***
ஜீன்ஸ் பாக்கட்டில் மிஞ்சிய நட்சத்திரங்கள்.
“அவள்
ஒவ்வொரு விண்மீனையும்
பிற விண்ணுடலையும்
இடம்பெயர்த்து வடிவமைக்கிறாள்
அதன் புத்தம்புது அழகை
உள்ளார்ந்து இரசிக்கிறாள்
மிச்சமாயின இரண்டு நட்சத்திரங்கள்
எங்கும் பொருந்தவில்லை.
ஜீன்ஸ் பாக்கட்டில் கவனத்துடன்
பத்திரப்படுத்துகிறாள்
பலகோணங்களில் நின்றும்
ஒரு கண்ணடைத்துக் கூர்ந்து நோக்கியும்
துல்லியமான மனகணக்குகளிலும்
சீராகாமல் புதிரானது
அவற்றின் இடமெங்குதான் மறைந்தன !!!
கோலம் பழகியவளிடம்
கோடுகளும் அதன் வளைவுகளும்
இலக்கணமாக நிகழ்ந்தன
மருதாணிச் சிகப்பில்
ரேகை மங்கிய உள்ளங்கையில்
இடம்தொலைத்து நடுங்கும்
இரண்டு விண்மீன்கள்
வெறித்துப் பார்க்கின்றன”
அவள் ஜீன்ஸை அவிழ்க்கிறாள்
***
மீரா மீனாட்சி