சுரேஷ்குமார இந்திரஜித்
1 ) அது அப்படித்தான்
சரவணனும் அவன் மனைவியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்கள். இன்று வேறுபக்கம். வழக்கமாகச் செல்லும் வழியை மாற்றுவோம் என்று மனைவி சொல்லியிருந்தாள். போகும் வழியில் பல வருடங்களுக்கு முன் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த மருத்துவமனையைக் கடந்தார்கள். இந்த மருத்துவமனை டாக்டரிடம்தான் முதலில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.
பிறகு பக்கத்திலேயே ஓரு டாக்டர் வந்துவிட்டதால் அவரிடம் காண்பிக்கலானார்கள். பழைய டாக்டரைப் பார்த்து பல காலமாகிவிட்டது. அவரைத் திரும்பி வரும்போது பார்க்கலாம் ‘ என்றான் சரவணன். மனைவியும் ‘ சரி’ என்றாள். மேலும் ‘புதியதாக நாம் காட்டும் டாக்டர் இவரைவிடக் கெட்டிக்காரர்’ என்றாள். அதை அவனும் உணர்ந்திருந்தான். ‘இந்த டாக்டர் வயதானவர். புது டாக்டர் வயது குறைந்தவர். அதனால் புது மாத்திரைகளைக் கொடுக்கிறார்.’ என்றான். மனைவி ஓர் துணிப்பையை மடித்துக் கையில் வைத்திருந்தாள். பழக்கடை அருகே வந்ததும் பழங்கள் வாங்கினாள். விலை பேசும்போது பழக்காரியுடன் அவளுக்குச் சிறு சச்சரவு ஏற்பட்டது. விலை பேசும்போது மட்டும் எப்படியோ அவளுக்கு ஒர் அதிகாரம் வந்துவிடுகிறது.
திரும்பும்போது பழைய டாக்டரின் மருத்துவமனைக்குள் நுழைந்தார்கள் டாக்டரின் அறைக்குள் நோயாளி இருப்பதாக செவிலி கூறினாள். காத்திருந்தார்கள். இந்த டாக்டர் இப்படித்தான் நோயாளியிடம் கதை பேசிக்கொண்டிருப்பார். ஒருவழியாக நோயாளி வெளியே வந்தார். சரவணனும் மனைவியும் உள்ளே நுழைந்தார்கள். டாக்டர் ஒருகணம் திகைத்தார். பின்னர் ‘வாங்க வாங்க’ என்று உற்சாகமாக வரவேற்றார். நலம் விசாரிப்பு முடிந்தது. அவனின் மனைவியைப் பார்த்து ‘வயசாயிடுச்சே’ என்றார். இருவரும் வெளியே வந்தார்கள். அவனது மனைவி யோசித்துக்கொண்டே வந்தாள் ‘ உங்களைக் கேட்கவில்லை. என்னை மட்டும் கவனித்துவிட்டு வயசாயிடுச்சு என்கிறார் டாக்டர்’ என்றாள் அதற்கு சரவணன் ‘அது அப்படித்தான்’ என்றான்.
2 ) மொடாக்குடியன்
மொடாக்குடியன் மகேந்திரனும் நானும் மேனகாவும் பீர் குடித்துக் கொண்டிருந்தோம். மகேந்திரன் பத்து பாட்டில் பீர் குடிப்பான். சிகரெட் பத்து பாக்கெட் வரை புகைப்பான். ஆள் கல் மாதிரி இருப்பான். எனக்குதான் ஏதாவது நோவு வந்து கொண்டேயிருக்கும் அவனுடைய அப்பா வசதியானவர். செல்வந்தர் குடும்பம். பல தொழில்கள் அவர்களுக்கு இருந்தன. பணத்திற்குப் பிரச்சினை இல்லை. மேனகா பீர் மட்டும்தான் குடிப்பாள். கூறுவதையே திரும்பக்கூறும் அந்த மொடாக்குடியன் கூறினான் ‘நான் சிறுவனாக இருந்தபோது கோவில் அருகே நடந்து வந்துகொண்டிருந்தேன் ஒரு குதிரை வண்டிக்காரர் வண்டியில் அமர்ந்தபடி என்னைக் கூப்பிட்டார். நான் சென்றேன். அவர் என்னிடம் காசு கொடுத்து பீடி வாங்கி வரச்சொன்னார். நான் கடைக்குச் சென்று பீடி வாங்கினேன். பீடியை அப்போதுதான் கையால் தொட்டேன். பயந்துகொண்டே சென்று வாங்கிய பீடியை அந்தக் குதிரை வண்டிக்காரரிடம் கொடுத்தேன். வீட்டிற்கு பதற்றத்துடன் சென்று அம்மாவிடம் சொன்னேன். அம்மா அப்போது சமைத்துக் கொண்டிருந்தார். நான் சொன்னதை அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பிறகு அந்தச் சின்ன வயதில் யாருக்கும் தெரியாமல் சிகரெட் வாங்கிப் புகைத்தேன். அதன் பிறகு பிளஸ் ஒன் படிக்கும்போதே மது குடிக்க ஆரம்பித்து விட்டேன். இப்போது எனக்குப் பெயர் மொடாக்குடியன் மகேந்திரன்’
இதைப் புதிதாகக் கேட்கும் மேனகா ‘அன்று நீங்கள் சொன்னதைப் அம்மா பெரிதாக எடுத்துக் கொண்டிருந்தால் சிகரெட் குடிக்காமலும் மதுக் குடிக்காமலும் இருந்திருப்பீர்களா’ என்றாள். ‘அப்படி உறுதி சொல்ல முடியாது. ஆனால் என் அம்மா நான் கூறியதைக்கேட்டு என் பதற்றத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும்’ என்றான். ‘இப்போது உங்கள் அம்மா எங்கிருக்கிறார்கள்’ என்று மேனகா கேட்டாள். ‘நான் பிளஸ் டூ படிக்கும்போதே அவர் இறந்துவிட்டார்’ என்று சொல்லிவிட்டு எழுந்து பாத்ரூம் சென்றான். ‘இவர்கள் கெட்டுப் போவதற்கு ஏதாவது அல்பக்காரணம் தேடிக்கொள்வார்கள்’ என்று என்னிடம் மேனகா கூறினாள். மகேந்திரன் பாத்ரூமிலிருந்து அழுதுகொண்டே வெளியே வந்தான். ‘என் அம்மா நினைவு வந்துவிட்டது’ என்று கூறிக்கொண்டே கதறி அழுதான். மேனகா என்னைப் பார்த்தாள். நான் மகேந்திரனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தேன். ‘மனம் என்பதே சிக்கல்தான்’ என்றாள் மேனகா.