Saturday, November 16, 2024
Homesliderமன்னிப்பு

மன்னிப்பு

  • சங்கர்

சிற்றுந்திலிருந்து இறங்கினான். இறங்கும்போது ஒரு படிக்கும் அடுத்ததிற்கும் உள்ள தூரத்தை, கடைசி படிக்கும், ரோட்டிற்கும் உள்ள தூரத்தை சரிபார்த்துக் கொண்டே இறங்கினான். மின்விசிறி ஓடும் சத்தம் மட்டுமே கேட்கும் அறையைப் போல் பேருந்து ஓடும் சத்தம் மட்டுமே கேட்ட ஒரு மணிநேர அமைதியான பயணத்தின் விளைவு. அவனுக்கு சந்தோசம்தான் அதில். எதில் பயணித்தாலும், பேருந்தோ, ரயிலோ பக்கத்து இருக்கையில் யாரும் அமரக்கூடாது என்பது அவன் ஆசையாய் இருக்கும். இன்று ஒருபடி மேலே போய் ஆட்கள் பேச்சு சத்தம்கூட இல்லாமல், முன்னே பின்னே வேறு எந்த வாகனங்களும் இல்லாமல் பயணித்தது புது அனுபவமாய் இருந்தது அவனுக்கு.


இறங்கிய இடத்திலிருந்து அவன் ஊர் மூன்று கிலோமீட்டர் தூரத்திலிருந்தது. நடந்துதான் போக வேண்டும். எப்போதுமே அந்த நிறுத்தத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்காது. இன்று கைவிடப்பட்ட நிழற்குடையும், பெரியார் சிலையும் மட்டும்தான் இருந்தது. பிரதான சாலையிலிருந்து பிரிந்து ஊருக்குள் போகும் சாலையைப் பார்த்தான். நீரோடிய பாறையில் தெரியும் கோடுகள் போல் சில வருடங்கள் முன்புவரை கூட மண் பாதையாகத்தான் இருந்தது. எப்போது அந்த சாலை முன் வந்து நின்றாலும் அவனுக்கு வளைந்து, நெளிந்து கிடக்கும், நூற்கண்டிலிருந்து அறுந்துபோன ஒரு நூலைப்போல் தெரியும். கையில் எடுத்து எத்தனையோ முறை சுருட்டி, ஒரு பொட்டாக்கி ஊதியிருக்கிறான். தீடீரென்று ஒரு காலை கற்களையும், தாரையும் கொட்டி அழுக்காக்கி விட்டார்கள்.

“இந்தப் புதிய தார்ச்சாலை ஊரைவிட்டுப் பிரியும்போது உதவுவதைப்போல் ஊருக்குள் வரும்போது உதவுவதில்லை. ஊருக்குள் காலை எடுத்துவைக்கும் வரை எங்கேயோ போவதைப் போன்ற உணர்வைத்தான் கொடுக்கிறது.” நடக்கத் தொடங்கினான்.

இனம் புரியாத மகிழ்ச்சியால் மனம் நிறைந்து வழிந்தது. பேருந்து சத்தம் போய் அந்த இடத்தைக் காற்று எடுத்துக் கொண்டது. எப்போதும் வானம் நிறைக்கும் காகங்களைக்கூட காணவில்லை. திரைச்சீலை ஓவியம்போல் கண்முன்னே கிடக்கும் பரந்த நிலக்காட்சியை முழுமையாகப் பார்க்க முயன்றான். கருவேல முற்செடிகள் தான் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தன. ஆடு, மாடு மேய்ப்பவர்கள் யாரும் தெரிகிறார்களா என்று பார்த்தான். சாலையின் இரண்டு பக்கங்களிலும் பனை மரங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. “ஒருவேளை இந்தக் காகங்கள்தான் பனைகளாக உருமாறி நிற்கின்றனவா”. சிரிப்பு வந்தது அவனுக்கு. கூடவே சில எண்ணங்களும்.


***
அவன் வீட்டில் மொத்தம் நான்கு பேர்கள். அப்பா, அம்மா, தம்பி மற்றும் அவன். படித்து முடித்து சில வருடங்களுக்கு மேலே ஆகியும் வேலை கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் “கவலப்படாத கிடச்சுரும்” என்று சொல்லிக் கொண்டிருந்த அப்பா நாளாக நாளாக “பிடிச்ச வேலக் கிடைக்கலன்னா கிடச்ச வேலையப் பாரு..” என்று சொல்ல ஆரம்பித்தார். “அப்பா சொல்றதும் நியாயம்தான தம்பி.. கோவிச்சுக்காம யோச்சிப் பாரு” என்றாள் அம்மா. தம்பி படித்துக் கொண்டிருந்ததால் எதுவும் சொல்லவில்லை.

அப்படி ஒன்றும் ஒரு குறிப்பிட்ட வேலைக்குத்தான் போகவேண்டும் என்று எந்த பிடிவாதமும் பிடிக்கவில்லை அவன். உண்மையில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரிக்கு என்ன வேலை கிடைக்கும் என்று தெரியாது அவனுக்கு. சிலசமயம் அவர்கள் சொல்வது நியாயமாகப் படும். பல சமயம் எரிச்சலாக வரும். பழையப் படமொன்றில் கேட்ட பழமொழிகளை நினைத்துக் கொள்வான். சரியாகத்தான் சொல்லியுள்ளார்கள்: கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய். தம்பியைப் பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லையோ.


***
தொடர்ந்து நடந்தான். வெய்யில் கொஞ்சம் கொஞ்சமாக அவன் தலைக்குமேல் ஏறிக்கொண்டிருந்தது. காலை வெய்யில் எப்போதும் ஒரு மெல்லிய சோகத்தை உண்டு பண்ணக் கூடியவை. கண்ட கனவுகள் மறந்து போயிருக்கும். முந்தய நாளின் ஏக்கங்கள் நினைவிற்கு திரும்பியிருக்கும். ஒரு நீண்ட நாள் மீதமிருக்கும் நம்பிக்கையில் “சரிதான் பார்த்துக் கொள்ளலாம்” என்று தோன்றும். “இல்லை.. ஒரு பத்து நிமிட நடையில் மனம் ஏன் கண்டதை நினைக்கிறது. இந்த வெயில்தான் எவ்வளவு அழகாக இருக்கிறது.

யாருமற்ற வேளைகளில் எல்லாமும் எப்படி வேறோர் உருவம் கொண்டு விடுகின்றன.” அவன் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டான். சிற்றுந்திலிருந்து இறங்கும்போது இருந்த மனநிலையைத் தக்க வைத்துக் கொள்ள, நீட்டிக்க விரும்பினான்.


எப்போது, எவ்வளவு பிரகாசமான வெளிச்சத்தில் பார்த்தாலும் காலத்தைச் சில வருடங்களுக்கேனும் பின் நகர்த்தும் வல்லமை கொண்ட, காது கொடுத்து கேட்டால் பல கதைகளைச் சொல்லக் கூடும் என்பதுபோல் பழுப்பு நிறத்தில் நிற்கும் அந்தச் சிறியப் பாலத்தை அடைந்தான். அவர்கள் ஊரை காலம் காலமாக வளமான பூமியாய் வைத்திருந்த நந்தியாற்றில் கட்டப்பட்ட பாலம் அது. ஒரு காலத்தில் பாலத்திற்கு மேல் நுரைத்துப் பொங்கி ஓடிய நதி இப்போது இல்லை.

“கீழ பாத்து நடக்காத. தண்ணி ஓடுறதப் பாத்தா அது அப்படியே இழுதுட்டுப் போயிடும். கையப் பிடிச்சுக்கோ” என்று சொன்ன அப்பாவும் இப்போது இல்லை. எரிச்சலாய் வந்தது அவனுக்கு. “இந்த மனிதர்களால் பூமி தொலைத்த எண்ணற்ற நதிகளில் இதுவும் ஒன்று. எதற்காக இவ்வளவு அழிவுகளை நிகழ்த்துகிறார்கள்… எதற்காக இவ்வளவையும் இந்த பூமி பொறுத்துக் கொண்டிருக்கிறது. கனவுகள் தொலைந்து போகலாம்; மறந்து போகலாம்; பறிக்கப்படுவதை ஒருவர் எவ்வாறு பொறுத்துக் கொள்ள முடியும்…” அமைதியாக சில நிமிடங்கள் நின்றான். எதுவோ மீண்டும் ஆரம்பிக்கிறது, மனம் சம்பந்தமில்லாத அல்லது பொய்யான எண்ணங்களை உருவாக்கி அதை மறைக்கப் பார்க்கின்றது என்று புரிந்தது அவனுக்கு. உண்மையில் அந்த நதிக்காகவா வருத்தப்பட்டோம் என்ற கேள்வியைக் கேட்டுக் கொண்டான்.

அவன் கேள்விகளுக்கு விடையளிக்க விரும்பாதவளைப் போல் மௌனமாக ஓடிக்கொண்டிருந்த நதியின் நிழலைப் பார்த்துக் கொண்டிருந்தவன் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பவனைப் போல் தலையைக் கீழே போட்டு இரண்டு நிமிடம் அமைதியாக இருந்துவிட்டு எழுந்து நடக்கத் தொடங்கினான்.


அவனுக்குப் பெண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து வளர்க்க வேண்டுமென்று நீண்ட நாளாக ஆசை. “குழந்தைகள்தான் எவ்வளவு அதி அற்புதமானவர்கள். அவர்களின் பிஞ்சுக்கைகளால் நம்மைக் கட்டிக்கொள்ளும் போது நாம் கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்டவர்களாகிறோம். நம் தோள்களில் அவர்கள் உறங்கும்போது அந்தக் கடவுளாகவே மாறி விடுகிறோம். அதிலும் பெண் குழந்தைகள்…. எப்போதிருந்து இந்த ஆசை என்பது அவனுக்கே உறுதியாகத் தெரியவில்லை. ஏன் என்ற கேள்விக்கும் அவனிடம் விடையில்லை. நகரத்தில் இருக்கும்போதெல்லாம் கடற்கரையிலும், வணிக வளாகங்களிலும் பெற்றோரோடு வரும் குழந்தைகளைப் பார்ப்பதற்காகவே வாராவாரம் அங்கு செல்வான்.

அங்குமிங்கும் ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கடைசியாக ஓடி வந்து தங்கள் பெற்றோரின் கால்களைக் கட்டிக்கொள்ளும் காட்சியைப் பார்த்தால்தான் அவன் மனம் திருப்தியுரும். ஒரு சில முறை அவனே குழந்தையைக் தூக்கிக் கொள்ளுங்கள், கூட்டமாக இருக்கிறது என்று பெற்றோர்களிடம் போய்ச் சொல்வான். அவர்கள் தூக்கிக்கொள்ளும் வரை நகர மாட்டான்.


அவன் அம்மாவிடம் முதன்முதலாக தன் ஆசையைச் சொன்னபோது அவள் அதெற்கெல்லாம் ஒரு வயது இருக்கிறதென்றும், ஏன் தத்தெடுக்க வேண்டும் திருமணம் செய்துகொண்டால் அவனுக்கே குழந்தைகள் பிறக்கும் என்றும் சொன்னாள். அவன் மனதின் ஓரத்தில் எப்போதும் அந்த எண்ணம் இருந்து கொண்டே இருக்கும். தான் நிச்சயம் நல்ல தந்தையாக இருப்பேன் என்று அடிக்கடி சொல்லுவான். ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்ளும் குழந்தையை அவனால் கற்பனை செய்யாமல் இருக்க முடியாது. “வார இறுதியில் பைக்கில் உட்கார வைத்துக்கொண்டு ஊரைச்சுற்றி வருவேன். நாங்கள் கடல் பார்க்கப் போவோம். எத்தனை தகப்பன்களுக்கு குழந்தைகளை கடல் பார்க்க கூட்டிக்கொண்டு போக வாய்ப்பிருக்கிறது. கடலையே பார்க்காமல் வாழ்ந்து மடிந்து போகும் எத்தனை எத்தனைப் பேர் இவ்வுலகில் இருக்கிறார்கள். நிச்சயம் கடற்கரை இல்லாத ஊரில் என் குழந்தையை வளர்க்க மாட்டேன்”.

எப்போதெல்லாம் இந்தப் பேச்சை எடுக்கிறானோ அப்போதெல்லாம் அவன் அம்மா அவனைக் கவலையோடு பார்ப்பாள். ஒருமுறை தனக்கு வயசாகிக்கொண்டே போவதாகவும், குழந்தையை வளர்க்கவெல்லாம் தனக்கு சக்தி இல்லை எனவும், சீக்கிரம் வேலைக்குப் போனால் திருமணம் செய்துவைத்து விடுகிறேன், உன் மனைவியோடு நீ சந்தோசமாக குழந்தையை வளர்க்கலாம் என்றும் சொன்னாள். அவனுக்கு ஏனோ தன்னோடும் தன் குழந்தையோடும் பைக்கில் இன்னொரு பெண் வருவது யோசிக்க முடியாததாக இருந்தது.


***
நீண்ட நேரமாக தார்ச்சாலையில் நடப்பதற்கு அலுப்பாக இருக்கவும் ஒரு இடத்தில் பிரிந்த கிளைச்சாலையொன்றில் இறங்கி நடக்கத் தொடங்கினான். அதுவும் அவன் ஊருக்குத்தான் போகும். கொஞ்சம் சுற்றிப்போகும். “வாழ்க்கை என்பது கண்களைத் திறந்து மூடி விளையாடும் விளையாட்டைத் தவிர வேறென்ன. விளையாட்டு நிற்கும்போது கண்கள் திறந்திருக்குமா அல்லது மூடியிருக்குமா என்பதில் மட்டும்தானே சுவாரசியம் உள்ளது. அதற்கு நடுவில் நாம் எதைச் செய்தால்தான் என்ன.. எங்கு எப்படிப்போனால் என்ன”. அடிநாக்கில் ஊறி வரும் கசப்பில் அவன் மனம் நிலைகொள்வதை தவிர்க்க முயன்று கொண்டேயிருந்தான்.


சிறிது தூரத்திலேயே கடைகள் தென்படத் தொடங்கின. ஆனால் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. சில கடைகளைப் பார்க்கும்போது அவை சோகமாக இருப்பவை போலிருந்தது. சிலது சந்தோசமாகவும், சில எவ்வித உணர்ச்சியையும் காட்டாதவையாகவும் தோன்றின. மனிதர்கள் பலவற்றை மறைத்து வாழ்கின்றனர். அவர்களால் உலகில் பலவும் ஊமையாக இருக்கின்றன. அவர்கள் இல்லாதபோது சுதந்திரமாக அவை வெளியே வருகின்றன. ம்ஹ்ம்… பெயிண்ட் அடிக்கப்பட்ட கடைகள் சந்தோசமாகவும், அழுக்கான கடைகள் சோகமாகவும் தெரிகின்றன என்று நினைத்துக் கொண்டான்.

பள்ளியில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆறாவதோ ஏழாவதோ.. முதல்நாள் முதல் வகுப்பில் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளச் சொன்னார் வகுப்பாசிரியர். பிடித்த உணவு என்ன, பிடித்த விளையாட்டென்ன, பிடித்த நடிகர் யார், பிடித்த விலங்கு, பிடித்த பறவை, பிடித்த வண்ணம்.. தன்முறை வந்தபோது எல்லாவற்றிற்க்கும் பதில் சொன்னவன் பிடித்த நிறம் என்ற கேள்விக்கு மட்டும் என்ன பதில் சொல்ல வேண்டுமென்று தெரியாமல் விழித்தான். அவனுக்கு எல்லா நிறங்களும் பிடிக்கும் போலிருந்தது. அல்லது எதன் மீதும் பெரிய அபிப்ராயம் இல்லை. விதவிதமான வண்ணங்களில் இருந்த கடைகளை மீண்டும் ஒருமுறை பார்த்தான். இப்போதாவது தனக்கு பிடித்தமான வண்ணம் எது என்று சொல்ல முடிகிறதா என்று சிறிது நேரம் நின்று பார்த்தவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.


கடைகளைத் தாண்டியவுடன் இருபுறத்திலும் வீடுகள் வரத் தொடங்கின. சிறிதும், பெரிதுமாய் விதவிதமான வண்ணங்கள் அடிக்கப்பட்ட வீடுகள். “ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர்கள் இருப்பார்கள் என்று யோசித்தான். குறைந்தபட்சம் நான்கு பேர்கள் இருக்கலாம். எத்தனைக் குழந்தைகள் இருக்கும்… அவைகளெல்லாம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கும்.? தந்தையிடம் இருக்குமா? தாயிடம் இருக்குமா? குழந்தைகள் உலகில் சரியென்றும் தவறென்றும் எதுவுமில்லை தானே.. சில நேரங்களில் ஒரு குழந்தையாக மாறிக்கொள்ள முடிந்தால் நம்மை நாமே மன்னித்துக் கொள்ள முடியும் தானே…” எதை மறைக்க அல்லது மறக்க தள்ளித்தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறானோ அது தொண்டை வரை வந்துவிட்டதை உணர்ந்தான். அவன் நடையின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது.


சட்டென்று அவன் போய்க்கொண்டிருந்தப் பாதையில் இருந்த எல்லா வீடுகளின் ஜன்னல்களும் திறந்து கொண்டன. பலஜோடிக் கண்கள் உள்ளிருந்து அவனைப் பார்ப்பதைப் போலிருந்து அவனுக்கு. நடையின் வேகத்தை அதிகரித்தான். நடந்தான் என்று சொல்வதை விட ஓடத்தொடங்கினான் என்றுதான் சொல்லவேண்டும். ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகள் ஊர் முழுவதும் மனிதர்களால் கைவிடப்பட்டதைப் போன்ற உணர்வை அவனுக்குத் தந்ததிருந்தது. திடீரென்று மனிதர்கள் இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்கிறார்கள் என்ற உணர்வு அவன் அடிவயிற்றில் ஏதோ செய்தது. என்ன நடக்கிறது இங்கு?! யாரேனும் பெரிய தலைவர்கள் இறந்துவிட்டார்களா? சாதி, மதக்கலவரம்? இயற்கைப் பேரிடர்.. அப்படி இருக்க வாய்ப்பில்லை. பலவிதமான எண்ணங்கள் அலைமோத நடக்கத் தொடங்கினான்.


பதட்டத்தில் மூச்சு வாங்கியது. நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டால்தான் மேற்கொண்டு நடக்க முடியுமென்று தோன்றிய போது நிழலாய் இருக்குமிடத்தைத் தேடினான். வேப்ப மரமொன்று தெரிந்தது. அதன் அடியில் போய் நின்றுகொண்டான். நேரம் ஆக ஆக பயம் அதிகரித்ததேயொழிய குறைவதாயில்லை. அதைச் செய்து பார்க்கலாமா என்று யோசித்தான். எப்போது பதட்டமாய் உணர்ந்தாலும் அவன் செய்யும் ஒரு விசயம் குளியலறைக்குச் சென்று பேண்ட் ஜிப்பை அவிழ்ப்பதுதான். சுற்றி ஒருமுறை பார்த்தான். மெல்ல ஜிப்பைக் கீழே இறக்கினான்.


அப்போது எங்கிருந்தோ வந்து மண்ணென்னை வாசம் அடித்தது. அவனுக்கு ஒரு நொடி இதயம் நின்று மீண்டும் அடிக்கத் தொடங்கியது.


அந்த வாசம்… அதே வாசம். அன்றிலிருந்து அவனை விடாது தொடரும் வாசம். ஊரே தொலைந்து போனாலும் மறையாத வாசம். அவனின் கண்கள் கலங்கத் தொடங்கின. ஆறுதல் சொல்ல வந்ததோ அவனை மேலும் துன்புறுத்த வந்ததோ.. கிழக்கிலிருந்து மேற்காக பலமாக அடித்தது காற்று.

அன்று விளையாடிவிட்டு வந்தபோது வீட்டில் யாரும் இல்லை. தாகமாய் இருந்ததால் நேராக அடுப்படிக்கு ஓடினான். அவர்கள் இருந்தது ஐந்து வீடுகள் கொண்டு குடியிருப்பு. ‘ட’ வடிவில் இருக்கும் படிகளில் ஏறி முதல் தளத்திலிருக்கும் வீட்டிற்கு வருபவர்கள் யாராக இருந்தாலும் தாகத்திற்குத் தண்ணீர் குடிக்கப் போவார்கள்தான் என்பான். யாரிடமோ… அவ்வப்போது.. கீழே பேச்சு சத்தம் கேட்கவும் அம்மா இருக்கிறாளா என்று ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தான். அவன் வீட்டு அடுப்படியில் இருந்து பார்த்தால் கீழ்க் குடித்தனக்காரர்களின் பின்வாசல் தெரியும். காம்ப்பவுண்ட் சுவர் சுற்றி இருந்ததால் சில சமயம் கதவை மூடிவிட்டு பின் வாசலுக்கும் குளியலறைக்கும் நடுவில் இருந்த இடத்திலேயே அங்கிருந்த பெண்கள் துவைத்துக் குளிப்பர். அதை அன்றுதான் அவன் தெரிந்துகொண்டான்.


எப்போது அவனைப் பார்த்தாலும் முறைப்பதைப் போலவே முகத்தை வைத்திருக்கும் அந்தப் பெண்தான் துவைத்துக் கொண்டிருந்தார். அம்மா இல்லை என்றவுடன் திரும்பப் போனவன் ஏதோ யோசித்தவனாய் அங்கேயே நின்றான். முதல் தவறு எப்போதுமே தெரியாமல்தான் நடக்கும். அந்த தவறைச் செய்வதற்கு முன் ஒருநொடி அவகாசம் இருக்கும். அது நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்பு. துரதிஷ்டவசமாக அதை நாம் உணரும்போது பல தவறுகளுக்கு பழக்கப்பட்டிருப்போம். நம்முடைய எல்லா தவறுகளுக்கும் தண்டனைகள் உண்டு. அவற்றை அனுபவிப்பதன் மூலம் நம் பாவங்களைக் கழுவிக் கொள்ளலாம். ஆனால் அந்த முதல் நொடி.. எவ்வளவு காலம் வாழ்ந்தாலும் செலவழிந்து போகாமல் மிச்சமிருக்கும். அந்த நொடி உள்ள உடல்கள் புகையாமல் நின்று எரியும்.


அன்றிலிருந்து சரியாக இரண்டு மாதத்தில் அவள் இறந்து போனாள். ஒரு சனிக்கிழமை வழக்கம்போல் தண்ணீர் குடிக்கப் படியேறிக் கொண்டிருந்தவனுக்கு அந்த வாசம் அடித்தது. எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் அதே தளத்தில் இருக்கும் இன்னொரு வீட்டைப் பார்த்தான். பூட்டியிருந்தது. வீட்டிலும் கேஸ் அடுப்புதானே என குழப்பத்தோடு நின்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கீழ் வீட்டிலிருந்து “ஐயோ.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க” என அலறல் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஆட்கள் கத்திக்கொண்டே ஓடும் சத்தம்.


ரேசன் கடைக்குப்போய் இரண்டு லிட்டர் வாங்கி வந்து ஊற்றி கொளுத்திக் கொண்டிருக்கிறாள். கால்கள் நடுங்க நின்று கொண்டிருந்தவனைப் பார்த்து ஆட்டோ கூட்டிவரச் சொன்னார்கள். “சீக்கிரம் போடா நிக்காத” என்று விரட்டினார்கள். எதுவுமே காதில் விழாதவனாய், விழுந்தாலும் புரியாதவனாய் நின்று கொண்டிருந்தான். அவனின் பயத்தைப் புரிந்து கொண்டவர்களாய் வேறு ஒருவரை அனுப்பி அழைத்து வரச் சொன்னார்கள். கணவருடன் பிரச்சனை காரணமாக தீயிட்டுக் கொண்டாள் என்றார்கள். என்ன பிரச்சனை என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

அவள் சீக்கிரமே செத்துப்போனாள். தெரியாமல் செய்து விட்டதாகவும், காப்பாற்றி வீட்டிற்குப் கூட்டிப் போகுமாறும், சாகும்வரை அவள் கேட்டுக்கொண்டே இருந்ததாக பேசிக் கொண்டார்கள். பஞ்ச பூதங்களில் நெருப்பு கருணைமிக்கது. அபயம் என்று வந்தவர்களை முழுதாக ஏற்றுக் கொண்டு விடும். அதே சமயம் அது கறாரான நீதிபதியும் கூட. அதன் நீதிமன்றத்தில் எப்போதும் ஒரே தீர்ப்புதான். குடியிருப்பில் ஒரே நாளில் இயல்பு நிலை திரும்பிவிட்டது. வழக்கமான அரட்டைகளும், முணுமுணுப்புகளும், சின்னச்சின்னச் சண்டைகளும் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தன. அவன் மனம்தான் அமைதியடையவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவனுக்கு மண்ணென்னை வாசமும், மனித உடல் கருகும் வாசமும் வீசிக்கொண்டே இருந்தது.


***
அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதென்று ஓடத் தொடங்கினான். சீக்கிரமே மனிதர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்று ஆவேசம் கொண்டான். மனிதக் குரல்களே கேட்க்காத இடங்கள் போடும் பிற சத்தங்கள் அவனால் கேட்க்க முடியாதவையாக இருந்தன.


வழியெங்கும் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டே ஓடினான். பயணத்தில் தன் பக்கத்து இருக்கைகளில் ஆட்கள் இனி இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான். பாடல்கள் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான். மன்னித்தேன் என்று வாய்விட்டு சொல்லும் கடவுள்கள் இருக்கும் கோவிலுக்குத்தான் இனி போகவேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான். வீட்டில் அம்மா இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினான்.


நினைவின் ஆழங்களில் புதையுண்டிருந்த, பேசி வருடங்கள் ஆகியிருந்த நண்பர்கள் அவன் நினைவுக்கு வந்தனர். தான் காதலித்த பெண்ணை அபகரித்துச் சென்ற துரோகி நினைவுக்கு வந்தான். வீடு மாறும்போது விட்டுவிட்டு வந்த ‘மது’ நினைவுக்கு வந்தது. “மது.. மது.. என்னை மன்னித்து விடு மது.. எவ்வளவு சொல்லியும் வீட்டில் யாரும் கேட்கவில்லை மது.. எல்லா வீட்டுச் சொந்தக்காரர்களும் உன்னை வளர்க்க அனுமதிக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள் மது.. நீ எங்கு இருக்கிறாய்.. இருக்கிறாயா.. நீயாவது என்னை மன்னிப்பாயா…”


அவன் தெருவை நெருங்கினான். அவனை அறியாமலேயே வாய் முணுமுணுக்கத் தொடங்கியது. “இருக்கணும்… இருக்கணும்…இருக்கணும்” அவன் தெருவும் அமைதியாகத்தான் இருந்தது.

நெருக்கி நெருக்கி கட்டப்பட்டிருந்த எல்ல வீடுகளும் பூட்டித்தான் கிடந்தன. ஒற்றை வீடுகளும், அடுக்குமாடி வீடுகளும், எல்லாமும் தலைகீழாய் கவிழ்த்துப் போட்டதுபோல் தோன்றின. சில வீடுகள் முன் வைக்கப்பட்டிருந்த பூச்செடிகள் காய்ந்து போயிருந்தன. எப்போதும் சுற்றித்திரியும் பசுக்களைக் காணவில்லை. பசுக்கள் எல்லாம் சின்ன வயதிலேயே இறந்துபோன கன்னிப்பெண்கள் என்று அவன் பாட்டி சொன்ன கதை நினைவுக்கு வந்தது. உலகமே எதிர்த்தாலும் பெற்ற தாயின் அன்பும், பசுவின் ஆசியும் இருந்தால் உனக்கு ஒன்றும் ஆகாது என்றவள் சொன்னது நினைவுக்கு வந்தது. கூடவே தற்கொலைச் செய்துகொண்டப் பெண்கள் என்ன ஆவார்கள் என்கிற கேள்வியும் வந்தது.


“எல்லாரும் எங்கே போய்த் தொலைந்தீர்கள்..” அவன் கண்களில் ஈரம் காய மறுத்தது. தெருவின் கடைசியில் இருக்கும் அவன் வீட்டை நெருங்கினான். வீட்டிற்கும் அவனுக்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கையில் கண்களை இறுக்க மூடிக்கொண்டான். அது அவன் பழக்கம். எப்போதெல்லாம் அவனால் தன் பயத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லையோ, எப்போதெல்லாம் காலம் நகர மறுப்பதாய் நினைக்கிறானோ, எப்போதெல்லாம் நடப்பவை தன் சக்திக்கு மீறி நடக்கிறது என்று நினைக்கிறானோ அப்போதெல்லாம் கண்களை இறுக்க மூடிக்கொள்வான்.

மூடிய கண்களைத் திறந்து பார்க்கும்போது எல்லாம் சரியாகியிருக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வான். வீடு வந்திருக்கும் என்று தோன்றிய போது கண்களைத் திறந்தான். அவன் வீடும் பூட்டியிருந்தது. ஆனால் அவனையே பார்த்துக்கொண்டு வீட்டின்முன் ஒரு நாய் நின்று கொண்டிருந்தது. “மது…” என்று கத்திக்கொண்டே ஓடிப்போய் அதைக் கட்டிக்கொண்டு கதறி அழ ஆரம்பித்தான்.

சங்கர் – சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகிலுள்ள காணக்கிளியநல்லூர். சென்னையில் வசிக்கின்ற இவருக்கு இதுவரை 6 கதைகள் வெளியாகியுள்ளன – தொடர்புக்கு -narayanan.sangara@gmail.com

RELATED ARTICLES

2 COMMENTS

  1. தனிமை எனும் பயம் கொண்டு உணர்வின் வழித்தடத்தில் பயணம்.
    தொலைத்தவைகளின் நடுவே வேண்டப் படுபவைகள் கிடைப்பதில்லை.
    சாய்ந்து கொள்ள ஒரு தோள்வேண்டும்.

    தனித்திருத்தலும்
    கவனமாக இருத்தலும்
    காலத்தின் கட்டாயம்.

    கனவுகளோடு இருத்தல்…!?

    சங்கருக்கு 🎊

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular