பாரதீ
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கத் தேர்தலில் எவரும் எண்ணிப் பார்த்திராத அளவுக்கு எத்தனையோ கேலிக்கூத்துகள் நடந்தேறின. அவற்றில் ஒன்று, ‘ட்ரம்புக்காக இந்துக்கள்’ (‘Hindus for Trump’) என்ற பெயரில் ஒரு கூட்டம் சாமியாடிக்கொண்டிருந்தது. தேர்தலுக்கு இரண்டு வாரங்கள் முன்பு ட்ரம்பையே வரவழைத்து ஒரு கூட்டம் போட்டு, “உங்களையெல்லாம் தீவிரவாதத் தாக்குதல் செய்து கொல்லப் போகிறார்கள் பாருங்கள்” என்று பயமுறுத்தும் விதமான மேடை நாடகமெல்லாம் போட்டுக் காட்டி, “அவர்களை அழிக்க வேண்டும், அதற்கு நாம் சேர்ந்து செயல்பட வேண்டும்” என்று படங்காட்டி, களேபரம் செய்தார்கள். இதெல்லாம் எப்படி இவர்களுக்குத் தோன்றியது என்று வரலாற்றைச் சற்று புரட்டிப் பார்த்தால் எவ்வளவோ வியப்புகள் குவிந்து கிடக்கின்றன.
அமெரிக்காவில் உள்ள சராசரி யூதர்கள் பெரும்பாலும் மக்களாட்சிக் கட்சிக்கே (Democratic Party) வாக்களிப்பவர்கள். மக்களாட்சிக் கட்சி ஓரளவுக்கு இடதுசாயும், அடித்தட்டு மக்களின் – சிறுபான்மையினரின் – வந்தேறியவர்களின் நலன் பற்றிப் பேசும் கட்சி. அதனால் அதுதான் இயல்பாக நடக்க வேண்டியது. அப்படியே போய்க் கொண்டிருந்த கதையில், எண்பதுகளில் ஒரு திருப்பம் நேர்ந்தது. சில விவரமான பணக்கார யூதர்கள் ஒன்று கூடி, குடியரசுக் கட்சிக்கு (Republican Party) ஆதரவாகக் களம் இறங்கினர். இது பல உள்நோக்கங்களோடு செய்யப்பட்ட வேலை. தம்மை வெறுப்பவர்கள் – வேற்றாராக நடத்துபவர்களிடமே போய், தம்மை ஆதரித்து நிற்பவர்களையே குறை கூறிக்கொண்டு, “நீங்கள் சொல்வதுதான் சரி, நீங்கள் சொல்கிற பெரும்பாலான விஷயங்களில் உங்களோடு ஒத்துப் போகிறோம், எங்கள் மக்களும் கொஞ்சம் மாற வேண்டும், உங்களைத்தான் எங்களுக்குப் பிடித்திருக்கிறது, எங்கள் மக்களிடம் உங்கள் பெருமைகளை எடுத்துச் சொல்லும் வேலையைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்” என்று சொல்லிக்கொண்டு நெருங்க முயல்வது எம்மாம் பெரிய தந்திர வேலையாக இருக்க வேண்டும்! இது எல்லோருக்கும் கைவரும் கலையல்ல. இதற்குப் பல தலைமுறைப் பயிற்சி வேண்டும்.
அப்படியே மெதுவாக அவர்களின் தோளில் கையைப் போட்டு, “நீங்கள் எங்களில் சிலரை வெறுப்பது சரிதான், எங்களவர்களும் கொஞ்சம் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும், ஆனால் எங்களைவிட நீங்கள் அதிகம் வெறுக்க வேண்டிய இன்னொரு கூட்டம் இருக்கிறது” என்று வேறொரு பக்கம் அவர்களின் கவனத்தைத் திருப்பி, அதன் மூலம் தம் மீதான வெறுப்பைக் குறைத்துக்கொள்வது லேசுப்பட்ட வேலையா? அதன் விளைபயனாக தம் எதிரியையே தம்மைப் பிடிக்காதவர்களுக்கும் எதிரியாக்கிவிடுவது எவ்வளவு பெரிய சாதனை! அப்படித்தான் அமெரிக்கர்களுக்கு முஸ்லீம் வெறுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இது சிறிய அளவில் தொடங்கியதுதான். அதன் பிறகு அரபு நாடுகளோடு அமெரிக்காவுக்கு நடந்த பல நிகழ்வுகள் அதை மேலும் பல மடங்கு பெரிதாக்கிவிட்டன. இது இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத் தந்திரங்களில் ஒன்றாகக் கூட இருக்கலாம். இப்போதும் பெரும்பான்மை யூதர்கள் மக்களாட்சிக் கட்சியில்தான் இருக்கிறார்கள் என்றாலும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிதாகப் பெருமளவிலான யூதர்கள் குடியரசுக் கட்சியின் பக்கம் சாய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒரே காரணம், ‘மக்களாட்சிக் கட்சி நம்மைப் போலவே முஸ்லீம்களையும் இன்னொரு சிறுபான்மை இனமாகப் பார்க்கும் கட்சி. அவ்வளவுதான். ஆனால் குடியரசுக் கட்சி நம்மைப் போலவே அவர்களை வெறுக்கும் கட்சி. நமக்குப் பிடிக்காத நாடுகளைத் தேடித் தேடி அடித்து நொறுக்கிக் குதூகலம் அடையும் கட்சி’ என்கிற எண்ணந்தான். அது மட்டுமில்லை. ‘குடியரசுக் கட்சி தேசியவாதம் பேசும் கட்சி. அவர்களோடு சேர்ந்தால்தான் நாமும் வேகமாகவே மண்ணின் மைந்தர்கள் போலக் காட்டிக்கொள்ள முடியும்’ என்பதும். வெளியூர்க்காரன் வெளியூர்க்காரர்களோடே சுற்றிக்கொண்டிருந்தால் என்று உள்ளூர்க்காரன் ஆவது!
இந்தத் தந்திரத்தை அப்படியே காப்பியடித்த பஞ்சாபி இந்துத் தொழிலதிபர் ஒருவர், எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் அதே பாணியில் குடியரசுக் கட்சிக்கு ஆதரவாகக் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களை – குறிப்பாக இந்துக்களை – ஒன்று திரட்டியதில் தொடங்கியதுதான், 2016-இல் ‘ட்ரம்புக்காக இந்துக்கள்’ என்பதில் வந்து நின்றது. ஒரு தொழிலதிபர் இப்படியான சோலிகளில் ஏன் இறங்குவார் என்பது எளிதில் புரிந்துகொள்ளக் கூடியதுதான். ட்ரம்பே சென்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தல் வரை ஒவ்வொரு தேர்தலிலும் இன்று அவர் எதிரி என்று சொல்லிக்கொண்டிருக்கும் மக்களாட்சிக் கட்சிக்கு அள்ளி அள்ளி நிதியளித்தவர்தான். அப்படித்தான் தொழில் செய்பவர்கள் நடந்துகொள்வார்கள். ஊர் விட்டு ஊர் போய்த் தொழில் செய்கிற அண்ணாச்சி கூடக் கடைபிடிக்கிற நடைமுறைதான் இது. ‘அவர்கள் கொள்கை என்னவாக இருந்தால் என்ன! சித்தாந்தம் என்னவாக இருந்தால் என்ன! நம் தொழிலுக்குத் தொல்லை கொடுக்காத இடத்தில் அவர்களை வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு அவ்வப்போது அவர்களுக்குச் சிறியதாக ஏதோ நன்கொடை என்று கொடுத்து வைத்தால், நாளை நமக்கு ஏதாவது என்றால் அவர்கள் நன்றியோடு உதவிக்கு வருவார்கள்; குறைந்தபட்சம் தொல்லையாவது செய்யாமல் இருப்பார்கள்’ என்கிற சிந்தனைதான். ஆனால் அதை நம்பிக்கொண்டு கூலி வேலை பார்க்க வந்திருக்கும் பொறியாளர்களும் இதர தொழிலாளர்களும் அவர்களின் பின்னால் அணி திரண்டு போவதுதான் எல்லாக் காலத்திலும் இவர்களின் சாபக்கேடு. ஆனால் இவர்களை நம்ப வைக்கிற ஏதோவொரு கதையைச் சொல்லித்தானே இந்தத் தொழிலதிபர்கள் ஏமாற்றுகிறார்கள். அது என்ன என்பதையும் பார்த்துவிடுவோம்.
பொதுவாகவே எல்லா நாடுகளிலுமே வலதுசாரிக் கட்சிகள் உள்ளூர் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டுப் பிழைப்பு நடத்துபவைதான். உள்ளூர் மக்கள் என்று சொல்வது கூடத் தவறுதான். பெரும்பான்மை எனலாம். பெரும்பான்மை ஆகிவிட்டால்தான் நான்தான் உண்மையான உள்ளூர் என்று கதையை மாற்றிக்கொள்ளலாமே! இவர்களைப் பெரும்பான்மை என்பதும் கூடச் சில இடங்களில் தவறுதான். வெவ்வேறான மனிதர்களை ஏதோவொரு பெயரின் கீழ் ஒன்று திரட்டி அவர்களைப் பெரும்பான்மை என்று நம்பவைத்து ஏமாற்றும் வேலையையும் அவர்கள்தான் செய்கிறார்கள். அதனால் சிறுபான்மையாக இருப்பவர்களுக்கும் வந்தேறுபவர்களுக்கும் வலதுசாரி அரசியல் எப்போதுமே எதிராகத்தான் இருக்கும். அவர்களுக்கு எதிரான வெறுப்பை விதைத்தும் கூச்சல்களைப் போட்டுமே வலதுசாரிகள் தம்மைத் தக்கவைத்துக் கொள்வர். இதனால் இயல்பாகவே வந்தேறுபவர்களும் சிறுபான்மையினரும் இடதுசாரிக் கட்சிகளையோ வலதுசாரிகளை எதிர்ப்பவர்களையோதான் ஆதரிப்பார்கள். இதற்குப் புறம்பான போக்கை எப்போதெல்லாம் காண முடியும் என்றால், அதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும்.
வந்தேறுபவர் வந்தேறிய மண்ணில் இருக்கும் ஏதொவொன்றோடு தொடர்புடையவராக இருக்கும் போது இது எளிதில் நடந்துவிடும். எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்கு வருகிற ஒரு கிறிஸ்தவர் தன் பெயரையும் மதத்தையும் பயன்படுத்தி தானும் அவர்களில் ஒருவராகக் காட்டிக்கொள்ள முயல்வது, இந்தியாவிலிருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் ஒரு முஸ்லீம் அங்கேயுள்ள தீவிர மதவாத அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொள்ள முயல்வது, வீட்டில் மராத்தி பேசுகிற வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் மஹாராஷ்டிரா சென்றவுடன் சிவ சேனாவில் சேர்வது, தமிழ்நாட்டுக் கோனார் வடநாட்டில் போய் யாதவர் சங்கத்தில் சேர்வது போன்றவை எல்லாம் இந்த வகையில் சேரும். இதுவல்ல நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் கூட்டம்.
இப்படி ஒட்ட வைக்க ஏதுவாக எதுவுமே இல்லாவிட்டாலும் கூட, வந்தேறுபவர்களோ சிறுபான்மையினரோ ஏதோவொரு வகையில் தம்மையும் பெரும்பான்மைக் கூட்டத்தோடு இணைத்துக்கொள்வதோ அல்லது அப்படிக் காட்டிக்கொள்வதோ தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணும் போது, அப்படியான நடிப்பு வேலையைச் செய்வார்கள். “அவர்கள் சொல்வதும் சரிதானே! இது அவர்கள் மண்தானே! அவர்களுக்குப் பிறகுதானே நமக்கு!” என்று அவர்களுக்குப் பிடித்த மாதிரிப் பேசித் தப்பித்துக்கொள்ளப் பார்ப்பார்கள். தப்பித்துக்கொள்ளப் பார்க்குமளவுக்குப் போவது எல்லா உயிர்களுக்கும் இருப்பது போன்ற பாதுகாப்பு உணர்வுதானே என்று விட்டுவிடலாம். அதற்காக இறங்கி வேலை செய்யும் போது, அந்தப் பரப்புரையில் பங்கெடுத்து, அதற்கு ஆதரவாகத் தம் மக்களிடமே விவாதிக்கும் அளவுக்கு முற்றிப் போகும் போது, அதை நாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத்தானே வேண்டும்! இவ்வுயிர்கள் எல்லா உயிர்களையும் போன்ற பாதுகாப்பு உணர்வு மட்டும் கொண்டவையாக இருக்க முடியாது. அதற்கும் மேலே ஏதோவொன்று உடையவையாக இருக்க வேண்டும். இல்லையா?
இன்னொன்று, பொதுவாகவே இடதுசாரிக் கொள்கைகள் மீது ஈடுபாடில்லாதவராக இருந்தால், இருக்கிற இரண்டில் தனக்கு ஓரளவு ஒத்து வருவது எது என்று பார்க்கையில், வலதுசாரிக் கட்சியே பரவாயில்லை என்று முடிவு செய்வதும் ஓரளவு – மிகச் சிறிய அளவில் – இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இதுவும் பட்டும் படாமல் இருக்கிற உறவாகத்தான் இருக்கும். இறங்கி வேலை செய்யும் அளவுக்கு இருக்காது. எடுத்துக்காட்டுக்கு, இந்தியாவில் தீவிர இடதுசாரி வெறுப்பாளராக இருக்கும் ஒருவர், இந்திய வலதுசாரியாக இருப்பார். அதற்காக இந்திய வலதுசாரிக்கு மேற்கத்திய வலதுசாரிகளையோ மத்தியக் கிழக்கு வலதுசாரிகளையோ அவ்வளவு எளிதாகப் பிடித்துவிடாது. இரு நாட்டு இடதுசாரிகளைப் போல இரு நாட்டு வலதுசாரிகள் எளிதில் ஒத்துப் போய்விட முடியாது. “என் மதமே அல்லது பண்பாடே உண்மை, மற்றதெல்லாம் பொய்” என்பவன் போய் எப்படி அதையே சொல்லும் வேறொரு மதவாதியிடம் – பண்பாட்டுப் பம்மாத்துக்காரனிடம் கூட்டணி வைக்க முடியும்!
அடுத்த வகை என்று பார்த்தால், தன் சொந்த நாட்டில் மேல் வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தால், வந்த இடத்திலும் தாம் அங்குள்ள மேல் வகுப்போடுதான் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனையோடு வலதுசாரிக் கட்சிகளை ஆதரிப்போரும் உண்டு. இதில் மேல் வகுப்பு, கீழ் வகுப்பு எங்கே இருந்து வந்தது என்ற கேள்வி வருகிறதா? உலகெங்கிலுமே வலதுசாரிகள் என்பவர்கள் முதலாளிகளின் நலன்களுக்கு உழைப்பவர்களாகவும் இடதுசாரிகள் அல்லது இடதுசாயும் ‘மையர்கள்’ என்பவர்கள் உழைக்கும் மக்களின் பக்கம் நிற்பவர்களாகவுமே இருக்கிறார்கள், அல்லது அப்படிக் காட்டிக்கொள்ளவாவது செய்கிறார்கள். இப்படி இருக்கையில், இந்தியாவில் வளமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவர், அமெரிக்காவோ பிரிட்டனோ சென்று அங்கும் ஒரு முதலாளியாகவோ பெரும் பணக்காரராகவோ வாழும் புண்ணியம் பெற்றவராக இருந்தால், இயல்பாகவே அவருக்கு அங்கிருக்கும் வலதுசாரிக் கட்சிப் பக்கம்தான் மனம் சாயும். “நாங்கள்லாம் இவனுகளைக் காலுக்குள் போட்டு மிதித்த கூட்டமாக்கும்!” என்று சொல்கிறவர்களிடம் போய், “நாங்களும் எங்கள் ஊரில் அப்படித்தான். இதே போல அங்கேயொரு கூட்டம் இருக்கிறது. அவர்களைக் காலுக்குள் போட்டு மிதிப்பதுதான் எங்கள் வேலையே!” என்று பேசுவதுதானே பெருமை!
அது மட்டுமில்லை. பெரிதளவில் வரி கட்ட நேரும் எவருக்குமே இடதுசாரி அரசியலைப் பிடிக்காது. அவர்களின் அரசியலைப் பிடுங்கித் தின்னும் அரசியல் என்றே பார்க்கத் தோன்றும் – பழிக்கத் தோன்றும். ஏனென்றால் அது இவர்களை நேரடியாக பாதிப்பது. அதே வேளையில், வலதுசாரி அரசியலின் எந்தக் கீழ்மையும் இவர்களைப் பாதிப்பதில்லை. அவர்கள் இவர்களின் ஆட்களாகவே இருப்பார்கள். மாறாக, இடதுசாரிகளுக்கோ இவர்கள்தான் பெரும் பிரச்சனையே; இவர்கள்தான் சுரண்டல்காரர்கள்; இவர்களின் சுரண்டல்தான் ஏழ்மைக்கும் துன்பங்களுக்கும் குற்றங்களுக்கும் சமூகத்தின் அனைத்துச் சிறுமைகளுக்கும் காரணம் என்பார்கள். இவர்களைக் கேட்டால், இடதுசாரிகள் என்பவர்கள் தம் உடைமைகளைப் பிடுங்கிச் சோம்பேறிகளுக்குப் பங்கு போட்டுக் கொடுப்பவர்கள் என்பார்கள். பின் முதலாளிகளுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் வலதுசாரிகளுடன் ஏற்படுவதுதானே இயல்பான கூட்டணியாக இருக்க முடியும்!
ஆனால், ட்ரம்புக்காக உழைத்த இந்துக் கூட்டம் மேலே சொன்ன இவற்றுள் ஒன்றைச் சேர்ந்ததா? அதைத் தொடங்கி வைத்ததும் அதற்குள் ஒரு மிகச் சிறிய எண்ணிக்கையும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம். அல்லது இவற்றில் ஒன்றும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள், வேறு சில காரணங்களின் அடிப்படையில் ஒன்று கூடியவர்கள். அது என்ன?
‘நம்மூரில் நம் தலைவன் செய்வதை இந்த ஊரில் இந்த ஆள் செய்கிறான்; இவனுடைய கூட்டமும் நம்மைப் போலவே உணர்ச்சிபூர்வமானதாக (அதற்கு நாம் வேறு பெயர் வைத்திருக்கிறோம்) இருக்கிறது. நம்மூரில் இருக்கும் நமக்குப் பிடிக்காத கூட்டம் ஒன்று இவர்கள் இருவரையும் ஒரே மாதிரியானவர்கள் என்று ஒப்பிடுகிறது; நம் தலைவனும் இவனும் கொஞ்சிக் கொஞ்சி வேறு குலாவுகிறார்கள்; எனவே இவன் நம் ஆள்தான்’ என்று எண்ணி இறங்கிய கூட்டம், அப்படியே சிறிது சிறிதாக உள்வாங்கப்பட்டு இப்போது மீளவே முடியாத அளவுக்குக் காதலில் விழுந்துவிட்டது. சிலருக்கு ஒருவரின் பேச்சோ – செயல்பாடோ அவரை நோக்கி இழுக்கும் அல்லது அவரைவிட்டு விலகிச் செல்ல வைக்கும். சிலருக்கு ஒருவர் நமக்கானவரா அல்லது நமக்கு எதிரானவரா என்பதை முடிவு செய்துகொண்டு, அதன் பின்பு அவர் செய்வதையெல்லாம் கண்டு புல்லரித்துக்கொள்வதும் கோளாறு சொல்வதும் என்று போய்விடுகிறது. தலைவனைப் போலவே இவர்களுக்கும் அறிஞர்களைப் பிடிக்காது. தலைவன் ஒருவனே இந்த உலகம் கண்ட ஒரே அறிஞன். தலைவனைப் போலவே இவர்களுக்கும் அறிவியலைப் பிடிக்காது. தலைவனின் உளறல்கள் மட்டுமே ஆகப் பெரும் அறிவியல்.
இந்தப் பைத்தியத்தின் உச்சத்தில், அமெரிக்கத் தலைவனின் கூட்டம் வெறித்தனமாக வெறுக்கும் கூட்டத்தில் தாமும் இருக்கிறோம் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள், அல்லது இப்படியெல்லாம் இறங்கி வேலை செய்வதால் தம்மை மட்டும் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள் என்று நம்புகிறார்களா என்று தெரியவில்லை.
சொந்த மண்ணில் கிறிஸ்தவர்களை அரிசிப் பை என்று இழிவுபடுத்திக்கொண்டு, சின்னஞ்சிறு பையன்கள் உட்பட பாதிரியாரின் குடும்பத்தையே எரித்ததைக் கூட நியாயப்படுத்திக்கொண்டு, வெட்கமில்லாமல் இவர்களை இங்கேயுள்ள கிறிஸ்தவ மத வெறியர்களோடு கூட்டணி வைக்கத் தூண்டுவது எது? அது, அவர்களும் தம்மைப் போலவே முஸ்லீம்களை வெறுக்கிறார்கள் என்ற எண்ணம்.
அவர்களின் வெறுப்பை மேலும் தூண்டிவிட்டால் தம் மீது அவர்கள் அன்பு செலுத்திவிடுவார்கள் என்னும் நப்பாசை. வெறுப்பும் வெறுப்பும் கூட்டணியமைத்து எவ்வளவு தொலைவு சென்றுவிட முடியும்! ஒன்றை முடித்துவிட்டு இன்னொன்றுக்கு வந்துதானே ஆக வேண்டும். வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்கிற குறுநோக்கு! அல்லது, இப்போதைக்கு இந்த இடத்தில் பிழைப்பை ஓட்ட என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொள்ளும் நரித்தனம்!
கால் கடுக்க அமெரிக்கத் தூதரக வாசலில் நின்று விசா வாங்கி, இங்கு வந்து என்னென்ன குரங்காட்டம் ஆட வேண்டுமோ அத்தனையும் ஆடி, பச்சை அட்டை வாங்கி, குடிமகன் ஆனதும், தான் அமெரிக்கனாகவே மாறிவிட்டது போல எண்ணிக்கொண்டு, “ஆமா, அவர் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது! வெளியார் வருவதைத் தடுப்பதுதானே இந்த நாட்டுக்கு நல்லது!” என்று பேசுவதற்கு ஓர் உயிரினம் எவ்வளவு கேவலமானதாக இருக்க வேண்டும்!
இது ஒரு புறமென்றால், இன்னொரு கூட்டம் இருக்கிறது. ஓரளவுக்கு இடதுசாய்வோராகப் பார்க்கப்படும் மக்களாட்சிக் கட்சியை ஆதரிக்கும் இந்தியர்களில் எவ்வளவு பேர் யோக்கியர்கள் என்று பார்த்தால், அதுவும் தலையைச் சுற்ற வைக்கிறது. சிறுபான்மையினருக்காகவும் வந்தேறியவர்களுக்காகவும் கறுப்பின மக்களுக்காகவும் நரம்பு புடைக்கக் கத்தும் இந்த முற்போக்காளர்களிடம் இந்தியாவைப் பற்றிப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் அருவருப்பில் நமக்கு வாந்தி வந்துவிடுகிறது.
இந்தியாவில் மட்டும் சிறுபான்மையினரும் ஒடுக்கப்பட்டோரும் அடித்து நொறுக்கப்பட வேண்டும், அதைப் பற்றிக் கேள்விப்பட்டுக் குதூகலிக்க வேண்டும், குடும்ப வாட்சாப் குழுக்களில் வெறுப்பு பரப்ப வேண்டும், இந்தியா வல்லரசாகிவிட்டது என்று பொய் பரப்ப வேண்டும். ஆனால் அப்படியே இந்தப் பக்கம் திரும்பினால், அமெரிக்காவில் தான் எந்த வகையிலும் இரண்டாம் தரக் குடிமகனாகப் பார்க்கக் கூடப் பட்டுவிடக் கூடாது, அமெரிக்காவின் பெரும்பான்மை தன்னிடம் நாகரிக சமூகத்தைப் போல நடந்துகொள்ள வேண்டும், தலைவர்கள் பரந்த மனம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இது எவ்வளவு பச்சையான பச்சோந்தித்தனம்!
நம்மைப் போலவே இருக்கும் மூடர்களோடுதான் நாம் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணும் வலதுசாரி ஆதரவுக் கூட்டத்தைவிட இந்தக் கூட்டம் வெட்கம் கெட்ட கூட்டம். இவர்கள் இப்படி இருப்பதுதான் அமெரிக்காவுக்கும் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கும் நல்லது. ஆனால் இவர்கள் துளி கூட இந்தியாவுக்கு நல்லதில்லை. நாளை இந்தியாவில் தேர்தல் வரும் போது அப்படியே வேறொரு நிறத்துக்கு மாறி மூடர் கூட்டத்துக்குத் தீனி போடும் முன்னணிப் பரப்பர்களாகிவிடுவார்கள். இதுதான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் மிகப்பெரிய வேறுபாடு. அமெரிக்காவில் முதலாளிகளும் மூடர்களும் மேற்தட்டினரும் மட்டுமே வலதுசாரி ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். அரசைத் தவிர்த்த அனைத்து நிறுவனங்களும் பெரும்பாலான இதழியர்களும் பெரும்பாலான படித்த உயர்நடுத்தர வர்க்கத்தினரும் தம் நாட்டுக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தையும் இழிவையும் எண்ணிக் கூச்சத்தில் கூனிக் குறுகிப் போய்க் கிடக்கிறார்கள்; வரும் தேர்தலில் இந்தக் கோமாளி அரசை எப்பாடு பட்டேனும் தூக்கி வீசிவிட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலோ அத்தனை நிறுவனங்களும் பெரும்பாலான இதழியர்களும் அரசுக்கு முன்னே சுருண்டு படுத்துவிட்டனர். படித்த உயர்நடுத்தர வர்க்கத்தினர் தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலுமே பொய்ப் பிரச்சாரத்துக்கு ஏமாந்த கூமுட்டைகளாகவோ உண்மை தெரிந்தும் கூச்சமில்லாமல் பொய் பேசும் மோசடியாளர்களாகவோ இருக்கிறார்கள்.
இந்திய வல்லரசுக்கு ஒரு நியாயமும் அமெரிக்க வல்லரசுக்கு ஒரு நியாயமும் வைத்திருக்கும் இந்தக் கூட்டத்தினர் விடும் கதைகள் தினுசு தினுசானவை.
“அமெரிக்கத் தலைவன் கோமாளி; ஆனால் இந்தியத் தலைவன் கடவுளுக்குச் சமமானவர்; உண்மையில் இவர்கள் இருவரையும் ஒப்பிடுவதே தவறு”, “உண்மையில் இந்தியத் தலைவன் அமெரிக்கத் தலைவனை இந்தியாவின் நன்மைக்காக சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார், இதில் நமக்குத்தான் ஆதாயம், அவர்கள் ஏமாளிகள்”, “இந்தியாவில் உள்ள வெறுப்பர்கள் வெறுப்பர்களே அல்லர், அவர்கள் பெருந்தன்மையானவர்கள், நாம் கேள்விப்படுவதெல்லாம் ஊதிப் பெரிதாக்கப்படும் பொய்ப் பரப்புரைகள்!”, “இங்கிருக்கும் நிறையப் பேர் எங்களுக்கும் இப்படியொரு தலைவன் இல்லையே என்று ஏங்கிப் போய்க் கிடக்கிறார்கள்; நம்மை வையத் தலைமை கொள்ள வேண்டி வரிசையில் காத்துக்கிடக்கிறார்கள்”… என்று பல தினுசுகளில் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் உச்சபச்சமாக நம்மைத் திணறடிக்கும் வாதம் இதுதான் – “நம்மூரில் நாம் வைத்ததுதான் சட்டமாக இருக்க வேண்டும். அது நம்மூர். நாம் நல்லவர்கள். நம் கையில் அதிகாரம் இருப்பதுதான் நமக்கு நல்லது. அது போல வந்த இடத்தில் நமக்குப் பாதுகாப்பான முறையில்தானே எல்லாம் இருக்க வேண்டும்! நாம் நல்லவர்கள். நம் கைக்குப் போதிய அதிகாரம் வந்தால்தான் நமக்கு நல்லது. அங்கு நமக்கு எது வசதியோ அதை ஆதரிக்கிறோம். அதே போல் இங்கு நமக்கு எது வசதியோ அதை ஆதரிக்கிறோம். இதுதானங்க மனித இயற்கை!”
எப்படி கதை!
இப்போது, இந்தக் கதைக்குச் சற்றும் எதிர்பாராத திருப்பம் ஒன்றைக் கொண்டுவந்து இறங்கியிருக்கிறார் கமலா ஹாரிஸ். ட்ரம்புக்கு உழைக்கிறோம் என்று கிளம்பிய கூட்டத்தில் ஒரு சிறு குழு இம்முறை, “என்ன இருந்தாலும் நம் வீட்டுப் பிள்ளை இல்லையா!” என்று மெதுவாக ஓரங்கட்டுகிறது – கமலாவை ஆதரித்துப் பேசுகிறது – மக்களாட்சிக் கட்சியையே விரும்பத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவில் இருக்கிற தீவிர பாஜக ஆதரவாளர் ஒருவர் ஒரே நாளில் காங்கிரஸ் ஆதரவாளராக மாறுவது போன்ற சந்தர்ப்பவாதம். 69% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்திய திராவிடக் கட்சித் தலைவியையே ஆதரித்த ‘மெரிட்’ பேர்வழிகளையும் தேசியவாதிகளையும் பார்த்த நமக்கு இதெல்லாமா அதிர்ச்சி ஆகிவிடப் போகிறது! வாழ்வெல்லாம் மெரிட்டுக்காகப் பேசிவிட்டு இப்போது எடப்பாடியின் மெரிட்டை எப்படி முட்டுக் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையுந்தானே பார்க்கிறோம்!
ட்ரம்ப் அதிபராகவும் கமலா துணை அதிபராகவும் வர முடியாது என்பதால் வேறு வழியில்லாமல் கண் பிதுங்கி நிற்கிறது இந்தக் கூட்டம். சுப்பிரமணியசாமி வழக்கில் ஜெயலலிதா மாட்டிக்கொண்ட போது முழித்த அதே முழி. ‘அதுதான் நம் கட்சி, இப்படி விவரமில்லாமல் இருக்கிறீர்களே!’ என்று முடிந்தால் ட்ரம்ப் கட்சிக்கு மாறச் சொல்லிக் கூட சித்தி மூலம் தூது அனுப்பினாலும் அனுப்புவார்கள்.
அவரோ தான் இந்தியர்-தமிழர் என்பதைவிடக் கறுப்பர் என்பதையே தன் அடையாளமாகக் காட்டி நிற்கிறார். “இந்தியரான அம்மாவோடே வளர்ந்தவர் ஏன் தன் இந்திய அடையாளத்தைவிட கறுப்பர் அடையாளத்தையே அதிகம் முன்வைக்கிறார்?” என்று அவரின் எதிர் முகாம் அவரைக் கேள்வி கேட்கிறது. ஆனாலும் பிடிவாதமாக ஒரு கூட்டம், “பாரு… பாரு… அவங்க சித்திஸ்னு சொல்றாங்க… அதுதான் எங்கள் பண்பாட்டின் சிறப்பு… நாங்க எல்லாருமே இப்பிடித்தான்!” என்று ரீல் விட்டுக்கொண்டு இருக்கிறது.
“என்னங்க இவங்க! ஒரு சித்திஸோட விட்டுட்டாங்க! நம்மளைவிட அவங்க அந்தப் பக்கந்தாங்க அதிகமா ஒட்டுறாங்க!” என்றால், “அப்பிடித்தாங்க காட்டிக்குவாங்க! அதுதானே அவங்க அரசியலுக்கு வசதியாக இருக்கும்! ஆனா, அவங்க அப்பா பிள்ளை இல்லை; அம்மா பிள்ளை; மனசளவுல நம்மூர்ப் பெண். வேணாப் பாருங்க, அவங்க வேலையெல்லாம் முடிஞ்ச பிறகு நம்ம பக்கந்தான் சாய்வாங்க. அவங்க வந்தா நமக்குத்தானங்க பெருமை – நல்லது! எல்லா இடத்திலும் அதிகாரத்தைக் கைப்பற்றணுங்க! அதுதாங்க நமக்குப் பாதுகாப்பு! நாமதானங்க வையத் தலைமை கொள்ளப் பிறந்தவங்க!” என்றும் சுழற்றி அடிக்கிறார்கள்.