1) காத்திருப்பின் கடவுச்சொல்
சிறகுகளுக்கான சிந்தனை மனம்
தாழப் பறக்கும் போது
அடைபடுகிற இடத்தின் வசதிக்குள்
வனைந்துகொள்ள முடிகிற உயரமாய் இருக்கிறது
தொடங்குதல்
தொட்டுப்பார்த்து
தொடர்ந்து சேர்த்த குறிப்புகள்
முற்றுப்பெறா பக்கமாகிப் புரட்டுகிறது
இருப்பின் காற்றை
கையடக்கமான வெளிச்ச விளிம்பிற்குள்
நிழல் கொண்டு புதைந்திருக்கிற
காரணம்
போதுமாய் இருக்கிறது
கூடுதலாக்கிப் பிரகாசிக்க காத்திருக்கும்
ஒரு சொல்லுக்கு
***
2) மனம் பகிரா வெளியின் பசியளவு
இருப்பதை இருப்பதாய்
நம்பவைக்கும் கணத்தைத் தொட்டு
நடித்துக்கொண்டிருக்கிற
பாத்திரத்தை
எடுத்துக்கொண்ட கொள்ளளவாகி
நிறை என்கிறது
மெளனம்
நின்று பேசும் வசதிக்குள்
வாத்சல்யங்களை அளவிடும்
உன் ஒப்பீடு
ஓர் ஒப்பந்தமுனை
இடவசதி
இதுகாறும் அனுமதித்த
உள்வளைவில் உண்டுபார்த்த அப்பம்
என் கைப்பண்டம்
பசி
அர்த்தங்களின் கைமாற
மாறும் ருசிக்குள்
கிளை மீறிப் பறக்கிற அதிர்விற்கு
மணமுண்டு
உண்டு பார்த்த யோசனைகளோடு
விளைவைத்தான் பயிர் செய்கிறது
நிலம்
நீரோடு வருவதில் உருண்டோடுகிற
நயம்
நீர்ச்சுழி மீறிச் சேர்த்த
நிதானம்
நிறைத்துக்
கட
என்பதில் நிறைகிறது
பங்கீட்டின் அகவெளிப் பாத்திரம்
***
–ரேவா, மதுரையில் வசித்து வரும் இவருக்கு “கவனிக்க மறந்த சொல்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.
nelmalar25@gmail.com
சிறப்பு மிக சிறப்பான முகநூல் கவிதை தொகுப்”பூ” 🌹
சிறப்பு மிக சிறப்பான முகநூல் கவிதை தொகுப்”பூ” 🌹