ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தின்
கடல்
அலைகளில்
பிரளயத்தின் ரத்தம்
மரித்தவர்களின் புதைகுழியில்
துளிர்த்த சிறுசெடி
பெருங்கனவு
காற்றின் இதயத்துடிப்பில்
ஊழிச்சூறையின்
சாம்பல்
புதைத்தவைகளிலும்
புதைக்கமுடியாதவைகளிலும்
விதைத்தவைகளிலும்
விதைக்கமுடியாதவைகளிலும்
ஊதிப்பெருத்த நிணம்
பெருங்கனவின் நீரேரிக்குள்
உருகி இறங்குகிறது.
வேட்கைச் சந்தம் ஓங்கும்
இந்த யுத்தப் பாடலில்
ஏன் அதிர்கிறது
இரைதீரா படிமச் சுழல்.
ஏன் வழிகிறது
தீப்பிழம்பு
நாம் இனியும் எங்கு இடம்பெயர?
***
இறந்து போன உங்கள் அம்மாவை எங்கே புதைத்தீர்கள்?
அவள் இறக்கவில்லை
குண்டுகளால் கொல்லப்பட்டாள்.
சிதறிய அவளின் மாமிசத்துண்டங்களை
கடல் மணலில் அரித்தெடுத்தேன்.
புதைப்பதற்கு விருப்பமில்லாத அந்தச் சின்னஞ்சிறு மாமிசத்தை
“ஐ”வடிவ பதுங்குகுழியில் வைத்து
அழுது கரையாமல் கடலில் வீசினேன்.
நீச்சல் தெரியாத அம்மாவின் மாமிசம்
அலைகளில் எழுந்து மிதந்தது.
அம்மா போனாள்
ஊழின் முற்றுகைக்குள்ளால்
சாவின் திகைப்போடு.
***
படுகளத்தின் ஓலம் அறையும்
அதிகாலைக் கனவொன்றில்
விழித்தெழும்பும் போர்நிலத்து மகனே
நூறாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும்
குருதி மரபில் இந்தக் கனவு வரும்
அது
விதிக்கப்பட்ட துயர்யுகத்தின் பரிசு
திடுமென எமை விழுங்கிய இருட்டின் மிரட்டல்
குருதிப் புழுதியின் பேய் மழை
பெருங்கனவுக்கும்
வெறுங்கனவுக்கும்
நாமன்றி வேறு யார் சாட்சி சொல்வார்?
–
அகர முதல்வன் – மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கவிதைத் தொகுப்புகள், இரண்டு தொகுப்பு நூல்கள், ஒரு குறுநாவல் தொகுப்பு என வெளிவந்துள்ளன. பாகுபாடற்ற உரையாடல் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இவரது முன்னெடுப்பில் முள்ளிவாய்க்காலுக்கு பின்பான ஈழ அரசியல் மையமாக இருந்துவருகிறது. அந்தகம் இதழின் பொறுப்பாசிரியர்