திரிபுணர்வு
உயிர்ப்பித்துகொண்டே இருக்கிறது இத்தெரு
கிராம சந்தைகளின் கூச்சல்கள் போலல்லாமல்
இலக்கணத்தில் அடைந்துவிட்டதுபோன்ற குரல்கள்
சிலநேரங்களில் உணர்ச்சியற்ற உச்சஸ்தாயியாகவோ
ஆண்பெண் புணர்தலின் சிறு முனகலாகவோ
அல்லது ஒன்றிணைந்ததாகவோ இருக்கலாம்
காகங்கள் பேசிக்கொள்ளும் மதியச்சூட்டில்
தெருவில் அலைந்து அழுது அவள் புலம்புவது
குடியிருப்பின் காவலாளர்களுக்குத் தெரிவதில்லை
விற்பனைக்காரிக் கதறுகிறாள்
எதை விற்கிறாள் என்று எவரும் கவனிக்கவில்லை
அமைதியாக நகரும் வணிக வாகனங்களின் இடையே
கண் மயங்கிக்கிடக்கிறது தெரு
எந்த ஒரு விநியோகமும்
அவளை ஒருபோதும் தொந்தரவு செய்ததில்லை
தெருவின் தொல்லியல் ஞாபகங்களென அலையும் நாய்கள்
பனிசறுக்கலில் காலுடைந்த கூர்க்காவின்
கிழிந்தத் தோள்பையை முகர்கின்றன
நாவல் இலைகளினூடே கசிந்திறங்கும் நட்சத்திரங்கள்
இரவின் மங்கிய சோடியம் விளக்கொளியில்
படிக்கட்டுகளில் சரிய
திரிபுணர்வுகளில் உறங்கதொடங்குபவளின்
நடுக்கத்தில் உயிர்த்திருந்தது அத்தெரு
மீரா மீனாட்சி