– மீரா மீனாட்சி
புதிய இளமைகளுடன் ஊர் திரும்பும்முன்
ரோசி ஸ்டார்லிங் வலசை பறவைகள்
வானில் தீட்டிய லிபிகள் ‘வீடடங்கென…’
கடலோரத்தில் உதிர்ந்து வீழ்ந்தன
அச்சிறு பறவைகள் மாபெரும் சிறகுகளை
மனிதனற்ற தெருக்களின் சூன்யப் புலரியில்
வீசிச்செல்வது நகரத்துயரத்தை அதிகரித்திருக்கலாம்
நானறியாத வானவீதிகளில்
காமத்தின் வீரியமேறிய
சித்திரை மேகங்கள் நாவறண்டு மடிகின்றன
மண்மறைந்த சருகுகள்
வெளியேற்றிய கீச்சொலிகளில்
புணர்ச்சியின் மய்யல்கொண்ட கோடை மலர்கள்
ஓர்மையற்றுப்போன ஊர்ப்பெயரைத் தலைசிதறி
யோசிக்கும்
மும்பை பாதையோரவாசிகள்
தங்கள் செப்பனிட்டச் சாலைகளின்
நீளத்தை தேய்ந்துபோன
கால்களால் அளந்துகொள்கின்றனர்
கடவுளரைப் பாடிக்கொண்டிருக்கும் படுக்கையறைகளில்
தற்கொலைக் கதைகளுக்கான தீவிரத் தேடல்
சாலைச் சஞ்சாரிகளுக்கு
அப்பறவைகள் வடிவங்களமைத்து
வழிக்காட்டுவதாகக் கண்ட
என் விடியற்காலைக் கனவு
மென் தூவலொன்றின் ஈரத்தில் அணைந்துவிட்டது
கடும் வெயில் வானத்தில்
மிஞ்சிய எழுத்துத் துகள்கள்
இப்போது தீட்டிய வாள்களெனப் பூமியை நோக்கி
வந்து கொண்டிருக்கின்றன
***
(மீரா மீனாட்சி – சூழலியலாளர், கவிஞர், ஓவியர், மொழிபெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பல்துறைகளில் இயங்குபவர், மும்பையில் வசித்து வருகிறார்.)
தொடர்புக்கு – sameerakannan@gmail.com
Hi Meera,
fatastic art and kavidhai
வாழ்த்துக்கள் மீரா மீனாட்ச்சி.
நினைவில் சுவடு பதித்துக் கடக்கிற அபூர்வ வலசைபறவை போன்ற கவிதை. மேலும்
”ஓர்மையற்றுப்போன
ஊர்ப்பெயரைத் தலைசிதறி
யோசிக்கும்
மும்பை பாதையோரவாசிகள்
தங்கள் செப்பனிட்டச் சாலைகளின்
நீளத்தை தேய்ந்துபோன
கால்களால் அளந்துகொள்கின்றனர்”
என்கிற வரிகள் நம்போன்ற கவிஞர்கள் சார்பாக நீங்க எழுதியதுபோல இருக்கு, நன்றி கவிஞர் மீரா மீணாட்ச்சி
நன்றி