ஜீவ கரிகாலன்
அசலின் மதிப்பு போலிகளின் வரவிற்குப் பின்னால்தான் தெரியும் என்பர். கலை உலகில் பிரசித்தி பெற்ற எந்த படைப்பையும் சந்தையில் உலவும் போலிகளைக் கொண்டு இன்னும் மதிப்பு வாங்கி தக்கதாகக் கருதுவார்கள். ஆனால் ‘போலி’ – சந்தைகளால் உருவாக்கப்படுபவை. சந்தை போலிகளை ‘மாற்று’ என உற்பத்தி செய்து புது பெயரிட்டும் அழைக்கும்.
அப்படி என்றால் ‘மாற்று’ என்பதே போலியானதா?
இல்லை ஒருபோதும் இல்லை
‘மாற்று’ என்பது உண்மையில் மதிப்பீடு தான். சொல்லப்போனால் மாற்று என்பதுதான் பரிணாமம் மாற்று என்பது தான் வளர்ச்சி. மாற்று என்பது மற்றொரு அசலும் கூட. மாற்று என்று சொல்லப்படும் போலிகள்தான் ‘மாற்று’ என்கிற கருத்திற்கு எதிரான ஒற்றைப்படைத் தன்மையான எதிர்ப்பை ஒரு அமைப்பில் வலுப்பெற வைக்கின்றன.
*
எழுத்தாளர் சி.மோகன் தவிர்த்து – இந்திய அளவில் தாக்கம் செலுத்திய ஒரு பெரும் ஆளுமைக்கு சொல்லிக்கொள்ளும்படியான அஞ்சலிக் கட்டுரைகள் என்று கூடவேண்டாம், அவர் மறைவு குறித்த சமூக ஊடகப் பதிவுகளே கூட தமிழில் இல்லை. தமிழ் நிலத்தோடும் தொடர்புடைய விவான் சுந்தரம் எனும் கலை ஆளுமை மேற்குலகின் தாக்கத்தில் வாழ்ந்தவர், இந்தியக் கலை மரபை எதிர்த்தவர், ஒரு பிராமணர் என்பதால் அவரை ஓவியராக ஏற்றுக்கொள்ளாத சிந்தனைக் குழாம் இருக்கத்தான் செய்யும்.
மக்களை முன்வைத்து 70களுக்குப் பின்னர் இந்தியா முழுக்க சிறு சிறு குழுக்களாய் பரவி வந்த முற்போக்கு கலை இலக்கிய உலகில். தனது வாழ்நாள் முழுதும் தமது கலை மற்றும் அரசியல் செயல்பாட்டை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தியும், அதை மக்களுக்கானதாகவும் சமரசமற்றும் முன்வைத்த அசலான கலைஞன் விவான் சுந்தரம்.
சமரசமற்ற என்றால் – தன்னை நேருவியனாக அடையாளப்படுத்திக் கொள்ளும் விவான் சுந்தரம். ஒரு பக்கம் இந்திராகாந்தி ‘பாரத் பவன்’ போன்ற இந்தியாவின் உலக அளவிலான கலாச்சார மையத்தை தொடங்கும் காலத்திலேயே, அரசின் கொடுங்கோண்மையை (நெருக்கடிகால அரசை) விமர்சித்தவர். அவ்வாறே சீக்கியப் படுகொலைக்கும் மும்பையில் நடந்த இசுலாமியர்கள் மீதான வன்கொடுமைகளுக்கும், பாபர் மசூதி இடிப்பிற்கும், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய எண்ணெய்க்கான யுத்தம் குறித்தும் என அதிகாரத்திற்கு எதிரான, நசுக்கப்படும் மக்களுக்கான கலையை சர்வதேச படைப்புலகின் காட்சிமொழியில் நிறுவி வந்தவர் சுந்தரம்.
இன்றைக்கு முற்போக்கு என்று தன்னை சொல்லிக்கொள்ளும் அநேக படைப்பாளர்களும் எடுக்கின்ற அரசியல் சார்பை தன் வாழ்நாளின் எந்த ஒரு காலத்திலும் எடுத்திராதவர் விவான் சுந்தரம். மேற்குலகின் சிந்தனையால் மட்டுமே இப்படியான அரசியல் சார்பை, தலைவனைத் தொழும் மரபைத் தாண்டி சுயத்தோடும் மக்கள் பக்கமும் நிற்க வைப்பதற்கு விவான் சுந்தரமால் முடிந்திருக்கிறது. அவரது காட்சிமொழியை பல காலங்களில் விமர்சித்தவர்கள், மறைமுகமாகவும் மெல்ல மெல்லவும் அந்த வடிவத்தை ஏற்றுக்கொண்டவர்களாகவும் வணிக பலன்களை ஈட்டுபவர்களாகவும் மாறியிருப்பதை கலையுலகில் காண இயலும்.
அசலான கலைஞனுக்கு யாளியின் ரெட் சல்யூட்