ரமேஷ் ரக்சன்
முன்பெல்லாம் மூர்த்தி, முதலில் வந்து அறைக் கதவைத் திறந்தான் என்றால் அறையில் மின்விசிறி ஓடவில்லை என்பது மெத்தையில் படுக்கும்போது, முதுகில் உணரும் சூட்டின் மூலம் தான் தெரிந்து கொள்வான். மிச்சமிருக்கும் மூவரும் அறைக்குத் திரும்பும் வரை அல்லது சன்னலொட்டிய கட்டில்காரன் வரும்வரை, சன்னலையொட்டி அமர்ந்து கொண்டு எதிரில் தெரியும் வேப்ப மரத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் கொண்டவன் மூர்த்தி.
இரவு சாப்பிடும் போதுதான் அந்த இடத்தை விட்டு எழுவான். நடுவில் அறை நண்பர்கள் கதவைத் தட்டி, எழுந்து திறப்பதற்கு அவனுக்குப் பிடிக்காது. தாழிடாமல் சாத்தி வைத்துவிட்டு வந்தமர்ந்து கொள்வான். அறையின் மூலையில் ஒரு பீரோ இருக்கும். மொத்தம் ஐந்து அடுக்கு. தனக்கான அறையில் அலைபேசியை வைத்துவிடுவான். பேட்டரியில் சார்ஜ் இருக்கிறதா என்றெல்லாம் மெனெக்கெட்டு ப்ளக் பாயின்ட் தேடிப் போடுகிறவன் இல்லை. காலையில் அலுவலகம் செல்லும் போது திரையில் தெரியும் தவறிய அழைப்புகளை வரிசையாக அழைத்துப் பேசுவான். எல்லாம் நொடிகளில் முடியும் அழைப்பு தான். நீண்டாலும் முடித்துவிடுவான்.
அறையின் சன்னலையொட்டி வெளிப்பக்கம் சிமென்ட் சீட் இறக்கப்பட்டு அதன் கீழ் ஓர் இரும்புக் கடையுண்டு. வெய்யில் காலங்களில் சிமென்ட் சீட்டில் உதிரும் வேப்பம் பூக்களை, அது மரத்திலிருந்து உதிர்வதை ரொம்ப கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருப்பான். கவிதை கூட இப்படித்தான் நொடிகளுக்குள் உதிர்கிறது என்று மூவரிடமும் அவன் அடிக்கடி சொல்ல நினைத்ததுண்டு. கேலி செய்தாலோ, இல்லை அது எப்படி என்று கேள்வி கேட்டாலோ தன்னால் அந்த உணர்வை விளக்க முடியாது என்பதை அறிந்து ஒருபோதும் சொல்லியதில்லை.
யாருமில்லை என்று ஒருசில நேரங்களில் வருந்திக் கொள்வான் சில சமயம் நல்லவேளை யாருமில்லை என்று சந்தோசப் பட்டுக்கொள்வான். இந்த மனது எதற்குத்தான் இப்படி அடிபோடுகிறது என்ற சந்தேகம் ஒருபோதும் தீர்ந்ததில்லை. அப்படி உணரும் போதெல்லாம் இரவு 12 மணி வாக்கில் அறையிலிருந்து கிளம்பி ரோட்டோரம் நிற்கும் திருநங்கைகள், அவர்களின் ஆடை அலங்காரம், உணர்ச்சியற்று அழைக்கும் கண்கள், புன்னகை, வாடிக்கையாளரிடம் பேசுவது. மேலும் இவனை அடிக்கடி பார்த்திருப்பதால் அவர்கள் கண்டு கொள்வார்கள்..
***
ஒருமுறை எதற்கென்றே தெரியாமல் மூவரும் மூன்று ப்ராண்ட்களில் ஆணுறையைப் பரிசளித்தனர். யாருமில்லாத அந்த அறையில் அவனுக்கு அது திரும்பத் திரும்ப நினைவுக்கு வந்து கொண்டிருந்தது. அறையைக் காலி செய்திருந்த இரண்டாவது நாள் அலைபேசி அழைப்பில் எதற்காக வாங்கி வைத்தோம் என்பதை ஒருவன் சொன்னதைத் திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டான். “அந்த அளவுக்கா வாழ்கிறோம்” என்ற சந்தேகம் மூர்த்தியை மிகவும் தொந்தரவு செய்தது. திருநங்கையிடம் பேச்சுக் கொடுக்கச் சொன்னது, பகலில் நட்பாகவாவது பேசிப் பழகச் சொன்னது, என்று எல்லாம் நினைவில் வந்துகொண்டே இருந்தது.
கதவையே பாத்துக்கொண்டிருந்தான்.
சன்னலையொட்டி ஒடுங்கியிருந்தவனை நெருங்கி வந்த பெண்ணொருத்தி அவன் ஆடைகளைக் களைந்து, தானும் நிர்வாணமாகி மல்லாந்து படுத்துக் கொண்டாள், அவனின் தலையைத் தன் மார்பழுந்த எடுத்து வைத்து, அவன் காலைத் தன் அடிவயிற்றிற்குச் சற்று மேலே முட்டி அழுந்துமாறு போட்டுக் கொண்டாள்.
அழுகை பீறிட்டு வந்தது மூர்த்திக்கு.
டீக்கடையில் தேயிலைத் தண்ணீரைப் பாலில் ஊற்றுவதை, நுரை பொங்க மேலும் கீழுமாய் ஆற்றுவதை, பனியனில் இருந்த கரையை, உதட்டுக்குள் அதக்கியிருக்கும் பாக்கினால் பிதுங்கி நிற்கும் உதட்டை, கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்து நின்றவன், தனக்கொரு டீ சொல்லிக்கொண்டான்.
சற்று நேரத்திற்கு முன் ஒரு பெண் தன் அருகில் படுத்துக் கொள்வதுபோல வந்த காட்சி, கண்ணாடிக் கோப்பையின் சூடு உள்ளங்கைக்கு வேண்டுமெனப் படவும், கொஞ்சம் அழுத்திப் பிடித்துக்கொண்டான். கண்கள் இரண்டும் மிகவும் வறண்டு விட்டதாகவும், இனி நமக்குக் கண்ணீரே இல்லை. வற்றி விட்டதாகவும் ஒவ்வொரு மிடறு பருகும் போதும் எண்ணிக் கொண்டிருந்தான். வாழைக்காய் சீவிக் கொண்டிருந்தவர் கூப்பிட்டு டீக்குக் காசு கொடுக்க மறந்து சென்று கொண்டிருப்பதைச் சொன்னார்.
பார்வையின் வழியே எண்ணெய் போல ஏதோ நீந்திக் கொண்டிருந்தது. கண்களை அழுந்த தேய்த்தும் அகலுவதாய் இல்லை. ஒவ்வொரு படிக்கட்டுகளிலும் கால் எடுத்து வைக்கவே சிரமமாய் இருப்பது போல உணர்ந்தான். பூட்டு மங்கலாய்த் தெரிந்தது. அழுகிறோமா என்று கண்களை தொட்டுப்பார்த்துக் கொண்டான். அறையில் இனி எந்தச் சத்தமும் இருக்காது. கெட்ட வார்த்தைகள் எதுவும் கேட்கப் போவதில்லை. பாக்கு வாடை இருக்கப் போவதில்லை. தனிமைப் படுத்தப்பட்டு விட்டோமோ என்று பயமாய் இருந்தது அவனுக்கு. ஆடைகளெல்லாம் பாரமாய் இருப்பதாய் நினைத்து, சன்னலையும் சேர்த்து சாத்திக் கொண்டான்.
மூர்த்தியின் கண்கள் தெருவழியே அலையத் தொடங்கியது. இதுவரை அவன் கண்ட மரணத்தின் சுவரொட்டிகளை எல்லாம் யோசிக்கத் தொடங்கினான். நாம் ஏன் மரணமடைந்தவர்களின் போஸ்டர்களைப் பார்ப்பதற்கு இப்படி அலைகிறோம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே நிற்காமல் அவன் கண்களில் அலுவலகம் செல்லும் வழியெங்கும் தென்படும் போஸ்டர்களை எல்லாம் யோசித்துக் கொண்டிருந்தான்.
***
ரோட்டோர சுவரொட்டியில் இருக்கும் புகைப்படத்தை வைத்து மூர்த்தி ஒரு கணக்குப் போடுவான். பிறந்த வருடத்தையும் இறந்த வருடத்தையும் கடந்து செல்லும் அந்த சில நொடிகளில், இந்தப் புகைப்படம் எந்த வருடம் எடுக்கப்பட்டிருக்கும்? வயது என்னவாக இருக்கும்? ஒருவேளை இவர் தனியாக இருப்பது மாதிரி இந்த ஒரு புகைப்படம் தான் எடுத்திருக்கிறாரா? இப்படி நுணுக்கமாய்க் கவனிப்பான். என்னதான் சுற்றிச் சுற்றி வர்ணங்களில் போஸ்டர்கள் இருந்ததாலும் மூர்த்திக்குப் பளிச்சென்று தெரிவது இந்தக் கருப்பு வெள்ளை போஸ்டர்கள் தான். தன் கண்கள் ஏன் இந்தக் கருப்பு வெள்ளை நிறத்தை இப்படி விரும்புகிறது என்ற சந்தேகமும் ஒவ்வொரு போஸ்டர் பார்க்கும் போதும் வருவதுண்டு. விடை தெரியாதது பற்றிப் பெரிதாய் அலட்டிக் கொண்டது இல்லை.
கிறித்துவ வீட்டில் உள்ள போஸ்டர் என்றால் பிரிந்து வாடுபவர்கள் என்று பெயரிட்டிருக்கும் பட்டியலை ஒன்றிரண்டையாவது மனனம் செய்து கொள்வான். பெண்களின் பெயர்கள் மேல் எப்போதும் தீராக் காதலுண்டு அவனுக்கு.
***
திருப்பத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தது அந்த ஸ்கூட்டி. ஒடுங்கிய தெருவில் நடப்பவரின் பக்கத்தில் வந்துதான் திரும்ப முடியும். பிங்க் கலர் நிறத்தில் லெக்கின்ஸ் தான் மூர்த்தியின் கண்ணில் பட்டது. பெண்கள் அதிகம் பேர் ஏன் அந்த நிறத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற யோசனை, ஒரு விபரீத பதிலைக்கொடுத்தது மூளை.
இடுப்பு வரை அகன்றிருந்த மேலாடையின் விலகலால், உள்ளாடை தொடையை இறுகப் பிடித்திருக்கும் அந்த வளைவைப் பார்த்தவன் அலுவலகம் சென்றும் கூட அந்தச் சிந்தனையிலிருந்து விலகாமலிருந்தான். அவர்களுக்கு ஏன் பிங் நிறம் பிடித்திருக்கிறது என்று யாரிடமாவது தனக்குத் தோன்றியத்தைச் சொல்ல வேண்டும் என்று எண்ணினான். ஆனால் இந்த பதிலை “ஏ” ஜோக் போல மாற்றிச் சொல்லலாமா அல்லது சீரியசான பதிலாகவே விவாதிக்கலாமா என்று யோசித்துக்கொண்டே அலுவலக நேரத்தைக் கடத்தி விட்டான்.
மேன்சனில் வலப் பக்கம் பத்து அறைகள் இடப் பக்கம் பத்து அறைகள் கொண்ட நீண்ட வராண்டாவில் நடந்து கொண்டே இருந்தான். இறந்தவர்களுக்கான போஸ்டரோடு இப்போது லெக்கின்சும் ஒட்டிக்கொண்டது மூர்த்திக்கு.
***
“நீங்க எந்த ஊர்? என்ன வேலை பாக்குறிங்க?” இப்படி பொதுவாகப் பேசத் தெரிந்தவனில்லை அவன். இதற்கு முன்பிருந்த மேன்சனில் “இதுக்குப் பேசாம செத்துரலாம்” என்று தனக்குள் கேட்கும் குரலில் இருந்து தப்புவதற்காக ஏதாவது ஒரு அறையை வெளிப்பக்கமாகத் தாளிட்டு விடுவான். பின்னர் உள்ளிருந்து கதவு தட்டும் ஓசை கேட்டு முதல் ஆளாய்த் திறந்து, அவர்கள் திட்டத் தொடங்கவும் கூட சேர்ந்து திட்டி, அப்படியே பேச்சுக் கொடுப்பான். அரை மணி நேரம் அந்த எண்ணத்திலிருந்து தன்னைத் தற்காத்துப் பின்னர் விடுபடுவான்.
அறை நண்பர்கள் வரும் நேரம் தெரியுமென்பதால் யாரிடமாவது இதைச் சொல்லித் தீவிரமான ஓர் உரையாடல் நிகழ்த்த வேண்டுமென்ற எண்ணம் மூர்த்தியை விடுவதாய் இல்லை. ஓர் அறையில் கதவைத் தாளிட்டுப் பின் அவனே சத்தமில்லாமல் விடுத்து, தன அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.
விரலில் நகங்கள் அதிகம் வளர்ந்திருப்பதாய்த் தோன்றியது மூர்த்திக்கு.
மூர்த்தி கேள்வியைக் கேட்டதும் “நீ பொண்ணுங்கள பத்தி எல்லாம் பேசுவியா” என்று வெறுப்பேற்றினான் ஒருவன். “எதோ முடிவோட வந்திருக்க நீயே சொல்லிரு” என்ற சலிப்பான பதில் காரசாரமாய்ப் பேச்சு வளர வாய்ப்பில்லை என்பதால் அவனே பதிலையும் அதற்கான காரணத்தையும் சொன்னான்.
“நம்ம மொட்டு பிங்க் கலர்…”
“ஆப்போசிட் ரீ ஆக்சன்”
“அது எப்டி கல்யாணம் ஆகாத பொண்ணுங்களுக்கும்? கேணப்…” கெட்ட வார்த்தை கூட முழுதாய்ச் சொல்ல முடியாத அளவுக்கு ஆர்வம் கூட இருந்தவர்களுக்கு. .
“இதுக்கு நீ ஏவாள் காலத்துல இருந்து வரணும்” என்று அந்த விவாதத்தை முடித்தான் மூர்த்தி.
***
வெளிச்சங்களை விரும்பாதவன் மூர்த்தி. எதையாவது எழுத வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. அவன் கட்டிலின் மெத்தைக்குக் கீழ பேப்பர் பேனா எப்போதும் இருக்கும்.
காகிதத்தில் வைத்த கையை அடுத்தடுத்து தூக்கி வைத்து எழுத முடியாத அளவிற்கு சோம்பேறியாய் உணர்ந்தான். பிறகு கவிதையாக்கிக் கொள்ளலாமென்று பத்தியாய் எழுதிவிட்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். முட்டு மடங்கும் பின் பகுதியிலிருந்து வியர்த்து வழிந்து கொண்டிருந்தது. கட்டிலில் கிடந்த டவலை எடுத்து துடைத்துக்கொண்டான்.
கோடுகளோ, கட்டங்களோ இல்லாத இந்த சட்டைகளெல்லாம், உலகம் ஒரு நாள் அழிந்து போகும் அன்று நான் ஒரு சட்டை அணிந்திருப்பேன். அப்போது அந்தச் சட்டை முழுக்க, அந்தத் துயரை எழுதி வைத்து இறந்து போவேன் என்று நினைத்துக்கொண்டான்.
***
யாருக்காவது அழைத்து எனக்குத் திருநங்கைகள் மேல் விருப்பம் இல்லையென்றும் மனபாரத்தை இறக்கி வைப்பதற்காக அவர்களின் முகத்தைப் பார்த்துத் திரும்புவதாகவும், அது ஒருவித விடுபடல் போலத் தோன்றுவதாகவும் அழைத்துச் சொல்ல வேண்டுமென்று நினைத்தேன். அறையின் சூட்டால் முகத்தில் தாடியிருப்பதும், அது எரிச்சலை உண்டு பண்ணுவது போலவும் உணர்ந்தேன்.
சலூன் கடைக்காரரின் முழங்கை என் இடுப்பிலும் வயிற்றுப் பகுதியிலும் அனிச்சையாய்ப் படுவது போல, வேண்டுமென்றே தொட்டுக் கொண்டிருந்தது. பெரும்பாலான கடைகளில் மறுக்கப்பட்ட அக்குள் சேவிங், என்னிடம் “பண்ணவா” என்று கேட்டு எந்தன் அனுமதியையும், நளினத்தையும் கூச்சத்தையும் வெற்றுடம்பில் ஒருமுறை உரசி சோதித்துக் கொண்டார்.
சாலையின் கரையோரம் வழி நெடுக தோண்டிப் போட்டிருப்பது எங்கு முடிகிறதோ அதனையொட்டியிருக்கும், சைக்கிள் அல்லது பைக் மட்டுமே செல்லக்கூடிய பாதையில் இடப்பக்கம் திரும்பி வந்து நின்றால் நான் நிற்பேன் அதனருகில்தான் தங்கியிருக்கும் வீடு என்று சொல்லியிருந்தார். நான் எப்படி “அந்த இடத்தில்” இன்னொருவன் சவரம் செய்ய ஒத்துக் கொண்டேன் என்றே தெரியவில்லை. அது வெறுமனே ஷேவிங்கிற்கான அழைப்பு மட்டுமில்லை என்பதை சலூன் கடை இருக்கையிலிருந்து எழும் போதே தெரிந்து கொண்டேன். இருந்தும் என்னால் செல்வதைத் தவிர்க்க முடியவில்லை.
அவன் வாய் வழியே என் உயிரைப் பிரித்து எடுப்பது போலத்தான் உணர்ந்தேன். அதன் பிறகுதான்…
–
ரமேஷ் ரக்சன்
talk2rr@yahoo.com