தமிழில் : பிரஷாந்தி சேகரம்
20 ஆம் நூற்றாண்டு ஜேர்மன் இலக்கியத்தின் மிக முக்கிய கவிஞர், நாடக ஆசிரியர், நெறியாளர், தீவிர மார்க்சியவாதி பெர்டோல்ட் ப்ரெஷ்ட். Die Dreigroschenoper (The Threepenny Opera), Mutter Courage und ihre Kinder (Mother Courage and Her Children), Der gute Mensch von Sezuan (The Good Person of Szechwan), Der kaukasische Kreidekreis (The Caucasian Chalk Circle) மற்றும் Trommeln in der Nacht (Drums in the Night) என்பன நாடகத் துறையிலும், படைப்பிலக்கியத்திலும் உச்சம் தொட்ட பிரதிகள். போர்க்கால இருண்ட வாழ்வியல், அதன் விரக்தி, வெறுப்பு, இயலாமை, இழப்பு எல்லாம் ப்ரெஷ்டின் அரங்கில் (Epic Theatre) புதிய உத்திகள் மூலம் புது வடிவம் பெற்றன. அவரின் கவிதைகள் – அது தனி ஓர் உலகு. ஓர் அனிச்சப் பிறவியின் தனிமொழி.
பெர்டோல்ட் ப்ரெஷ்ட்டின் “தொடரும் சந்ததியினருக்கு” 1934 – 1938 காலப்பகுதியில் எழுதப்பட்ட ஒரு முக்கியமான அரசியல் கவிதை. இந்தக் கவிதையில் வரும் “தொடரும் சந்ததியினர்” மற்றும் “மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் ஒரு குற்றச்செயலாவது” எனும் வரிகள் அதிகப்படியான சர்ச்சைகளை உருவாக்கின. அதன் காரணமாக அந்தக் கவிதைக்கு பல எதிர்க்கவிதைகள் அல்லது பதில்கவிதைகள் வெவ்வேறு காலகட்டங்களில் Hans Magnus Enzensberger, Paul Celan, Walter Helmut Fritz, Hans Christoph Buch மற்றும் Erich Fried எனும் கவிஞர்களால் எழுதப்பட்டன. அவற்றைத் தமிழில் தொகுக்கும் ஒரு சிறு முயற்சி இது.
கவிதைகளின் மூலம்: ஜேர்மன்
தொடரும் சந்ததியினருக்கு – பெர்டோல்ட் ப்ரெஷ்ட் (1934-1938)
An die Nachgeborenen – Bertolt Brecht
***
I
மெய்யாகவே, நான் கொடுங் காலத்தினுள் வாழ்கின்றேன்!
தீங்கற்ற அந்தச் சொல் அற்பத்தனமாகி. சுருக்கங்களற்ற நெற்றி
பற்றற்ற நிலையைக் குறித்து நிற்கின்றது. சிரித்துக் கொண்டிருப்பவனுக்கு
அந்தக் கொடுஞ் செய்தி
இன்னும் காதில் எட்டவில்லை போலும்.
என்ன காலம் இது,
மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் ஒரு குற்றச்செயலாவது
அது எண்ணற்ற குற்றங்களை மௌனமாகத் தனக்குள் அடக்கிவைப்பதால்!
அமைதியாகச் சாலையை கடந்து சென்றுகொண்டிருப்பவன்
பேரிடரில் தவிக்கும் அவனது நண்பர்களுக்கு எட்ட முடியாது போகின்றானே?
மெய் தான்: என் இருப்புக்கானதை இன்னும் என்னால் சம்பாதிக்க முடிகின்றது
ஆனால் நம்புங்கள்: இதெல்லாம் வெறும் தற்செயலே. எதுவும்
நான் செய்வதில் என் வயிறு நிரம்புவதற்கான நியாயத்தைத் தரவில்லை
தற்செயலாகவே நான் பிழைத்துப் போகிறேன். (என் அதிஷ்டம் கைவிடும் நொடி நான் தோற்றேன் என்றாகும்.)
உண், அருந்து! அதெல்லாம் கிடைத்திருக்க மகிழ்ந்திரு என்றெனக்கு சொல்கிறார்கள்.
எப்படி நான் உண்பேன், தாகம் தீர்ப்பேன்?
நான் உண்பது, பசியுற்றவரிடம் இருந்து பறித்த உணவு
நான் அருந்துவது, தாகம்கொண்டு தவிப்பவருக்கான நீர்.
இருந்தும், நான் உண்கிறேன், தாகம் தீர்க்கிறேன்.
சற்று விவேகமாக இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்
புராதான நூல்களில் விவேகம் என்னவென்று உள்ளது:
உலகத்துச் சச்சரவுகளில் இருந்து விலகி இருப்பதும், சிறிது காலம்
அச்சமின்றி வாழ்வைக் கழிப்பதும்
வன்முறையின்றி வாழ்வதுமாகும்
தீயதை நல்லதுகொண்டு சரிசெய்தலும்
ஆசைகளைத் தீர்ப்பதல்ல, மறப்பதும்
அதுவே விவேகம்.
இதெல்லாம் என்னால் முடியாது:
மெய்யாகவே, நான் கொடுங் காலத்தினுள் வாழ்கின்றேன்!
II
அழிவு காலத்தில் நான் நகரங்களுள் வந்தேன்
பசி பரவிக் கிடந்தது.
கலவரக் காலத்தில் மனிதர்களுள் நான் வந்தேன்
அவர்களுடன் இணைந்து எழுச்சி கொண்டேன்.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.
எனது உணவை நான் படுகொலைகளுக்கு நடுவே உண்டேன்
எனது தூக்கம் கொலைகாரர்களின் நடுவே நிகழ்ந்தது
காதல், தங்குதடையற்று என்னை அங்கு ஒப்புக்கொடுத்தேன்
இயற்கை, பொறுமையற்று அதனைக் கவனித்தேன்.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.
எனது காலத்தில், பாதைகள் எல்லாம் சேற்றில் முடிந்தன
மொழியோ என்னை வெட்டிக் கூறுபோடுபவர்களிடம் காட்டிக்கொடுத்தது
எதற்கும் வல்லமையற்றுப் போனேன் நான். ஆள்பவர்களோ
நானின்றி மிகத்திடமாக இருந்தார்கள், அவ்வாறு நான் நம்பினேன்.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.
சக்தியெல்லாம் சிறுத்துப் போனது. இலக்கு
வெகு தூரத்தில் இருந்தது
மிகத் தெளிவாகவும் தெரிந்தது, எனக்குத் தான்
என்றுமே அடையமுடியாமல் போனது.
அவ்வாறே கரைந்து போனது
இந்தப் பூமியில் வாழ்வதற்கு எனக்கு வரையறுக்கப்பட்ட காலம்.
III
நாம் மூழ்கிய வெள்ளப்பெருக்கில் மேலெழுந்து வருபவர்கள் நீங்கள்
நினைவுகொள்ளுங்கள்
எமது பலவீனங்கள் பற்றிப் பேசும் போது
நீங்கள் தப்பி வந்த கொடுங் காலம் பற்றியும் பேசுங்கள்.
நகர்ந்தோம் தான், காலணிகளை விட அதிகமாக நாடுகளை மாற்றி
பிரிவினைகளின் போரினூடாக, நம்பிக்கையிழந்து
அநீதி மட்டுமே, எந்த வித எதிர்ப்புமற்று இருக்க.
நாம் உணர்ந்தோம் தான்:
சிறுமையை வெறுப்பது கூட
தோற்றத்தை மாற்றிவிடும்.
அநீதியை எதிர்த்தால்
குரல் கட்டிக்கொள்ளும். அட,
நேசத்துக்கான விதையை இந்த நிலத்தில் விதைக்க விரும்பிய நாமே
நேசமாக இருக்கமுடியாது போனோம்.
ஆனால் நீங்கள், அந்தக் காலம் வரும் போது
ஒரு மனிதன் சகமனிதனுக்கு ஓர் ஆதரவாளனாகும் போது
எம்மை நினைவுகூருங்கள்
நெஞ்சிரக்கத்துடன்.
***
1)
இரண்டு தவறுகள் – ஹன்ஸ் மக்நுஸ் என்சென்ஸ்பேர்கர் (1955 – 1970)
Zwei Fehler – Hans Magnus Enzensberger
***
ஒப்புக்கொள்கிறேன், அவரின் காலத்தில்
நான் சிட்டுக்குருவிகளை வைத்து பீரங்கிகளைத் தாக்கினேன்.
அது இலக்குத் தவறாத அடியல்ல,
என்பது தெரிந்த விடயம் தான்.
அதனை நான் மறுக்கவில்லையே,
இனி முழுதாக மௌனிக்க வேண்டும் நான்.
உறங்குவது, சுவாசிப்பது, கவிபாடுவது:
அது ஏறத்தாழ ஒரு குற்றச் செயலாகி விடாது.
முற்றுமுழுதாக மௌனிப்பது
புகழ்பெற்ற மரங்கள் பற்றிய அந்த உரையாடல் தொடர்பாக பேசாது இருப்பது.
பீரங்கிகளை வைத்து சிட்டுக்குருவிகளைத் தாக்குவது, அதன் பொருள்
எதிர்மறையான தவறுகளில் விழுவது.
2)
ஓர் இலை, மரமின்றி – போல் செலான் (1968)
Ein Blatt, Baumlos – Paul Celan
***
ஓர் இலை, மரமின்றி
பெர்டோல்ட் ப்ரெஷ்ட்டுக்கு உரித்தாகுக:
என்ன காலம் இது,
ஓர் உரையாடலே ஏறத்தாழ பெருங் குற்றச்செயலாவது,
அது எண்ணற்ற கருத்துக்களை
தனக்குள் அடக்கிவைப்பதால்?
3)
மரங்கள் – வால்டர் ஹெல்மூட் ஃப்ரிட்ஸ் (1975)
Bäume – Walter Helmut Fritz
மீண்டும் நகரத்தில்,
தரிப்பிடங்கள் உருவாக,
மரங்கள் சாய்க்கப்பட்டன.
அவர்கள் நிறைய அறிவார்கள்.
நாம் அவர்களின் அருகில் இருந்தபோது,
தோழமையுடன் வரவேற்றனர்.
இப்போதெல்லாம் ஏறத்தாழ
ஒரு குற்றமாகி விட்டது,
மரங்கள் பற்றிப் பேசாது இருப்பது,
அதன் வேர்கள், காற்று, அங்கு கூடடையும்
பறவைகள்,
அவை நினைவூட்டும்
பேரமைதி.
இயற்கை அல்லது: ஏன் இன்று மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் பெருங் குற்றச்செயலேயல்ல? – ஹன்ஸ் க்றிஸ்டோப் பூஹ் (1977 )
Natur. Oder: Warum ein Gespräch über Bäume heute kein Verbrechen mehr ist? – Hans Christoph Buch
என்ன நிகழ்ந்தது?
“மரங்கள் பற்றிய ஓர் உரையாடல் பெருங் குற்றச்செயலாவது” எனும் வாக்கியம்
ஏன் இன்று அதுவே ஏறத்தாழ ஒரு குற்றச்செயலாகி நிற்கின்றது? ஏனென்றால்
இன்னும் தெளிவில்லை, அடுத்த 100 வருடங்களில் இந்தப் பூமியில்
மரங்களே இருக்குமா என்பது,
மரங்கள் பற்றிய மௌனம் எண்ணற்ற குற்றங்ககளின் மௌனமாவதால்
அங்கு மரங்கள் மட்டுமே பலியாவதில்லை.
சந்ததியினரின் காலம் – ஏறிஷ் ஃபரீட் (1981)
Zur Zeit der Nachgeborenen – Erich Fried
ப்ரெஷ்ட் இறந்து 25 வருடங்களுக்கு பின்
“நாம் உணர்ந்தோம் தான்”
என்று நீ கூறினாய்
“சிறுமையை வெறுப்பது கூட
தோற்றத்தை மாற்றிவிடும்.
அநீதியை எதிர்த்தால்
குரல் கட்டிக்கொள்ளும். அட,
நேசத்துக்கான விதையை இந்த நிலத்தில் விதைக்க விரும்பிய நாமே
நேசமாக இருக்கமுடியாது போனோம்”
இதனைத் தான் நீ உனைத் தொடர்ந்த சந்ததியினருக்குக் கூறிச்சென்றாய்.
இப்போது நீ மௌனித்துப் போகிறாய். அநீதியை எதிர்ப்பது கூட
ஒரு சிலரின் குரல்களை இன்னும் கட்டிகொள்ளச் செய்கிறது.
பெரும்பாலானவர்கள் இப்போது சீற்றம் கொண்டு எதிர்ப்பது கூட இல்லை
அவர்கள் பழகிவிட்டார்கள் அன்று நிலவிய, இன்றும் நிலவும் அநீதிக்கு
இங்கும், அங்கும், தொலைவிலும், தீங்கிழைப்போர் தமக்குள் பேசிக்கொள்ளும்
கடுமையான சட்டங்களுக்கும்
சிறுமையை வெறுத்ததனால் தோற்றம் மாறியவர்கள்
அங்கும் இங்கும் மதில்களுக்கு பின் அமர்ந்திருக்கிறார்கள்
யாரும் அவர்களைப் பார்க்காத வண்ணம், சிறுமையோ
பல நாடுகளில் அதிகார வல்லமை பெற்று ஆட்சியுரிமை புரிகின்றது
கீழ்வர்க்கம் குனிந்து கொள்கின்றது அல்லது தம்மை விடுவிக்க மேற்கொண்ட
தோல்வி முயற்சிகளால் ஏமாற்றமடைந்து
வெறுப்பை வெளிப்படுத்த சக்தியின்றி
சமயங்களில் அது நேசத்துக்குரிய அறிகுறியாகின்றது
“மெய்யாகவே, நான் கொடுங் காலத்தினுள் வாழ்கின்றேன்”
என்று நீ கூறினாய்.
காலங்கள் வேறுபோலத் தான் ஆகிவிட்டன, ஆனால், உனது வரிகளுக்குப்
பிறகு அவை வெளிச்சம் காணவில்லை
அன்று போலில்லை, ஆபத்து இன்று இன்னும் அதிகரித்து
ஆயுதங்கள் மட்டுமே பலம் பெற்று, அதனை ஏந்திய மனிதர்கள் பலமிழந்து
அவர்கள் பற்றி நீ கூறிய இன்னொன்றும் மெய் தான்:
“நினைத்துப் பார்க்கவேண்டும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்
எங்கு செல்கிறார்கள் என்றும், இனிமையான
அந்திகளில் சோர்வடைந்து போய்”
இதுவெல்லாம் எந்த மாற்றமும் இல்லாமல் இருப்பதால், உனைத் தொடர்ந்த
சந்ததியினர் வெகு இலகுவாக உன்னை விளங்கிக் கொள்ளுவார், ஏன்,
இன்னும் உனக்குப் பிடித்தது போல, இருந்தும் நீ அத்தனை
புரிதல் காட்டினாய், ஆனால் நான் நினைக்கிறேன்
இறுதி வரை மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தாய்
எல்லாமே மாறுமென, புதிய காலத்தின் மனிதன்
இறந்த காலம் அறியாமல், உன்னைப் புரிய முடியாது தவிப்பான் என
உன்னை இன்னும் புரியமுடிவதால்
ஒரு சிலர் இன்னும் உன்னிடம் இருந்து கற்றுக்கொள்ளக் கூடும்
வாழ்வில் நம்பிக்கையை இறுகப் பிடிக்கவும், உன்னைப்போலவே
விவேகத்துடனும், பொறுமையுடனும், சீற்றத்துடனும் நேசத்துக்கான விதையை
இந்த நிலத்தில் தொடர்ந்து விதைக்க
ஒரு மனிதன் சகமனிதனுக்கு ஓர் ஆதரவாளனாகும் வரை
***
தேர்வும் தொகுப்பும் – பிரஷாந்தி சேகரம்