1)
மிச்சமிருக்கும் வாழ்வனைத்தையும்
காதலால் நிரப்பிக் கொள்வதென
கடவுளோடு நானோர் ஒப்பந்தம்
செய்து கொண்டேன் மாயா
கடவுளுக்கும் மனுஷிக்கும் இடையில்
ரகசியங்கள் ஏதுமற்ற
முடிவிலி முத்த மொழியில்
காதல் கதைகளைப் பேசிக் களிப்பதெனவும் தான்.
கடந்த காலத்தின் வடுக்களை
முத்தங்கள் கொண்டு
ஆற்றிவிடுவதாய்ச் சொல்லி
உள்ளங்கையில் முத்தமிட்டார் கடவுள்.
அன்றைய இரவில்
காதல் என்பது கடவுளின் அண்மையை
அடைவதற்கான வழி என
எழுதி வைத்தேன்.
ஆனால் மாயா,
கடவுளுக்கு வேறு நிறைய வேலைகள்
இருக்கின்றன என்பதை
மறந்தே போனேன்.
உள்ளங்கை முத்தத்தின் போதையில்
கடவுளை அணைத்துக்கொள்ள நினைத்தபோது
மதுக்கோப்பையைக் காலி செய்துவிட்டு
நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த இரவிலும் பொம்மையை
அணைத்துக் கொண்டுதான் உறங்குகிறேன்
***
2)
தனக்கான உணவை ரசித்துண்ணும்
பூனைகுட்டியைப் போல
இந்த வாழ்வை
ருசித்து உண்ணக் கற்றுக் கொண்டேன்.
இப்போதெல்லாம் இந்த உடலை விட்டு
வெளியேறி
பூனையாக அடியெடுத்து வைக்கிறேன்.
அன்பின் நிமித்தம் காலுரசி நடப்பதைப் போல
இந்த வாழ்வின் பாதங்களை
உரசுகிறேன்.
சொரசொரப்பான நாவினால்
வருடிக் கொடுப்பது போல
என் துயரங்களை வருடிக் கொடுக்கிறேன்.
எந்த இடத்திலும் எந்த நிலையிலும்
ஆழ்ந்துறங்குவதைப் போல
எனது துரோகங்களை அணைத்தபடி
உறங்குகிறேன்.
வேட்டையாடிய உணவை
மிகுந்த பெருமிதத்தோடு
வீட்டிற்குக் கொண்டு வருவதைப் போல
எனது மகிழ்ச்சியைத் தூக்கிச் சுமக்கிறேன்.
வாழ்வின் ஜன்னல் வழி வெளியேறி
உள்நுழைய கற்றுக் கொண்டபின்
மரணத்தின் நுழைவாயில்கூட
வீட்டின் சாயலைப் போல்தான் இருக்கிறது.
நான் யாசிப்பதெல்லாம்
ஏதோவொரு மலைமுகட்டின் மடியில்
அல்லது
யாருமற்ற தீவின் அரவணைப்பில்
பூனைக்குட்டியைப் போல
படுத்துறங்குவதைத்தான்.
பூனைக்குட்டிகளோடு வாழப் பழகியபின்
நானொரு பூனைக்குட்டியாக
மாறிப் போனேன்.
இந்தப் பூனையை மன்னித்துவிடு மாயா.
***
3)
மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன் மாயா.
அந்தப் பெரிய மலையில் நாம் சேர்ந்து நடப்போம்.
அது மிக உயரமான மலை.
குழந்தைகளின் ஓவியங்களில்
நீண்டு வளர்ந்து நிற்கும்
மலையைப் போல
மிகப் பிரம்மாண்டமான மலை.
இன்னும் சொல்லப் போனால்
மாயாஜாலக் கதைகளில் வரும்
ஏழுகடல் தாண்டி இருக்கும்
ஏழு மலை அது.
நாம் அங்கே நடந்து செல்வோம்.
ஒவ்வொரு மலையாக ஏறி
அடுத்த மலைக்குச் செல்வோம்.
முடியுமெனில் ஒரு பறவையைப் போல
பறப்போம்.
மேலும்,
மேகங்கள் தோள் உரசிச்செல்ல
கொஞ்சமாய் வெயில் குடித்து
நாம் மேலேறிச் செல்வோம்.
நமது பயணத்தில் கொஞ்சமாய் இளைப்பாற
அங்கே மலைமுகடுகள் இருக்கின்றன.
வானத்திற்கும் பூமிக்கும் இடையில்
ஒரு பற்றுக்கோடென அங்கே
கால்நீட்டி அமர்ந்து கொள்வோம்.
அதுவரையிலான பயணத்தின் கதைகளை,
பயணத்தின் களைப்பைப் பேசித் தீர்ப்போம்
அந்த மலைகளிடம்.
மலையின் மேலே செல்லச்செல்ல
மூச்சுத் திணறும் என்று சொல்கிறார்கள்.
ஒன்றும் பயமில்லை.
நாம் காற்றுக்குப் பதிலாக
மலையைச் சுவாசிப்போம்.
நமது நெடும்பயணத்திலெல்லாம்
நமக்கான உணவைச் சேமித்து வைத்துக் கொண்டு
அழைக்கும் நிலம் போல
இந்த மலையும்
நமக்கான உணவை
நமக்கான நீரை
நமக்கான காற்றை
நமக்கான பாதையை உண்டாக்கித் தரும்.
மேலும்
அன்றொரு நாள்
நாம் கனவில் நடந்து சென்ற மலைதான்.
அத்தனை ஒன்றும் கடினமாக இருக்காது.
***
மனுஷி – புதுச்சேரியைச் சேர்ந்த இவர் சாகித்திய அகாதமியின் யுவபுரஸ்கார் பெற்றவர் (2017ம் ஆண்டு).
குட்டி இளவரசியின் ஒளிச்சொற்கள்-மித்ரா பதிப்பகம் (2013), முத்தங்களின் கடவுள்-உயிர்மை பதிப்பகம் (2014), ஆதிக் காதலின் நினைவுக்குறிப்புகள்-உயிர்மை பதிப்பகம் (2015)
அருமை. காதலும் கடவுளும் முத்தமும் மதுக்கோப்பையும் சாலச் சிறப்பு.