ஒன்றுமில்லை
சிலிர்ப்பு
உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை
குறுகுறுவென்று ஓடும் ஆயிரம் கால்கள்
தங்கு தடையின்றி பயணிக்கும் குறுவாள்
எதிரெதிராய் திகுதிகுவென்று பற்றி எரியும் போர் வாட்கள்
நீலவானம் நோக்கினேன்
ஒன்றுமில்லை
ஓர் அருவி
ஒரு நதி
ஒரு பெருங்கடல்
ஒன்றுமில்லாததை
ஒன்றாக்கிய ஓர்மையின்
தடமெங்கும் பெருகும்
களி
*
தொன்மை
மடித்த பக்கத்திலிருந்து
நழுவிய கவிதையை
முடிவு வாசிக்கப்பட்ட புதினத்தின்
பாதி வாசித்த கதாபாத்திரம்
சிறுகதையாக
சட்டகத்துக்குள் தீட்டியது
சொல்லியதும்
சொன்ன முறையும்
முடிவின் தெளிவின்மையும்
பாத்திரங்களின் மனப்போக்கும்
காற்றின் பக்கங்களில் கேட்கிறது
தெருப்பாடகன் தொடங்கினான்
‘கவிதைகள் வரையறை அற்றவை
கதைகள் முடிவுறுவதில்லை
சாயல்களை விழுங்கும்
முடிவிலி பாம்புகள்’
*
திரும்புதல்
குருடனுக்கு
பேரொளியால் நிரம்பியிருக்கிறது பிரபஞ்சம்
செவிடனுக்கு
தீராத ஒலியால் நிரம்பியிருக்கிறது காலம்
சிறகின்றி முடிவுறாத பயணத்திலிருக்கும்
பறவையினுள் பெருகத் தொடங்கியிருக்கும்
விடுபடல் எளிய செயலன்று
பால்வெளியைத் திறக்கும் இரவு
மற்றுமொரு
பகலே
*
மங்கிய விளக்கொளி
அறையெங்கும்
காலியான மதுப்புட்டிகள்
தாள் குவியல்கள்
சிகரெட் பஞ்சுகள்
ரெனால்ட் நீலத்து வரிகளுடன் பழைய கேசட்டுகள்
பிசுக்கு நிரம்பிய சுவர்
அழுகிய வீச்சமும்
கருந்திட்டுடன் அப்பிக் கிடக்கும் தரை
எத்தப்பட்டு சுருண்டு ஓய்ந்த பாய்
கருங்கல் தலையணை
வெளியேறுவதற்கான
காரணங்கள் பலவிருந்தும்
ஒன்றில் நிற்கிற சகலமும்
ஒருக்களித்த கதவுக்கு அப்பால்
ஆர்ப்பரிக்கும்
கடலோசை
*
முதிர் பருவம்
உதிரிலைகளின் நடுவே
பழுக்கத் தொடங்குகிறது
ஒன்று
திறக்கப்படாத
அந்தக் குறுஞ்செய்தி
‘பிரத்யேக அழைப்பொலி உள்ளவரிடமிருந்து..’
மனப்பட்சி நமைக்கிறது
தொழில் நுட்பக் கோளாறாக
சமாதான நிழலாடுகிறது
அவ்வப்போது
பதிவுக் குரலைக் கேட்கிறேன்
என் பேச்சினைக் குறைத்திருக்கலாம்
காணொளி அழைப்பில்
நீ தவிர்த்த பார்வை
ஒவ்வொரு முறையும்
குறுந்தகவல்கள், தரவிறக்க சுயமிகள் சரிப்பார்த்து அழிக்க
தேய்ந்தலைகிறது
லிங்க விரல்
இன்னும்..
*
அலைவுறுதல்
மிருகங்கள் மிருகங்களாய்
சமயங்களில்
மிருகமாய் இல்லாத
அலைவுறுதலில்
நானும் நீயும்
*
கிழித்தெறிகிறேன்
பக்கம் பக்கமாக
படபடத்து அலைவுறும்
அந்தத் துணுக்கின்
ஒரு சொல்லே
எழுதித் குவிக்கிறது
எண்ணற்ற
பொழுதுகளை
*
ஆற்றில் நீள அகலமாய்
கடலில் அகண்டமாய்
வானத்தில் மேல்கீழாய்
கானகத்தில் குறுக்கும் நெடுக்குமாய்
காற்று
அலைவுற்ற காலம்
தீயில் தீண்டும் இன்பமாய்
*
ஏறாத மலை மேல்
ஏதேனும் கோடுகள் கிறுக்கல்கள்
தேடி அலைவுறும் நிகழ்வை
நிர்மூலமாக்குகிறது
சென்றடையும்
வெற்று
***
வேல் கண்ணன்
திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர் தற்போது பணி நிமித்தம் சென்னையில் வசிக்கிறார்.
இசைக்காத இசை குறிப்புகள், பாம்புகள் மேயும் கனவு நிலம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மின்னஞ்சல்: velkannanr@gmail.com