பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பெண்கள் கல்லூரியொன்றில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றும், கிரிக்கெட்டைக் குறித்து முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ளவரான, மாதத்தில் இரண்டாம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை அவருடைய காதலி வைஷ்ணவியோடு செலவிடும் பரத்குமார், இன்னும் கண் விழித்திருக்கவில்லை. நான் எழுந்து ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இருந்திருக்கும். தேநீர் மட்டுமே அருந்தியிருந்தேன். இரவு முழுக்க மழை விடாமல் பெய்ததாலும், நானும் அவரும் குடித்திருந்த விஸ்கி, தாகத்தைத் தூண்டிவிட்டதாலும் நான் சரியாகத் தூங்கியிருக்கவில்லை.
”ஆல்கஹால் நுகர்வு நீரிழப்பையும், வைட்டமின் பி குறைபாட்டையும் உருவாக்கும்”.
பரத்குமார், ஒவ்வொரு ‘செசனு’க்குப் பிறகும் இதைத் தவறாமல் சொல்வார். நாங்கள் குடிப்பதை செசன் என்றே அழைப்போம். காலையில் எழுந்ததுமே முழு எலுமிச்சையைப் பிழிந்து நீரில் கலந்து அருந்துவதோடு, காலை உணவோடு வைட்டமின் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வார். சில மாதங்களாக ஒவ்வொரு செசனுக்குப் பிறகு தூங்கி எழுந்ததும் நானும் வாய் கொப்பளித்துவிட்டு எலுமிச்சை பிழிந்த குளிர்ந்த நீர் அருந்துவதை வழக்கமாக்கிக் கொண்டேன். நாற்றமும், துவர்ப்புமாக இருக்கும் வாய்க்குள் குளிர்ந்த நீரை ஊற்றி மெதுவாக அருந்துவேன். குடியின் களைப்போடு, குற்றவுணர்வும் குறைவதாகத் தோன்றும். ஒவ்வொரு செசனையும் ஆர்வத்தோடு துவங்கினாலும் முடிவில் அளவற்ற களைப்பும், சோர்வுமே மிஞ்சுகிறது. ஆனால் பரத்குமார் எதையுமே அளவாகவும் கச்சிதமாகவும் செய்பவர். பரத்குமார், உணவிலிருந்து, விஸ்கி, பியர் என எதுவானாலும் ஒருநாளும் அளவு கடந்ததில்லை. என்னைப் போன்று எல்லைகளைத் தொட விரைபவர்கள் எப்போதுமே முனைகளில் சறுக்கி விழுகிறார்கள்.
துணி துவைக்கும் எந்திரத்தில் அழுக்குத் துணிகளைப் போட்டுவிட்டு அறையின் கதவைத் திறந்து வெளியே வந்தேன். முழுக்க கருஞ்சாம்பல் நிறத்திலிருந்த வானத்தில் கருமேகங்கள் தாழக் குவிந்திருந்தன. சூரிய வெளிச்சம் குறைவாகவே இருந்தது. காற்றே இல்லாததால் வழக்கமாக இருக்கும் குளுமையும் உடலில் பரவவில்லை. இந்தக் கருஞ்சாம்பல் நிறமே, அறிந்து கொள்ள முடியாத சோர்வும் (ஓயாத மழைக்காலத்தில் பசியோடும், பாறைகளிலிருந்து கசியும் நீரின் ஈரக் கசகசப்போடும் குகையின் கண்ணுக்கு அப்பால் பார்வையை வெறித்திருக்கும் குகைவாசிகளின் சோர்வு), கையறு நிலையையும் அளிப்பது. மழை ஓய்ந்து சாம்பல் பூத்திருக்கும் நாட்களில் சிலமுறை எனக்குத் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் எழுந்திருப்பதைக் கவனித்திருக்கிறேன். பல கோடிக் கண்கள், பல்லாயிரம் வருடங்களாக இந்த கருஞ்சாம்பல் நிறத்தை ஊன்றி கவனித்திருக்கும். வெறுமை நிறைந்த கண்கள் பார்த்துப் பாத்தே சாம்பல் நிறத்திற்கு ஒரு துர்க்குணம் பீடித்திருக்கிறது. நாங்கள் வசிக்கும் அறை நான்கு தளங்கள் கொண்ட கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருப்பது. மூன்று தளங்கள் உயரம் வரை ஒரு செண்பக மரம் வளர்ந்திருக்கிறது. அதற்கு மேல் அதனால் வளர முடியாதா எனத் தெரியவில்லை. மாடியின் கைப்பிடிச் சுவரிலிருந்து கவனமாக இறங்கினால் மரத்தின் தலையில் கால் வைக்கலாம். மழை கழுவிய அதன் இலைகள் ஒவ்வொன்றிலும் நீரின் மின்மினுப்பு. மடிவாளாவாசிகள் வெளியே நடமாடத் துவங்கி விட்டார்கள். கலவரத்தின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதும் பழைய தெருக்களை ஒவ்வொரு கால்களும் தேய்க்கத் துவங்கிவிட்டன.
பரத்குமாரின் கல்லூரிக்கு மூன்றாவது நாளாகவும் விடுமுறை அளித்திருந்தார்கள். அவர் வேலைக்குச் செல்லாததால் நானும் விடுப்பு எடுத்துக் கொண்டேன். இன்றொரு நாள் நான் விடுப்பு எடுத்துக் கொள்வதால் நான் பணியாற்றும் வங்கியில் எதுவுமே நின்று விடாது. தவிர நான் அந்த வங்கியை மேலாண்மை செய்யும் ஒருவனல்ல, சாதாரண ’டெல்லர்’ மட்டுமே. நாள் முழுக்க பணத்தை எண்ணுவதும், வாடிக்கையாளர்களிடம் சேமிப்புக் கணக்கோ, நடப்புக் கணக்கோ துவக்குவதற்காகப் பேசுவதைத் தவிர வேறு வேலைகள் இல்லை. இன்னும் சில நாட்களில் காப்பீட்டுத் திட்டங்களை டெல்லர்களும் விற்க வேண்டியிருக்கும் என்றிருக்கிறார் எனது மேலாளர். இந்த உலகில் அத்தனை பேரும் எதையாவது விற்கும் அல்லது விற்பதற்குத் திட்டமிடும் சேல்ஸ்மேன்களாகவே மாறியிருக்கிறார்கள்.
அரைக்கால் சட்டையும், டி-சர்ட்டும் அணிந்த இரண்டு பெண்கள் சில ஆண்களோடு தெருவின் முனையிலிருக்கும் தேநீர் கடையில் நின்றிருக்கிறார்கள். சிலர் கைகளில் தேநீர் டம்ளர்களும், இன்னும் சிலர் கைகளில் சிகரெட்டும். பெண்கள் ஜீன்ஸ் அணிவதே பழைய பாணியாகிவிட்டது. அரைக்கால் சட்டையும், தளர்வான டி-சர்ட்டும் அணிந்த பெண்கள் ரொம்பவே சகஜமாக சமிக்ஞைகளைக் கடக்கிறார்கள், சாலையோரங்களில் நின்று பேசுகிறார்கள், வெளியூர்களிலிருந்து வரும் வயதானவர்களை வாய் பிளக்க வைக்கிறார்கள்.
”என்ன வேடிக்கை பாக்க ஆரம்பிச்சீட்டீங்களா?” பரத்குமார் கேட்டார்.
நான் பதில் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தேன். என்னருகே வந்து நின்ற அவர், உள்ளங்கைகளை வேகமாகத் தேய்த்து கண்களின் மேல் வைத்தார். நானும் அவரும் தேநீர் கடையில் நின்றிருந்தவர்களைப் பார்த்தோம். பேசுவதும், சிரிப்பதும் செல்பேசியைப் பார்ப்பதுமாக இருந்தவர்களில் ஒன்றிரண்டு பேர் இதே தெருவாசிகள் என்றாலும் எங்களுக்கு அவர்கள் பெயர் எதுவும் தெரியாது. உச்சந்தலையில் கொண்டை வைத்திருக்கும், கருகருவென முகம் முழுக்க அடர்ந்த தாடியோடு அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒருவன் முன்பொருநாள் எங்களது கட்டிட வாசலில் அவனுடைய செல்பேசியை தவற விட்டிருந்தான். அறைக்குத் திரும்பும் போது அதைக் கவனமாக நாங்கள் எடுத்து வைத்திருந்து திருப்பிக் கொடுத்தோம். அவன் பெயரும் கூட எங்களுக்குத் தெரியாது. அறிமுகம் செய்துகொள்ளத் தேவையில்லாதவர்களின் பெயரைக் கேட்பது அவர்களது வசிப்பிடத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைவதற்கு ஒப்பானது. நாமெல்லோரும் கண்ணுக்குப் புலனாகாத வசிப்பிடமான நமது பெயர்களிலே வாழ்கிறோம்.
”டீ சாப்டீங்களா?
”சாப்டேன், உங்களுக்கும் வெச்சிருக்கேன். சூடு பண்ணிக் குடிங்க”
பரத்குமார் அறைக்குள் சென்றார். செருப்பணிந்திராத எனது பாதங்களில் ஈரக்குளுமை பரவியது. மழையில் நனைந்திருந்த மாடியில் அங்குமிங்கும் பழைய பொருட்கள் சிதறியிருந்தன. வீட்டு உரிமையாளரின் உபயோகமற்ற பழைய பொருட்கள். ஏற்கனவே சிதறியிருந்தாலும், பார்ப்பதற்கு நேற்று பெய்த மழையில் சிதறியவையாகத் தோன்றின.
தேநீர் கடையிலிருந்தவர்கள் கலைந்து சென்றதும், நானும் அறைக்குள் சென்றேன். நாங்கள் அறை என அழைப்பது உண்மையில் இரட்டைப் படுக்கையறைகள் கொண்ட அறுநூறு சதுர அடிகள் அளவுள்ள ஒரு வீடு. வரவேற்பறை பெரிது, படுக்கையறைகள் சிறியவை. பரத்குமார் தான் இந்த அறைக்கு முதலில் குடிவந்தவர். நான் அவருடைய அறை நண்பராகச் சேர்வதற்கு முன்பு அவருடன் பணியாற்றிய இருவர் அவரோடு தங்கியிருந்தனர். அவர்களில் ஒருவர் எங்கள் ஊர்க்காரர் (கோயமுத்தூர்). அவர்கள் அங்கிருந்து வேறு ஊர்களுக்குச் சென்றதும் என்னை அவரோடு சேர்த்து விட்டது எங்கள் ஊர்க்காரர்தான். இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வசிக்கிறோம். அறையிலிருக்கும் நாற்காலிகள், சமையலறைப் பாத்திரங்கள், எரிவாயு இணைப்பு, துணி துவைக்கும் இயந்திரம், சிறு நூலகம் (கிரிக்கெட் வரலாற்றுப் புத்தகங்கள், விளையாட்டு வீரர்களின் சுயசரிதைகள், ஆங்கில, தமிழ் நாவல்கள், அரசியல் புத்தகங்கள், ஊடகத் தொடர்பியல் பாடநூல்கள்), 42 அங்குல தொலைக்காட்சி, மேஜைக்கணினி, அதனோடு பிணைந்திருக்கும் ’போஸ்’ ஸ்பீக்கர்கள், குளிர்சாதனப் பெட்டி அனைத்துமே அவருடையவை. சம்பளம் குறைவுதான் என்றாலும் அவர் வசதியான வீட்டைச் சேர்ந்தவர். அவருடைய ஊர் சேலம். வாடகை பதினைந்தாயிரத்தில் நான் பாதியைத் தருகிறேன். மற்ற செலவுகளிலும்.
”இன்னைக்கு எங்கயாவது வெளியே போலாமா? மைசூர் ரோட் கொஞ்ச தூரம். கலவரத்துல எதையெல்லாம் கொளுத்தியிருக்காங்கனு பார்க்கலாம்”
எனக்கு அறையை விட்டு வெளியே செல்லவே ஆர்வம் இல்லாமலிருந்தது. தவிர கண்ணில் நிறைந்திருந்த சாம்பல் நிறம் அறைக்குள்ளும் நுழைந்து விட்ட உணர்வு.
”போலாம். ஆனா உங்க கார் எப்போ திரும்பி வரும்னு தெரியலையே”
பரத்குமாரின் காரை அவருடைய வேறு ஒரு நண்பர் சொந்த ஊரான மாண்டியாவில் நடக்கும் கல்யாணத்தில் கலந்து கொள்வதற்காக எடுத்துச் சென்றிருந்தார். அங்கேயும் கலவரம்தான். காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக நடந்த கலவரங்களில் இரண்டாவது பெரிய கலவரமே கடந்த இரண்டு நாட்களாக நடந்தது என்கிறார்கள். உயிர்ச்சேதம் இல்லையென்றாலும் அதிகப்படியான பொருளிழப்பு. ரப்பர் டயர்கள் எரியும் வாசனை நாங்கள் வசிக்கும் தெருவிலும் அடித்தது.
”ஆமால்ல, நான் அத மறந்துட்டேன். வைஷ்ணவியும் ஊர்ல இல்ல”.
வழக்கமாக ஒவ்வொரு இரண்டாவது சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் கோயமுத்தூர் சென்று விடுவதால், வைஷ்ணவி எங்கள் அறைக்கு வந்து விடுவாள். பரத்குமாரின் உயரத்திற்கும், உடல்வாகிற்கும் கொஞ்சமும் குறைவில்லாமல் இருப்பாள். சட்ட மேற்படிப்பு படிக்கிறாள். நான் எப்போதும் அவளிடம் குறைவாகவே பேசுவேன். ஒருசில நாட்கள் இரவு உணவு அருந்துவதற்காக உணவகங்களில் சந்திப்போம். பெரும்பாலும் புடவைகளில் மட்டுமே அவளைப் பார்த்திருக்கிறேன் என்றாலும் எங்களது அறையில் சில நவீன உடைகளையும் அவள் வைத்துச் சென்றிருக்கிறாள். இரண்டு பெண்களுக்கு இடையே வயதைத் தவிர வேறெந்த வேறுபாட்டையும் என்னால் பார்க்க முடிந்ததில்லை. முழுக்க பெண்கள் மட்டுமே சூழ இருக்கும் ஒரு கல்லூரியில் பணியாற்றுபவர் ஒரு குறிப்பிட்ட பெண்ணை மட்டும் காதலிப்பது என்னுடைய புரிதலுக்கு அப்பாற்பட்டது. என் சக ஊழியர்களாக இருக்கும் பெண்களைக்கூட நான் சரிவரப் பார்த்ததில்லை. எப்போதோ ஒருமுறை வங்கிப் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது நாங்கள் (சக பயிலுநர்கள்) தங்கியிருந்த அறைக்கு அருகேயிருந்த மற்றொரு அறையில் இரண்டு பெண்கள் தங்கியிருப்பதாகவும், அவர்களைச் சந்திக்க ஓயாது ஆண்கள் வருகிறார்கள் எனவும் என்னுடன் தங்கியிருந்தவன் சொன்னான். அவன் சொன்ன ‘ஓயாது’ என்பதே பொய்தான். பகல் முழுக்க என்னோடுதான் இருக்கிறான். பயிற்சி முடிந்து எங்காவது சுற்றிவிட்டு (சார்மினார், ஹுசேன் சாகர் ஏரி, வணிக வளாகங்கள்) அறைக்குத் திரும்பவே பத்து மணிக்கு மேலாகி விடுகிறது. எப்போதுதான் அவன் அருகே தங்கியிருக்கும் பெண்களைப் பார்த்தானோ? ஆனால் ஒரு வாரமாக நாங்கள் அந்தக் கற்பனையிலேயே கிளர்ந்திருந்தோம். செயற்கை மணமூட்டிகளின் வாசனை மிதக்கும் நன்கு ஒழுங்கு செய்யப்பட்ட இரட்டைப் படுக்கையின் மீது படுத்திருக்கும் பெண்களின் மீது மரத்துண்டாகச் சரியும் ஆண்களில் இருவராக நாங்களும் இருந்தோம். அவர்களுடைய உடல்களே ஒவ்வொரு ஆணையும் சில நிமிடங்களே அசைய அனுமதிக்கப்பட்ட இலையாக உதிர்த்தன (ஒவ்வொரு ஆணும் ஒன்றுபோலவே உதிரும் ஓர் இலைதான்). அதுதான் பெண்கள் என்னை நெருங்கி வந்த குறைந்தபட்ச தொலைவு (ஆனால் உண்மையிலேயே பெண்கள் அங்கே தங்கியிருந்தனரா எனத் தெரியவில்லை).
”ஒன்னு செய்யலாம், என்னோட கூட வேல செஞ்ச ஒருத்தன் இருக்கான். ரொம்ப இண்ட்ரஸ்டிங்கான கேரக்டர். அவர் வீடு ஜே பி நகர்ல இருக்கு. ஒருவேளை அவன் போன் எடுத்தா மத்தியானம் சாப்பாட்டுக்குக் கூட வர சொல்லலாம். சமைக்கற வேலை மிச்சம்”.
பரத்குமார் செல்பேசியை எடுத்து சிலமுறைகள் அழைத்தார். ஏற்கப்படாத அழைப்புகளால் அவர் சலிப்பேதும் அடையவில்லை. செல்பேசியை சுழற்றிக் கொண்டே, நாம் அழைக்கும் விசயம் முக்கியமானது என்று அவர் தெரிந்து கொள்வதற்காகவே அழைப்புகளை எளிதில் ஏற்கமாட்டார் என்றார். தவிர அவரிடம் திறன்பேசி கிடையாதென்றும், பழைய மாதிரி செல்பேசியே வைத்திருக்கிறார் என்றும் சொன்னார். எனக்கு வியப்பாக இருந்தது. நான் துணி துவைக்கும் இயந்திரத்திலிருந்த பாதி உலர்ந்த துணிகளைக் காயப் போடுவதற்காக வெளியே எடுத்துச் சென்றேன். மீண்டும் மழை வந்தால் துணிகள் காயாதென்றாலும் துணிந்து கொடியில் காயப் போட்டேன். காற்றும் இல்லையென்பதால் துணிகள் காய்வதற்கு எப்படியும் ஒருநாள் கூட ஆகிவிடும்.
உள்ளே நுழைந்ததும் பரத்குமார், அவருடைய நண்பர் அவரை அழைத்து இரவு உணவிற்குத் தோதாக சாயங்காலம் வரச் சொன்னதாகச் சொன்னார். நாங்கள் இருவரும் ஒரு கேரளா உணவு விடுதியைத் தேர்ந்து, தேங்காய் சேர்த்த மாட்டுக்கறி வறுவலும், மோர்க்குழம்பு ஊற்றிய மட்டை அரிசிச்சோறும் சாப்பிட்டோம். நான் இரண்டு மணிநேரம் உறங்கினேன். பரத்குமார் கணினியில் அவருடைய ஆய்வுக்கான தகவல் திரட்டில் ஈடுப்பட்டிருந்தார். அவர் மதிய உறக்கத்தை விரும்புவதில்லை.
நாங்கள் வாடகைக் காரில் கிளம்பினோம். சாம்பல் நிறம் மங்கிப் போய் இருந்திருந்தாலும் சூழலே சோர்விலிருந்து இன்னும் மீளவில்லை. வழியெங்கும் எலும்புக் கூடுகளாக இருந்த இரும்புத் தாங்கிகளில் விளம்பரப் பதாகைகள் நீக்கப்பட்டிருந்தன. நீதிமன்றம் அப்படியொரு ஆணை பிறப்பித்திருந்தது. ஒரு நகரம் தனது குடிமக்களுக்கு நிதி வளர்ச்சியை, வீட்டு வசதியை, உடல்நலத்தை, செல்வத்தை விளம்பரப் பலகைகளின் வழியாகவே அளிக்கிறது. தெருக்களில் பார்க்க முடியாத அழகையும், வாக்குறுதியையும், நம்பிக்கையையும் கொண்டிருக்கும் விளம்பரப் பலகைகள் இல்லாமல் நகரமே மூளியாகக் கிடந்தது.
ஓட்டுநர் திறன்செயலியில் தோன்றும் வழிப்படத்தைப் பார்த்துக் கொண்டே ஓட்டினாலும், அவ்வப்போது பரத்குமாரிடம் வழி கேட்டார். நாங்கள் சிமெண்ட்டும், சுண்ணாம்பும் பூசாமல் செங்கற்கள் வெளியே தெரியும் வண்ணம் கட்டப்பட்டிருந்த ஒரு குடியிருப்பின் வெளிப்புறக் கதவை அடைந்தோம். பரத்குமார் ஓட்டுநரிடம் (அவர்களை சாஃபேர் எனும் பிரெஞ்சு சொல்லால் அழைக்கிறார்கள்) பணம் வழங்கினார். அது உயர்வர்க்கக் குடியிருப்பு என்பது பார்த்தாலே தெரிந்தது. ஒன்றுக்கொன்று சரியான அளவில் விலகியிருக்கும் ஒவ்வொரு வில்லாவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டிருந்தன. இந்த நகரத்தில் இவ்வளவு இடைவெளி விட்டுக் கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளைப் பார்ப்பதே அரிது. ஜே பி நகரின் எட்டாவது முனையிலிருக்கும் இந்தக் குடியிருப்பு ஒருவகையில் நகரத்திலிருந்தே விலகியிருந்தது. மெட்ரோ இரயிலுக்கான வேலைகள் அந்தக் குடியிருப்பை ஒட்டி நடந்து கொண்டிருந்தன.
மூன்றாவது வரிசையில் ஏறக்குறைய இருட்டில் மூழ்கியிருந்த வீட்டை அடைந்தோம். வாசலில் ஒரு பழைய ஃபியட் கார் எண் பலகை இல்லாமல் நின்றிருந்தது. அழைப்பு மணியை அழுத்தியதும் கதவைத் திறந்தது ஒரு பெண். அவள் அருகே ஒரு லாப்ரடார் (அவள்தான் பின்னொரு உரையாடலில் நாயின் இனத்தைச் சொன்னாள்) நாய் நின்றிருந்தது. பரத்குமாரைப் பார்த்துப் புன்னகைத்தாள். உள்ளே வரச் சொன்னாள். நாய் குரைத்ததும் நான் கொஞ்சம் தயங்கினேன்.
எந்த நாயும் உடனே ஒருவரைக் கடித்து விடாது. நாய் குரைப்பதே வந்திருப்பவரோடு அது செய்து கொள்ளும் ஒரு தொடர்பு. நாம்தான் அதற்குச் சொல்ல வேண்டும் வந்திருப்பவர் நண்பரா எதிரியா என்று. தவிர நாய் குரைப்பதே பயமுறுத்துவதற்காக அல்ல. அது அதனுடைய மொழி. அவள் இவ்வளவு சொல்லியும் எனக்குப் பயம் போகவில்லை. பரத்குமார் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றார். நாய் அமைதியாக வாலாட்டியது. நான் அதைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். கதவைத் திறந்தவள் பரத்குமாரின் நண்பருடைய மனைவி. பரத்குமார் அவளுடைய பெயரைச் சொல்லவில்லை. பன்னர்கட்டா விலங்கியல் பூங்காவில் விலங்குகள் நல மருத்துவராகப் பணிபுரிகிறாள். அங்கே புலிகள், சிங்கம் போன்றவையும் உண்டு. நான் ஆர்வம் மிகுதியில் எந்த விலங்கிற்கு அவள் மருத்துவம் பார்க்கிறாள் என்று கேட்டேன்.
”யானைகள். எப்போதாவது… அரிதாகப் புலிகளுக்கும்”
”மை டியர் ஃபிரண்ட். வெல்கம் டூ மை டென்”, கைகளை அகல விரித்துக் கொண்டு அவருடைய நண்பர் உள்ளறையிலிருந்து வெளியே வந்தார். பரத்குமாரைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார். இடுப்பில் வெறும் துண்டை மட்டுமே சுற்றியிருந்த அவர் முகத்தில் நீண்டிருந்த தாடியும், “பொடனி”க்கும் கீழே தொங்கும் தலைமுடியும், அவர்கள் வசிக்கும் வீட்டிற்குத் தொடர்பில்லாமல் இருந்தது.
”ஒய் டோண்ட் யு வியர் சம் சர்ட்ஸ் டியர்?” அவருடைய மனைவி சொன்னாள்.
”டோண்ட் மைண்ட். தே டோண்ட் மைண்ட் ஈவன் இஃப் ஐம் நாட் வியரிங் எனிதிங் இன் மை வெய்ஸ்ட், வில் யு?” என்னைப் பார்த்துக் கேட்டார். நான் புன்னகைத்தேன்.
பரத்குமார் என்னை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
”என்னோட பேர் பிரசாந்த். ஊரு மங்களூரு” என்றார் தமிழில். என்னோடு கை குலுக்கினார். கொஞ்சமாகத் தமிழ் தெரியும் என்பது அவர் பேசியதிலிருந்து தெரிந்தது. அவருடைய மனைவியை அறிமுகம் செய்து வைத்தார். அவளும் கைகுலுக்கினாள். விரித்திருந்த கூந்தலின் ஒரு பகுதியை இடது தோளின் மீது போட்டிருந்தாள். அது அவள் விலாப்பகுதி வரை மறைத்திருந்தது. பொட்டில்லாத முகம் சற்றே உப்பியிருந்தது. அவளும் மத்தியானம் உறங்கியிருக்கக் கூடும். சிவந்த உதடுகள் வீங்கியதைப் போலிருந்தன. பழுப்பு நிறக் காட்டன் முழுக்கால் சட்டையும், ஊதா நிறத்தில் ஒரு சட்டையும் அணிந்திருந்தாள். பணியிலிருந்து திரும்பியிருக்கிறாளா?. “அவளோட பேரு வசுதா”.
நாங்கள் சோபாவில் அமர்ந்தோம். அவர்களுடைய நாயோடு கைகுலுக்கச் சொன்னாள் வசுதா. நான் தயங்கினேன். அவள் விடாமல் நாயைப் பற்றிப் பாடமெடுத்தாள்.
”இவன் பெயர் டைசன். இவனும் வீட்டிற்கு வந்திருப்பவர்களோடு அறிமுகம் செய்து கொள்ள விரும்புவான்”. எதிர் வரிசையிலிருந்த சோபாவின் நடுப்பகுதியில் அவள் உட்கார்ந்திருந்த விதமும், நாடகீயமான உடல்மொழியும், ஆங்கிலமும் நாயை மட்டுமல்ல, புலியைக் கூட வீட்டிலே வளர்க்கக் கூடியவளைப் போன்றிருந்தாள். மேலும் சில முறைகள் நாயோடு கைகுலுக்க வலியுறுத்தினாள்.
சோபாவில் இருந்து எழுந்து நாயின் முன்காலைப் பற்றிக் குலுக்கினேன். நாக்கை வெளியே நீட்டியிருந்த டைசனின் மூச்சுக் காற்று என்மீது பட்டது. என்னால் நுகர்ந்தறிய முடியாத நாற்றம் என் முகத்தில் பட்டது.
பிரசாந்த் அவளிடம் தேநீர் போடச் சொன்னார். அவள் எழ முனைந்ததும், வேண்டாம் நாம் மதுவருந்துவோம் என்றார். நானும் பரத்குமாரும் அவருடைய மனைவியைப் பார்த்தோம். அவள் ஒன்றும் சொல்லவில்லை. பிரசாந்த் உள்ளே சென்று அரைக்கால் சட்டையையும், சட்டையையும் அணிந்து கொண்டு ஒரு பை கேட்டார். ஓவியங்கள், பொம்மைகள், தரைவிரிப்பு, நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களென வரவேற்பறை நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. சாவிமாட்டியில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு துணிப்பையை எடுத்துக் கொடுத்தாள். கைப்பையைத் திறந்து பணத்தையும். இரண்டையும் பெற்றுக் கொண்ட பிரசாந்த் சமையலறைக்குள் நுழைந்து பின்கதவைத் திறந்து வெளியே போனார். அவர்களது குடியிருப்பின் சுற்றுச்சுவருக்கு அருகேயே ஒரு மதுக்கடை இருப்பதாகச் சொன்னாள் வசுதா. அவள் இல்லாத நேரத்திலும் அடிக்கடி பிரசாந்த் குடிப்பதற்கு மதுக்கடை அருகேயிருப்பது வசதியாகப் போய்விட்டதென்றாள்.
”ஹி வில் நாட் கோ எனிவேர் அதர்வைஸ். ஹி ஹாஸ் நாட் சீன் த சன்லைட் ஃபார் மெனி மன்தஸ்”. அவள் முகத்தில் பரவிய சலிப்பைக் கவனித்தேன். சிவந்த உதடுகளைச் சுழித்தாள். பரத்குமாரைப் பார்த்து, அவருடைய முனைவர் பட்ட ஆய்வு எந்த அளவில் உள்ளதென்று கேட்டாள். இன்னும் ஆறு மாதங்களில் முடிந்து விடுவதாகச் சொன்னார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு அவரும், பிரசாந்தும் ஒன்றாகத்தான் முனைவர் பட்ட ஆய்வைத் துவக்கியிருக்கிறார்கள். அவர் கிரிக்கெட்டிலும், பிரசாந்த் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும். ஆனால் இடையில் பிரசாந்த் பணியிலிருந்து நின்று விட, சில மாதங்கள் அவர்கள் தொடர்பிலேயே இல்லை. அவருடைய எண் எப்போதாவதுதான் உயிர்த்திருக்கும். மின்னஞ்சல்களுக்கும் பதில் இல்லாததால் பரத்குமார் அவரோடு பேசுவதையே நிறுத்தியிருந்தார். இடையே ஒருமுறை பிரசாந்த் பரத்குமாரை அழைத்து கல்லூரி நிர்வாகம் இன்னுமே அவருக்கு விடுவிப்புச் சான்றிதழை வழங்காமல் இருப்பதாகவும், அதனைப் பெறுவதற்கு உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டிருந்தார். பரத்குமார் முயற்சி செய்து அதனை வாங்கிக் கொடுத்தார் (இவை அனைத்துமே காரில் வரும்போது பரத்குமார் என்னிடம் சொன்னது). ஏன் அவர் பணியிலிருந்து விலகினார் என்று கேட்டதற்கு அவருடைய பேச்சும், நடத்தையும், எதையும் மதிக்காத அவருடைய போக்கும் கல்லூரி நிர்வாகத்திற்குப் பிடிக்கவில்லை என்றார்.
”ஆனா ரொம்ப பிரில்லியண்ட். ஒரு அனார்கிஸ்ட்”. நான் அந்தச் சொல்லையே அப்போதுதான் முதன்முறையாகக் கேட்டேன். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டுக் கொள்ளவில்லை.
பிரசாந்த் வந்ததும் அவருடைய அறைக்குள் நுழைந்து துணிப்பையை வைத்துவிட்டு, குளிர்பதனப் பெட்டியிலிருந்த பழங்களை எடுத்து நறுக்கினார். ஏதோ ஒரு பாடலை விசிலடித்தார். நாங்கள் வந்தது அவருக்கு உற்சாகமளித்திருக்கக் கூடுமென்று நினைத்தேன். மீண்டும் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து முட்டைகளை எடுத்தார். என்னைக் கடந்து போகும்போது சொன்னார்:
”அஞ்சு நிமிசம்.”
வசுதா எழுந்து மற்றொரு அறைக்குச் சென்றாள். நாங்கள் இருவர் மட்டுமே தனியாக இருந்தோம். ஏதும் பேசாமல் அமைதியாகக் காத்திருந்தோம். நான் வரவேற்பறையை நோட்டமிட்டேன். வேலைக்குச் செல்லும் ஒரு பெண்ணால் இவ்வளவு நேர்த்தியாக வீட்டைப் பராமரிக்க முடியுமா? வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருப்பார்கள் என யோசித்தேன். பிரசாந்த் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் பழத்துண்டுகளையும், ஒரு தட்டில் மூன்று ஆம்லெட்டுகளையும் எடுத்து வந்தார். இடது கையில் அழகான மூன்று கண்ணாடி டம்ளர்களையும்.
”ஐஸ்கட்டி வேணுமில்ல”
பரத்குமார் எழுந்து போய் குளிர்பதனப் பெட்டியிலிருந்த ஐஸ் கட்டிகளை எடுத்து, சமையலறையிலிருந்த ஒரு கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்தார். பிரசாந்த் அவருடைய அறைக்குள் அழைத்தார்.
அறையில் எல்லாமே சிதறியிருந்தன. எனக்குக் காலையில் பார்த்த எங்கள் வீட்டு உரிமையாளரின் பழைய பொருட்கள் நினைவில் எழுந்தன. தரையிலிருந்து அடுக்கடுக்காக உயர்ந்த புத்தகங்கள் சில இடங்களில் சரிந்து தரையில் இறைந்தும், சாம்பல் தட்டு முழுக்க சிகரெட் துண்டுகளுமாய் நிறைந்திருந்தன. இரண்டு நாற்காலிகளை வரவேற்பறையிலிருந்து எடுத்து வந்தார். ஒன்றில் முதுகுவலி உள்ளவர்கள் பயன்படுத்தும் சாய்மானம் இருந்தது. ஒருவர் மட்டுமே உறங்கும் அளவிலான கட்டிலில் கிடந்த மடித்து வைக்கப்படாத போர்வையையும், மடிக்கணினியையும் ஒதுக்கி வைத்து விட்டு பிரசாந்த் அதில் அமர்ந்தார்.
ஆரம்பகட்ட உரையாடல் முழுக்க அவர்களுடைய கல்லூரியைப் பற்றியே இருந்தது. அவர்களுடன் பணியாற்றியவர்கள் இப்போது எப்படியிருக்கிறார்கள், எங்கே இருக்கிறார்கள், கல்லூரி நிர்வாகத்தின் குறைகள், கட்டுப்பாடுகள், வசதிக் குறைவுகள் எல்லாவற்றையும், கல்லூரியில் அவர்கள் ஒன்றாகப் பணியாற்றிய காலத்தில் நட்ட மரக்கன்றுகள் (ஒருநாள், அவருடைய மாணவர்களை வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு கல்லூரியைச் சுற்றியிருக்கும் மரங்கள், தாவரங்களின் இலை மாதிரிகளைச் சேகரிக்கச் சொன்னாராம். ஏன் அவ்வாறு செய்தார் எனக் கல்லூரி நிர்வாகத்தினர் அவரைக் கேள்வி கேட்க, இலக்கியம் இலைகளிலிருந்தே துவங்குகிறது. தன்னைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் இன்னதுதானென்று தெரியாமல் ஒருவர் இலக்கியம் படித்து என்னதான் பலன்? என்று பதிலளித்திருக்கிறார். துரதிர்ஷடவசமாக அன்றைக்குப் பல மாணவர்களும் எதிர்வரும் குடியரசு தின அணிவகுப்பிற்கான ஒத்திகைக்குச் செல்ல வேண்டியிருந்தது) என நான் அங்கிருப்பதையே மறந்து போய் பேசினார்கள்.
நான் புத்தகங்களைப் பார்த்தேன். ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் இருக்கக் கூடும். அனைத்துமே ஆங்கிலத்தில் இருந்தன. ஓர் அடுக்கிலிருந்த பெயர்களை வாசித்தேன். ஆக்டோவியா பாஸ், மச்சடோ டி அஸிஸ், சில்வியானோ ஒக்கம்போ, இஸபெல் ஆலந்தே, ஹேஸே மார்டி, ரூபென் தாரியோ, ஹேஸே லெசாமா லிமா, யுவான் கார்லோஸ் ஒனெட்டி, ஜார்ஜ் அமெடோ, ஹோர்ஹே லூயி போர்ஹே, செசார் அய்ரா என உச்சரிக்கக் கடினமான பெயர்களைக் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள். ஒன்றிரண்டு பெயர்களை நான் எங்கள் அறையிலிருக்கும் புத்தகங்களில் பார்த்திருக்கிறேன். பரத்குமார் சேகரித்து வைத்திருக்கும் தமிழ்ப் புத்தகங்களைக் கூட நான் வாசிப்பதில்லை. நிறைய வாசிப்பவர்களிடம் தலைக்கனம் இருக்கும். ஆனால் பரத்குமார் ஒருநாளும் அவருடைய கல்விச் செருக்கில் என்னோடு உரையாடியதில்லை. முனைவர் பட்ட ஆய்வு முடிந்ததும் பிரிட்டிஷ் காலத்து இந்தியக் கிரிக்கெட் கழகங்களின் வரலாற்றை எழுதுவேன் என எங்கள் செசனின் போது சொல்வார். பணத்தை எண்ணுவதற்கும், மாத இறுதிநாளில் கணக்கில் வந்து விழும் பாதுகாப்பான சம்பளத்தைப் பெறுவதற்கும் நான் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தையோ, கிரிக்கெட்டின் வரலாற்றையோ கற்கத் தேவையில்லை. அறிவால் வாழ்பவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கற்பது தேவையானது.
புத்தகங்களைப் பார்த்து முடித்ததும், பிரசாந்த் என்னிடம் கேட்டார் (எங்கள் உரையாடல் முழுக்க ஆங்கிலத்திலேயே தொடர்ந்தது):
”நீங்கள் புத்தகங்கள் வாசிப்பதுண்டா?”
”இல்லை”
”பரத்குமாரிடமிருந்து உங்களுக்கு அந்தப் பழக்கம் தொற்றவில்லையா? அவர் ஒரு ஆழமான வாசகர். எங்கள் கல்லூரியில் பாடத்திட்டங்களை வடிவமைக்கும் குழு வரைக்கும் விரைவில் வளர்ந்து விட்டவர்.”
”நீங்கள் ஏன் வேலையிலிருந்து நின்று விட்டீர்கள்?”. கேட்டு முடித்ததும் யோசித்தேன் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கக் கூடாதென்று. பரத்குமாரைப் பார்த்து ஓசையே எழுப்பாமல் மன்னிப்புக் கேட்டேன்.
”நான் இலத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கிறேன். என்னால் கல்லூரி வேலையையும் கவனித்துக் கொண்டு, இதையும் தொடர முடியவில்லை. வேலை நாளில் கூட, என் மனைவி நோய் வாய்ப்பட்டிருக்கும் யானைகளுக்கு எவ்வாறு வைத்தியம் பார்க்கிறாள் எனப் பார்க்கக் கிளம்பி விடுவேன். எனது மாணவர்கள் ஒரு சிலரையும் அழைத்துக் கொள்வேன். ஆங்கில இலக்கியம் கற்கும் மாணவர்கள் யானைக்கு செய்யும் வைத்தியத்தை ஏன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று எனது கல்லூரி நிர்வாகம் கேட்கும், ’பிவுல்ஃப்’ படிக்கும் மாணவர்கள் யானைகளையும் தெரிந்து கொள்ளட்டுமே என்பேன். தவிர ஒரு கட்டத்தில் விடைத்தாள்கள் திருத்துவது, நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்வது, அடையாள அட்டை அணிவது எதுவுமே பிடிக்காமல் போய்விட்டது. தவிர டென்னிஸனைக் கற்பிக்கச் சொல்லும் பாட திட்டத்திற்கு வெளியே நான், எம்மா கோல்ட்மேனைப் பற்றிப் பாடமெடுக்கக் கூடாதில்லையா?. கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் போதுமான கால அவகாசமும், வசதி வாய்ப்பும், சக்தியும் இருக்கிறது. வெறுமனே இலக்கியத்தைக் கற்று என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் கல்லூரிக்கு வெளியே சென்று நிறைய விசயங்களைக் கேட்கவும், பார்க்கவும், ஈடுபடவும் வேண்டும். வரிக்குதிரையின் கோடுகளுக்கும், புலிகளின் கோடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் பார்த்துத்தானே கற்க முடியும். படித்தா கற்க முடியும்? இங்கே பாருங்கள், இந்தியாவிலிருந்து வந்த எந்த மொழி எழுத்தாளர்களையும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள், யாரும் கல்லூரியில் இலக்கியம் கற்று எழுத வரவில்லை. டி. எஸ். எலியட் உங்களைப் போல ஒரு வங்கியில் பணியாற்றிவர். காஃப்கா ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார்.”
டென்னிஸன், எம்மா கோல்ட்மேன், டி.எஸ். எலியட், காஃப்கா யாரையும் நான் அறிந்திருக்கவில்லை. பிவுல்ஃபைக் கூட ஆரம்பத்தில் ஓர் எழுத்தாளரென்றே நினைத்தேன். பின்பு பரத்குமாரிடம் கேட்டறிந்தேன்.
உடை மாற்றியிருந்த வசுதா அறைவாசலில் நின்று கொஞ்சம் மெதுவாகப் பேசச் சொன்னாள், இல்லையென்றால் கதவைச் சார்த்திக் கொள்ளுமாறும். பிரசாந்த் எழுந்து அறைக்கதவைச் சார்த்தினார். குளிர்சாதன இயந்திரத்தை முடுக்கி விட்டார்.
”ஏ.ஸி. போட்டால் புகை பிடிக்க முடியாது. நீங்கள் புகை பிடிப்பீர்களா?”
நான் இல்லையென்றேன். பரத்குமாருக்கும் புகைப்பழக்கம் இல்லை.
அறையில் குளிர் பரவத் துவங்கியதும் மேற்சட்டையைக் கழற்றினார் பிரசாந்த். ஆடைகள் அணியாமல் இருப்பதற்கே எனக்குப் பிடிக்கும் என்றார்.
”மனிதனுக்கு கொஞ்சமே போதுமானது. எதுவுமே குறைவான அளவில் கிடைத்தாலே போதும். நாம் நம்மை ஏதோ தெய்வ நிலைக்கு கற்பனை செய்து வைத்திருக்கிறோம். இந்த பூமியைக் காத்து வேறு காலத்தில் பாதுகாப்பாக மற்றொருவரின் கைகளுக்கு மாற்றித் தரும் பொறுப்பு நமக்கு இருப்பதாக நம்புகிறோம். அந்த வேறொருவரின் கைகள் கடவுளின் கைகள்தான். நம்முடைய எல்லா நடத்தைகளின் மதிப்பையும் அவர் ஒருநாள் அளவிடுவார். ஆகவே நாம் அவரது அளவுகோல்களின்படி தப்பித்துக் கொள்ளும் இடத்திற்கு நகர்ந்து விட வேண்டுமென விரும்புகிறோம். நம்முடைய எல்லா நிறுவனங்களும் மனிதனுக்கு அவனது தகுதிக்கு மீறிய இடத்தை அளித்திருக்கின்றன. அதே சமயம் எல்லா நிறுவனங்களும் மனிதர்களுக்கு மேலே வளர்ந்துவிட்டன. அரசே இல்லாத ஒரு காலத்தை நாம் கற்பனை செய்ய முடியுமா? மிகெல் பக்தினுக்கும், மார்க்ஸிற்கும் ஏன் இயேசுவிற்கும் கூட அப்படியொரு கற்பனை இருந்திருக்கிறது. இயந்திரங்கள் மனிதனை அரசிடமிருந்து விடுவிக்கும் என்று மார்க்ஸ் நம்பினார். அரசிடமிருந்து பெறும் விடுதலையே மனிதனின் உண்மையான ஆத்மீகத்திற்கான துவக்கம். மனிதர்களை ஆக்ரமித்திருக்கும் எல்லாமே அவனுடைய விடுதலைக்கான தடைக்கற்கள். விடுதலை என்பதே உச்சநிலை அல்ல, அது ஒரு துவக்கம். இதுவரையிலும் விடுதலையென்பது என்னவென்றே அறிந்திராத மனிதன் விடுதலைக்குப் பின்பு என்னவாக ஆவோம் என அஞ்சத் தேவையில்லை. நாம் எவ்வாறு நமது எதிர்காலத்தைக் கணிக்க முடிவதில்லையோ, அப்படித்தான் ஒட்டுமொத்த மானுடமும். அதன் எதிர்காலத்தை ஒரு சிறு சம்பவம், ஒரு கொலை, ஒரு கிருமி என ஏதாவது ஒன்று புரட்டிப் போடும். நமது அடிமைத்தனங்களிலேயே மோசமானது மதுவோ, புகைப்பழக்கமோ, சூதாட்டமோ, விபச்சாரமோ அல்ல அரசிடம் அடிமையாக இருப்பதுதான். என்னிடம் பாருங்கள் ஓட்டுநர் உரிமம் கூட இல்லை. எனது பெயரில் குடும்ப அட்டை, வண்டி, வாக்காளர் அடையாள அட்டை என எதுவுமே இல்லை. எனது காருக்கு எண் பலகையும் இல்லை. போலீஸ்காரர்கள் பிடித்தால் நான் ஏதாவது காரணம் சொல்லித் தப்பிப்பேன். முடியாத பட்சத்தில் எனது மனைவி காசைக் கொடுத்து சமாளிப்பாள். அரசும் மக்களும் பணத்தை நேசிக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். பணத்தை ஒழித்தவிட்டால் என்னவாகுமென்ற கற்பனை யாருக்கும் எழவில்லை. அதை முயன்று பார்க்கும் ஒரு அமைப்பும் நம்மிடமில்லை. பொருட்களுக்கு பரிவர்த்தனை மதிப்பும், பயன் மதிப்பும் இருக்கிறது. கூடவே அதன்மீது மனிதர்கள் வைத்திருக்கும் உணர்ச்சி மதிப்பும். இந்த மூன்று மதிப்பையும் நீக்கிவிட்டால் நாம் பொருட்களிடமிருந்து விடுதலை பெற்று விடுவோம். அப்படித்தான் ஒருகாலத்தில் இருந்தோம். மீண்டும் அந்த நிலைக்குத் திரும்ப அஞ்சுகிறோம். வரலாற்றை மூலதனமாகக் கொண்டு எழுந்த நமது நிறுவனங்கள் வரலாற்றுக் காலத்திற்கு முந்தைய நிலைமையை இருண்ட காலமாகக் கட்டமைக்கின்றன. ஏதுமறியாத காலத்தை பின்தங்கிபபோனவர்களின் காலமாகவும். வரலாற்றில் உண்மையிலேயே முன்னேறிய மனிதன் என்ற ஒருவன் நிரந்தரமாக இருப்பானா? இந்த முன்னேற்றமே இரண்டு பொருட்களை ஒப்பிடுவதின் மூலமாகக் கிடைப்பது. எனது முப்பாட்டனார் ஒரு பத்து கிலோ மீட்டர்களைக் கால்களால் கடப்பதற்கு எடுத்துக் கொண்ட நேரத்தை நான் எனது காரில் கடப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தோடு ஒப்பிட்டு நாம் முன்னேறி விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறோம். பாம்புக்கடிக்கு மனிதர்கள் இறந்து போவதைக் குறைத்தோம். ஆனால் இன்று அன்றாடம் சாலை விபத்துக்களில் அதைவிட மோசமாக நாம் மரணிக்கிறோம். எனது முப்பாட்டனார், நான்கு சக்கரங்கள் உள்ள ஒரு வாகனம் மோதி வருடத்திற்கு பல்லாயிரம் பேர் இறப்பார்கள் என்று கற்பனையில் கூட யோசித்திருக்க மாட்டார். நமது முன்னேற்றக் கற்பனை காலத்திற்கே ஒரு நோக்கத்தைக் கற்பித்திருக்கிறது. நமக்கு சேவை செய்யாத எதுவுமே நீடித்திருக்கப் போவதில்லை. மனிதர்களுக்காகவே அனைத்தும் படைக்கப்பட்டன எனச் சொல்லும் மதங்களும், கடவுள் நிலையை அடையவே மனிதன் படைக்கப்பட்டான் எனச் சொல்லும் மதங்களும் உண்டு. கடவுளுக்கு ஒரே வழிதான் உண்டு. அது மனிதர்களைக் காப்பாற்றுவது. மனிதர்களைக் காப்பாற்றுவதின் மூலமாகத்தான் கடவுள் தன்னையே காத்துக்கொள்ள முடியும். கடவுள் மனிதனின் மெய்க்காப்பாளன், அரசு மனிதனின் வாயிற்காப்பாளன். ஆனால் உண்மையில் மனிதன் அரசின், கடவுளின் அடிமை. எல்லா ஜனநாயக அரசுகளும் மனிதனை எஜமான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக நடிக்கின்றன. உண்மையில் இதுவரையிலும் ஜனநாயகம் என்பதை நாம் கற்றிருக்கவேயில்லை. இவையெல்லாமே மனிதர்களின் தற்காலிக அரசியல் நிலைமைகளே. வரலாற்றை அழிப்பதற்கு ஒன்றுக்கொன்று போட்டி போடும் நிறுவனங்களின் முனைப்பே மனிதர்களின் அரசியல் நிலை. நாமெல்லோரும் நமது முந்தைய நிலையை அழிப்பதின் மூலமாக எதிர்காலத்தை அடைந்து விடுவதாக நினைக்கிறோம். ஒன்றின் அழிவிலிருந்தே எதிர்காலம் பிறக்கிறது. எனில் எதிர்காலத்தின் கால்களுக்கு கீழே பல மயானங்கள் அரைபடுகின்றன. அனார்கிஸ்ட்டுகள் எதிர்காலத்தைப் போதிப்பவர்கள் அல்ல. அவர்கள் நமது தயக்கங்களை உடைக்கிறார்கள். நமது தயக்கங்கள் அனைத்துமே நமது நிறுவனங்களின் சட்ட திட்டங்களால் உருவானவை. அவை எதுவுமே மனித இயல்பினால் உருவானவை அல்ல. உண்மையில் மனித இயல்பென்ற ஒன்றே இல்லை.”
பிரசாந்த் தொடர்ந்து பேசுவதற்கு முனைந்தார். பரத்குமார் போதும் என்று சைகை காட்டினார். என்னைச் சுட்டிக் காட்டி, நமது புது நண்பரை பயமுறுத்தாதே என்றார். அவர் பேசுவதைக் கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தேன். என்னிடம் யாருமே இப்படிப் பேசியதில்லை. பிரசாந்த் மூவருக்கும் விஸ்கியை ஊற்றினார். ஐஸ் கட்டிகளைப் போட்டார். இரண்டாவது நாளாக விஸ்கி குடிக்கிறோம் என்று யோசித்தேன். அறையில் மட்டுமல்ல எனது உடலிலிருந்தே விஸ்கியின் வாடை வெளியேறுவதாக நினைத்தேன். அறையும், புத்தகங்களும், நாங்களும் விஸ்கியின் வாசனையில் உறைந்து மூழ்கியிருந்தோம்.
பிரசாந்த் தொடர்ந்து ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் பேசினார். கிரிக்கெட், சூழலியல் மாற்றம், வைஷ்ணவி என்று அவர்களது பேச்சு நீண்டது.
“தமிழில் யாராவது இலத்தீன் இலக்கியங்களை மொழிபெயர்த்திருக்கிறார்களா?’, பரத்குமாரிடம் கேட்டார். “இங்கே கன்னடத்தில் ஒன்றிரண்டு புத்தகங்கள் வந்திருக்கின்றன”.
“என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். போர்ஹேஸையும், மார்க்வேஸையும் தமிழ் எழுத்தாளர்களின் இடத்திலேயே வைத்திருக்கிறார்கள். தமிழ் எழுத்தாளர்களைப் படித்து இலக்கியத்திற்குள் வருகிறார்களோ இல்லையோ, இவர்கள் இருவரையும் வாசித்தே இலக்கியத்திற்குள் நுழைய வேண்டுமென்ற இடத்தில் வைத்திருக்கிறார்கள். கடவுச்சீட்டைப் போல.”
“இலத்தீன் அமெரிக்க இலக்கியம் இன்னுமே ஆழமானது. இவர்கள் எல்லோரும் மேல்மட்டத்தில் இருப்பவர்கள். இவர்களைப் போல குறைந்தது நூறு எழுத்தாளர்கள் இருப்பார்கள். நான் அவர்களைப் பற்றியே ஆய்வு செய்கிறேன். உதாரணத்திற்கு ‘ரூபென் தாரியோ’, அவர்தான் மாடர்னிட்டியை இலத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். உண்மையில் பிரெஞ்சுப் புரட்சிக்கும் முன்பே ஹைதி புரட்சி நடந்திருக்கிறது.
“சரிதான். உன்னுடைய பண்ணை வீட்டிற்கு எப்போது போனாய்?.”
அறைக்குத் திரும்பும்போது பரத்குமார் என்னிடம் சொன்னார், ஓசூருக்குப் பக்கத்திலிருக்கும் தளியில் பிரசாந்திற்கும், வசுதாவிற்கும் சொந்தமான ஒரு பண்ணை வீடு இருப்பதாக. அவர்களுடைய கல்யாணத்திற்கு அன்பளிப்பாக அவனுடய மாமனார் ஜே.பி. நகர் வில்லாவையும், அவனுடைய அப்பா தளியில் இருக்கும் பண்ணை வீட்டையும் அளித்திருந்தனர்.
”நானும் வசுதாவும் ஒரு மாதத்திற்கு முன்பு சென்றிருந்தோம். புலிகளுக்கு மாட்டுக்கறியை நிறுத்திவிட்டு பிராய்லர் கோழிகளைப் போட்டார்கள். எடை குறைந்து பலவீனமாக ஒன்றிரண்டு புலிகள் மரணமடைந்திருக்கின்றன. இவள்தான் வைத்தியம் பார்த்தாள். இந்த முட்டாள்தனத்தை சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தாள். புலிகள் இறந்ததை அவளால் தாங்க முடியவில்லை. அதென்ன கொசுவா ஏராளமாகப் பெருகியிருப்பதற்கு எனப் புலம்புவாள். கொஞ்சம் ஓய்வாக உணர்வாள் என்று நானும் அவளும் பண்ணை வீட்டில் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு வந்தோம். தளியில் எப்போதுமே குளிர்தான். ஏரியில் நீர் நிறைந்திருந்தால் குளிர் இன்னுமே அதிகமாக இருக்கும். என்ன இப்போதெல்லாம் மலைகளைப் பிளக்கும் வேட்டுகளின் ஒலி அடிக்கடி தொந்தரவு செய்கிறது.”
வரவேற்பறையில் வசுதா செல்பேசியில் யாரிடமோ கத்துவது பிரசாந்த்தின் பேச்சையும் மீறிக் கேட்டது. அவர் அமைதியானார். வாயில் சுட்டு விரலை வைத்து எங்களையும் அமைதியாக இருக்க சைகை காட்டினார். வசுதா பேசி ஓய்ந்ததும் பிரசாந்த் எழுந்து சென்று கதவைத் திறந்தார். கதவைச் சார்த்தி விட்டு வசுதாவிடம் ஏதோ கேட்க, அவள் அவரிடம் கோபமாக துளு மொழியில் ஏதோ சொன்னாள். நாங்கள் ஒருவரையொருவர் பார்த்தோம். பரத்குமார் கை கடிகாரத்தைத் தொட்டுக் காட்டினார். நான் மூடியிருந்த கதவின் முதுகைப் பார்த்தேன். அறைக்கு வெளியே வசுதாவும், பிரசாந்தும் சைகைகளால் சண்டையிட்டுக் கொள்வார்களென்று கற்பனை செய்தேன். விஸ்கியின் நெடியே வசுதாவை கோபமூட்டியிருக்கும். அவளை எளிதில் சமாதானம் அடையக் கூடியவளாக ஊகிக்க முடியவில்லை. கோபம் அதிகமானால் தரையிலிருந்து பிரசாந்தின் மீது தாவி அவருடைய “கொரவளியை”க் கடித்து விடுவாள். கழுத்திலிருந்து வழியும் இரத்தத்தை கைகளில் பிடித்தவாறே பிரசாந்த் கதவைத் திறந்து வருவார்.
பிரசாந்த் கதவைத் திறந்து வந்தார். அவளால் இரவு உணவைச் சமைக்க முடியாதென்றார். நாங்கள் உணவகத்தில் உணவருந்தலாம் என்றோம்.
”நீயும் வருகிறாயா? எல்லோரும் ஒன்றாகச் செல்வோம்?”
வசுதா அமைதியாக பதிலளித்திருக்க வேண்டும். எங்களைப் பார்த்துச் சொன்னார், “அவள் வரவில்லை”.
அதற்கு மேலும் அங்கிருப்பதும், அவரோடு உரையாடுவதும், மீதமிருக்கும் விஸ்கியை குடித்து முடிப்பதும் சரியானதாக இருக்காதென்று எங்கள் இருவருக்குமே தோன்ற, நாங்கள் அவரிடம் விடைபெறுவதாகச் சொன்னோம்.
”இன்னொரு முறை பார்க்கலாம். என்னுடைய ஆய்வு முடியட்டும். விரைவாக முடிந்து விடும் (அவர் இன்னும் ஆய்வுக்கான வேலையையே துவங்கியிருக்கவில்லை என பரத்குமார் சொன்னார்). அதன் பிறகு சந்திப்போம். நமது பண்ணை வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யலாம். அங்கே நாங்கள் முயல் கூட வளர்க்கிறோம். நண்பரே (என்னைப் பார்த்து) நான் உங்களைச் சலிப்படையச் செய்திருந்தால் மன்னியுங்கள். நாங்கள் இப்படித்தான் நேரம் போவதே தெரியாமல் பேசுவோம். உலகத்தை அவ்வளவு எளிதாகப் பேசித் தீர்த்துவிட முடியுமா? இன்னும் காலமிருக்கிறது”. நாங்கள் எழுந்து வரவேற்பறைக்கு வந்தோம்,
வசுதாவின் கால்களை ஒட்டி டைசன் நின்றிருந்தது. பிரசாந்த் குளிர்பதனப் பெட்டியைத் திறந்து குளிர்ந்த நீர் பாட்டிலைத் தேடினார்.
”டிட் யு நாட் ஃபில் த பாட்டில்ஸ்?”, வசுதாவைப் பார்த்துக் கேட்டார்.
அவள் அமைதியாக நின்றாள். டைசன் என்னை மட்டுமே பார்ப்பதைப் போலிருந்தது. பரத்குமார் பிரசாந்தை ஒருமுறை அணைத்து கை குலுக்கினார்.
”நீங்களும் கை குலுக்கலாமே”, வசுதா என்னைப் பார்த்து சொன்னாள்.
நான் டைசனை நெருங்கினேன்.
”இல்லையில்லை இந்த முறை எனது கணவருக்கு”.
மீண்டும் வாடகைக் காரில் அறைக்குத் திரும்பினோம். பதாகைகள் நீக்கப்பட்ட விளம்பரப் பலகைகளை இம்முறையும் வேடிக்கைப் பார்த்தேன் (இடையிடையே பரத்குமார் பேசுவதையும் கேட்டேன்). இரும்புக் கிராதிகளின் இடைவெளிகளில் துண்டு துண்டாகத் தெரிந்த இரவை கவனித்தேன். கருஞ்சாம்பல் நிறம் கலைந்திருந்தது. மழையும் இல்லை.
***
(பாலசுப்ரமணியன் பொன்ராஜ், தற்பொழுது ஓசுரில் வசித்து வருகிறார். கனவு மிருகம், துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை ஆகிய இரு சிறுகதைத் தொகுப்புகள் வந்துள்ளன. ஆசிரியரின் தொடர்புக்கு – tweet2bala@gmail.com )
ஒரு அனார்க்கிஸ்ட் எப்படி தன் மனைவியின் கோபத்திற்கும் கட்டுப்பாடுகளுக்கும் கட்டுப்பட்ட வராக அந்த இடைவெளியில் எப்படி தீவிர அனார்க்கிஸ்ட் ஆக இருக்கிறார் என்பதை மிகவும் இயல்பாக இந்த கதையில் சொல்லியிருக்கிறீர்கள் அனார்க்கிஸ்ட் கள் என்றால் என்னவென்றே தெரியாது என கதைசொல்லி சொல்வதன் மூலம் அனார்க்கிஸ்ட் கள் பற்றி இதன் தொடர்ச்சியாக எழவேண்டிய விவாதத்தை கட்டுப்பாடாக தவிர்த்து விட்டு கதையை வாசகனிடம் ஒப்படைத்து விடுகிறீர்கள் அவன் அனார்க்கிஸ்ட் கள் பற்றி தெரிந்திருந்தால் புரிந்து கொள்ளட்டும் இல்லாவிட்டால் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்யட்டும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்பதைப்போல வெகு இயல்பாக கதையை முடித்து இருக்கிறீர்கள் சற்று அழுத்தி சொன்னால் அவர்களை கிண்டல் செய்வது போலாகிவிடும் கதாசிரியர் க்கும் ஒரு மனச் சாய்வு வந்துவிடும் என்பதையெல்லாம் கவனத்தில் கொண்டு கதையை எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் சம்பவங்கள் மூலம் ஆன கதையாக இல்லாமல் கருத்தியல் ரீதியான கதையாக வழக்கம் போல நல்ல ஒப்புமைகள் மொழிநடை ஆழ்ந்த அவதானிப்புகள் கதைக்கேற்ற தகவல்களுடன் சிறப்பாக வந்திருக்கிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
குமார நந்தன்