உரையாடல் – சித்ரன், லஷ்மி சரவணக்குமார், முருகபூபதி, சபரிநாதன், சூர்யதேவ்
ஒருங்கிணைப்பு – சித்ரன்
சபரிநாதன் : நீங்கள் எந்த நூற்றாண்டில் வாழ்கிறீர்கள்? உங்கள் ஊர் எது?
மூளைக்குள் புறப்பொருள் அறிதல் சேகரமாகி, அதிலிருந்து மொழி முளைத்த காலந்தொட்டு என் இருத்தலைக் கணக்கிடுகிறேன். தொடக்கமும் முடிவுமில்லா இருப்பு என்பது மரபணு இயங்கியல் சார்ந்தது. அது எனக்கு முன்னின்று பின்தொடர்வது. நான் தனியன் அல்லன்; சங்கிலித் தொடரின் ஒரு கண்ணி. இன்று மொழிவழி பொருண்மைப்படும் என் உடம்பு மொழியைவிட மூத்தது. என் உடம்பு சமூகத்தின் ஓர் அங்கமாகி நிற்பதற்கு மொழியே அடித்தளமாக இருக்கிறது. மொழியே எனது தேசியம். நான் ஒரு மொழியுயிரி; என் உடம்பு அதன் ஒரு சொல். சொல்லின் தொன்மையால் என் இருப்பைக் கணக்கிடுகிறேன். மொழியியலாளரே என் காலத்தைக் கணக்கிட்டு வயதை அளவிடவேண்டும். நான் எந்த நூற்றாண்டில் வாழ்கிறேன் என்பதை அவர்களால்தான் சொல்லமுடியும். இந்தியத் துணைக்கண்டத்தின் தென்மூலைக் கிழக்குக் கடலோரம் ஒரு புள்ளியில் இருக்கிறேன்.
சபரிநாதன் :கவிதை உங்களை எப்படி வந்தடைந்தது?
பிறப்பும் இறப்பும் என்னை எப்படி வந்தடைந்தன என்று என்னால் அடிக்கோடிட்டுச் சுட்டமுடியும்; ஆனால், கவிதை எப்படி எங்கிருந்து எவ்வழி என்னை வந்தடைந்தது என்பதை அறுதியிடமுடியாது. கலையின் மாயயெதார்த்தம் கருக்கொள்ளும் புள்ளி இது. மொழியாலான எல்லாவற்றிலும் கவித்துவம் இருக்கிறது; அது கவிதைக்கானது மட்டுமில்லை. தாலாட்டு, ஒப்பாரி, பெருமூச்சு, வக்கனை, சொலவடை, பழமொழி எனப் பயின்றுவரும் நாட்டார் மரபு ஓரிடத்தில் நிலைப்படும்போது இலக்கியமாகிறது. நாட்டார் மரபே செவ்வியல் மரபிற்கு அடித்தளம். பிடி மண்ணில் ஊன்றப்பட்ட துளி விதைதான் அடர்ந்த ஆலமாகிறது. தமிழின் செவ்வியல் தொன்மையைச் சங்கம் தொட்டு அறுதியிடுகிறோம்; ஆனால், நாட்டார் மரபிற்குக் காலவரையறை இல்லை; அது உடம்போடும் மொழியோடும் பிறந்த தொடக்கமில்லாதது. தாய்மொழி மூளையில் ஊன்றி நாவில் துளிர்க்கும்போதே கவிதையின் இயங்கியல் தன்மையைத் தடங்காணமுடிகிறது. மொழியாலான கலைச்செயலிலிருந்தே அணியிலக்கணம் வரையறுக்கப்படுகிறது. படைப்பாளரை மட்டுமில்லை வாசகரையும் இப்படித்தான் கவிதை என்னும் மொழிக்கலை வந்தடைகிறது.
முருகபூபதி : தொன்மரபு கொண்ட தமிழ் நாடகநிலத்தில் அதன் கலைமொழியை, தொடர்ச்சியை, சமகாலத்தின் இலக்கியவாதியாய் எப்படிப் பார்க்கிறீர்கள்?
வேட்டைச் சமூகத்து உழுகுடியின் தொழில்சார் போலச்செய்தலின் இலக்கண வடிவமே நாடகக்கலையாகப் பரிணமிக்கிறது. பாட்டும் கூத்தும் கலந்த நிகழ்த்துமுறையில் பேச்சு கலந்து, மொழி மற்றும் உடம்புடன் ஒளி ஊடுருவி மூன்றாம் பரிமாணம் துலங்கும்போது மரபுவழி நவீன நிகழ்த்துக்கலை வடிவம் பெறுகிறது. எடுத்துக்காட்டாக ஓர் எளிய சமன்பாடு இப்படி அமையலாம்: கண்ணப்பத் தம்பிரான் + நா. முத்துச்சாமி + சி. ரவீந்திரன் = நவீன நாடகம். ஒரு மரபுக்கலஞன், நவீன இலக்கியவாதி, நவீனத் தொழில்நுட்பன்; இந்தக் கூட்டுக் கலவை சமகாலத் தமிழ் நாடகத்தை வடிவமைக்கிறது. கண்ட கனவை மீண்டும் காணமுடியாது; அதுபோல ஒருமுறை நிகழ்த்தியதை மீண்டும் நிகழ்த்தும்போது அதில் பலவகை வளர்ச்சிதை மாற்றங்கள் நிகழ்ந்து அது வேறொன்றாகப் பரிணமிக்கும். இதுவே மேடை நிகழ்த்துக்கலையின் மாய இயங்கியல்பு. தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலான இலக்கியவாதிகள் ஏழைகளாகவிருப்பதால் அவர்களால் நாடகத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க முடிவதில்லை. நானும் நாடகங்களை எழுதி இயக்கியிருக்கிறேன், மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறேன். கண்ட கனவைக் காட்சிப்படுத்தி சேகரித்துவைக்க இயலாதபோது உள்ளம் சோர்ந்து ஒடுங்கிவிட்டேன். பார்வையாளர்களே கூடாத அரங்கில் வெற்று நாற்காலிகளுக்காக என்னால் எழுதி இயக்கி உடனுழலும் நடிப்புக் கலைஞர்களைப் பட்டினிப்போட முடியாது. எனவே அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
சூர்யதேவ் : மாற்று அரசியல், மாற்று இலக்கிய உத்தி எனத் தங்களின் இலக்கியப்படைப்புகள் மூலம் ஒரு புதிய பாய்ச்சலைத் தமிழ்ச்சூழலில் 90 களில் ஆரம்பித்து இன்றுவரை தொடரும் உங்கள் வாழ்க்கைப் பயணத்திலும் இலக்கியப் பயணத்திலும் தர்க்கம், தத்துவம், கோட்பாடு, அறம் ஆகியனவற்றின் தாக்கம் அல்லது அதன் பங்கு எனத் தாங்கள் கருதுவது என்ன?
செம்புலப் பெயல்நீர் போல படைக்கும் பனுவலில் வெளிப்படும் அறம் எனது வாழ்முறையில் வழுவாமலிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். கூட்டுவாழ்க்கை, கூட்டு எழுத்து, பொதுவுடைமை, தன்னலம் ஒழுகா உள்ள ஒழுங்கு, சாதிய நெருக்கடி கடந்த அகன்ற இடதுசாரிய வெளி இவையே வாழ்க்கை நெறியாக இருந்தது. இப்படியான வலிநிரம்பிய சோதனை வாழ்க்கை முறை இருபத்தைந்தாண்டுகள் பேணப்பட்டது. ஆனால், ஆற்றின் அகலத்தைக் குறுக்காகத் தாண்டிக் கடந்தாலும் தனிமனிதத் தன்னல விருப்பு வெறுப்பைத் தாண்டமுடியாது. தனிவுடைமை என்பது தனியொரு உடம்பிலிருந்து உருப்பெருக்கமடைகிறது. எதிர்கால அறிவியல் வளர்ச்சி கூட்டு மனத்தையும் கூட்டு உடம்புகளின் வாழ்வியக்க முறைமைகளையும் கட்டமைக்க உதவலாம். பொதுவுடைமைத் தத்துவம் என்பது உடைமைகள் பற்றியது மட்டுமில்லை, உடம்புகள் பற்றியதுமாகும். தன் உடம்பையும் உள்ளத்தையும் அறிவையும் பொதுவில் வைக்காமல் உடைமைகளை மட்டும் பொதுமைப்படுத்துவது இறுதியில் கொலையிலும் தற்கொலையிலுமே முடியும். எனக்கோ பிறருக்கோ உடம்புவழி வலியை நான் தரவில்லை. தனியொருவரின் உள்ளம் மட்டுமே அவரொருவரால் உருவாவது, அத்தனியொருவரின் உடம்பு என்பது ஐம்பூதகங்களால் உருவானது, அதை வலிக்கச் செய்வதோ கொன்றழிப்பதோ அறமாகாது. நான் எழுதுகிறேன் அதனால் இருக்கிறேன். எழுத்துக்கு வெளியே நானில்லை.
லக்ஷ்மி சரவணகுமார்: கோட்பாட்டு ரீதியிலான காத்திரமான உரையாடல்களை உருவாக்கியதில் உங்களது பங்களிப்பு முக்கியமானது. எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தமிழ்ப் புனைவுலகில் நிகழ்ந்த ஆரோக்கியமான மாற்றத்தில் இந்த உரையாடல்களின் பங்களிப்பு முக்கியமானதொன்று. ஆனால் கடந்த பத்து வருடங்களில் கோட்பாடு ரீதியாக நீங்கள் எழுதாதது ஏன்?
ஆம், கடந்த பதிமூன்று ஆண்டுகளாக கவிதை, நாவல்களில் மட்டுமே என்னால் தயக்கமின்றி தங்கு தடையின்றி பேசமுடிகிறது. என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சரிவுகள் அரசியல் தத்துவ அறம்சார் சொல்லாடல்களை முன்னெடுப்பதில் அயற்சியை ஏற்படுத்துகின்றன. பேசும்போது நான் என்னை வேவுபார்க்கிறேன்; போலித்தனம் தெரிகிறது. மார்க்ஸ் — ஏங்கல்ஸ், மிஷேல் பக்குனின், காந்தியார், பெரியார், அம்பேத்கர் இவர்கள் ஊடாடாமல் ஒரு வாக்கியத்தை என்னால் எழுதமுடியாது. நான் எழுதிய அபுனைவுகளுக்கு என்னால் உண்மையாக இருக்கமுடியவில்லை. நான் பல்கலைக்கழகக் கல்வியாளன் இல்லை; ஓர் எளிய எழுத்துக் கலைஞன். குடிகாரர்கள் தத்துவவாதிகளாகவும் சோதிடர்கள் தீர்க்கதரிசிகளாகவும் தொழிலதிபர்கள் ஒரு குடியரசின் அதிபராகவும் கொலைகாரர்கள் சமூகப் போராளிகளாகவும் உருத்திரிந்திருக்கிறார்கள். முழுமையான வாக்கியத்தால் என்னால் சிந்திக்கமுடியவில்லை. நான் மூன்றாம் உலக எழுத்தாளன்; ஐரோப்பிய பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களின் அறவொழுங்கிற்குப் பின்னால் பதுங்கிக்கொள்ள வெட்கமாகயிருக்கிறது. அந்தோனின் அர்த்தோவும் ஃப்ரெதெரிக் நீட்ஷேவும் மது அருந்தும்போது அழையா விருந்தாளியாக வலியச்சென்று அமர ஏதோவொன்று தடுக்கிறது. ஆனால், எனது இக்காலப் புனைவுகள் எல்லாம் மாறுவேடமிட்ட நுண்ணரசியல் தத்துவச் சொல்லாடல்கள் என்பதைக் கூரிய வாசகரால் அறியமுடியும். நான் எந்தவொன்றையும் வெளிப்படையாகக் கேள்விக்குட்படுத்தத் தகுதியற்றவனாக இருக்கிறேன். மிஷேல் ஃபூக்கோ, ழான் ழெனே, அந்தோனின் அர்த்தோ, ழான் போல் சார்த்ர், சே குவேரா போஸ்டர்கள் ஒட்டப்பட்ட அறையில் ஈழ விடுதலையைப் பற்றி பேசிப்பேசி விடிந்த இரவுகளை அசைபோட்டபடி, இன்று ஊனமுற்ற உடம்பால் விளைந்த தனிமையில் உழல்கிறேன். மேலும், புனைவு, அபுனைவு என்ற பிரிவுகளைக் கடந்துவந்துவிட்டேன். இனியான எழுத்து அப்படியாகத்தான் அமையும். ஒவ்வொரு சொல்லும் பொருளுடையது மட்டுமில்லை அது புனைவாலுமானது. கட்டுரைக்கும் கட்டுக்கதைக்குமான இடைவெளியைச் சமன்படுத்த எத்தனிக்கிறேன்.
சூர்யதேவ் : தமிழ் இலக்கியத்தில் கோட்பாட்டுப் புரிதலில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதா? கோட்பாட்டுப் புரிதலின்மையால் ஏற்படும் நன்மை தீமை பற்றி…
ஆசான்கள் அளித்த கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முன்வைத்தோ, அந்த்ரே ப்ரெதோன் வரையறுத்த சர்ரியலிச அறிக்கையை முன்வைத்தோ எந்தவொரு கலைஞரும் கலை இலக்கியச் செயல்பாட்டில் ஈடுபடுவதில்லை. சமூக அரசியல், கலை இலக்கியத்தில் இவ்விரு அறிக்கைகளே காத்திரமானவை. எனவே இவற்றைக் குறிப்பிட்டேன். இவ்விரு கோட்பாடுகளே இன்றளவும் சமூகக் கலை இலக்கிய அரசியல் களத்தில் செல்வாக்குப் பெற்றிருக்கின்றன. ஆனால், இவற்றை மட்டுமே வழிகாட்டிக் கையேடாகக்கொண்டு யாரொருவரும் செயல்படுவதில்லை; இருப்பினும் இவ்விரு கோட்பாட்டுத் தளத்திலிருந்து விலகியும் உடன்பட்டும் முரண்பட்டும் தொட்டும்தொடாமலும் தாமரை இலை நீர் போல உருண்டுகொண்டிருக்கிறோம். தமிழகத்தின் திராவிடக் கலை இலக்கிய அரசியல் கோட்பாடுகளும் இந்தியத் தலித் கலை இலக்கிய அரசியல் கோட்பாடுகளும் பரந்த இடதுசாரிய அறிவொழுங்கில் முடிவற்ற சொல்லாடல்களை உருவாக்குகின்றன. அரசியல் அறிவொழுங்கிலிருந்து கலை இலக்கிய அறிவொழுங்கு வேறுபட்டது. ஆசான்கள் உள்வாங்கித் தமது புலனின்பமாக்கிக்கொண்ட கலை இலக்கியங்கள் வர்க்கம் கடந்தவை. ஐரோப்பிய அரசியல் மற்றும் கலை இலக்கிய அறிவை மட்டுமே அளவுகோலாகக்கொண்டு உலகின் மூலைமுடுக்கை எல்லாம் ஆய்ந்தறிந்து பொதுமைப்படுத்தலாகாது. இது தமிழுக்கும் பொருந்தும்.
சபரிநாதன் : பிரெஞ்சு இலக்கியமும் கோட்பாடுகளும் உங்கள் ஆளுமையில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தின? அவற்றில் இருந்து நீங்கள் பெற்றுக்கொண்டவை என எவற்றைச் சொல்வீர்கள்?
நான் கம்யூனிசத்திலிருந்து தொடங்கி சர்ரியலிசம் வழியாகத்தான் கலை இலக்கியங்களில் எனக்கு உடன்பாடானதைத் தேர்ந்துத் தொகுத்துக் கொண்டேன். பிரெஞ்சு சர்ரியலிஸ்டுகளின் வழிமுறையும் இப்படித்தான் இருந்தது. அமைப்பியல், பின் அமைப்பியல், பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களின் கல்விப்புலப் பின்னணி என்னை மருட்டியது. சார்த்ர், ஹெலேன் சிசுவைப் போல பிற சிந்தனையாளர்களுடன் இயல்பாக ஒழுகமுடியவில்லை. பிரெஞ்சுப் பெண்ணியவாதிகள் கோட்பாட்டாளர்களாகவும் இலக்கியப் படைப்பாளர்களாகவும் விளங்குவதால் அவர்கள் எழுத்துக்களில் என்னால் இயல்பாகப் புழங்கமுடிந்தது. நான் மொழிபெயர்த்த கிரிஸ்தேவாவின் கிழவனும் ஓநாயும் என்ற நாவலும் ஹெலேன் சிசுவால் அன்னா அக்மதோவாவின் வாழ்வின் ஒரு பகுதியை நாடகமாக்கிய பனுவல் வெள்ளைப் பாய்மரம் கறுப்புப் பாய்மரம், மார்கெரெத் துய்ராவின் என் அன்பே ஹீரோஷிமா என்ற திரைக்கதைப் பனுவல், ழார்ழ் பத்தாய்யின் கண்ணின் கதை யாவும் கூட்டு வாழ்க்கையைவிட்டு வெளியேற்றப்பட்டபோது அங்கேயே கைவிடப்பட்டன. எனது நூலகத்தின் பிரெஞ்சு சேகரிப்பு யாவும் முடக்கப்பட்டன. நான் முற்றாக இருட்டடிப்புக்கு ஆளானபோது; என்னை நானே நோவதைத் தவிர வேறு வழியற்றுப்போனேன். சொந்தக் கதையைப் பேசுவதற்கு மன்னிக்கவும். பிரெஞ்சு இலக்கியம், தத்துவம், திரைப்படம் யாவும் சோறும் தண்ணீருமாக உடம்பிலூறி என் ஆளுமையை வடித்தன. கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் கலை இலக்கியச் சூழலை ஆக்கிரமிக்கும்போது அங்கே கலைஞர் மனச்சிதைவுக்கு ஆளாகிறார். பொதுவாக, இந்த இலக்கிய வாழ்க்கையிலிருந்து நான் பெற்றவை ஒரு கூடைப் புணர்ச்சிகள், நூறு கூடைக் காயங்கள்.
சூர்யதேவ் : பின்நவீனத்துவம் எவ்விதமான விடுதலையைச் சாத்தியப்படுத்துகிறது?
அறிவு அற்றம் காக்கும் கருவி, அறிவே அதிகாரம், அறிந்ததிலிருந்து விடுதலை; இப்படியான கண்டடைதலுக்கு நடுவிலிருந்து அறிவு ஓர்இடத்தில் தேங்கும்போது ஃபாசிசம் உருத்திரள்கிறது என்பதை வந்தடைந்தோம். அறிவைப் பொதுமைப்படுத்துவதை மறுக்கும் பண்பாட்டு மத அரசியல் ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட சமூகத்தில் உருவாகி வளர்ந்த ஒரு தன்னிலைக்கு God is a Fascist என்ற தன்னறிவு இயல்பிலேயே உருப்பெற்றுவிடுகிறது. ஃபாசிசம் அண்டாத மனத்தையும் அறிவையும் இடதுசாரியப் பின்நவீனத்துவம் கட்டமைக்கிறது. ஒன்றை மேலாதிக்கம் செய்யும் அறிவொழுங்கைக் குலைப்பதிலேயே பின்நவீனத்துவ விடுதலை அரசியலும் அறவியலும் கட்டமைகிறது. இதையே இடதுசாரியப் பின்நவீனத்துவ அரசியல் செயல்பாடு எனப் புரிந்துகொள்கிறேன். ஒட்டுமொத்த அழுத்தங்களிலிருந்து தன்னை விடுதலை செய்ய கடவுள் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து, இயேசு கிறித்து ஏமாந்து சிலுவையில் தொங்கியபோதே இறையியல் செத்துவிட்டது. மதத்தின் பொய்மை முகம் தோலுரிக்கப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. வலதைக் கடந்த இடது ஃபாசிசத்தை இருபதாம் நூற்றாண்டில் கண்டும் அனுபவித்தும் தெளிந்துவிட்டோம். மதம், வலது, இடது என அனைத்திலிருந்து வெளிப்படும் மேலாதிக்க அறிவொழுங்கைக் குலைப்பதே இனியான பின்நவீன விடுதலை அரசியல் என்ற புரிதலை வந்தடைந்திருக்கிறோம். கலை இலக்கியத்தில் இதை அடையாளம் காண்பதையும் வளர்த்தெடுப்பதையும் விழைகிறேன்.
லக்ஷ்மி சரவணகுமார்: பரதேசி சிறுகதையில் வரும் பேராசிரியரின் வாழ்வில் இந்திய பாகிஸ்தான் பிரிவினை ஒரு புள்ளியாகவும் அவர் ஜெர்மனிக்குப் பயணிக்கும்போது இரண்டாம் உலகப்போர் இன்னொரு புள்ளியாகவும் இணைந்து அந்தக் கதை கடந்த நூற்றாண்டின் வெவ்வேறு குரூர முகங்களைக் காட்டுகிறது. வரலாற்றின் மீதான இந்தக் கதை சொல்லுதலை எவ்வாறு திட்டமிட்டீர்கள்?
இந்திய துணைக்கண்டத்தின் தேசிய இனங்களின் விடுதலை இறையாண்மை கொண்ட மொழித்தேசிய அரசியல் சுயநிர்ணயச் சொல்லாடல்கள் மூடிப் புதைக்கப்பட்டு, மதத்தேசியம் பற்றிய சொல்லாடல்கள் முன்னெடுக்கப்பட்ட, வலி நிறைந்த வரலாற்று மோசடியை உள்ளீடாகக்கொண்டு எழுதப்பட்ட கதை. இந்துஸ்தான், பாகிஸ்தான் என மதவழி தேசங்கள் இரண்டின் வலிநிறைந்த உதயம் என்று சொல்லாமல் அதை வலிகொண்ட பிரிவு எனச் சொல்லிச்சொல்லி, இத்துணைக்கண்டத்தில் ஒரு நாட்டின் விடுதலை என்பதே பிரிவினை என்பதாகக் குடிகளின் மனங்களில் பதியப்பட்டுவிட்டன. இந்தியா, நேபாளம் என்ற இந்து நாடு,,,,,,,,,,,களும்; பாகிஸ்தான், வங்கதேசம் முதலான இஸ்லாமிய நாடுகளும்; இலங்கை, மியான்மர் முதலான புத்த நாடுகளும் மத அடிப்படையில் தோன்றி, மொழிவழி தேசிய இனங்களின் விடுதலைச் சொல்லாடல் தடைபட்டு மெளனமாக்கப்பட்டது. பெருமதங்களின் பெருந்தேசியச் சொல்லாடல் முன்னெடுக்கப்பட்டு மொழித்தேசியமான திராவிடநாடு, குறிப்பாக தனித்தமிழ்நாடு பற்றிய பேச்சு ஒலியிழந்துபோனது. இந்த விவாதத்தைப் பொந்திஷேரி (புதுச்சேரி)யிலிருந்து பாரிஸ் வழியாக பெர்லின் வரை கதைக்கான அரசியல் வரைபடம் ஒன்றை உருவாக்கி Post Second World War அரசியல் கட்டமைப்பில் எழுதப்பட்ட நெடுங்கதை இது. இந்தப் பரதேசியின் ஊடுபிரதியாக ஸதத் அஸன் மண்டோவின் ஆக்கங்களும் அலேன் ரெஸ்னேவின் இரவும் பனியும் ஆவணப்படமும் முன்நிற்கின்றன. பொந்திஷேரியைச் சார்ந்த ஸொர்போன் பல்கலைக்கழக மாணவனும் புதுச்சேரி பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் பச்சியப்பனும் திருவண்ணாமலைக் குகைகளும் பெர்லின் நாசி வதைமுகாமும் பின்னிப் பிணைந்து பெருகி அகிலம்சார் தற்கால அரசியல் புனைவெழுத்தாய் உருவானது. மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு தொடராக வெளிவந்தது. திரைப்படமாக உருவாக்கினால், தமிழுக்கு ஒரு பன்னாட்டு இந்தியச் சினிமா கிடைக்கும். இக்கதை எழுதி இருபதாண்டுகள் கடந்த நிலையில் யாராலும் பேசப்படாமல் நானே முதலாவதாகப் பேசவேண்டிய அவலமும் அபத்தமும் நேர்ந்துவிட்டது.
சித்ரன் : சொல் என்றொரு சொல்லில் ததாகதரின் இறுதி இரவுப் பகுதியும் அம்பிகை வசியவாலைப் பகுதியும் நான் தொடர்ச்சியாக மீண்டும் மீண்டும் வாசிப்பவை. ஆனால் எவ்வித மையச்சரடுமற்று புனைவுச் சிதறலாய் உள்ள அந்நூலை எப்படி நாவலாய் வகைபடுத்துகிறீர்கள்?
கதாபாத்திரங்களின் வழியே நிகழ்வுகளை வளர்த்தெடுத்து அனைத்தையும் ஒருசேரத் திரட்டி பெருங்கதையாடலைக் கட்டமைப்பதே பேரிலக்கியச் செய்முறையாக இருக்கிறது. அதற்கு மாறாக, சிறுசிறு கதைகளினூடாகப் பெருகும் சொல்லாடல்களைக்கொண்டு, ஏற்கெனவே வரலாறு கட்டமைத்த பெருங்கதையாடல்களைச் சிதைவாக்கம் (deconstruction) செய்து தொகுத்துக்கொள்வதே பின்நவீனப் பனுவலின் செய்முறையாக இருக்கிறது. இப்பனுவலை வாசிக்கும் தொழில்நுட்ப அறிவே பின்நவீனத்துவப் பிரதியின்பமாகிறது. சொல் என்றொரு சொல் நாவலானது இரண்டாயிரமாண்டு தமிழ் நிலப்பரப்பில் பேசப்பட்ட பெருங்கதையாடல்களைத் தொகுத்துக்கொள்கிறது. சங்க காலத்திலிருந்து தமிழ்ச் சினிமாக் காலம்வரை சிதைவாக்கப்படுகிறது. புராண காலம், புத்த காலம், சங்க காலம், பக்தி காலம், மூவேந்தர் காலம், தமிழ் நிலத்தில் ஊடுருவிய உள்நாட்டு வெளிநாட்டுக் காலனிய காலம், விடுதலைப்போராட்டக் காலம், திராவிட அரசியல் காலம், ஈழவிடுதலைப்போர் காலம் என பரந்துபட்ட அரசியல் தளத்தில் நாவல் நகர்கிறது. நாவல் என்ற பெயரில் கதைசொல்லும் காலம் முடிந்துவிட்டது; இனியான நாவல் என்பது காலத்தைச் சிதைவாக்குவது. அடைபட்ட வெளி நடுவை மையம் எனக்கொண்டால் அதை சிதைப்பதில்தான் விளிம்புகள் விலகும். மையம் சிதைந்த உள்ளம் பைத்தியமானால், அதிலிருந்து வெளிப்படும் பைத்தியம் பீடித்த சொற்களால் நேர்க்கோட்டுக் கதைகளை வரையமுடியாது. காதை கேட்டால் காதைக் கடிப்பேன் என்று பைத்தியமாக நடிக்கும் எழுத்தாளரோ, எழுத்தாளராக நடிக்கும் பைத்தியமோ சொல்லும். சொல் என்றொரு சொல் ஒரு நாவல் இல்லை; Its a manual of understanding the madness.
***
உரையாடல் தொடரும்…
சித்ரன் – கனாத்திரமுறைத்த காதை – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர். vinocithran@gmail.com