முஹம்மது யூசுஃப்
“பெர்த்டே அதுவுமா ஆஃபிஸ்க்கு எதுக்குடா வரச் சொல்லுற…”
“நீ வா, ஒரு கிஃப்ட் வச்சிருக்கேன். பார்த்திட்டு அப்புறமா சாப்பிட போலாம்”
“பார்ட்டி நடக்கிற இடத்துக்கு கொண்டு வந்து கொடுக்க வேண்டியது தான”
“அதை எடுத்திட்டு எல்லாம் வர முடியாது, நீ தான் வந்து பார்க்கனும்…வா”
வேறு வழியின்றி காதலன் அபுவின் தொந்தரவு தாளாமல் சௌம்யா தனது பிறந்தநாளைக் கொண்டாட பார்ட்டி ஹால் செல்லும் முன் நேராக அவன் அலுவலகத்திற்குச் சென்றாள். எண் ஏழு போல இருந்தது அந்த அலுவலகக் கட்டிடம்.
“மேடம் கூப்பிட்டா வர மாட்டீங்களோ..” என்றபடி அலுவலக வாசலில் வந்து வரவேற்றான். அபு.
சப்பட்டையாக சதுரவடிவில் மலை ஒரு காலமும் இருக்காது என்பது எத்தனை நிதர்சனமான உண்மையோ அத்தனை உண்மை சௌம்யா பேரழகி என்பதும். வெள்ளை உடையில் இன்னும் அழகாக காட்சியளித்தாள்.
ஞாயிறு விடுமுறை நாளுக்கான சோம்பலுடன் அலுவலகம் தூங்கி வழிந்தது. சொற்பமான ஆட்கள் மட்டுமே கண்ணில் பட, காரிடர் தாண்டி யாருமில்லாத தனது தனி ரிசெர்ச் அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் அபு.
அறை அதீதமான குளிரில் சில்லென்றிருந்தது. சுற்றிலும் பெரிய அளவிலான டிவி திரைகள் பின்னப்பட்ட அறையில் சிறு சிறு கறுத்த பாம்புகள் போல கேபிள் வயர்கள் தரை முழுக்க ஊர்ந்து செல்ல டபுள் எக்ஸெல் சைஸ்ஸில் பருமனான கம்யூட்டர்கள் கார்பெட் தரையில் சகல சௌபாக்கியத்துடன் அகலமாய் காலூன்றி நின்றிருந்தன.
லண்டனை தலைமை அலுவலகமாகக் கொண்ட சென்னை மல்டி நேஷனல் நிறுவனத்திற்கான அத்தனை ஜாடைகளையும் அந்த இடம் அணிந்திருந்தது. கூடவே பிளட் சாம்பிள் எடுக்கும் கருவிகளும் தன் பங்கிற்கு மிரட்டியபடி அறையைச் சுற்றி நின்றிருந்தன.
நிறைய சிதம்பர ரகசியங்களை ஊமைமொழியில் பேசியது அந்த அறை.
ஏதேனின் தோட்டத்தில் சிலர் ஆதமைத்தேடி அலைகின்றனர். சிலர் ஏவாள். சிலருக்கு ஆப்பிள். சிலருக்கு காடு. அதே காட்டில் பாம்பைத் தேடி அலையும் சமூகமும் உண்டு. அதே காட்டைப் பற்றிய சாஃப்ட்வேர் எழுதுபவனாக இருந்தான் அபு.
“என்னடா சுத்தி மெசினா இருக்கு….? தனியாத்தான் உக்காந்திருப்பியா, பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல”
“D.N.A. டெஸ்ட் பத்தியே அதிகம் படிக்கிற பயோ டெக்னாலஜியும் கூடவே கம்யூட்டர் சாஃப்ட்வேரும் படிச்சவன் வேற எப்படி இருக்க முடியுங்கிற. நீங்க தான காதலி சார் இந்த வேலை வாங்கி கொடுத்தீங்க…”
“வேலை வாங்கி கொடுத்தீங்கன்னு சொன்னா பத்தாது தம்பி, கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கனும்”
“கட்டிப்புடிச்சி ஆசிர்வாதம் வாங்கனும்னா சொல்லு நான் ரெடி”
“நினைச்சேன் , என்னடா தம்பி லீவு நாள் அதுவுமா நம்மளை ஆபிஸ் வரச் சொல்லுறானேன்னு. உங்க திட்டம் கட்டிப்புடிக்கிறது மட்டும் தானா சார் இல்ல இன்னும் வேற ஏதாவது இருக்கா…பார்ட்டிக்கு போகனும் தெரியும்ல”
“ஆளப்பாரு. இன்னைக்கு ஆபிஸ்க்கு நமக்கு மேல இருக்கிற பெரிய தலக்கட்டு நாலு சீனியர் ரிசெர்சரும் வரமாட்டாங்கன்னு கன்பார்ம் ஆனதும் தான் உன்னை வரச் சொன்னேன். மத்த நாள்ல இப்படி செக் பண்ண முடியாது.”
“டேய் தடியா, இதுவரை கட்டிப்பிடிச்சி முத்தம் கொடுத்ததை தவிர வேற ஒன்னுமே செய்யலையேடா.. அதுக்குள்ள என்ன செக் பண்ணப் போற”
“யேய்…..சீரியசா பேசு. நானே எப்போடா இது மாதிரி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு காத்திருந்து உன்ன வர வச்சிருக்கேன். காமெடி பண்ணிட்டு இருக்காத. மத்த நாள்ல இந்த ரூமுக்குள்ள வேற யாரும் வர முடியாது”
“சரிங்க சார், சொல்லுங்க என்ன செய்யனும்..?”
“இந்த சேர்ல உக்கார், இந்த மெசின் முன்னாடி முகம் தெரியுற மாதிரி”
“என்னது இது..?”
“இப்போதைக்கு பெரிய மொபைல் போன்னு வச்சிக்க.” ஹெவன் “வீடியோ கேம் விளையாடலாம்”
திடுக்கிட்டு சற்று சாய்ந்து அமர்ந்தவள், ஒரு நிமிடம் பெருமூச்சு விட்டு கண் மூடித் திறந்து “லூசாடா நீ, இல்ல உண்மையிலே தெரியாமத்தான் கேக்கிறேன் லூசா நீ…? பார்ட்டி ஹாலுக்கு போக இருந்த என்னையும் போக விடாம நீயும் வராம, இங்க வரச்சொல்லி கேம் விளையாடுவோம்ங்கிறியே லூசா நீ….?”
“என்ன கேம்னு பாரு,அப்புறமா பேசு. இதை விளையாட டாலர்ல செலவு பண்ணனும். கிஃப்டா தரலாம்ன்னு கூப்பிட்டா, சரி இந்த வேலை வாங்கிக் கொடுத்தது நீ தான, லவ்வரு என்ன வேலை பாக்கிறான்னு தெரிஞ்சிக்க ஆசை இல்லையா”
“அபு….விளையாடுற நேரமாடா இது. பிளீஸ் புரிஞ்சிக்கோயேன்”
“எனக்காக ஒரு அரை மணி நேரம் ஸ்பென் பண்ண மாட்டியா” என்றதும்
அமைதியானவள் “ சரி சொல்லு என்ன செய்யனும்”
“இந்த ஸ்கிரீன்ல கை நாட்டு வைக்கிற மாதிரி பெருவிரலைக் காட்டு”
“எதுக்கு….?”
“ஷ்ஷ்…பத்திரிக்கை ரிப்போர்ட்டர லவ் பண்ணுனா கேள்வியா கேக்குறாயா….?”
“சரி ..சரி பிறந்த நாள் அதுவுமா சண்டை போட வேண்டாம். என்ன செய்யனும் சொல்லு..?”
“பெருவிரல் தம்ப் பிரஸ் பண்ணனும்”
“அப்படி செஞ்சா..?”
“கைநாட்டு போட்டா அதுல வளையம் வளையமா நடுவுல இருந்து கிளம்பி அப்படியே பெருசாயிட்டே போகும் தெரியுமா”
“புரியல”
ஒரு வெள்ளைத் தாளில் கைநாட்டு இடுவது போல சௌம்யாவின் பெருவிரலில் மைதடவி அழுத்தி எடுத்துக்காட்டியதும் நடுவில் இருந்து வளையம் வளையமாகப் பெரிதாக விரிவதைக்கண்டு “ஆமா” என்றவளிடம்
“இது மாதிரி பெரிய மரத்தை அறுத்தால் அதுலயும் இப்படி வளையம் வளையமாத்தான் இருக்கும்”
“அதை இப்போ எங்க போய்ப் பாக்க”
“மர அறுவை மில்லுல பார்க்கலாம். சரி, கறிக்கடைக்கு போனதில்லையா. கறி வெட்ட வச்சிருக்கிற பெரியமரத்தடியோட நடுவுல இருந்து வளையம் வளையமாத்தான் இந்த விரல் ரேகை மாதிரி போகும்”
“நான் ஏன் கறிக்கடைக்கு போகப்போறேன்.”
“சுத்தம், ரிப்போர்ட்டருக்கு எல்லாத்துக்கும் ஆதாரம் காட்டனும், பொறு” என்றவன் தனது முன்பிருந்த கம்ப்யூட்டர் இண்டர்னெட்டில் அதைப்போன்ற படத்தை எடுத்துக் காண்பித்ததும்
“ஆங்,, இப்போ புரியுது”
“ஒகே …ஹெவன் வீடியோ கேம் ஆரம்பிக்கும் போது ஒருத்தரோட பேரு, மெயில் ஐடி, அவுங்க பிறந்த ஊரு, பிறந்த நாள், போக விரும்பும் நாடுன்னு ஒவ்வொரு ஸ்டேஜா கேள்வி கேட்டுத்தான் அடுத்த அடுத்த ஸ்டேஜ்க்கு கொண்டு போகும். அஞ்சாவது ஸ்டேஜ்ல தான் கேம் விளையாடுறவங்களோட “ தம்ப் “ கேக்கும். நாம அஞ்சாவது ஸ்டேஜ்ல இருந்தே விளையாடலாம். ஸ்கிரீன் முன்னாடி பெரு விரலைக்காட்டு.”
சௌம்யா பெருவிரலைக் காட்டியதும் ஸ்கிரீன் ஸ்கேன் செய்யத் துவங்கியது.
“இப்போ உன் விரல் வளையத்துக்கு மேட்ச் ஆகுற மரம் எது, நீங்க இறங்க வேண்டிய இடம் எதுன்னு சாஃப்ட்வேர் சொல்லும். வெயிட் …உனக்கான மரம் ’குங்கிலியம்’னு காட்டுது. பொறு இப்போ உனக்கான இடம் எதுன்னு சொல்லட்டும்..”
“ஒவ்வொரு மரத்துலயும் வேற வேற டைப் வளையம் இருக்குமா என்ன. அதுவும் ஒவ்வொரு மனுசனுக்கு மேட்ச் ஆகிற மாதிரி..?”
“உனக்கு ஒரு கிளி கதை சொல்லட்டா..?”
“ஷ்ஷ்…ம்ம் சொல்லு”
“காணிக்காரன் நாட்டுப்புறப்பாட்டு இது”
“மலையகத்து அரசன் ஒருத்தன் சுவையான சமையல் சாப்பிடனும்ன்னு நினச்சி ஏழு பைங்கிளிகளை அனுப்பி பயிர்த்தொழில் பத்தி தெரிஞ்சிட்டு வரச்சொல்லி கிளிகளை அனுப்புனானாம். அது வந்து சொன்னதும் பறையர்களை அழைச்சி பயிரிடச் சொன்னானாம்.
விளைஞ்ச பயிர்களை என்ன செய்யன்னு தெரியாம அதே ஏழு கிளிகளை அனுப்பி சமையலை பத்தி தெரிஞ்சிட்டு வரச்சொல்லி பறையர் மனைவிகளை வச்சி சமைக்க சொன்னானாம். அவர்களும் 18 வகை உணவை சமைச்சி எடுத்திட்டு வந்து கொடுத்தாங்களாம்.
அரசன் சந்தோசமா சாப்பிட்டு கைகழுவும் போது கணையாழி (மோதிரம்) கை நழுவி மண்ணுல புதைஞ்சி போச்சு. கடைசி வரை யார் தேடியும் கிடைக்கலை.
இதை அறிஞ்ச சிவனும் பார்வதியும் அந்தக் கணையாழி விழுந்த இடத்துல விலைமதிக்க முடியாத குங்கிலியம், சந்தனம், மூங்கில் மரங்களை விளையச் செஞ்சாங்களாம். அதனால காணிக்காரங்களுக்கு இந்த மூணு மரமும் புனிதம். அப்படின்னு காணிக்காரன் கதை ஒன்னு இருக்கு. இது மாதிரி ஒவ்வொரு பழங்குடிக்கும் சில மரங்கள் புனிதம். அவுங்களுக்கும் சில வாய் மொழிக் கதைகள் இருக்கு”
“லவ்வர கூட்டி வச்சு பேசுற பேச்சாடா இதெல்லாம், ஹும்…தலையெழுத்து …சரி சாஃப்ட்வேர் என்ன செய்யும் அத சொல்லு. இது போரிங்” என்றவளிடம்
“ உன்னுடைய ஆதி நிலத்துல உன்னை இறக்கி விடுவாங்க. பஃப்ஜி கேம் மாதிரி தான் இதுவும். அதனால உலகத்துல உன்னை மாதிரியே அதே பழங்குடி ஆளுங்க விளையாடிட்டு இருந்தா அவுங்களை உன்னோட லிங்க் பண்ணும், அவுங்க கூட சேர்ந்துக்கலாம். இல்ல தனியாவே விளையாடலாம். அடுத்த ஸ்டேஜ்ல உன்னோட கண்ணை ஸ்கேன் செய்யும். உன் முகச்சாயலுக்கு பொருந்துற மாதிரி இருக்கிற துணை வேட்டை மிருகம், போர்க்கருவி எல்லாம் கொடுக்கும். உன்னோட சொந்த நிலத்துக்கு வந்த எதிரி ஆட்கள் உன்னை கொல்ல பார்ப்பாங்க. அவுங்களை அழிச்சி எல்லாம் தாண்டி அடுத்து அடுத்துன்னு போகனும். எக்ஸாம்பிளுக்கு, உன்னை முதல்ல ஹங்கேரி நாட்டுல இறக்கிவிட்டா அது அங்க இருந்து ரஷ்யாவோட வோல்காரிவர் வந்து அங்க இருந்து மங்கோலியா போய் அது திபேத் நேப்பாள் கடந்து கிழக்கு தொடர்ச்சி மலை வழியா தஞ்சாவூர் வந்து சேரும். தஞ்சாவூருல இருந்து யாழ்ப்பாணம் வழியா திரிகோணமலை அப்புறம் அங்க இருந்து கண்டிக்கு பக்கத்துல இருக்கிற பச்சைதண்ணி மாரியம்மன் கோவில்ன்னு ஒரு இடத்துக்கு கொண்டு போய் ஹட்டன் சமவெளிக்கு கொண்டு வந்து சேர்க்கும். அங்க இருந்து உனக்கான ஹெவன் தேடிப் போகலாம்.”
“அட லூசு… ஹெவன் போறதுக்கு எதுக்கு இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த கேம் விளையாடனும் ஒரு ஹாஃப் அடிச்சா போதுமே ..சரி..சரி மொறைக்காத, இதை விளையாடுறதால சாஃப்ட்வேர் தயாரிக்கிற உங்க கம்பெனிக்கு என்ன லாபம். அதுவும் இவ்வளவு பெரிய ரிசெர்ச் செண்டர் எல்லாம் வச்சி செய்றது சுத்த முட்டாள்தனம் மாதிரி தெரியுதே”
“பத்திரிக்கை ரிப்போர்டர்ன்னு தான் பேரு ஒரு விசயத்தை கெஸ் பண்ணத் தெரியலையே..வெரிபேட்”
“ சரி,சொல்லுடா… அனத்தாத”
“உங்களுக்கே தெரியாம உங்க பயோமெட்ரிக் (கைவிரல்,கண்) எல்லாம் அவன் திருடிட்டு இருக்காங்கன்னு தெரியலையா. இன்னும் சுலபமா சிலர் மொபைல் ஓபன் பண்ணவே முகம் (கண்), கை விரல்னு தனக்கான எல்லாத்தையும் கொடுத்திடுறாங்க. இது அதுலே ஒரு அட்வான்ஸ் ஸ்டேஜ். எல்லா டேட்டாவையும் மல்டிபில் யூஸ் செய்யலாம்.”
“அடப்பாவிகளா..ஆமா இது ஏன் கிஃப்ட் வவுச்சர் எல்லாம் கொடுக்குறீங்க..”
“கேம்ல ஸ்டேஜ் கூடகூட விளையாடுறவங்களோட பிளட் குருப், பிளட் சாம்பிள் வரை எல்லாத்தையும் எடுத்திருவாங்க. 8 வது ஸ்டேஜ் தாண்டி 1000 ருவா கிஃப்ட் வவுச்சர் கொடுத்து அடுத்த ஸ்டேஜ் போகனும்ன்னா ஒரே ஒரு பிளட் சாம்பிள் மொபைல் ஸ்கிரீன் முன்னாடி காட்டுன்னு சொல்லும், விளையாடுற கிரேஸ்ல அதையும் மக்கள் செஞ்சிருவாங்க. லண்டன்ல உக்காந்துகிட்டு ஒவ்வொரு நாட்டுலயும், கேம்ங்கிற பேருல D.N.A ancestry survey tracing ன்னு மூதாதையர்கள் சர்வே செஞ்சிட்டு இருக்குது இந்தசாஃப்ட்வேர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஆட்களை அனுப்பி செய்றது கஷ்டம். இது ரொம்ப ஈசியான மெத்தட். செலவும் கம்மி. யாரும் யாரையும் கம்ப்ளன்ட் பண்ணவும் முடியாது”
“அடப்பாவி, அப்போ நீயும் இதுக்கு உடந்தையா. அடுத்த வாரமே ஒரு ஷாக் ரிப்போர்ட்ன்னு ரெடி பண்ணிற வேண்டியதுதான் உங்களை எல்லாம் போட்டு கொடுக்க”
“நீயும் தான் உடந்தை. நீ தான வேலை வாங்கித் தந்த. இதெல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது. இந்த கேம் எப்போவோ கண்டுபிடிச்சாச்சு. என்னோட வேலை, சில நாடுகள்ல இந்த சாஃப்ட்வேரை அங்க உள்ள நெட்வொர்க் பிளாக் பண்ணும். அதை உடைக்கிறதுதான் இந்த ஹேக்கரோடவேலை. அப்படியே சாஃப்ட்வேர் கிராக் ஆகாம பார்த்துக்கனும். இதுக்கே குதிக்கிற உலகம் முழுக்க பல சாஃப்ட்வேர் மூலமா, வீடியோகேம் மூலமா மதத்தை சின்னகுழந்தைங்க கிட்டபரப்பிட்டு இருங்காங்க யுரோப்கன்ட்ரீஸ். அதுக்கு முன்னாடி இதெல்லாம் ஒன்னுமேயில்ல”
“இருக்கிறது பத்தாதுன்னு இன்னும் நாட்டை குட்டிசுவரா ஆக்கிருவீங்க போல இருக்கே”
“சரி விடு, பெர்த்டே கிஃப்ட்ன்னு சொன்னேனே இதுதான் அது, மெயின்ஸ்டேஜ் சிலது இருக்கு அதை விளையாடி பார்க்கலாம். உன் பெருவிரல் ரிப்போர்ட் என்ன சொல்லுது பார்ப்போம்”
“விளையாடனுமா அபு” என்று விருப்பமின்றி சௌம்யா அவனைப்பார்க்க
“இவ்வளவு கம்பல் பண்ணுறேன் ஒரு தடவை விளையாடித்தான் பாரேன். பயப்படாத உன்னோட டேட்டாவ கேம் முடிஞ்சதும் டெலிட் செஞ்சிரலாம். ஒரு தடவை கேமைப்பாரு அசந்திருவ….இந்த பெரிய ஸ்கிரீன்ல பாரு அப்போதான் செமையா இருக்கும். டைம்மெசின் மாதிரி இது”
“என்ன நக்கலா…”
“அட சீரியஸா தான் சொல்றேன். எல்லார்கிட்டயும் ஒரு டைம்மெசின் இருக்கு. யூஸ் பண்ண கொஞ்சம் புத்தி வேணும். பயோடெக்னாலஜி படிச்சிட்டு சாப்ட்வேர் கம்பெனியில வேலை செய்ற எனக்கு பிறந்த நாளைக்கு கவிதை எல்லாம் எழுதித் தர தெரியாது…”
“ம்ம்”
“என்ன ம்ம்… ஒவ்வொருத்தரோட இரத்தம் தான் அவுங்களோட டைம் மிசின். அடப்பாவத்த உன்னோட இடம்னு துருக்கி அனடோலியா பகுதியை காட்டுது. Tengri tribe list வருது. ஆள் செகப்பா இருக்கே அப்போவே நினைச்சேன் நீ கிழக்கு தொடர்ச்சி மலை வகையறான்னு. அனடோலியாவுல ரொம்ப பேரு கூட சண்டை போடனும், பொறு கொஞ்சம் ஸ்கிப் செஞ்சு இந்தியால நீ எங்க வந்து சேருரன்னு பார்ப்போம்.“ என்று கூறி சில கமென்ட்களை அடிக்க சற்று நேரத்தில் பெரிய திரையில் அருணாச்சல பிரதேசத்தின் ஜிரோ பள்ளத்தாக்கு (Ziro Valley) திரையில் தோன்ற ஆரம்பித்தது.”
“பார்க்கவே அழகா இருக்கடா, என்ன இடம் இது”
“மொதல்ல ஸ்க்ரீன பாரு, அப்பறம் சொல்றேன்”
திரையில்
a g
a f`3 s t
a f b`1 b`3
a x g
f f`1 f`3 என மனித இனம் விஞ்ஞானமாய் பரவி நிற்க
சௌம்யாவின் விரல் ரேகை, காலத்தின் பின்னோக்கி நகரத் துவங்கியது
Homo Erectus, Neanderthal, Siberian Denisovans, Homo Sapiens என்று வகை பிரியும்போது ஆளரவமற்ற வழிப்பாதைகளில் காட்டு வெண்பூசணிப்பூவாய் பூத்திருக்க, வளைந்த முதுகுடன் நீண்ட “கூ” போல கால்நீட்டி அமர்ந்திருந்த மலை முகடு ஒன்றின் மீது அந்த வனத்தில் உள்ள மொத்த மிருகங்களின் ஒற்றை அடையாளமாய் இருந்தாள் அவள்
“வாவ் such a beautiful lady…. யாருஇதுஅபு…?”
“உன்னுடைய ஆதி தாய்குடியைச் சேர்ந்த பெண். ஸ்கிரீன்ல கண்ணைக் காட்டு இப்போ”
என்றதும் சற்று ஆர்வம் வந்தவளாய் சௌம்யா கண்ணைக்காட்ட, அவளின் கண்களை ஸ்கேன் செய்த சாஃப்ட்வேர் Y DNA , m+DNA, என்று ஒரு சுற்று சுற்றி விட்டு FIRST ON THE SOIL (PRIBUMI) என்ற அட்டவணையில் சௌம்யாவின் கண்களை விட்டு அலசிக் கொண்டிருக்க ஆச்சர்யத்துடன் அதை பார்க்கத் துவங்கினாள் அவள்.
ஐந்து நிமிடம் கழித்து தாடை, நிறம், மூக்கு, கண்கள் என சட் சட் எனும் கட் சாட்கள் மூலம் சௌம்யாவின் ஆதி குடியின் மொத்த அடையாளம் திரையில் தோன்ற ஆரம்பித்தது.
ABOTHANI
ABU TANI (FATHER OF THE HUMAN)
TANI TRIBES – என்ற செய்தியுடன் காட்டு மலையகப்பெண் டார்ஜிலிங் மலை பிரதேசத்தில் குதிரையில் ராட்சச வேகத்துடன் வர அவள் தலைக்கு மேல் பொன்னாங்கழுகு (Golden Eagle) எனும் கழுகு அதை விட வேகத்தில் பறந்து வந்து அவள் தோளில் அமர்ந்து கொண்டது. அவள் பின்னாடியே வேட்டை நாய் ஒன்று வந்து கொண்டிருந்தது. தசைக்கட்டமைப்பு, மஞ்சள் நிறம், சப்பைமூக்கு, சின்னக்கண்கள், உயர்ந்த கன்ன எலும்புகள் முதலியவை என மங்கோலிய இனக் குழுமத்தின் அடையாளங்களில் சிலவற்றை அவை காட்டியது. குதிரையை செலுத்தியவளாக அவள் மலையேறிக் கொண்டிருந்தாள்.
“முகர்ந்து பார்க்கும் மிருகங்களின் காதுகளின் லேசான அசைவுகளைப் பார்த்ததுண்டா. குதிரையைப் பார்” என்ற அபு, ”tani ங்கிற பழங்குடியில இருந்து வந்தவள் நீ” என்றான் சௌம்யாவை பார்த்தபடி.
சௌம்யா, பனிப்பிரதேச உடை அணிந்திருந்த, சிரித்தபடி மலை முகட்டில் நிற்கும் அந்தப் பெண்ணையும் அவள் தோளில் நின்றிருந்த முரட்டுக்கழுகையும் பார்த்துக் கொண்டே இருந்தவள் “தமிழ் நாட்டுல எங்கன்னு காட்டுமாடா..” என்றாள் ஆர்வத்துடன்.
“ஏன் காட்டாது…வெயிட், கேம் விளையாடாம ஸ்கிப் செய்ய அண்ணனால மட்டும் தான் முடியும்.” என்று சில கமென்ட்களைத் தட்ட “ Lhobhas – Cho-bhas ( south people) “ என்று அது இன்னும் பின்னோக்கிச் செல்லத் துவங்கியது.
“கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம்
சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும்
எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம்
கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம்
கொங்கணம் துளுவம் குடகம் குன்றம்
என்பன குட பால் இருபுறச் சையத்து
உடனுறைபு பழகும் தமிழ்த் திரிநிலங்களும்
முடியுடை மூவரும் இடுநில ஆட்சி
அரசு மேம்பட்ட குறுநிலக் குடிகள்
பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த
பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும்” என்ற தமிழ் வரிகளை கண்ட சௌம்யா.. “என்னடா தமிழ்ல எல்லாம் பிலிம் காட்டுறீங்க” என்றாள் ஆச்சர்யத்துடன்.
“எல்லாம் காசு. சாஃப்ட்வேர் எல்லா மொழியும் பேசும். பொறு ஏதோ ஒரு மலையை காட்டுது தமிழ் நாட்டுல” என்றபடி உற்று நோக்கினான்.
அகன்ற திரையில் திருச்சி –புதுக்கோட்டை ஹைவேயை காட்டியபடி மலை கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகிக் கொண்டிருந்தது.
“நார்த்தா மலை”
திசை எங்கும் மேகங்களாய்ப் பூத்திருக்க சூரியன் இல்லாத மலட்டு வானத்தையே பார்த்தபடி நின்றிருந்தது நார்த்தாமலை.
“என்னடா இது, இதெல்லாம் உண்மையா, இன்னும் ஸ்கிப் பண்ணு” என்று சௌம்யா கேட்டதும்
“ரகசியத்தின் வாசல் எப்போதும் திறந்தே கிடக்கிறது. வாசல் வரை செல்லும் பாதையைத்தான் தேடி அலைய வேண்டியுள்ளது” என்றவன் சிரித்தபடி சில கமென்ட் அடிக்க, ருஹுனு ரட்ட (RUHUNU RATA ) என்று திரிகோண மலைக்குச் சற்றுத் தள்ளி சென்று இலங்கையை அது காட்ட “தல சுத்துது, இப்போ தமிழ் நாட்டுல நான் எந்த பழங்குடின்னு காட்டுமா..?”
“ம்.. அதுக்கு பிளட் சாம்பிள் கொடுக்கனும். பிறந்த நாள் அதுவுமா அபு ரத்த காவு வாங்கிட்டான்னு சொல்லிட்டு திரிவ, இன்னொரு நாள் செய்யலாம் அதை”
“எங்க உனக்கு செக் பண்ணி விளையாடு” என்று சௌம்யா கூறியதும் அபு இதுவரை விளையாடியதை டெலிட் செய்து விட்டு அவன் பெருவிரலையும் முகத்தையும் காட்ட
சற்று நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பாகத்தை காட்டி அதனுள் வில் அம்புடன் நின்றிருந்த கறுத்த வன சுந்தரி ஒருத்தியைக் காட்டியது திரை.
“யாருடா இது அபு”என்றவளிடம்
“அவளே சொல்லுவா பாரு” என்றான் சிரித்தபடி
அடர் வனத்தையே பார்த்துக்கொண்டு இருந்த அவள் திடீரென “ஒயா ( Oya)” என்று கணீர் குரல் கொடுக்க மொத்தக்காடும் “ஒயா” என்று பதில் அளித்தது.
அடர்காட்டின் எதிர்க்குரல் பரவத் துவங்க மற்றொரு திரையில் உலக வரைபடத்தில் அவளது வலதுபக்கம் இருந்த ஒரிசாவின் அடர்காட்டில் மலை மீது நின்றிருந்த கருமாண்டி ஒருவன் ’ஒயா’ எனும் வானின் அசரீரி கேட்டு தலைகுனிந்து ’ஒயா’ என்று சிரம் தாழ்த்தி வணங்கினான்.
உலக வரைபடத்தில் அவளது இடதுபக்கம் இருந்த நைஜீரிய காட்டின் யோருபு மதத்தின் மலையாண்டி வானின் அசிரிரி கேட்டு ’ஒயா லன்சா லன்சா( oya lansa.. lansa )’ என்று தலை வணங்கினான்.
அவள் பின்னாடி சலசலத்து ஓடிக்கொண்டிருந்த இலங்கையின் ஆறுகள் அனைத்தும் ’ஒயா ஒயா’ என்றபடி கடல் நோக்கி ஓடிக் கொண்டிருந்தன.
“என்னடா இது…?”என்ற சௌம்யாவிடம் “இது சும்மா டிரைலருதான் மொத்தமா ஒரு நாள் பாப்போம்” என்றவன் அவளை நெருங்கி அணைத்து முத்தமிட்டு கையை மேலே நகர்த்த.
“யே..யே …வெள்ளை சட்டை போட்டிருக்கேன், மேல கைய வச்சிராத மாட்டிக்குவோம். பார்ட்டிக்கு போகனும்” என்றவளைப் பேச விடாமல் அவளின் முகத்தை தன் முகத்தால் ஒரு மலை போல போர்த்திக் கொண்டான்.
கேம் விளையாடாமலே ஹெவன் வாசலை அவர்கள் இருவரும் தொடத் துவங்கி இருந்தார்கள்.
****
முஹம்மது யூசுஃப் – தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தற்போது பணியின் நிமித்தம் அபுதாபியில் வசித்து வருகிறார். இவர் கனவுப் ப்ரியன் என்கிற பெயரில் இரு சிறுகதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார். (கூழாங்கற்கள், சுமையா). அதனைத் தொடர்ந்து இவரது மூன்று நாவல்கள் வரிசையில் முதலிரண்டு மணல் பூத்த காடு, கடற்காகம் ஆகியன வெளிவந்துள்ளன. மூன்றாவதாக ‘தட்டப்பாறை’ எனும் நாவல் வெளிவரயிருக்கிறது. தொடர்புக்கு – usooff@gmail.com
புனைவிற்குள் கனவுப்பிரியன் கையாளும் தகவல் சாத்தியங்களில் ஒவ்வொரு முறையும் வியப்பளிக்கிறார். பெட்ரோமாஸ் லைட்டே தான் வேணுமா என்று ஒரு சிறுகதைக்குத் தலைப்பு வைத்துவிட்டு அதன் உள்ளே எலிமெண்ட் சோதனைகளை நிகழ்த்திக் காட்டுவார். கேமிங் துறைக்குள் உட்செலுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் தகவல் திரட்டு மற்றும் திருட்டு வேலைகளை ஜீன் தேடலில் கொண்டு வந்து இறக்கும் இந்த ஹெவன் கதை
வேகமானதும் விவேகமானதும் கூட.
நன்றி