காலணி எழுதிய குறிப்புகள்
படைக்கப்பட்ட மனிதன்
ஏனோ சபிக்கப்பட்டும் விட்டான்
அவன் காலணியில் புதைந்திருக்கும்
துன்பங்களில் துயில்கொள்கிறான்
மருத்துவமனைக்குச் சென்று வந்த குறிப்புகள்
கடைக்குச் சென்று அதன் அடியில்
மிதிப்பட்டுப் போன சில தக்காளியின்
குமுறல்கள்
அவமானத்தின் அடையாளங்கள் நிறைய இருந்தும்
பேசாமல் அமைதி காத்தது அவன் காலணி
அவன் கோவிலுக்குச் சென்று வந்த
குறிப்புகளில் அவன் நம்பிக்கையிருந்தது
ஆனால் தெய்வத்தைப்பற்றி
ஒரு வார்த்தை கூட இல்லை
இரவில் அவன் நண்பனோடு அமர்ந்து
மது அருந்திய குறிப்புகளில்
நிறைய இன்பத்தின் பக்கங்கள்
நிறைய மனிதர்களின்
வடுக்களைச் சுமந்து வந்த காலணி
மனதைவிடப் பத்திரப்படுத்தியுள்ளது
அதன் பயணங்களை
என் மகளின் காலணியை
புத்துயிர்ப்பாய் வைக்கப் பிரியப்பட்டேன்
ரெனே மாக்ரிட்டின் ஓவியங்களை
அவளிடம் அறிமுகப்படுத்தினேன்
அவள் அடிக்கடி காலணியை
மாற்றிக்கொண்டேயிருந்தாள்.
*
அறிவிப்பு
சில நேரம் தானாகவே
விலகிக்கொள்கிறது மனது
இந்த பசுமையான மரங்கள் கூட
பாலைவனமாக மாறிவிட்டது போல் உணர்வு
சில நேரம் உப்புக் காற்றில் உரையாடிவிட்டு
ஏக்கத்தோடு திரும்புவது வழக்கம்
சில நாட்களாக அதுவும் இல்லை
அங்குள்ள கரும் பாறைகள்
என் அமர்விற்காக ஏங்குவது போல்
பாவனை செய்து அதனிடம் அமர்ந்து
பேசியது உண்டு
இந்த மனித வர்க்கத்திற்கு மட்டும்
இத்தனை ஆசுவாசங்கள் தேவைப்படுகிறது
அது மரணத்திற்கும் வாழ்க்கைக்கும் இடையில்
எதையோ எழுதியபடி ஓடிக்கொண்டிருக்கும்
தத்துவங்களையும்
கருத்துகளையும்
அறிவுரைகளையும்
தாண்டிச்செல்லவே எண்ணுகிறது மனது
இருந்தாலும் நானும் எழுதுகிறேன்
தொடர்ச்சியான மலைகளிலும்
பெரும் பாறைகளிலும்
நீளமான நதிகளிலும்
என் அறிவிப்புகள்
அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
அது கடலிலும் காடுகளிலும் கலந்து
நடனமிடக் காத்திருக்கிறேன்
மரணத்திற்காக மனம் அமைதியாக
மனிதனிடம் சண்டையிட்டு
காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
அதைத்தாண்டி ஆழ்ந்த இருப்பில்
என் அறிவிப்புகள் பயணப்படுகிறது
*
தினம்
இதுவே கடைசி
எனக் காத்திருக்கும்
நேரத்தில்
மீண்டும் நிலவின்
வெளிச்சம் நழுவி
காயத்தைத் தள்ளுகிறது
எலும்பு நழுவி
நீந்துகிறது
உதிர்ந்த இலையைப்போல
இந்த கரை இத்தனை
வேதனையைச் சுமக்கிறது
*
உனக்கும் எனக்குமான
இந்த ஒப்பந்தத்தில் நழுவுகிறது
இந்த கல்
நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக்கொண்டே
அதன் பெயரற்ற நிலையில்
அந்தக் கல் மீது அமரலாம்
அதை இடம்பெயரச் செய்யலாம்
வலியைப் பொறுத்துக்கொண்டே
தனி அறையில் வெறுப்பு
அதன் உளி வலிகளைப்பற்றி
ஒருநாளும் யாரும் கேட்டதில்லை
அந்தக்கல்லுக்குப் பிடிக்காத பாடல்
பிடிக்காத பால்
பிடிக்காத மனிதர்களை ஏக்கத்துடன்
பார்த்தது
கதவைத் திறந்திருக்கும்பொழுது வரும் காற்று
பெய்யும் மழை
தெரியும் வானம்
எனப் பழைய நிலைக்கு மாற நினைக்கும்
கல்லைப்பார்த்து
அழைக்கிறது பிரபஞ்சம்
புதிய நிலைக்குச் செல்வதாக
தவித்துக்கொண்டே நடக்கும்
மனிதர்களுக்குள்
வெளிச்சமே பார்த்தறியாத
இருட்டறையே மூலஸ்தானம்
அதிலிருந்து வெளியேறுகிறது
பதற்றத்துடன் பாடல்
*
மரணத்தில் துளிர்விடும்
மண்டையோடுகளின் அலறலில்
அவிழ்கிறது வாழ்ந்து முடித்த எச்சங்கள்
கானல் நீரின் மேல்
சிறிது கண்ணீர் ததும்புகிறது
நெஞ்சில் ஈரத்துடன்
பிணத்தைச் சுற்றிய ஈமச்சடங்குகள்
எலும்பை அரித்துச் செரிக்கும்
மண்ணிற்கும் அதிகாரத்திற்கும்
தொடர்பை ஏற்படுத்தி
நடுங்கச்செய்கிறது நிலம்
மரணித்தலில் ஒரு விதை
உயிர்பெறுகிறது
மரணித்தலில் மனித உடல் எங்கு
மீண்டும் ஜீவிக்கிறது
ஞானத்திற்கும் மரணம் உண்டு
தியானத்திற்கும் மரணம் உண்டு
வாழ்க்கை சங்கிலியின் தொடர் ஓட்டமே
மரணத்தை எதிர்முனையில் இழுத்து
விளையாடுவதுதான்
மரணித்துப்போன படிமங்களின்
கார்பன் ஐசோடோப்புகளின் நிழலில்
இளைப்பாற மண் அழைக்கிறது
பழைய கால நினைவுகளை
அசைபோட வைத்து
நடப்பு திசையை
இழுத்துச் செல்கிறது மண்
எச்சங்களால் நிரம்பிய மண்ணிற்கு
முத்தங்களால் நிரம்பும் அளவிற்கு
மண்ணில் ஏற்புடைந்து சிதறும்
உயிர் குரலின் ஆழத்தில் தீவிரம்
கால் தடங்களின் புணர்ச்சியில்
உயிர் பெறும் மண்ணை
ஆதி அணு அசைத்துப்பார்த்த லௌகீகம்
திகைப்படையச் செய்து கொண்டே
இடம்பெயர்கிறது கோளம்
*
தொலைதலில் இன்பம்
தொலைந்து போகலாமென
சில கிலோமீட்டர் தூரமுள்ள
வனத்திற்குச் சென்றேன்
மனிதனைக் கொலைகாரனென
அழைத்தது மரம்
ஆம் பச்சை ரத்தம் குடிக்கும்
அரக்கக் குணமே மனிதனென்றாள்
வனயட்சி
அவள் அழகின் ரீங்காரத்தில்
வனயட்சனாக தொலைந்து போனேன்
வன இலைகள் காற்றை மீட்கும்
லயத்தில் ஓர் ஈர்ப்பில் கலந்தேன்
ஆதி மரத்தின் வேர்களில் ஒட்டியிருந்த
ஆதிமண்ணின் உருவம் மாறாத
அன்பின் ஒளி வனமெங்கும்
அங்கு ஆதியில் பிறந்த விதையொன்றின்
தொடர்ச்சியில் அலறியது
மனிதனைப் பார்த்த
காட்டு மிருகமொன்று
வேட்டை ஆர்வம் இரண்டு சிவப்பு
மிருகத்திற்குள்ளும் அலறியது
சிவப்பு ரத்தத்தைப் பச்சை ரத்தத்தோடு
சேர்த்துக் குடித்தான் மனிதன்
காடு
மலை
சமவெளி
பள்ளத்தாக்கு
என வேட்டையாடிய மனிதன்
வேற்று கிரகத்தையும் வேட்டையாடுவதை
பார்த்து அலறியது காடு
தேடலுள்ள மிருகத்தின் குரலாய்
மனிதன்
*
தேடலற்ற அமைதியில் காட்டுச் சுதந்திரம்
அலறிக்கொண்டேயிருக்கிறது
நான் வனயட்சியோடு தொலைந்து போனேன்
அதன் நீட்சியில் எந்த சொல்லைக் கொண்டும்
நீங்கள் நிரப்பலாம்
காமம்
தியானம்
காடு
புத்தகம்
நண்பன்
பாடல்
கடல்
பூ
இப்படித் தொலைவதற்கு
ஏதாவது ஒன்று தேவைப்படுகிறது.
*
மரண விலாசம்
மரணத்தைத் தவிர
இந்த பூமியில்
நிலையாக அடைய
ஒன்றுமில்லை
ஆமாம்…
சொர்க்கம்
நரகம்
மரணத்தின் முகவரி
என எழுதப்பட்டிருக்கிறதே
சொல்லப்பட்டிருக்கிறதே
காட்டப்படவில்லை…
நான் கடவுள் என்கிறார் ஒருவர்
மரண விலாசம் தெரியாமலேயே
கொஞ்சம் வி(தை)ந்து
கருமுட்டையில் விலாசம் அமைத்து
மரணிக்கத் தொடங்குகிறது எல்லாமும்
நமக்குத் தெரிந்த
மரண விலாசம்
இந்த உடல் தான்
உயிர் பிரியும் இடமெல்லாம்
சுடுகாடுதான்
பூமியின் ஒவ்வொரு துகளும்
சவத்தைத் துளிர்க்கச் செய்யும்
முயற்சியில் தோற்கிறது