Saturday, November 16, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது:- 03 - கே.சி.எஸ் பணிக்கர் - நடைபயிற்சி 1

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் – நடைபயிற்சி 1

வலிமையான புனைவினை ஏந்திக் கொண்டும், வளமையான கற்பனைகளின் மரபினைச் சுமந்து கொண்டும் பல நூற்றாண்டுகள் இருந்துவந்த ஒரு இனம், இன்று மின்காற்றாடி, ஒலிப்பெருக்கி, விளக்குகளைச் சுமந்தபடி இருக்கின்றது:-

யாளி பேசுகிறது:- 03 – கே.சி.எஸ் பணிக்கர் -03
பணிக்கரின் ஓவியங்களில் அதிகம் உரையாடல் செய்யும் பாணி இருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அவரது landscape மற்றும் புராணங்களை அடிப்படையாகக் கொண்ட ஓவியங்களைக் காட்டிலும், வண்ணங்களோடு சேர்ந்து எழுத்துகளும், குறியீடுகளும் சேர்ந்த படைப்புகள் மிக முக்கியமானவை.

இந்த பாணி மீது பணிக்கர் கொண்டிருந்த நம்பிக்கை பற்றி நாமும் தெரிந்து கொண்டால் தான் அவரின் ஓவியங்களுக்கருகில் நாம் அமர்வதற்கு உதவியாக இருக்கும். மேலைநாட்டு பாணிகளில் ஏற்பட்டு வந்த தொடர்ச்சியான பரிட்சார்த்த முறைகள் புதுப்புது இசங்களை(Ism)உருவாக்கிக் கொண்டிருந்தன, அந்த காலகட்டத்தில் இந்தியச் சூழலிலும் குறிப்பிடத் தகுந்த அளவு ஓவியங்கள் அப்படியே மேலைநாட்டு பாணிகளை கடைபிடித்தே வந்தன.

பணிக்கரும் மேலைநாட்டு பாணிகளில் பரிச்சயம் கொண்டவர் தான், ஆனால் அவர் தென்னிந்தியாவுக்கென ஒரு இயக்கத்தை உருவாக்கும் உந்துலில் இருந்திருக்கிறார் என்பதும் எல்லாருக்கும் தெரிந்ததே. ஆக நீர்வண்ணங்களைக் கொண்டும், கோடுகள் மூலமாகவும் அவர் சில சம்பிரதாயங்களை உடைத்து விட முயற்சித்தார். உடைப்பது என்றால் தகர்த்தெரிந்து விட்டு வேறு எங்கோ ஒரு பண்டோரா கிரகத்துக்கு செல்வது போலன்று, அதை வேறு வழியில் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது ஆகும்.அவர் வண்ணங்களையும் கோடுகளையும் சிக்கனமாக பயன்படுத்த ஆரம்பித்தார், ஆனால் இந்த மினிமலிசம், அவர் உபயோகித்த குறியீடுகள் மற்றும் அடையாளங்களிலிருந்து நிறைய உரையாடல்களை, பார்ப்பவர்களிடம் நிகழ்த்தியிருக்க வேண்டும். இந்தியாவின் மிகத் தொன்மையான தாந்த்ரீகத்தில் இருந்தும், உபநிஷதத்திலிருந்தும் அவருக்கு நிறைய குறியீடுகள் கிடைத்தன.

கீழ்க்கண்ட அவ்வோவியம் (Ancestral Assertion – Oil on Canvas – 1963)வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்திலிருந்து, சமகாலத்துக்கு பயணிக்கும் ஒரு கடத்தி ஆனால் அவ்வளவு எளிதாக நாம் இந்த ஓவியத்தை அணுக முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. தொன்மையான குகை ஓவியத்தின் சாயலில் காளை, சூரியன், சந்திரன், மீன், துலாம், பானைகளைச் சுமக்கும் ஆண் மற்றும் பெண், சில விநோதமான குறியீடுகள் (ஸ்வஸ்திக் போன்ற), ஆதி மக்களின் கடவுள் அல்லது மதகுருவைப் போன்ற முகம் ஒன்றும், சக்கரத்தை போன்ற ஒரு அச்சில் சுழலும் வண்ணம் இருக்கும் கோலம், இதை பாறை ஓவியங்களைப் போலவே செம்மண் வண்ண பிண்ணனியில் வரைந்திருப்பார், அதைப் போலவே இன்னும் சில குறியீடுகள் இருளில் இருப்பதைப் போல கருமையான வண்ணத்தின் பிண்ணனியிலே ஓவியத்தின் மேற்பகுதியில் இருக்கும். இந்த ஓவியத்தின் அழகுணர்வைத் தூண்டும் சிறப்பம்சமாகத் தெரிவது ஐந்து தலை நாகத்தின் கோடுகளே!! ஆனால் ஓலைச்சுவடிகளில் இருக்கும் பழமையான மலையாள எழுத்துருக்கள் இதில் இருந்தாலும். உங்களால் நமது முன்னோர்களின் வாழ்வினை உணர்ந்து கொள்வதற்கான வெளிகள் இந்த ஓவியத்தில் மொழி தெரியாதவனுக்கும் சேர்த்து தான் இருக்கின்றன.

 

2013-11-08_075503
Ancestral Assertion : Oil on Canvas: 1963

இதே வருடத்தில் வரையப்பட்ட மற்றொரு ஓவியமான பழ வியாபாரி(Fruit Seller – Oil on canvas) தான் எனக்கு பணிக்கருக்கு மிக அருகில் செல்ல அனுமதித்த ஓவியம். இணையத்தில் சென்று நீங்கள் பழ வியாபாரி என்று தேடினால் உங்களுக்கு நிறைய ஓவியங்கள் கிடைக்கக் கூடும். எனக்கும் கிடைத்தன – அத்தனை ஓவியங்களிலிருந்தும் இவ்வோவியம் எத்தனை தூரம்(அல்லது நமக்கு மிக அருகில் இருக்கிறது) என்று நீங்களும் தேடிப் பாருங்கள்.

 Fruit Seller - Oil on Canvas - 1963
Fruit Seller – Oil on Canvas – 1963

சிறுவர்களின் attempt போலே தோன்றும் கோடுகள் யாவும் சிறுவர்களாக இல்லாதவர்களால் வரைய இயலுமா?? உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் வரைந்திருக்கும் வீடு,மரம்,மீன்,படகு,மனிதன், மலைப் பிரதேசம், வானம் போன்றவற்றை நம்மால் இந்த வயதில் வரைந்து விட முடியுமா?? அது அவ்வளவு எளிதானதா?? இல்லை ஏனென்றால் இவை மனம் சம்பந்தப்பட்டவை. குழந்தைகள் கொட்டும் வண்ணங்களின் பிரதியை நம்மால் மறுவுருவாக்கம் செய்ய முடியாது.

முதலில் ஏன் அப்படி வரைய வேண்டும்??.
தெருவில் வந்து விற்பனை செய்யும் எந்த வியாபாரியும் நிகர எடைக்கு பில்லிங் போட்டு, லிப்ஸ்டிக் நன்றி சொல்லப் பழகியவன் இல்லை. அவன் உரையாடுவான், பேரம் பேசுவான், குடும்ப நலம் விசாரிப்பான், குதர்கம் பேசுவான், ஒரு சொம்பு தண்ணீர் கேட்பான், குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஒரு பழம் கொசுறு தருவான். அவனது விற்பனைக் கணக்குகளில் இத்தனை விசயங்களும் அடக்க விலைக்குள் ஒளிந்து இருக்கும், அதை எப்படி உங்களால விளக்க முடியும்? ”. “சரி அடுத்த வாரம் வாங்கிக் கொள்கிறேன்” என்று சொல்லும் கணக்கின் குறியீடு என்ன?
“MENTAL PROCESS OF PICTURE MAKING” என்று பணிக்கர் சொல்லிக் கொடுத்திருக்கும் மிக முக்கியமான பாடம் இது, ஒரு கலைப் படைப்பு மன அளவில் உருவாகிவிடுகிறது அதன் Medium தான் வெவ்வேறு கலை வடிவங்களில் தென்படுகிறது. அதே சமயம் இந்த உள்பயணத்தில் (Inward Journey), ஒரு மீடியம் தீர்மானிக்கப்பட்டவுடன் அந்தக் கலை வடிவம் உருப்பெறும் முறைகள் என்னென்ன? அதற்குத் தேவையானவை யாவை?

இவ்வோவியத்தில் பழ வியாபாரி கைகளில் இருக்கும் பழத்திற்கான விலையை 56+bcqθ² என்று நிர்ணயிக்கிறான்!! அது பற்றிய தீர்மானங்கள் உங்களிடமே விட்டுவிடலாம். நான் அந்த பழச்சுமையை சுமந்து வந்த வற்றிய வயிறுடைய காளைக்கு வாங்க வேண்டிய வைக்கோலுக்கும் சேர்த்து வாங்க வேண்டிய நிர்பந்தத்தை அந்தக் கணக்குகளில் பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் சுவர் ஓவியங்களின் தாக்கம், பின்னர் மேலை நாட்டு பாணியில் சில லேண்ட்ஸ்கேப் , மரணம்(Death & Dog ), அமானுஷ்யம் (ghost) போன்ற படைப்புகள் மட்டுமல்லாது சமகால மனிதர்களின் பதிவையும் உருவாக்கினார் அவற்றில் பழ வியாபாரி, மீன் விற்பனை செய்பவன், புரளி பேசும் பெண்கள் போன்றன முக்கியமானவை.

எல்லாவற்றிட்கும் மேலே,  இந்தியாவின் முக்கியமான ஒரு இயக்கங்களில் ஒன்றாக Madras School of Artsஐக் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவரும், முதன்மையானவரும் KCS பணிக்கர் தான். இன்று அவரது கனவு கிராமமான சோழமண்டலத்தில் உள்ள அவரது அசல் ஓவியங்களில் அவரது கனவுகளையும், கலையமசத்தினையும் உணர்வதற்கு இடம் கிடைத்ததே, இந்த புகையால் சூழந்த நகரவாசிக்கு கிடைக்கும் புத்துணர்வுக்கான வாய்ப்பு.

அடுத்த பகுதியில் வேறு ஒரு படைப்பாளியோடு சந்திப்போம்

உங்கள் கருத்துகள் மட்டுமே, என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்

-ஜீவ.கரிகாலன்

RELATED ARTICLES

2 COMMENTS

  1. *
    // ஒரு கலைப் படைப்பு மன அளவில் உருவாகிவிடுகிறது அதன் Medium தான் வெவ்வேறு கலை வடிவங்களில் தென்படுகிறது. அதே சமயம் இந்த உள்பயணத்தில் (Inward Journey), ஒரு மீடியம் தீர்மானிக்கப்பட்டவுடன் அந்தக் கலை வடிவம் உருப்பெறும் முறைகள் என்னென்ன? அதற்குத் தேவையானவை யாவை? //

    இப்படி ஒரு அதிமுக்கிய கேள்வியை யாளியை அனுப்பி எங்களிடம் கேட்கிறீர்கள் ஜீவா..
    கவனித்து பின் யோசிக்க வேண்டிய விஷயம்.

    அடுத்த பாகத்துக்கு காத்திருக்கிறேன்.

    – இளங்கோ

  2. புரளி பேசும் பெண்கள் என்ற வரிகளை வாசித்ததும் “மாமியார் மருமகள் சண்டையினை” நவீன பாணியில் வரைந்தால் எப்படியிருக்குமென யோசிக்கிறேன்.. நன்றி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular