மாற்று வழியில் செல்லவும் ஆண்கள் வேலை செய்கிறார்கள்
ஒருவாறான முன் நிபந்தனையற்ற
உரையாடல்களுக்கிடையே நொதித்தப்
புரதங்களோடு வடிக்கப்பட்ட தேறல்
வகை மதுவைப் பகிர்கையில்
பெண்களின் உதரவிதானங்களும்
செய்நேர்த்தியுடன்
வடிவமைக்கப்பட்ட கட்டிடங்களும்
பூர்த்தியானவுடன்
இறந்து விடுகின்றன என்றான்
கவிஞனானவனும் கட்டிடக்கலை
நிபுணனுமாகிய ஒரு கலைஞன்
இன்னொரு பெக்கிற்கு வினயம்
கொண்டிருந்த நாடோடி தன் பயண
வழியில் அதை ஆமோதித்துப் புரிந்தான்
சமகாலத்தை உல்லாசமாக்கிக்
கொண்டிருந்தது
அன்றாட நாளின் மிகச்சிறந்த
மரணவாய்ப்பு
பெண்களின் மீதான முதலீடுதான்
உலகத் தேனீர்ப்பிரச்சனை அல்லது
குளங்களில் மீன்களை வளர்ப்பது
என கடைசிப் பெக்கில் அழுகையுடன்
ஒத்துக்கொண்டாயிற்று
நாளை அவனோ கட்டிடங்களின்
முன்வாயிலில்
நாடோடியோ மதுக்கடைச்சந்தடியில்
ஆங்காங்கே
தலை கவிழ்ந்து அமர்ந்திருக்கிறது
மத்திய காலப் பெருநகரம்
நவீனத் தமிழ் கவிதையில் யவனிகா ஸ்ரீராமின் கவி மொழி தனித்தது. அரசியல் கூர்மையுள்ள அவரது கவிதைகள் இதுவரை ஏழு கவிதைத் தொகுப்புகளாகவும் இரண்டு தொகுப்பு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. – ஆசிரியர் தொடர்புக்கு yavanikaramasamy@gmail.com