மவுனித்த சொற்களிலிருந்து பேசத் தொடங்குகிறது காதல்
நீர்மை ததும்பும் ஜீவநதிக்குள் விழிகள் கிளை பரப்ப
அந்தர மிதப்பில் சிறகுகளற்று பறக்க முயலுமென்
சிந்தையில் ஊறிய உன் நிழல்
என்னையே பின் தொடரும்
சூன்ய பிராந்தியத்தின் தொடக்க கோட்டில்
உயிர் நுனி சிலிர்த்து பூக்க
பிரபஞ்சம் தாண்டிய பிரபஞ்சமொன்றின்
வேலிகளில் கொடிவிடுகிறது முத்தப்பிரமாணங்கள்
உன்னிலேயே பயணித்து
உன்னிலேயே சஞ்சரிக்கும்
மென்மையான பகலொன்றில்
காதலின் குளிர்மை செதுக்கப்பட்டிருந்தது
துயரத்தின் சூட்சுமங்கள் அறிந்திராத
குழந்தையின் அழுகையாய்
மென்மையான சுடரொழுகும் குப்பி விளக்கொன்றின்
வெளிச்சத்தில் கவிதைகள்
இருள்மை கொண்டாடும் நெடிய நாட்களால்
நீயில்லாத நிகழ்காலத்தின்
படிமங்களிலும் உவமைகளிலும்
வனங்களில் மூண்டெழும் நெருப்பின் முகம்.
*—————————————————-*
ஒரு புள்ளியிலிருந்து
என்னை வரையத் தொடங்கும் தூரிகைகள்
துயர ரேகைகளில் மிரண்டு நசுங்குகிறது
புருவ விழிப்புக்களையும்
பெரு நிலக் களம் நடந்த கால்களையும்
துப்பாக்கியின் “டிகர்”படிந்த விரல்களின்
ஜீவ ரசத்தையும்
வர்ணங்கள் விழுங்கி மறைத்துக் கொண்டன
துயரக் கயிறுகளால் சுற்றப்பட்டு
மானுடம் வறண்ட வெளியில்
முகம் உதிர
ஆற்று நீரைத் தேடிச் செல்லும்
என்னுடல் துவாரங்களில் குரூரம் கொப்பளிக்கிறது
பல்வேறு கோணங்களிலெல்லாம்
நானென எனக்கு காட்சிப்படுத்தப்படும்
சுயமற்ற ஓர் உருவம்
வலியமுக்கி மாய்கிறது
துன்பச் சிலுவையோடு அசைவுறும்
காத்திருப்பு வாழ்வில்
மிலேச்சத்தனத்தின் நிழல்கள் படிய
சிறகுகள் தேடிச் செல்கிறது
மவுனித்த எனது சுயங்கள்.
– அகரமுதல்வன்