்துக்கு முன்னாடி கூட அவங்கள பாத்தேன் பாட்டி, பேசிக்கிட்டே இருந்தாங்க, கொஞ்ச நேரமாவது தூங்குங்கன்னு சொன்னேன், நீ தூங்கு தம்பி னு சொன்னாரே அந்த பெரியவர், கடைசியில அவர் சாவறத நான் பாக்க கூடாதுன்னுதான் அப்படி சொல்லியிருக்காரு பாட்டி’ ரியாஸ் துடித்து அழுது கொண்டிருந்தான். அவன் கைகளைப் பிடித்து தலையை அனைத்து அவனை தேற்றினார் பாட்டி. மனித வாழ்வின் குதூகலம் கனவுகளில் காணும் காட்சிகளை நேரில் காணும்போது நிலைகுலைந்து போகிறது. அன்றொரு நாள் இ-பாஸ் பெற்றுக்கொண்டு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் பெரியவரை கனவில் பார்த்ததை, என்ன தம்பி கனவா என்று கேட்டவர் இன்று அதே போன்றதொரு சம்பவத்தை நிஜமாக்கி சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அதிகாரியின் வாகனம் வந்தது, அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்றும் வந்தது, சிதறிக்கிடந்த உறுப்புகளை தேடி எடுத்து வெள்ளைத் துணியில் வைத்து மடித்து எடுத்து சென்றனர். அதிகாரி சிலரை பார்த்து பேசிக்கொண்டிருந்தார். ‘என்னப்பா தூங்கும்போது தள்ளிப்படுக்க வேணாமா, இப்ப பாரு, தண்டவாளத்துல படுத்துக்கிடந்தவங்க மேல ரயில் ஏறி, ச்ச ச்ச பாவம், இனிமேலாவது ஒழுங்கா பார்த்து நடந்து போங்கப்பா’ என்று கூறிவிட்டு அதிகாரி நகர்ந்து சென்றார். பாட்டி சட்டென எழுந்து, புடவையை மடித்து, கையில் இருந்த கொஞ்சம் தண்ணீரைக் கொண்டு தண்டவாளத்தில் அப்பிக்கிடந்த ரத்தத்தை கழுவி துடைத்தார். ஒட்டிக்கொண்டிருந்த சதைகளை பிய்த்தெடுத்து அருகில் இருந்த காட்டுக்குள் குழி தோண்டி புதைத்தார். மண்ணை மூடிவிட்டு தண்ணீர் தெளித்து, கண்களை மூடிக்கொண்டார். என் புருஷன அறுக்காம, நல்லடக்கம் பண்ண வச்ச மவராசன், நல்லபடியா போய் வாய்யா’, என்று கூறிக்கொண்டே கண்களைத் திறந்தார். கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.
ரியாஸ் இன்னமும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தான். பாட்டி என்ன சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவன் கைகளைப் பிடித்து அழுத்திவிட்டுக் கொண்டே அவனைத் தேற்றினார் பாட்டி. இளம்பெண் அருகில் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். ரியாஸ் அடக்க முடியாமல் வெடித்து அழுதான். பாட்டி மடியில் படுத்து அழுதான். எழுந்தான், முடியவில்லை, பாட்டி அவனை அணைத்துக் கொண்டு தேற்றினாள். இளம்பெண்ணும் பாட்டியோடு சேர்த்து அவனை அணைத்து தேற்றிக் கொண்டிருந்தாள். பெருமூச்செடுத்து, கண்ணீரை அடக்கி, குரலை மடக்கி, வாங்க பாட்டி நாம போகலாம் என்று மூவரும் கிளம்பினார்கள். வானில் பறவைகள் வட்டமிட்டுக் கொண்டே இருந்தன. அவைகளுக்கு இன்னும் நிறைய இரை இங்கே இருப்பதாகவே தோன்றியது.
தண்டவாளம் தாண்டி பெரும் நிலப்பரப்பில் அகன்று விரிந்த காடு வந்தது. எறும்புக்கூட்டம் போல மனிதர்கள் சாரை சாரையாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். காட்டுப்பகுதி என்பதால், மனிதர்கள் கூட்டத்தின் தேவையை புரிந்து வைத்திருந்தார்கள். வானளவுக்கு ஓங்கி நெடிந்து உயர்ந்து வளர்ந்திருந்த மரத்தின் உச்சியில் இருந்து, சிகப்பு நிற, பருத்து பெருத்த பறவை ஒன்று இவர்களை பார்த்துக் கொண்டே இருந்தது. காட்டுச்செடிகளின் வாசம் வீசியது. சிறு சிறு பூச்சிகள் மனிதர்களை உரசிச்சென்றது, வண்டுகளின் ரீங்காரம் ஓயாமல் கேட்டது. மாலைக்கருக்கல் துவங்குவதற்குள் இந்த காட்டை கடந்தாக வேண்டும் என்று வேகமாக நடந்து கொண்டிருந்தார்கள். ரியாஸ், ஒரு கையில் பாட்டியையும், இன்னொரு கையில் இளம்பெண்ணையும் பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தான். இளம்பெண் அவன் கைகளை இறுகப்பற்றிக் கொண்டாள்.
அடர்ந்த காடு முடிந்து, சூரிய ஒளி அவர்கள் மேல் பட்டதும், அருகில் இருந்த ஆற்றங்கரையில் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். ரியாஸ் அருகில் இருந்த செடியில் இருந்து கொஞ்சம் இலைகளை பறித்து கருங்கல் ஒன்றினை எடுத்து, அதனை கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கினான். இலையில் இருந்து எழுந்த வாசம் புத்துணர்ச்சி கொடுப்பதாக இருந்தது. இன்னும் சில இலைகளை எடுத்து நசுக்கினான். இளம்பெண் ரியாசுடன் சேர்ந்து இலைகளை சேகரித்து வந்தாள். ரியாஸ் கற்களால் இலைகளை நசுக்க நசுக்க அவள் இலைகளை கொடுத்துக் கொண்டிருந்தாள். இலைகளில் இருந்து எழுந்த வாசம் அவளுக்கு பிடித்துப்போனது. அந்தப் பசையை எடுத்து பாட்டியம்மா பாதத்தில் தடவிவிட்டான் ரியாஸ். இளம்பெண் பாதத்திலும் தடவிவிட்டு, தன் பாதத்திலும் தடவிக்கொண்டான். ‘இந்த ஊருக்கு போய் என்ன பா பண்றது, காட்டுக்குள்ளேயே கிடந்து வாழ்ந்துடலாம் போலிருக்கு, உடம்புல மட்டும் இல்லப்பா, மனசுல அடிபட்டாலும் அத ஆத்துற சக்தி இந்த இயற்கைக்கு மட்டும்தான்பா இருக்கு’, என்றார் பாட்டி.
பலநூறு கிலோமீட்டர் கடந்து, வேறொரு மாநிலத்தின் புறநகர் பகுதியை அடைந்தது பெருங்கூட்டம் ஒன்று. ஆனால் எல்லைகளை மூடி, காவலுக்கு பல நூறு போலீசாரை வைத்திருந்தது அரசு. ‘இங்க பாருங்க, உங்க யாரையும் ஊருக்குள் அனுப்ப முடியாது, அரசு அதிகாரிங்ககிட்ட மறு உத்தரவு வரும் வரை நீங்க இங்கேதான் நிக்கணும். அதனால எல்லாரும் இங்கேயே தள்ளி சோசியல் டிஸ்டன்ச ஃபாலோ பண்ணுங்க” ஒலிபெருக்கியில் ஓயாமல் கேட்டுக்கொண்டிருந்தது அதிகாரியின் குரல்.
‘ஐயா சாமி, பல நாள், பல நூறு கிலோமீட்டர் நடந்து வந்திருக்கோம், இன்னமும் நூத்துக்கும் அதிகமான கிலோ மீட்டர் நடந்தாதான் எங்க ஊருக்கு போய் சேர முடியும், செத்தாலும் சொந்த ஊர்ல சாகலாம்னுதான் வந்தோம், இனி தாங்காது, இந்த இடத்துல ஒன்னும் நாங்க குடியிருக்க வரல, இந்த இடத்தை கடந்து போனாதான், எங்க ஊருக்கு போக முடியும்’ கூட்டத்தில் பலரது குரல் எழுந்தது.
‘நிச்சயமா உங்கள் எல்லாரையும் உங்க ஊருக்கு அனுப்பிடுவோம், ஆனா இது ஒரு மாநிலத்தோட எல்லை, நோய் வேகமாக பரவிட்டு இருக்கும்போது இவ்வளவு பேர கூட்டமா நடந்து போக அனுமதிக்க முடியாது. எங்களுக்கு கொஞ்சம் கோ ஆப்பரேட் பண்ணுங்க’
கூட்டம் அதிமாகிக் கொண்டே சென்றது. கொடுவெயிலில், தண்ணீர் கூட இல்லாமல், எல்லாரும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் சில இளைஞர்கள், ‘இங்கேயே காத்திட்டு இருந்தா, சரிப்பட்டு வராது, வாங்கய்யா நாம வேற வழியில போகலாம் என்று பேசிக்கொண்டிருந்தனர். கொஞ்சம் பேர் அந்த இளைஞரோடு சேர்ந்தனர். ரியாசும் அந்த கூட்டத்தில் சேர்ந்து கொண்டு நடந்தான். காடுகளிலும், பொட்டல்காடுகளிலும் நடந்தபோது கூட இப்படி வலியை உணர்ந்ததில்லை, ஆனால் தார்சாலைகள் நடப்பதற்கு அருகதையற்றவை, அவை மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது என்று கூட்டத்தில் எல்லாரும் பேசிக்கொண்டு வந்தார்கள். சாலையில் ஆங்காங்கே கார்களும், அரசு வாகனங்களும், ஆம்புலன்சும் ஓடிக்கொண்டிருந்தன. ரியாசுடன் பல ஆயிரம் பேர் கூட்டமாக மாற்று வழியில் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீரென சாலையை மறித்து காவலர்கள் அவர்களை தடுத்தனர். ‘ஒழுங்கு மரியாதையா எல்லாரும் திரும்பிப்போங்க, இந்த பகுதியில இதுக்கு மேல யாரும் போகக்கூடாது, இ-பாஸ் இல்லாத யாருக்கும் இந்த இடத்தில அனுமதி கிடையாது. எல்லாரும் திரும்பிப்போய் எல்லைக்கு போங்க’, ஒலிபெருக்கியில் அதிகாரி எச்சரித்தார். இளைஞர்கள் குரல் எழுப்பினர். ‘அதெல்லாம் முடியாதுங்க, நாங்க எதுக்கு எல்லைக்கு போகணும், எங்க ஊருக்கு இந்த வழியாதான் போகணும், இங்கேயே நிறுத்தி வச்சா நாங்க எப்படி போறது, தண்ணி இல்ல, சாப்பாடு இல்ல, ஆனால் நீங்க சொல்றத மட்டுமே கேளுநா அதெப்படிங்க, பல நாளா பல நூறு கிலோ மீட்டர் நடந்தே வந்திருக்கோம், இன்னமும் நாங்க என்னதான் பண்றது’ கூட்டத்தின் குரல் உயர்ந்தது.
‘உங்களுக்காக அரசாங்கம் வண்டி தயார் பண்ணிக்கிட்டிருக்கு, அதுவரைக்கும் அமைதியா இருங்க’
‘யோவ் இவ்ளோ நாளா எங்கய்யா போய் இருந்தது அரசாங்கம், உசுரைப் பிடிச்சிக்கிட்டு, கொல்லப்பட்டினியில அவன் அவன் நடந்து வந்திட்டிருக்கான், இப்ப வந்து அரசாங்கம் வண்டி தயார் பண்ணுது, அது இது னு பேசிட்டு இருக்கீங்க, வர வழியிலேயே எவ்ளோ பேர் செத்துப்போயிருக்காங்கனு உங்க யாருக்காவது தெரியுமாயா, சும்மா, லத்தியும் துப்பாக்கியும் கையில வச்சிக்கிட்டு எங்களை மிரட்ட மட்டும்தான் தெரியுது, எங்களை பாதுகாக்கத்தான் உங்களுக்கு துப்பாக்கியும், லத்தியும்’ கூட்டத்தில் போர்க்குரல் எழுப்பினான் இன்னொரு இளைஞன்.
‘தம்பி மரியாதையா பேசு, உனக்கு வாய் ரொம்ப நீளுது’ என்று காவலர் எச்சரித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மேலே டிரோன் கேமரா பறந்து, கூட்டத்தை படம்பிடித்துக் கொண்டிருந்தது. ரியாஸ் எட்டி அதனைப் பிடிக்க முயன்றான். அது மேலே பறந்தது. உடனே நான்கு இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் ஏறி அந்த கேமராவை பிடித்து தரையில் தட்டி சுக்குநூறாக உடைத்து எறிந்தனர். பெருங்கூட்டம் காவலரைத் தாண்டி, தடுப்புகளை உடைத்துக் கொண்டு முன்னேறியது. அதிகாரி மிரட்டிக் கொண்டிருந்தார். ‘இங்க பாருங்க, இதுக்கு மேல யாராவது நகர்ந்தா துப்பாக்கியால் சுட வேண்டியிருக்கும், உசுரு மேல பயமிருந்தா அப்படியே நில்லுங்க’, ரியாசுடன் வந்த இளம்பெண் அதிகாரியின் முன்னே நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சுடுய்யா பாக்கலாம் என்றாள். வானில் பறவைகள் பெருங்கூட்டமாக சுற்றிக் கொண்டிருந்தன. பறவைகளின் சப்தம் காதைப் பிளந்தன. அதிகாரி துப்பாக்கியை இளம்பெண்ணை நோக்கி நீட்டினார். வானில் இருந்து பெரும்பறவை ஒன்று இறங்கியது, குன்று போல் பெருத்திருந்த அந்த சிகப்பு நிற பறவை அதிகாரியின் துப்பாக்கியை பறித்துக் கொண்டு பறந்தது. அதன் அலகில் பழுப்பு நிறம் அப்பிக்கொண்டிருந்தது. தடுப்புகளை உடைத்து, எதிர்ப்படும் அதிகாரிகளின் வண்டிகளை நொறுக்கி, அதிகாரிகளை ஓடவிட்டு பெருங்கூட்டம் தங்கள் ஊரை நோக்கி முன்னேறிச் சென்றது. எல்லையில் காத்துக் கொண்டிருந்தவர்களும் புதிய பாதை நோக்கி புறப்பட்டனர். வானில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வலசைக்கு சென்று கொண்டிருந்தன. மஞ்சள் நிற சுவரொன்றில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. அதன் அலகில் பழுப்பு நிறத்தில் ஏதோ அப்பியிருந்தது. சுவற்றில் தேய்த்து தேய்த்து பழுப்பு நிற கறையை அகற்றியது. கத்திக்கொண்டே வானில் சுதந்திரமாக பறந்தது.
***
அருண் மோ
மாற்று திரைப்படங்கள் மட்டும் திரைத்துறை சார்ந்த முன்னெடுப்புகளை தமிழ் ஸ்டூடியோ என்கிற பெயரிலும், பேசாமொழி என்கிற துறை சார்ந்த இதழையும் நடத்தும் அருண். தற்போது சிறுகதைகளும் எழுதி வருகிறார். தொடர்புக்கு – thamizhstudio@gmail.com