அண்மையில் மறைந்த பிரபல இயற்பியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங் ‘த கிராண்ட் டிசைன்’ என்று ஒரு புதிய நூல் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியீட்டை ஒட்டி நடந்த சுவாரஸ்யமான கேள்வி பதில்களில் ஒரு பகுதி
கடவுள் இல்லையென்றால், அவரின் இருப்பு பற்றிய கோட்பாடு எப்படிக் கிட்டத்தட்ட மொத்த உலகுக்குமானதானது? – பசந்தா போரா, பேசல், ஸ்விட்சர்லாந்து
கடவுள் இல்லையென்று நான் சொல்லவில்லை. கடவுள் என்பது, நாம் இங்கே இருப்பதற்கான காரணத்திற்கு மக்கள் கொடுத்துக்கொண்ட பெயர். ஆனால் அந்தக் காரணம், இயற்பியலின் விதிகளே ஒழிய நாம் தனிப்பட்ட முறையில் உறவு கொண்டாடிக்கொள்ளும் ஒருவர் அல்ல என்று நான் எண்ணுகிறேன். தனிமனிதரல்லாக் கடவுள்.
பிரபஞ்சத்துக்கு முடிவு இருக்கிறதா? அப்படி இருந்தால், அதற்கு அப்பால் என்ன இருக்கிறது? – பால் பியர்சன், ஹல், இங்கிலாந்து
பிரபஞ்சம் எப்போதும் கூடிக்கொண்டே செல்லும் விகிதத்தில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மென்மேலும் வெறுமையும் கறுமையும் அடைந்து என்றென்றைக்கும் அது விரிவடைந்து கொண்டேதான் செல்லும். பிரபஞ்சத்துக்கு முடிவு இல்லையென்ற போதிலும், அதற்கு ‘பெரு வெடிப்பு’ (Big Bang) என்றதொரு தொடக்கம் இருந்தது. அதற்கு முன்பு என்ன இருந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான விடை, தென் துருவத்துக்குத் தெற்கே எதுவும் இல்லை என்பது போல, பெரு வெடிப்புக்கு முன்பு எதுவும் இல்லை என்பதே.
அடைய முடியாத தொலைதூர வெளிகளுக்கெல்லாம் பாய்ச்சல் நிகழ்த்துகிற அளவுக்கு நெடுங்காலம் மனிதகுலம் தாக்குப் பிடிக்கும் என்று எண்ணுகிறீர்களா? – ஹார்வி பெத்தியா, ஸ்டோன் மௌண்டைன், ஜோர்ஜியா
சூரிய மண்டலத்தில் குடியேற்றம் அமைக்கும் அளவுக்குத் தாக்குப் பிடிக்க நல்ல வாய்ப்பு உள்ளது என்று எண்ணுகிறேன். ஆனாலும், சூரிய மண்டலத்தில் பூமி அளவுக்கு ஏதுவான வேறு இடம் எதுவும் இல்லை. எனவே பூமியை வாழத்தகாததாக்கிவிட்டால் அதன்பின்பு தாக்குப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. நீண்ட கால உயிர்வாழ்வை உறுதி செய்ய, நாம் விண்மீன்களை அடைந்தாக வேண்டும். அதற்குக் காலம் பிடிக்கலாம். அதுவரை எஞ்சியிருக்க முடியும் என்று நம்புவோம்.
உங்களுக்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீனோடு உரையாட வாய்ப்புக் கிடைத்தால் , அவரிடம் என்ன சொல்வீர்கள்? – ஜூ ஹுவாங், ஸ்டாம்ஃபர்ட், கனெக்டிகட்
அவர் ஏன் கருந்துளைகளை (Black Holes) நம்பவில்லை என்று கேட்பேன். ஒரு பெரிய விண்மீன் அல்லது வாயு மேகம் தன் மீதே நொறுங்கி விழுந்து கருந்துளை உருவாக்கும் என்று அவரது சார்பியல் கோட்பாட்டின் களச் சமன்பாடுகள் பொருள்குறிக்கின்றன. இது ஐன்ஸ்டீனுக்குத் தெரியும். ஆனால் எப்போதும் பொருண்மையைத் தூக்கி வீசிவிட்டு கருந்துளை உருவாவதைத் தடுக்கும் விதத்தில் வெடிப்பு போல ஏதோவொன்று நிகழுமென்று எப்படியோ அவரையே அவர் நம்பவைத்திருந்தார். அப்படியொரு வெடிப்பு நடக்காவிட்டால் என்ன செய்வது?
உங்கள் வாழ்காலத்தில் நீங்கள் காண விரும்பும் அறிவியல் கண்டுபிடிப்பு அல்லது முன்னேற்றம் எது? – லூக்கா சான்சி, ஆல்ஸ்டன், மாசேச்சுசெட்ஸ்.
அணுச்சேர்க்கை நடைமுறையில் ஒரு திறன் வாயில் (Source of Power) ஆவதைப் பார்க்க விரும்புகிறேன். அது மாசுபாடோ உலக வெம்மையோ இல்லாமல் வற்றாத ஆற்றல் வழங்குவதாக இருக்கும்.
மரணத்துக்குப் பின் நம் உணர்வு நிலைக்கு என்ன நடக்கும் என்று நம்புகிறீர்கள்? – எலியட் கிபர்சன், சியாட்டில்.
மூளை என்பது ஒரு கணிப்பொறி போலவும் உணர்வு நிலை என்பது ஒரு கணிப்பொறி நிரல் போலவும் என்று எண்ணுகிறேன். கணிப்பொறியை அணைக்கும் போது அதுவும் செயல்படுவதை நிறுத்திக் கொள்கிறது. கருத்தியல்படி, அதை ஒரு நரம்பு வலையமைப்பில் மறுவுருவாக்க முடியும். ஆனால் அதற்கு ஒருவரின் மொத்த நினைவுகளும் தேவைப்படும் என்பதால் மிகவும் கடினம்.
நீங்கள் ஒரு சிறந்த இயற்பியல் அறிஞர் என்ற வகையில், உங்களிடம் இருக்கும் மக்களுக்கு வியப்பூட்டத்தக்க சாதாரணமான ஆர்வங்கள் எவை? – கேரல் கில்மோர், ஜெபர்சன் சிட்டி, மிசோரி.
பாப், பாரம்பரிய, ஓபரா என்று எல்லா விதமான இசையையும் ரசிப்பேன். என் மகன் டிம் உடன் ஃபார்முலா ஒன் பந்தயத்திலும் ஆர்வம் பகிர்கிறேன்.
உங்கள் உடல் குறைபாடு, உங்கள் படிப்புக்கு உதவியதாகவோ தடையாக இருந்ததாகவோ உணர்கிறீர்களா? – மரியன் விக்குலா, எஸ்பூ, பின்லாந்து
‘இயக்க நரம்பணு நோய்’ (Motor Neuron Disease) பெற்ற வகையில் நான் ஒரு துர்பாக்கியசாலி என்ற போதும், மற்ற எல்லாவற்றிலும் நான் பெரும் பாக்கியவான். உடல் ஊனம் என்பது ஒரு பெரிய ஊனமாக இல்லாத சில துறைகளில் ஒன்றான கருத்தியற்பியலில் பணிபுரிந்த, புகழ்பெற்ற நூல்கள் வழியாகப் பெரும்பேறு பெற்ற அதிர்ஷ்டசாலி நான்.
வாழ்வின் மர்மங்கள் அனைத்துக்கும் மக்கள் உங்களிடம் விடை எதிர்பார்ப்பது ஒரு மாபெரும் பொறுப்பு போலப் படுகிறதா? – சூசன் லெஸ்லீ, பாஸ்டன்
கண்டிப்பாக என்னிடம் வாழ்வின் பிரச்சனைகள் அனைத்துக்கும் விடைகள் இல்லை. இயற்பியலும் கணக்கியலும் பிரபஞ்சம் எப்படித் தொடங்கியது என்பதை நமக்குச் சொல்லலாம் என்றாலும், அவற்றால் மனித நடத்தையைக் கணிக்க முடியாது. ஏனென்றால் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய சமன்பாடுகள் நிறைய்ய இருக்கின்றன. மனிதர்களைச் சரிக்கட்டுவது எது என்று புரிந்து கொள்வதில் மற்ற எவரையும் விட நான் சிறந்தவன் அல்லன், முக்கியமாகப் பெண்களை.
இயற்பியலில் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் மனிதகுலம் புரிந்து கொள்ளும் நாள் என்று ஒன்று என்றாவது வரும் என்று எண்ணுகிறீர்களா? – கார்ஸ்டன் குர்ஸ், பாட் ஹோனஃப், ஜெர்மனி
அப்படியேதும் நடந்திடாது என்று நம்புகிறேன். எனக்கு வேலையில்லாமல் போய்விடப் போகிறது.