Saturday, November 16, 2024
Homeஅபுனைவுஅனுபவம்யுவபாரதி பக்கங்கள் - 14

யுவபாரதி பக்கங்கள் – 14

இளையனார் களவியல் உரை

யுவபாரதி மணிகண்டன்

அதிகாலை சிவாஜி குளத்தில் மூழ்கியெழுந்து பெரியகோயிலுக்குள் நுழைவேன். நனைத்துப் பிழிந்து உடுத்திய வேட்டி சட்டை உள்வெம்மையில் விரைவிலேயே உலர்ந்துவிடும். கொடிமரத்திற்குத் தெற்கே பசுவுக்குப் பூஜை நடந்துகொண்டிருக்கும். அண்ணாமலையானுக்கு முக்கால் சுற்று. உண்ணாமுலையம்மைக்கு முழுச்சுற்று. புறம்கெட்டு அகம்புலம்ப மறைந்து திரிய விட்டாயே என்ற கையறுநிலையோ. எதுதான் எனக்குளது என்கிற விஷயவிரக்தியோ.  அவள்முன் அந்தாதி பாடிவிட்டு எப்போதும் மூடியே கிடக்கும் பேய்க்கோபுரத்தின் பெருங்கதவை ஒட்டி உட்பக்கம் சென்று உட்காருவேன். அண்ணாமலையான் பாதம் பார்க்க எப்போதாவது வருகிற ஓரிருவர் தவிர பெரியசந்தடி ஏதும் அங்கு இருக்காது.

மனக்குகை போலப் பாதுகாப்பான பல மூலைகள் கொண்டது பெரியகோயில். அபத்தமான நினைவுகளோடு நம்பிக்கையான கற்பனைகள் போராடிச் சலிக்கும். பெரும்பேயாய்த் தனிமை எழுந்தாட, சற்றே மனிதப்புலம் நோக்கி நகர்வேன். மலையேறினாலும் மண்ணிறங்கத்தானே வேண்டும். நன்கு பார்த்துப் பழகியவர்களின் ஊகித்தேயிராத மறதியையும் அதிகம் பார்த்துப் பழகியிராதவர்களின் ஒட்டுதலான கனிவையும் கண்ட காலமது.

அன்று முற்பகல் கோபுரத்து இளையனாரின் முன்மண்டபத்தின் தென்மேற்குத் தூணில் சாய்ந்து கிடந்தேன். கூரையைத் தாங்க மட்டுமல்ல. கல்லாலான சிலையையும் கல்லாலாகாத சிலையையும் பலர்கண்படாமல் காத்துநிற்கவும்தான் தூண்கள். தெருவின் ஏதோவோரு மூலையில் சோம்பிக்கிடந்து ஆள்அரவம் கேட்டால் தலைதூக்கிப்பார்த்து திரும்பவும் புதைத்துக்கொள்ளும் நாய் போல மனம். கண்திறந்திருந்தாலும் சுற்றுச்சுவரின் ரதபந்தமோ குமாரஸ்தவமோ எப்போதாவதுதான் காட்சிப்படும்.

‘சிவா…’ என்ற குரலைக் காது உணர்ந்த கணத்தில் தலைதூக்கிப் பார்த்தேன். பாண்டுசாமி நின்றிருந்தார். மீண்டும் தலைசாய்த்துக் கொண்டேன். ‘மூஞ்சி கழுவினியா சிவா?’ நான் திரும்பவில்லை. ‘வா சிவா, சாப்பிடலாம்’ என்று அவராகவே என்கையை நீட்டி பொரியை அள்ளிவைத்தார். காசையெல்லாம் பொரியாக்கித் தன்பச்சைப்பையில் வைத்திருக்கும் பாண்டுசாமி. கிரிவலப்பாதையிலோ மலையிலோ எங்கு தென்பட்டாலும் ‘சாப்பிட்டியா?’ என்று கேட்டு பதில்வராவிட்டால் தன்பைக்குள் கைவிடுவார். வறண்ட தொண்டைக்குள் விழுந்த பொரி புரையேறி வெளியே விழுந்தது. தலையைத் தட்டியபடியே தண்ணீர்ப் புட்டியை வாயில் கவிழ்த்தார். அப்புறம் நாலுகைப்பொரி உள்ளே போனது. இன்னும் அள்ளிவைத்தார். போதும் என்றுவிட்டேன்.

திரும்பி உட்கார்ந்ததும் சுற்றுக்கம்பிகளுக்கு அப்பாலான பெரிய நந்தி கண்ணில்பட்டது. அன்றைக்குச் சில வருடங்களுக்கு முன் பிரபஞ்சனோடு கோயிலுக்குள் வந்தபோது அதே நந்தியருகில் நின்றிருந்தோம். பிரபஞ்சனுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் அருகில் வந்து அவருக்கு முகமன் சொன்னார். உருவ ஒற்றுமையோ அவரைப் போலவே திருத்தமான உடையணிந்த அப்போதைய காலமோ தெரியவில்லை. ‘உங்க பையனா சார்? நல்லா இருக்காரு,’ என்றார். உடனே என் தோளை அணைத்துக்கொண்டு ‘என் நண்பர்’ என்றார் பிரபஞ்சன். அந்தக் காட்சி விரிந்து மீண்டும் கண்ணுக்குள் சுருண்டுகொண்டது.

நான் சாய்ந்திருந்த கோபுரத்து இளையன் கோயிலே அதற்குத் தெற்கேயிருந்த கோபுரத்தின் மேலேயிருந்து அருணகிரி விழுந்தபோது தாங்கிப் பிடித்த முருகனுக்குக் கட்டப்பட்டது என்பார்கள். சம்பந்தாண்டானுடன் வாது செய்த அருணகிரியின் அழைப்புக்கேற்ப முருகன் காட்சி தந்த தூணைக் (கம்பம்) கருவறையாக வைத்து எழுப்பப்பட்டது கம்பத்து இளையன் கோயில். தெற்கே கம்பத்து இளையன் கோயிலுக்கும் வடக்கே ஆயிரம்கால் மண்டபத்துக்கும் மேற்கே கோபுரத்து இளையன் கோயிலுக்கும் இடைப்பட்ட பெருவெளியில்தான் பெரியநந்தியை உள்ளடக்கிப் பெரிய பந்தல் போட்டு அருணகிரிநாதர் விழா நடத்துவார்கள். வருடாவருடம் ஆகஸ்டு மாதம் நடக்கும். இளம்வயதில் பல தமிழறிஞர்களை, சமயப் பெரியார்களை அங்கு பார்த்திருக்கிறேன். பேச்சைக் கேட்டிருக்கிறேன். அப்பாவும் தம்பியும் சொற்பொழிவு கேட்க பெரும்பாலும் வரமாட்டார்கள். அம்மாவும் நானும்தான் வருவோம்.

அங்கு முன்பு பார்த்தவர்களில் சட்டென நினைவுக்கு வந்தார் வாரியார். திருப்புகழை அதற்கேவுரிய அதிர்வோடு அவருக்கேரிய நெகிழ்ந்த குரலில் பாடுவார். அவரது பெரிய உடல் சற்றே முன்பக்கம் தணிந்திருக்கும். அப்போது நான் கருங்காலிகுப்பத்தில் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக்கொண்டிருந்தேன். அன்று கந்தபுராணம் சொல்லிக்கொண்டிருந்தார் வாரியார். இடையே ஔவை பற்றிச் சொன்னவர் அப்படியே மூவேந்தர், சில தனிப்பாடல்கள் என்று சென்றுவிட்டார். சிவகங்கை தீர்த்தம் பக்கமாக அமர்ந்திருந்த மூன்று இளைஞர்கள் ஒருசேர எழுந்து எங்கோ நகர்ந்தார்கள் போல. ‘நமது புலவர்கள் பலரும் மூவேந்தர்களும் ஒற்றுமையாக இருக்க எவ்வளவு பாடுபட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தேனல்லவா? அவர்களால் முடியாதது இந்த எளியவனால் முடிந்திருக்கிறது. இதோ சேர சோழ பாண்டியர்கள் ஒற்றுமையாகப் புறப்பட்டுவிட்டார்கள் பாருங்கள்’ என்று அந்தத் திசையில் கைநீட்ட கேட்டுக்கொட்டிருந்தவர்கள் எல்லாரும் ஒன்றாகத் திரும்பிப் பார்த்தார்கள். நகர்ந்த இளைஞர்கள் கூச்சத்தோடு உட்கார்ந்துவிட்டார்கள்.

பேசி முடித்ததும் கேள்வி கேட்டார். ‘கந்தபுராணத்திற்கும் இராமாயணத்திற்கும் பலவிசயங்களில் ஒற்றுமையுண்டு. பானுகோபனுக்கும் சிங்கமுகனுக்கும் ஒப்பான இராமாயணப் பாத்திரங்கள் யார் யார்?’ என்று. எழுந்துநின்று கைகட்டி ‘இந்திரஜித்தும் கும்பகருணனும் சாமி’ என்றேன். ‘வீரபாகு?’ என்றதும், ‘அனுமன்’ என்றேன். கைநீட்டிக் கூப்பிடும் சைகை காட்டியதும் அருகே சென்று வணங்கினேன். நெற்றியில் நீறிட்டு கையில் கற்கண்டு தந்தார். அன்றிலிருந்து ஒரு நாலைந்து நாட்கள் பலரிடமும் சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனாள் அம்மா. என்னையும்தான் கையிலேயே பிடிக்கமுடியவில்லை.

நினைவைத் திருப்பினார் பாண்டுசாமி. கண்கள் விரிந்திருந்தன. கையில் வெல்லம். ‘வன்னிமரத்துப் பிள்ளையார்கிட்டே ஒரு அம்மா வெல்லம் வெச்சு வேண்டிக்கிட்டிருந்துச்சு சிவா. அது வெளியிலே வந்ததும் எறும்பு வர்றதுக்குள்ளே போய் எடுத்துக்கிட்டு வந்துட்டேன் சிவா’ என்றபடி என்கையிலும் அங்கிருந்த மற்ற மூன்றுசிவாக்கள் கையிலும் பிட்டுவைத்துவிட்டு உட்கார்ந்தவர் பையில் கைவிட்டு பொரியை அள்ளினார்.

 ‘கைத்தல நிறைகனி அப்பமோடு அவல்பொரி
   கப்பிய கரிமுகன் அடிபேணி…’

– யுவபாரதி மணிகண்டன்

era.mainkandan@gmail.com

www.yuvabharathy.blogspot.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular