வார்னிஷ் பூசப்பட்ட தூண் ஒன்றில் இருந்து பேசும் யாளி இன்று ஒரு முக்கிய கேள்வியை வைக்கிறது, அது சிற்பங்கள் வாழும் கற்கோயில்களில் உள்ள கற்களை அகற்றி அதில் மார்பிளையும், கிரனைட்டுகளையும் பதிக்கும் நவீன உலகின் மனநிலை பற்றி…
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டம், மேற்கத்திய நவீன ஓவியங்களின் தாக்கம் நமது நாட்டில் நன்கு பரிச்சையமான காலமது. இந்தத் தாக்கம் மேற்கத்திய தொழிற்நுட்பங்களின் ஈர்ப்பினால் வெகுவாக நமது கலைகளில் காணப்பட்டது, புராணங்களைத் தவிர்த்து நமது வெளிக்கான ஒரு கலை இயக்கம், மிக அவசியமான தேவையாக இருந்தது. KCS பணிக்கர் அப்படி ஒரு இயக்கத்தின் காரணகர்த்தா என்பது நாம் அனைவரும் அறிந்ததே. சோழமண்டலம் பற்றி இன்னொரு பாகத்தில் பேசுவோம்.
இந்தியாவைப் பொறுத்தவரை தென்னிந்தியா(திராவிடம்) தன் கலைகளின் மூலம் வட இந்தியவோடு இருந்து பல இடங்களில் தனித்தே இருக்கின்றது. இது கலாச்சார அடிப்படையினாலான பகுப்பு, அதே சமயம் நாட்டின் மொத்த கலைகளையும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக நாம் புராணங்களின் வாயிலாக மட்டுமே காண முடியும். நாட்டின் நான்கு திசைகளிலும் பரவியிருக்கும் எல்லா கலைகளிலும் தொன்மையான இதிகாசங்களின் தாக்கமே அதிகமிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மை பரதம், மோகினியாட்டம், கதக், மணிப்புரி, ஒடிஸ்ஸி, கதக்களி(கேரளம்), சத்ரியா(அஸ்ஸாம்) என்ற நாட்டியங்களில் மட்டுமல்லாது நமது தெருக் கூத்து, தோல் பாவைக் கூத்து போன்ற கலைகளிலும் இதிகாசங்களே பெரும்பாலும் ஆக்கிரமித்து இருக்கின்றன.
ஆனால் தென்னிந்திய கலாச்சாரத்தில் அதே இதிகாசங்களில் புவியமைப்பிற்கு ஏற்றவாறு மாற்றங்கள் இருக்கின்றன, இங்கே கலைகளில் அது தொடர்பான விவாதங்கள் (Interpretation), இதிகாசங்களை வேறு ஒரு தொனியில் சொல்லப் படுகின்றன. இராவணனை வெறுமனே துவேஷிக்கும் இதிகாசமாக மட்டும் இங்கே இராமாயணம் வாசிக்கப் படவில்லை, ஆனால் காலப் போக்கில் இந்த புவியமைப்பு குறுகியது, அது தென்னிந்தியாவாக இல்லாமல் தமிழகமாக மட்டும் பார்க்கும் நிலை உருவானது வேறு நிலை. ஆனால் KCS பணிக்கரின் முயற்சிகள் நவீன ஓவியங்களில் திராவிட மாநிலங்களை இணைத்தே வைத்திருக்கின்றது, அதற்கு சோழ மண்டலத்தின் கலைக் கூடத்தில் நீங்கள் பார்வையிடும் போது ஒருவேளை இந்த கருத்துடன் ஒத்துப் போகக் கூடும்.
மேற்கத்திய தாக்கத்தில் இருந்து பணிக்கர் எந்த மாதிரியான மாற்றங்களை தமது கலைகளில் வெளிப்படுத்தினார் என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவகையில் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் வழியாக மேற்கத்திய பாணிகளை அவர் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும் , அதனால் தான் அவர் அதை வெறும் தொழில்நுட்பமாக மட்டும் கருதி அதனை நமது நிலத்தின் கலையுணர்வோடு அதை அவர் நுட்பமாக வெளிப்படுத்தினார், இதைப் பற்றி பேசும் முன்னர் நாம் CALLIGRAPHY பற்றி நாம் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
CALLIGRAPHY ஒரு பழமையான கலை (18-19 நூற்றாண்டு), இதன் பாணி எழுத்தினைச் சித்திரமாக்குவது தான். சம்ஸ்கிருத அக்ஷரங்களை நமது நாட்டில் இதே பாணியில் தான் சித்திரமாக பார்க்கும் வழக்கம் உள்ளது. சொற்கள் பெரும்பாலும் நம் மனதிற்குள் பூடகமான ஒரு சித்திரமாக மாறி தான் நம்முடன் தொடர்பு கொள்கின்றன, இது தான் ஒரு நிறைவான மொழியின் அம்சம். இந்த முறையில் எழுத்துகளையே சித்திரமாக்கும் நுட்பம் கையாளப் படுகிறது அதாவது, இதற்கு இன்று நம் வணிக விளம்பரத்திற்கு தேவைப்படும் பிராண்ட் லோகோ, பேனர் எழுத்துகளையும் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதனால் என்ன செய்ய முடியும் என்பதற்கு மேற்சொன்ன இந்த உதாரணம் போதுமல்லவா, அதாவது இம்முறை விவரனைகளை Narrative தூண்டுகிறது.
பணிக்கரின் இந்த பிரசித்தி பெற்ற ஓவியம் (DOG-1973) Narrative முறை தான், இவை யாவும் மலையாள வட்டெழுத்துகள். மலையாளத்தில் இந்த ஓவியத்தின் குறியீடுகள் எழுதப் பட்டிருக்கின்றன அல்லது நாம் இப்படியும் எடுத்துக் கொள்ளலாம் இந்த ஓவியத்தை அவ்வட்டெழுத்துகளின் குறியீடுகளாகவும் பார்க்கலாம்.
இந்த ஓவியம் ஒரு Oil on Canvas படைப்பு, அச்சமூட்டும் ஒரு நாயின் உருவமும், ஒரு காகமும் இதில் இருக்கின்றன. நீல வண்ணப் பின்னணியில் நிற்கின்ற நாய், நாம் இரவில் பார்க்கும் போது தரும் அச்சத்தைத் தருகிறது, சதைப் பற்று இல்லாத அதன் உடலமைப்பில் மார்பெலும்புகள் தெரிகின்றன. அதன் கீழே நிற்கும் காகம் மிக இயல்பாக இருக்கின்றது. இதை ஒரு மரணத்தின் முன்னெச்சரிக்கையாக நாம் பார்க்க இயலும், மிரட்சியூட்டும் நாயின் கண்கள் நமக்கு சிறிது நேரத்தில் மிரண்டு போனதாகவும் மாறிவிடுகிறது, பெரும்பாலும் நாம் நாயினையும், மரணத்தினையும் இப்படித் தான் எதிர்கொள்கிறோம். நம்மை நெருங்கும் இவ்விரண்டும் நம்மை இப்படித்தான் எச்சரிக்கின்றன.
மரணத்திற்குப் பிந்தைய வாழ்வைக் குறிப்பது போல இந்த ஓவியத்தில் காகத்தின் உருவம் எனக்குக் காட்சிப் படுத்தினாலும், பணிக்கரை ஒரு தாந்திரிகக் கலைஞராகவோ அல்லது அவர் படைப்புகளை மீப்பொருண்மையாகவோ மட்டும் கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. ஆனால் அவர் வாழ்வு மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையில் இருக்கும் அவரது ஓவியங்களை நமது அறிவுத்தளத்தோடு மட்டும் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறானது. நாம் ஏற்கனவே பார்த்திருந்த அவரது GENESIS ஓவியத்தில் இருக்கும் கருவிற்கும் இவரது மரபு மற்றும் புராணங்களில் இருக்கும் ஈடுபாடும், அதில் அவர் புகுத்தியிருக்கும் நவீனமும் தெரிய வரும்.
இதைக் (METAPHYSICAL) கடந்தும் பார்ப்பதற்கு ,பணிக்கரின் பல NARRATIVE ஓவியங்கள் இருக்கின்றன. அவை எளிய மக்களின் வாழ்வுடன் மிக நெருக்கமாகவும் இருக்கின்றன, இந்த இடத்தில் (மனிதர்கள், கிராமம்) அவரது ஓவியங்கள் வாழ்வியலோடு மிக நெருக்கமாய பயணிக்கின்றது. அவற்றை அடுத்த பாகத்தில் பார்த்து விடுவோம்.
இன்னும் பேசும்…
-ஜீவ.கரிகாலன்