அந்தச் சிறுவன் மாடியில் விளையாடிக்கொண்டிருக்கிறான்
வீட்டிற்கு வெளியில் ஈனில் ஊர்தி வந்து நிற்கிறது
அதிலிருந்து ஓர் துணி சுற்றிய உடலை இறக்குகிறார்கள்
வீட்டிற்கு முன்னிருப்பவர்கள் முகங்களிலெல்லாம்
இறந்துபோனவனின் பற்றிய துக்கங்கள்
அந்தச் சிறிய வீட்டிற்குள் நடமாடிக்கொண்டிருந்த அந்த உடலை
கொண்டு செல்ல முடியவில்லை
மிகக்குறுகலான அவ்விடத்தில் மனிதர்கள் வாழ்வதே கடினம்
அதற்குள் ஒரு பிரேத்தை நுழைப்பது அவ்வளவு எளிதாக இல்லை
ஒரு வழியாய் அவரை உறைவிப்பானில் வைக்கிறார்கள்
மனைவியைக் கைத்தாங்கலாய்க் அவ்வுடலின் முன் கூட்டிச் செல்கிறார்கள்
உடல் மெலிந்து மனம் நொந்திருந்தவள் என்னங்க என்று
அழுதபோது கூடியிருந்தவர்களின் இதயங்கள் சிதறிக்கொண்டிருக்கின்றன
முகத்தைக் கண்டு கண்டு மனம் வெடித்து கதறுவதை நிறுத்தாமலிருக்கிறாள்
தெரிந்தவர்கள் கண்ணீர் மல்க ரோஜா மாலைகளை
கண்ணாடிப் பேழையின் மீது வைத்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள்
பூமாலையாய் அவ்விடம் நிறைந்தவண்ணமிருக்கிறது
அப்பாவைக் கடைசியாய்க் காட்ட அந்தச் சிறுவனைக் கூட்டிவர
போகிறார்கள்
எதற்கு கூப்பிடுகிறார்கள் என்று தெரியாமல்
அவன் வருகிறான்
அப்பாவைப் பார்க்கிறான்
அவனுக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை
எதுவும் பேசாமல் மரணம் புரியாமல் நிற்கிறான்
அழுதுகொண்டிருந்த அம்மாவைப் பார்த்தவன்
அழாதே என்று கூறுகிறான்
அப்பா இயேசுவிடம்தான் போயிருக்கிறார் அம்மா என்கிறான்
அப்புறம் அவனைக் கூட்டி போகிறார்கள்
அவரை மயானத்திற்கு கூட்டிச் செல்ல ஆயத்தமாகிறார்கள்
காத்திருந்த மரண ஊர்தியில் ஏற்றுகிறாகள்
அவர் போவதைப் பார்த்தவள் இறந்த சடம் போலாகிறாள்
அவளின் அந்தக் கடைசிக் கூக்குரல் அந்தத் தெருவையே உலுக்குகிறது
அந்த பூதவுடல் கண்களிலிருந்து மறைந்துகொண்டிருக்கிறது
பின் அங்கு நிலவிய அமைதியில் அப்பாவற்றுப்போன
அந்தச் சிறுவன் அது தெரியாமல் மாடியில் எப்பவும்போல்
கார்களையும் பைக்குகளையும் வாயில் சத்தம் செய்தபடி
வேடிக்கைகள் நிகழ்த்திக் காட்டும் வாழ்க்கையில்
ஓட்டிக்கொண்டு திரிகிறான் அடுத்தடுத்த கணங்களின்
விபரீதங்களுடன்.
அய்யப்ப மாதவன்
ஜோஸ் அன்றாயன் என்ற பெயர் இடம்பெறும் கவிதை ஒன்று கொஞ்சம் வருடங்கள் முன்பு உயிர் எழுத்தில் வாசித்த நினைவு, அய்யப்பமாதவன் அவர்களின் அந்த கவிதையை படித்துவிட்ட அந்த நொடி மனம் ஒருவித பதற்றத்தை அடைந்ததை இப்போது நினைவுபடுத்துகிறது இக்கவிதை. யாவரும்.காம் ஒரு இணைய இதழாக கிடைக்கப்பெற்றதில் பெரிதும் மகிழ்ச்சி. இணைந்திருப்பேன். நன்றி. 🙂