Saturday, November 16, 2024
Homeஅபுனைவுஅனுபவம்பெரியோரை வியத்தலும் இலமே

பெரியோரை வியத்தலும் இலமே

ஒரு பெரும் காதலனாகவே எனக்கு தாந்தேவை தெரியும்.  காதல் கொண்ட தன் நகரத்தில் வாழ்வதற்கு இயலாதவனாக, தன் பிரியத்துக்குரியவளை வாழ்வில் கொண்டிருக்க முடியாதவனாக வாழ்ந்து மடிந்த இத்தாலிய கவி. ஆனால், அவனின் வார்த்தைகளில் 800 வருடங்களுக்கு பிறகும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் பியாட்ரிஸ். அவளே அவனுக்கு சொர்கத்தில் வழிகாட்டியாய் இருக்கிறாள். கிறிஸ்துவ இலக்கியத்தில் தாந்தேவின் படைப்பு உண்டாக்கிய உருவகங்களே இன்றைய சொர்க, நரகத்தித்தைக் கொடுத்தவை. அதே இத்தாலியை சேர்ந்த இன்னொருவர் தமிழின் தாந்தே எனப்படுகிறார். அவர் காதல் கொண்டிருந்தது ஒரு தந்தையிடம். அந்த தந்தையின் மகனாகவே அவர் இந்திய மண்ணிற்கு வந்தார்.

கோவாவிற்கு வந்து சேர்ந்து அங்கிருந்து கேரளத்தில் இருந்த அவர்களின் நிலையான இடத்திற்கு சென்று பின்னர் தமிழகம் வருகிறார். அவருக்கு முன்னர் வந்து சேர்ந்த அருளானந்தர் (ஜான் டி பிரிட்டோ, பின்னர் புனிதர்), ஒரியூரில் கிழவன் சேதுபதியின் உத்தரவால் தலை கொய்யப்பட்டிருந்தார் என்பது வரலாறு. கான்ஸ்டன்ட் பெஸ்கி எனும் அவர் தமிழகம் வரவிருந்தபோது தொடர்பு மொழியாக தமிழன்றி பிற உதவாது என்று அடிப்படைகள் கற்றே வந்தார். ஆனால், மொழியின் அற இலக்கியத்தோடான அவரது பிற்கால பரிச்சயம் இன்னமும் அவரை ஈர்த்திருக்கிறது. முக்கியமாய் திருக்குறள். மொழியை இன்னமும் ஆழமாகக் கற்கிறார்.

இந்த இடத்தில் அவருக்கு எளிய மக்களுடன் இருந்த நெருக்கத்தைக் காரணமாக சொல்கிறார்கள். இந்த மக்களை நெருங்காமலா, மண்ணோடு உறவு கொள்ள முடியும்? இலக்கியம் இரண்டாவது நிலை.

அவரது படைப்புகளைப் பற்றி நிறையவே தகவல்கள் உங்களால் பெற முடியும். தேம்பாவணி என்பதே கிறிஸ்துவ இலக்கியம் என்று தமிழில் சொல்ல வெளியில் தெரியும் ஒன்றே ஒன்று. அதே சமயம் அது பெஸ்கிக்கு தமிழ் பயிற்றுவித்த சுப்ரதீப கவிராயரின் உழைப்பில்லாமல் சாத்தியமாகி இருக்காது என்றும் சொல்கிறார்கள், பெஸ்கி சொல்ல சுப்ரதீபர் எழுதினார் என்றும் சொல்கிறார்கள்.

ஆனால், திருக்குறளின் தாக்கம் அத்தனை நேரடியாய் தெரிகிற வரிகள் தேம்பாவணியில் உண்டு. நமக்கு நிறையவே கதைகள் வேண்டியிருக்கிறது. தமிழ் சங்கத்தில் நட்சத்திரங்களை எண்ணக் கேட்டபோது வீரமாமுனிவராகிவிட்ட பெஸ்கி முப்பத்து முக்கோடி என்றதாக ஒரு கதை படித்தேன். அதை சம்பவம் என்றும் குறிக்க இயலவில்லை. அந்த சமயத்தில் தமிழ் சங்கம் என்ற ஒன்று இருந்ததாக ஆதாரம் எதுவும் இல்லை. வீரமாமுனிவரின் எழுத்திலேயே கற்றோர் முன்னால் என்பதாகவே பெரும்பாலும் எழுதியிருக்கிறார்.

வீரமாமுனிவரைப் பற்றிய தகவல்களே அங்கொன்று இங்கொன்று என்று தப்பும் தவறுமாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுப்ரதீப கவிராயர் பற்றி சுத்தமாக எந்த தகலும் விக்கிப்பீடியாவில் இல்லை. வெளியிலும் அதிகம் எழுதப்படவில்லை. இன்னமும் உச்சமாக வீரமாமுனிவரின் கல்லறை பற்றி இன்னமும் நம் ஆய்வாளர்களிடையே தேடலும், சச்சரவும் தொடர்கிறது.

ஒரு விபத்து எப்படியான இடத்துக்கு உங்களை அழைத்து செல்லக்கூடும்? இந்த விபத்து ஒரு கணத்தில் நிகழ்ந்தது அல்ல. வெறுமனே இணையத்தை மேய்ந்து கொண்டிருந்த ஒரு பொழுதில், எதேச்சையாக நாம் அந்த இடத்தைக் கண்டடைந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியதே அதன் தொடக்கம். ஒரு மதத்தின் சேவைக்காக இங்கு வந்தவர், மொழியின் சேவகனாக மாறியதை எல்லோருமே ஆச்சர்யமாகப் பேசுவதுண்டு. முன்னூறு வருடங்களுக்கு மேல் ஆகிறது, இறந்துமே இன்னும் சிலமாதத்தில் இருநூற்றி எழுபது வருடங்களை தொடுகிறார்.

இணையத்தின் தலைமுறையாக என்னை சொல்லிக்கொள்ள ஒரு தயக்கம் உண்டு. இணையத்தின் அருகாமையில் அலுவல் தவிர்த்து நான் இல்லாததால் வரும் தயக்கம். ஆனால், தகவல் தலைமுறை என்று சொல்லிக்கொள்ள விரும்புவேன். இன்றைக்கு எங்கும் நிறைந்திருக்கிற தகவல்களால் கொஞ்சம் குழம்பிப் போகாமல் முடிவெடுக்கிற இயல்பை பெற்றிருக்கிற தலைமுறை. ஒரு சில மணிநேர தேடலும், வாசிப்பும் என்னை அவர் புதைக்கப்பட்டிருக்கிற இடத்தை பற்றிய தகவலின் முன்னால் நிறுத்தியது. கேரளத்தின் சாம்பாலூர்.

புனித அருளானந்தரின் கல்லறை அங்கு இருப்பதோடு, இன்னமும் பழைய தேவாலயத்தின் இடிபாடுகளைப் பாதுகாத்து வருகிறார்கள். அந்த காலகட்டத்தில் தமிழிலும் மலையாளத்திலும் புத்தகங்கள் அச்சேறிய ஒரு பதிப்பகம் அங்கு இருந்திருக்கிறது.

தொடர் வண்டியில் ஏறி உட்கார்ந்த பொழுதே நினைத்துக் கொண்டேன். சரியாக அந்த இடத்தைச் சென்றடைய உள்ளுணர்வை நம்புவோம் என்று. ஏனெனில் கேரளம் நம் மாநிலத்தை போல அல்ல என்பது எனக்கு தெரியும். கேரளம் முழுவதும் சுற்றி அலைந்த அனுபவம் இருந்தது. பொதுவாகவே சுற்றுலாக்கள் எனக்கு ஒவ்வாது அல்லது சாத்தியப்படாது. நான் சென்ற தொலைவுகள் அத்தனையுமே பயணம் என்றே குறிக்கவியலும். முக்கியமாக எந்த பெரிய சுற்றுலாத் தலத்திலும் என் கால் பட்டதேயில்லை. நினைத்தது சரியாகவே இருந்தது. என்னதான் நான் தேடிய இடம் திரிச்சூரில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தாலும் அது அந்த மாவட்டத்தின் எல்லையில் எர்ணாகுளத்தை ஒட்டி இருந்தது. ஆலுவாவில் இருந்து அரைமணி நேரத்தில் முரிஞ்கூர் டிவைன் இறங்கி (சாலக்குடிக்கும் போக அவசியம் இல்லை) இடது புறத்தில் செல்லும் சாலையில் ஒரு ஏழு கிலோமீட்டர். பேருந்துகள் குறைவு. நான் தொலைவு அறியாமல் நடந்தும், கொஞ்ச தூரம் ஒருவரின் வண்டியிலுமாகச் சென்று சேர்ந்தேன்.

ஒரு புகைப்படத்தில் நான் கண்ட தேவாலயத்தையும் அங்கு காணவில்லை. அதை இடித்து இப்போது புதியதாக ஒன்று கட்டிக்கொண்டிருக்கிறார்கள். சரியாக இப்போது எழுப்பிக் கொண்டிருப்பது நான்காவது தேவாலயம். தமிழகத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றபோது தேவாலயத்தில் இருந்தவர்கள் மகிழ்ந்தார்கள். சரியான இடத்தைக் காட்ட என்னோடு வந்து புதியதாக அந்த இடத்தைப் பார்ப்பதான குழந்தையின் பரவசத்தோடு ஒரு சகோதரி என்னிடம் விவரிக்கத் தொடங்கினார். என்னில் ஒரு வெறுமையே இருந்தது என்பதைக் கவனித்து கொண்டிருந்தேன். எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தேன். இருட்டத் தொடங்கி இருந்தது. அவர்களுக்கு நன்றி சொல்லி சில புகைப்படங்களை அந்த இருட்டிலேயே எடுத்தேன். கொஞ்ச நேரம் செலவு செய்துவிட்டு கடைசி பேருந்தை பிடிக்கிற அவசரத்தோடு வெளியே வந்தேன்.

அப்பட்டமாக எல்லாம் கண் முன்னே இருக்கிற போதும் நாம் ஏன் எல்லாவற்றுக்கும் ஒரு மலையளவுக்கான காரணங்களை கற்பித்துக் கொண்டு வெறுமனே உட்கார்ந்திருக்கிறோம்? தமிழகத்தில் இருந்து எவராவது வருவதுண்டு என்றார்கள். அப்போது நினைத்துக் கொண்டேன். இன்னும் எத்தனை விஷயங்களை நாம் என்னுடைய சொத்து என்கிற பாவனையில் ரகசியமாக வைத்திருக்கிறோம்? அல்லது நம்முடைய மக்களுக்கு தகவல்களே சரியாக போய்ச் சேருவதில்லையா? இருக்கலாம். நாம் கதைகளின் மேற்பரப்பிலேயே நின்று சோர்ந்து போகிறோம் அல்லது அவதூறுகள். ஆனால், நான் எழுத விரும்பும் கதைகள் வேறானவை.

கணியன் பூங்குன்றனின் வரிகள் கண்களில் படும்போதெல்லாம் நான் எவராவது இவ்வரிகளை மேற்கோள்காட்டி பேசுகிறார்களா என்று பார்ப்பேன். ஆனால், கடைசி வரியான சிறியோரை இகழ்வதைப் பற்றி பேசுகிற எவருமே அதற்கு முன் வருகிற வரியை அத்தனை அழுத்தம் கொடுத்து பேசுவதில்லை. அந்த வரியின் மீது நிறையவே காதல். தாந்தேவை போல அந்த வரி தொட்டு மொழியின்மீது காதல். கொஞ்சம் உலகத்தை இப்படியும் தான் பார்ப்போமே, இழப்பதற்கு ஏதேனும் இருக்கிறதா என்ன?
யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே
– கணியன் பூங்குன்றன்
– நாகபிரகாஷ்.
  nagaprakash@outlook.com

RELATED ARTICLES

1 COMMENT

  1. […] யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ; தீதும் நன்றும் பிறர்தர வாரா ; நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ; சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல் இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு வானம் தண்துளி தலைஇ, ஆனாது கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே – கணியன் பூங்குன்றன் யாவரும்.காம், 08 செப்டம்பர் 2016 […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular