Saturday, November 16, 2024
Homesliderவலைகளுக்குள் அறுக்கப்படும் சுறாமீன் மரபணுக்கள்

வலைகளுக்குள் அறுக்கப்படும் சுறாமீன் மரபணுக்கள்

நாராயணிசுப்ரமணியன்

“சுறாமீன்களே இல்லாத கடல் எப்படி இருக்கும்?” – இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி தனியாக ஆராய்ச்சிகள் நடத்த வேண்டியதில்லை. சில தசாப்தங்கள் கழித்து உலகின் பல கடற்பகுதிகளின் நிதர்சனம் இதுவாகத்தான் இருக்கும்.

தற்போது நடந்து முடிந்த ஒரு ஆய்வு, “ஏற்கனவே பல பவளத்திட்டுகள் இந்த நிலையில்தான் இருக்கின்றன” என்று அதிர்ச்சியூட்டுகிறது. உலக அளவில் 121 அறிவியலாளர்கள், 731 தன்னார்வலர்கள் பங்குபெற்ற பிரம்மாண்டமான ஆய்வு இது. நான்கு ஆண்டுகள் நடத்தப்பட்ட கள ஆய்வில் 58 நாடுகளைச் சேர்ந்த 371 பவளப்பாறைத் திட்டுகள் (Coral Reefs) ஆராயப்பட்டன.கள ஆய்வுகளின் காணொலிப் பதிவு மட்டுமே 15,000 மணிநேரம் ஓடக்கூடியது!

நீண்ட இந்த ஆய்வின் முக்கியமான முடிவுகள் இவை:

  1. ஆய்வு செய்யப்பட்ட 58 நாடுகளில், 34 நாடுகளின் பவளத்திட்டுகளில் சுறாக்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவில் பாதி மட்டுமே இருந்தது. ஆகவே உலக அளவில் பவளத்திட்டுக்களின் சுறாமீன்கள் பரவலாக அழிந்துவருவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
  2. சுறாமீன் சரணாலயம், முற்றிலும் மீன்பிடித்தடை உள்ள இடங்கள், மீன்பிடித் தொழில் தொடர்பான சரியான அறிவியல் ரீதியான வரையறைகள், சுற்றுச்சூழலை பாதிக்கக்கூடிய செயல்பாடுகளின்மீதான கட்டுப்பாடு ஆகியவை அமலில் உள்ள கடற்பகுதிகளில் எல்லாம் சுறாமீன்களின் எண்ணிக்கை ஆரோக்கியமாக இருந்தது. ஆகவே சரியான முறையில் கடற்பகுதிகளை மேலாண்மை செய்தாலே சுறாமீன்களை எளிதில் காப்பாற்றலாம் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது.
  3. கிட்டத்தட்ட 20% பவளத்திட்டுக்களில் சுறாமீன்கள் செயல்பாட்டு ரீதியாக அழிந்துவிட்டன என்று கண்டறியப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் “Functionally extinct”  என்று குறிப்பிடப்படுகிறது.

செயல்பாட்டு ரீதியான அழிவு என்றால் என்ன?

“அழிவு” (Extinction)  என்பது ஒரு இனத்தில் ஒரு விலங்கு கூட உலகில் எங்குமே உயிரோடு இல்லை என்பதைக் குறிக்கிறது. தொல்லுயிர் எச்சங்கள், ஓவியங்கள், பாடம் செய்யப்பட்ட உடல் ஆகியவற்றில் மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும். டைனோசர், சடை யானை என இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.

செயல்பாட்டு ரீதியான அழிவு என்பது அப்படிப்பட்டதல்ல. ஒரு இனத்தில் இன்னும் சில விலங்குகள் மீதம் இருக்கலாம். ஆனால் இங்கே எண்ணிக்கை முக்கியமல்ல:

  1. மீதமிருக்கிற விலங்குகளால் இரை விலங்குகளின் எண்ணிக்கையைப் பெரிதும் பாதிக்க முடியாது. அவற்றால் வாழிடத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
  2. இனப்பெருக்கம் செய்யவே முடியாத அளவுக்குக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விலங்குகள் மீதம் இருக்கின்றன.
  3. ஒருவேளைஇனப்பெருக்கம் செய்தால்கூட, தொடர்ச்சியாக ஒரு சிறு இனக்குழுவுக்குள்ளேயே இனப்பெருக்கம் செய்வதால் மரபணு பாதிப்பு அதிகமாகும் என்ற அச்சுறுத்தல் இருக்கிறது, ஆகவே இரண்டொரு தலைமுறைக்குள் மரபணுக்கள் வலுவிழந்து விலங்குகளின் எண்ணிக்கை இன்னும் குறையும்.

வாழ்வியல் ரீதியாக இவற்றில் எது நிகழ்ந்தாலும் அது “செயல்பாட்டு ரீதியான அழிவு” என்று சொல்லப்படுகிறது:.அதாவது மீதமிருக்கும் விலங்குகளால் செயல்பாட்டு ரீதியாக அந்த வாழிடத்தின்மீதோ இனத்தின்மீதோ எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. பொதுவாக  இந்த நிலைக்கு ஒரு இனம் தள்ளப்பட்டுவிட்டால்  வெகுவிரைவில் அது முற்றிலுமாக அழிந்துவிடும்.

 உலகின் பல கடல்களில் சுறாக்கள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. பவளப்பாறைத் திட்டுக்களில் செயல்பாட்டு ரீதியாக சுறாக்கள் அழிந்துவிட்டன. சுறாமீன்களே இல்லாத வாழிடங்களாகப் பல கடற்பகுதிகள் மாறிக்கொண்டிருக்கின்றன.

சுறாக்கள் ஏன் எளிதில் பாதிக்கப்படுகின்றன?

 துடுப்புக்களுக்காக, உணவுக்காக, கல்லீரல் எண்ணெய்க்காக சுறாமீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுகின்றன. சராசரியாக ஒரு வருடத்துக்கு 100 மில்லியன் சுறாக்கள் பிடிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன அறிவியல் தரவுகள். நேரடியாகப் பிடிக்கப்படும் சுறாக்கள் தவிர, செவுள் வலைகள் போன்ற சில வகை வலைகளில் தற்செயலாக மாட்டி இறக்கின்ற சுறாக்களின் எண்ணிக்கையும் வருடாவருடம் கூடிக்கொண்டே போகிறது. எல்லாவகை மீன்களையும் துடைத்து எடுக்கக்கூடிய  இழுவலைகளில், தேவையோ தேவையில்லையோ சுறாக்களும் பிடிபடுகின்றன.

ஆனால் மீன்பிடி அழுத்தம் (Fishing pressure) என்பது உணவுக்காகப் பிடிக்கப்படும் எல்லா மீன்களையும் ஒருசேரத்தான் பாதிக்கிறது. சுறாக்கள் மட்டும் ஏன் வேகமாக அழிவின் விளிம்புக்குத் தள்ளப்படுகின்றன?

சுறாக்களின் வாழ்வியல் சுழற்சியால் வந்த சிக்கல் இது.

சூழலியலில் R species, K species என்று விலங்குகள் இரு பகுப்புகளாகப் பிரிக்கப்படுகின்றன. பரிணாம வளர்ச்சியின்படி தங்கள் இனத்தை நிலைநிறுத்திக்கொள்ள இரண்டு வகையான இனப்பெருக்க யுத்திகளை விலங்குகள் கடைபிடிக்கின்றன என்ற அடிப்படையில் வந்த கருத்தாக்கம் இது. காலபோக்கில் Life history theory என்று அழைக்கப்பட்டது.

தவளை, சுண்டெலி போன்ற சிறு விலங்குகளை எடுத்துக்கொள்வோம். இவற்றின் வாழ்நாள் குறைவு. இவை விரைவாக இனப்பெருக்க வயதை எட்டிவிடும், ஒரு முறை இனப்பெருக்கம் செய்தால் அதிக எண்ணிக்கையில் முட்டையிடக்கூடியவை/குட்டிகளை ஈனக்கூடியவை இந்த விலங்குகள். இவற்றை R species என்று அழைக்கிறார்கள்.

இவற்றுக்கு நேரெதிரான வாழ்க்கை வரலாறைக் கொண்டவை K species இனங்கள். இவற்றின் வாழ்நாள் அதிகம், பொதுவாக இவற்றின் உடலின் அளவும் பெரியதாக இருக்கும். இனப்பெருக்க வயதை எட்டுவதற்கு அதிக காலம் எடுத்துக்கொள்ளக்கூடியவை. பாலூட்டிகளாக இருக்கும் பட்சத்தில் இவற்றின் பேறுகாலமும் நீளமாக இருக்கும். ஒரு முறை இவை ஈனும் குட்டிகளின் எண்ணிக்கையும் குறைவு. யானை, மனிதக் குரங்குகள் போன்றவை சில உதாரணங்கள்.

சுறாக்களும் K species என்ற பகுப்பின்கீழ் வருபவைதான். முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் சுறா இனங்கள், முட்டையை உடலுக்குள்ளேயே பொரித்து குட்டிகளை ஈனும் இனங்கள், நேரடியாகக் குட்டிகளை ஈனும் சுறாக்கள் என்று சுறாக்களிலேயே பல வகை உண்டு. இவை எல்லாமே குறைவான இனப்பெருக்க வேகம் கொண்டவை. ஆகவே மீன்பிடி அழுத்தம் அதிகமாகும்போது அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து சுறாக்களால் தங்களது எண்ணிக்கையை சமன் செய்துகொள்ள முடிவதில்லை.

ஆச்சரியம் என்னவென்றால், மரபுசார் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பலருக்கு இது பற்றிய புரிதல் இருக்கிறது. சுறாக்களைப் பற்றிய ஒரு உரையாடலில் “இது குட்டி போடுற இனம், அதனால் நாம பிடிக்க பிடிக்க சீக்கிரம் அழியும்” என்று வடதமிழகத்தின் முதிய மீனவர் ஒருவர் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.

சுறாக்கள் அழிந்தால் என்ன ஆகும்?

சுறாக்கள் பல மில்லியன் ஆண்டுகால நீண்ட பரிணாம வரலாறு கொண்டவை. 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தொன்மமான இனங்கள் இவை.ஒவ்வொரு முறை ஒரு சுறா இனம் அழியும்போதும் 26 மில்லியன் ஆண்டுகால வரலாறு ஒன்று அழிக்கப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!  ஒரு பறவையின் சராசரி வரலாற்றை விடவும் இது ஐந்து மடங்கு அதிகம்!

சுறாக்களின் பரிணாம வரலாறும் மரபணுவின் தொன்மமும் வியப்பூட்டக்கூடியவை. அவற்றின் மரபணுவில் இருக்கும் பல உயிரியல் ரகசியங்களை இன்னும்கூட நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் உண்மை. சுறாக்களை அழிப்பது என்பது ஒரு மரபணு நூலகத்தைத் தீயிட்டுக் கொளுத்துவதுபோன்றது.

கடலின் வாழிடங்கள் பலவற்றுக்கும் சுறாக்களுக்கும் ஒரு நுணுக்கமான பிணைப்பு உண்டு. ஒரு காலத்தில் சுறாக்கள் எல்லாமே உச்ச வேட்டையாடிகள் (Apex Predators) என்ற கருத்தாக்கம் நிலவியது. சமீபத்திய ஆய்வுகள் இந்தக் கருதுகோளை மாற்றியமைத்துள்ளன. சுறாக்கள் பல இடங்களில் நடுத்தர  வேட்டையாடிகளாகவும் (Mesopredators) செயல்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“இரை விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பது” என்ற ஒற்றைப் படையான பங்களிப்பைத் தாண்டி, உணவுப்பின்னலின் பல அடுக்குகளில் சுறாக்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு பவளத்திட்டில் அவ்வப்போது வந்துபோகும் சுறாக்கள்கூட பல்வேறு வழிகளில் அந்த வாழிடத்தோடு வினையாற்றுகின்றன. உயிர்ச்சத்துக்களின் சுழற்சி, இரைவிலங்குகளின் வாழ்வியல் வழக்கங்களை மாற்றியமைப்பது, வலுவிழந்த/நோயுற்ற விலங்குகளை அழிப்பதன்மூலம் இரைவிலங்குகளின் கூட்டத்திற்கு வலு சேர்ப்பது, அயல் ஊடுருவி இனங்களை அழிப்பதன்மூலம் வாழிடத்தைக் காப்பாற்றுவது என சுறாக்களின் சூழல் பங்களிப்பு ஒரு பெரிய பட்டியல். சுறாக்கள் அழியும்போது  உணவுச்சங்கிலியின் பல கண்ணிகள் அறுக்கப்படுகின்றன, சூழல் பாதிக்கப்படுகிறது, வாழிடத்தின் சமநிலை சீர்குலைகிறது.

சுறாமீன்களைப் பாதுகாத்தல்

சுறாமீன்களைப் பாதுகாப்பதற்கான செயல்திட்டங்களை வகுப்பதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. வளரும் நாடுகளில் சுறாமீன்களின் தசை உணவுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மற்ற மீன்களோடு ஒப்பிடும்போது சுறாமீன்களின் தசை குறைவான விலைக்கே விற்கப்படுகிறது. ஆகவே குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய புரத உணவாக இது மாறியிருக்கிறது. உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் என்று பல சிக்கலான சமூகவியல் கூறுகளோடும் சுறாக்கள் பிணைக்கப்பட்டிருக்கின்றன. தடை இருக்கும் நாடுகளில்கூட சட்டவிரோதமாக சுறாமீன்கள் பிடிக்கப்படுவதற்கு இதே சமூகவியல் கூறுகள்தான் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்.

பன்முகத்தன்மைக் கொண்ட மீன்பிடித் தொழில்கள் இருக்கும் இந்தியா போன்ற ஒரு நாட்டில், சுறாமீன்களின் நிலவரம் இன்னும் சிக்கலானது. இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் “சுறாமீன்களைப் பிடிப்பவர்கள்” என்று ஆராய்ந்தால், குறைந்தது ஏழு வகையான குழுக்களைப் பார்க்கமுடியும் என்கிறது ஒரு ஆய்வு. காலத்தைப் பொறுத்தும் இடத்தைப் பொறுத்தும் இது மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு மீன்பிடி கிராமத்துக்குள்ளேயே இருவகையான மீன்பிடி முறைகள் இருக்கலாம். ஒன்று சூழலை பாதிக்கக்கூடியதாகவும் இன்னொன்று தற்சார்பை மையமாகக் கொண்டதாகவும் இருக்கலாம். ஆகவே உலகளாவிய பாதுகாப்பு வரையறைகளை இங்கு அப்படியே செயல்படுத்த முடியாது.

சுறாமீன் பற்றிய பொது விழிப்புணர்வு, எந்தெந்த சுறாமீன்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, சுறாக்கள் பற்றிய மீனவர்களின் கருத்துக்கள்/நம்பிக்கைகள், மீன்பிடி வகைமைகள்,  சுறாமீன் வகைகளின் தற்போதைய நிலை, வாழ்வாதாரச் சிக்கல்கள், பிடிக்கப்படும் ஒரு சுறாமீன் எங்கெங்கெல்லாம் போகிறது (Shark supply chain) போன்ற எல்லா விவரங்களையும் கருத்தில்கொண்டே நாம் பாதுகாப்புக்கான வழிமுறைகளை விவாதிக்கவேண்டும். அது அறிவியல்ரீதியாகவும் சரியானதாக இருக்கவேண்டும். அப்போதுதான் அமலாக்கத்தின்போது எதிர்ப்பார்த்த விளைவுகள் கிடைக்கும்.

சுறாக்களின் பாதுகாப்பு பற்றிய செயல்பாடுகள் எதுவாயினும் அவற்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டியது அவசியம். 400 மில்லியன் ஆண்டுகளாகக் கடலில் கோலோச்சிக்கொண்டிருந்த சுறாக்களை 3 மில்லியன் ஆண்டுகள் மட்டுமே பழையதான மனித இனம் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது.  அதை உணர்ந்து நம் வலைகளிலிருந்து சுறாக்களின் மரபணுக்களை விடுவிப்பது நம் கடமை!

தரவுகள்

  1. Global Status and Conservation Potential of Reef sharks, MacNeil et al,July 2020.
  2. Global Prirotities for Conserving the Evolutionary history of sharks, rays and chimaeras. William Stein et al, 2018.
  3. The ecological role of sharks on Coral reefs. Roff et al, 2016.
  4. An Ill thought Ban. Vivekanandan E. 2001.

***

நாராயணி சுப்ரமணியன்:கடல்வாழ் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.”நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே” என்ற உயிரியல் நூலை எழுதியுள்ளார். தமிழில் கடல்சார், அறிவியல் பொருண்மைகளைக் கவிதைகளில் எழுதி வருபவர். விகடன் தடம், வாசகசாலை, அரூ இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. Email: nans.mythila@gmail.com

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular