Saturday, November 16, 2024
Homeஇலக்கியம்அபுனைவுயாளி பேசுகிறது - 07 - Nicholas Roerich - ஒளிர்கின்ற அடரிருள்

யாளி பேசுகிறது – 07 – Nicholas Roerich – ஒளிர்கின்ற அடரிருள்

ஒளிர்கின்ற அடரிருள் – THE VANTAGE POINT

1934 ருஷ்யாவில் அப்போதைய அதிபர் ஸ்டாலின் கலை, கலாச்சாரம் சார்ந்த ஒரு புதிய நிலைபாட்டை எடுத்திருந்தார். நாட்டிலுள்ள அத்தனை ஓவியர்கள், சிற்பக் கலைஞர்கள், இசை, நாடகக் கலைஞர்கள் எழுத்தாளர்கள் மற்றும் இதர படைப்பாளிகள், கலைஞர்கள் என எல்லோரும் அரசு வகுத்துக் கொடுக்கும் தளத்தில் தான் படைப்புகளை உருவாக்க வேண்டும். அதையும் மீறிச் செயல்படுவோர் மற்றும் எதிர்ப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள், அதிலும் மரண தண்டனை வரை தரக் கூடும் என்ற சட்டத்தை பிரகடனப்படுத்தியிருந்தார். அரசால் நடைமுறைப் படுத்தப் பட்ட அந்த கொள்கை SOCIALIST REALISM என்ற கலைமரபாக போதிக்கப்பட்டது.

1935 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரும்பான்மையான மாகாணங்களில் ஓர் ருஷ்யக் கலைஞரின் எண்ணப்படி உருவான சட்டம் ஒன்று பெரும்பான்மையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் படி ஒவ்வொரு நாட்டின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட, தொன்மையான, பழைய நாகரிங்களை பாதுகாப்பதற்கான வரை வரைவுகளைத் தீட்டிய தீர்மானம் அது. இதன்படி போர்க்காலங்களில் செஞ்சிலுவை சங்கத்தின் செயல்பாட்டைப் போலே, ஒவ்வொரு நாட்டின் வரலாற்று மற்றும் நாகரிகச் சின்னங்கள் இருக்கும் இடங்களை பாதுகாத்திட”போரில்லா பகுதிகளை உருவாக்குவது” மற்றும் பாதுகாப்பதற்கான உறுதியை சட்டத்தை ஏற்றுக் கையெழுத்திடும் எல்லா அரசுகளும் நடமுறைப் படுத்த வேண்டும் என்கிற வரலாற்றுச் சிறப்பு மிக்க சட்டம் தான். அதன் பெயர் “ரோரிச் உடன்படிக்கை”(ROERICH PACT). ரோரிச் ருஷ்யாவின் தலைசிறந்த ஓவியர்களுள் முக்கியமானவர், மேலும் இவர் ஒரு அறிவியலாளராகவும், தொல்பொருள் நிபுணராகவும், அரசியல் செயற்பாட்டாளராகவும் பணியாற்றினார். மூன்றுமுறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வெறெந்த நாட்டினரையும் விட இந்தியர்களுக்கு ரோரிச் மிக நெருக்கமானவர். அவரது படைப்புகள் வழி இந்திய மற்றும் திபெத்திய தேசத்தின் மீப்பொருண்மை பொக்கிஷங்கள் உலகுக்கு தெரிவிக்கப் பட்டன.

3

***************
எனது நண்பரும் ஓவியருமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த ஓர் இரவில் தான் ரோரிச் எனும் கலைஞனைப் பற்றி அறிந்து கொண்டேன். ஒரு இரவில் அந்த நண்பரின் பயணங்கள் குறித்த எனது கேள்விகளுக்கு அவர் பதிலளித்துக் கொண்டிருந்த நேரம் அது. பல தேசங்கள் பற்றியும், முக்கியமான இடங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டு வந்த வேளையில், நான் அவரிடம் இமயம் பற்றி கேட்டேன். இமயம் பற்றிப் பேச ஆரம்பிக்கும் போதே விரிந்த அவர் கண்களில், அப்படிப்பட்ட பிரம்மாண்டத்தை ரோரிச் எனும் ஓவியன் தரிசித்திருக்கும் விதம் பற்றியும் கூறினார். ஒரு கடுமையான மலைப் பயணத்தில் வானம் தொடும் சிகரங்களாய் தோற்றமளிக்கும் இமயமலைப் பகுதியில் பார்த்த பல இடங்கள் ரோரிச் சுற்றித் திரிந்து வரைந்த ஓவியங்களின் நினைவோடு பகிர்ந்து கொண்டார்.

ஆல்டை எனும் சைபிரிய, கஜகஸ்தான் மற்றும் சீன எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் மலைத்தொடரை வரைந்திருக்கும் ரோரிச்சின் ஓவியம் மகத்தானது. காலை வேளையில் சூரியவொளி சிகரங்களில் படர்ந்திருக்கும் பொழுது அவை தங்கம் போல மின்னுவதால் இம்மலைத்தொடரை அங்கிருக்கும் பழங்குடியினர் தங்க மலைத்தொடர் என்று கூறி வந்துள்ளனர். ரோரிச்சின் இந்த லேண்ட்ஸ்கேப் மூலம் தான் மற்றவர்களால் இதன் பெயர் காரணத்தை உணர்ந்து கொள்ள முடிந்தது. இன்று ரோரிச்சின் நினைவாக இந்த மலைத்தொடரின் வழியே செல்லும் ஓர் பாதைக்கு ரோரிச்சின் பெயரே வைக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடப் பட வேண்டிய விசயம்.

2

அந்த பிரமிப்புடன் நிக்கோலஸ் ரோரிச்சின் ஓவியங்களை அனுகிடும் போது :
“ஒரு கலைஞனின் வாழ்வு தான் அவன் உலகிற்கு விட்டுச் செல்லும் செய்தி”

ரோரிச் 1874ல் ரஷ்யாவில் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார், 1893ல் ஓவியக்கலை பயின்ற பின் அவர் நாடக அரங்கிற்கு வடிவமைப்பாளராக பல வருடங்கள் தொழில் செய்து வந்திருக்கிறார். தனது ஓவியக்கலையில் கட்டிட வரைகலை பாணி மீது மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வந்திருக்கிறார். ரஷ்யாவின் புகழ்பெற்ற கோட்டைகள், மடாலயங்கள், சர்ச்சுகள் ஆகியனவற்றை மிகுந்த ஈடுபாட்டுடன் வரைந்து வந்தார். ஆரம்பத்தில் இவர் வரைந்த ருஷ்யாவின் உயர்ந்த கட்டடங்கள், ஆலயங்கள்(Mega Structures) ஆகியவற்றின் மீதிருந்த ஆர்வம் தான் மலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டு தொடர்ந்து இயங்கும் ஆர்வத்தை அளித்தது.

ஏற்கனவே தனது தந்தை வழியாக இந்தியப் பாரம்பரியத்தில் இருந்து வரும் ஆன்மீகத்தில் ஈர்ப்பு கொண்டிருந்த அவருக்கு, அவரது மனைவி ஹெலன் வழியாக கிழக்கு தேசங்களான பாரதம், சீனா, திபெத்திய நாடுகளின் மத நம்பிக்கைகள் மீது ஈடுபாடு ஏற்பட்டது. பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ள திபெத்திய பௌத்தக் கோயில் காலச்சக்கரம் எனும் தேவதைக்காக அற்பனிக்கப்பட்ட கோயில் ஒன்றிற்கு கண்ணாடி அலங்காரத்திற்கான வடிவமைப்பில்(stained glass work) ஈடுபடுடத் துவங்கும் பொழுது தான் அவரது உலக பயணம் உண்மையில் துவங்க ஆரம்பிக்கிறது. அதற்கு இந்த பௌத்தக் கோயில் மட்டுமல்லாமல் அவரது அரசியல் நிலைப்பாடும் முக்கியக் காரணமாகியது.

பின்லாந்து மற்றும் ருஷ்யக் கலைஞர்கள் ஒன்று கூடி ஆரம்பிக்கப்பட்ட WORLD OF ART இதழை நிறுவிய அமைப்பான “செர்கி டயாஜில்வ்”(sergei Diaghilev)-இல் உறுப்பினராகி, பின்னர் அதன் தலைவராக 1910-1916 வரை அதன் தலைவராக இருக்கிறார். 1917ல் போல்ஸ்விக் கட்சி நாட்டின் அத்தனை ஓவிய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, அவற்றை தன் விளம்பர, பிரச்சார நோக்கத்திற்க்காம மட்டுமே செயலாற்றப் பணித்தது. ஆரம்பத்தில் மாக்ஸிம் கார்கி போன்றோர்களுடன் இருந்த நட்பில் இருந்து விலக ஆரம்பித்தார். கம்யுனிஸப் புரட்சி கலைகளின் மீது காட்டும் அதிகாரத்தில் கடும் அதிருப்தி கொண்டார். கம்யுனிஸ ஆட்சியில் – தொன்மை, மாற்று அரசியல், பாலியல் கூறுகள்(EROTIC), அரூபம்(abstract)ஆகியவற்றை பிரதிபலிக்கும் படைப்புகள் மறுக்கப்பட்டதால், அவர் அரசியல் சார்ந்த நிலைப்பாடுகளில் மாற்றம் நிகழ வேண்டும் என்று விரும்பினார். அதுவே அவரை பௌத்தம் நோக்கி ஈர்ப்பதற்கு முக்கியக் காரணாமாய் அமைந்தது.

ரோரிச்சின் வாசகங்களின் ஒன்றான
“Where there is Peace, there is Culture;
Where there is Culture, there is Peace.”

இவ்வாசகம் அவர் அமைதியான கலாச்சாரத்தைக் குறித்த தேடல் அவருக்குள் ஆழமாக பொதிந்திருந்ததை நமக்குக் காட்டுகிறது.

ரஷ்யாவிலிருந்து தன் மனைவியுடன் கிளம்பிய அவர் முதலில் பின்லாந்திற்கும் பின்னர் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்தார், இறுதியாக லண்டனில் வந்து தங்கினார். இந்தக் காலத்தில் தான் ரபிந்திரநாத் தகூர் மற்றும் ஹச்.ஜீ.வெல்ஸ் ஆகியோரிடன் நட்பைப் பெற்றார், தன் வாழ்நாளில் அதற்குப் பிந்தைய காலத்தை இந்தியாவிலும், அமெரிக்காவிலும் , ஆல்டாய் மற்றும் இமயமலைப் பகுதியிலும் கழித்தார். குலு பள்ளத்தாக்கிலுள்ள மணலியில் தன் இறுதி நாட்களில் குடும்பத்தோடு வாழ்ந்தார். அவர் பயணங்களும், அவர் செயல்பாடுகளுமே அவர் தந்த மிகப் பெரிய பங்களிப்பு என்றாலும் அதை விட ஓவியனாய் மிக பிரம்மாண்ட படைப்புகளை உருவாக்கிய கலைஞன் தான் நிக்கோலஸ் ரோரிச்.

ரோரிச் தன் படைப்புகளைத் தாண்டியும் இவ்வுலகின் வரலாற்றில் மிக முக்கியமான சில பணிகளைச் செய்தவர்.

1. கலாச்சார மற்றும் வரலாற்றுப் படைப்புகளை பாதுகாக்கும் சின்னமாக ரோரிச்சின் சிந்தனை உலகின் பல தேசங்கள் ஏற்றுக் கொண்டது.

2. அவர் செய்த அகழ்ந்தாய்வுகள் மற்றும் அவ்வாராய்ச்சி தொடர்பாக எழுதிய சில புத்தகங்கள். எகிப்திய நாகரிகத்தினைக் காட்டிலும் மிகத் தொன்மையான ஷாம்பலா நகரத்தைத் தேடி ஆரம்பித்த அவரது ஆராய்ச்சிகள் முடிவுறாது போனாலும், அந்தப் புராணங்களின் தொன்மை உலகின் பழநாகரிகங்களுக்கு இணையானது என்று உலகம் ஏற்றுக் கொண்டது

3. ரஷ்யா , சீனா மற்றும் இதர ஆசிய நாடுகள் முழுமையாக திபெத்திய பௌத்தத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளை விட முன்னேறிய தேசங்களாக மாறும் என்று நம்பினார். அவரது செயல்பாடுகள் குறைந்தாலும், அவரது எழுத்துகள் அந்தப் பணியைச் செய்தன.

ஆனால் இந்தப் பணிகள் எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்த்து அவரது கலையுணர்வு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரது ஓவியங்கள் வாயிலாக நமக்குக் கிடைக்கும் உணர்வுகள் அவரது செயல்பாடுகள் மற்றும் கனவுகளுக்கு நெருக்கமாக நம்மைக் கூட்டிச் செல்கின்றன.

அவரது படைப்புகளை வைத்துப் பார்க்கும் பொழுது, இவரது ஆரம்ப காலத்தில் ருஷ்யாவின் கத்தீட்ரல்களுடைய கட்டுமானத்தையும் அதல் ஸ்டையின் கிளாஸ் வேலைகளை செய்து வந்த ரோரிச்சின் பங்களிப்பில் இவரது தனிச்சிறப்பு வாய்ந்த மலைகள் குறித்த ஓவியங்கள் வரை இருக்கும் இவரது பயணத்தின் செய்து பிரம்மாண்டமனது. இவர் வரைந்த மலைகளை ஆழ்ந்து ரசிக்கும் போது, மலைகளுக்கு உயிர் இருப்பதாகவே நம்பத் தோன்றும்.

உயிர்த் தன்மை என்பது என்ன? ஒரு உயிர் மற்றும் அதன் தன்மையை எவ்வாறு உணர்ந்து கொள்ள முடியும்? உயிரானது துடிப்பில் இருக்கும் போது தான் அது சாத்தியமாகிறது. துடிப்பு என்றால் அதன் இயக்கம் என்று இங்கே பொருள். மலைகள் எப்படி இயங்க முடியும் என்ற கேள்வி இங்கே எழுந்தால் என்ன பதில் சொல்வது? இவரது ஓவியங்களை நுகர்வு செய்யச் சொல்வது தான் இதற்குப் பொருத்தமான பதில். இணையத்தில் கிடைக்கும் எண்ணற்ற லேண்ட்ஸ்கேப் ஓவியங்களிலிருந்தும், டிஜிட்டல் நிழற்படங்களிலிருந்தும் கிடைக்காத உணர்வு இவரது படைப்புகளில் கிடைப்பதால் எத்தனை தனித்தன்மை வாய்ந்ததாக இவரது ஓவியங்கள் இருக்கின்றன? இப்படியான சில கேள்விகளை தனக்குத் தானாக எழுப்பிக் கொண்டு தான் இவரது ஓவியத்தில் இருந்து எழுந்துவரும் உணர்வுகளை நம் மொழி வழி சேர்த்து வைக்க முடியும்.

உயிர்த்தன்மை பற்றி நிக்கோலஸ் ரோரிச் எவ்வாறு சொல்கிறார் என்றால்:
//The great traditions of past and future, the high teaching which emanated from the eternal heights make it possible to approach the sacred spaces in cooperative understanding.//
பல படைப்புகளில் மலைகளுடன் இவர் உறையாடுவது போலவே தோன்றும். மேலும் மலைகளை மற்றொரு உலகத்திற்கு தொடர்பு கொள்ளும் சாத்தியமுள்ள பிரதேசமாக உணரத் தோன்றுகிறது. இதைத் தான் ரோரிச் ”eternal heights” என்று கூறுவதற்கான காரணமாக உணர்கிறேன். இவரது படைப்புகளையும் அப்படிப்பட்ட cooperative understandingஉடன் பார்க்க ஆரம்பித்தால் மயக்க நிலையினை விஞ்சிய(transcendence) கதவுகள் திறக்கப்படுகின்றன.

இந்த நேரத்தில் அந்த ஓவிய நண்பருடன் நடந்த ரோரிச் பற்றிய உரையாடலைப் பற்றியும் சொல்ல வேண்டும். சிறுவயது முதலே ஓவியத்தில் பரிச்சயமும், நாட்டமும் கொண்ட நபராக தன்னை வளர்த்துக் கொண்ட அந்நண்பர், ஓவியனாக் தன் ஆரம்ப கால வாழ்க்கையில் அவரது ஓவியங்களைப் பார்க்கும் பொழுது, “இவனென்ன சுத்தப் பைத்தியக்காரனாக இருப்பான் போல இருக்கே” என்று வெறும் மலைகளைப் பற்றிய ஓவியங்களாய் பார்த்து சலித்ததாக அவர் சொல்லியிருந்தார். அப்போது நவீன் ஓவியங்கள் மீதும், நவீன் பாணிகளில் நிறைய முயற்சிகள் செய்து கொண்டிருந்த வேளையில். இவ்வோவியங்களைப் பார்க்கும் பொழுது அவருக்கு அவை சாதாரணமான Landscape வேலையாக மட்டுமே தெரிந்தது, மேலும் fluorescent, aqua blue, பச்சை என பல வண்ணங்களில் ஒரே மலையினை வேறு வேறு கோணத்தில், வேறு வேறு வண்ணத்தில் ஒரு ஓவியன் வரைந்து வைத்திருக்கிறான் என்பதில் அதன் மேல் ஈர்ப்பில்லாமல் அவற்றை வரைந்தவன் “பைத்தியக்காரன்” என்று சொல்கிறார். இவை யாவுமே அவர் இமயத்திற்கு செல்லும் முன்னர் நடந்த கதை என்று நினைவில் கொள்ளுங்கள்.

ஆம், அதற்கு பின்னர் ஒருநாள் தான் நான் இமயமலை அனுபவம் பற்றி அவரிடம் கேட்கும் பொழுது அவர் கண்கள் விரிந்தது என்று சொன்னேனில்லையா? அவரே தான். தனது கைலாஷ் யாத்திரையில் தனது கண்கள் நம்ப முடியாத பல காட்சிகளைத் தந்திருக்கிறது, எந்த ஓவியனை “பைத்தியக்காரன்” என்று சொன்னாரோ, அந்தப் பைத்தியக்காரன் வரைந்த ஓவியத்தின் நிதர்சனத்தைக் கண்ட அவர், அடுத்தக் கட்டமாக ஆல்டய் மலைப்பாதை வரை சென்று வடக்கிலிருந்து தெற்காக ரோரிச் வரைந்த இமயத்தின் பகுதிகளை எல்லாம் பார்த்து வந்துவிட்டார்.

3

CALL OF THE SKY – 1930 போன்ற ஓவியத்தினை பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பு அம்மலை போன்ற பிரம்மாண்டமானது. மலையானது இந்த இருளில் எப்படித் தோற்றமளிக்க வேண்டும் என்கிற நேர்த்தி கித்தானின் வலது பக்கம் கீழாக வரையப்பட்டிருக்கும் மலைப்பகுதிகள் கரு நிறத்துடன் இருக்கின்றது, மின்னலின் கீற்றுகள் வந்திறங்கும் சிகரமோ அவ்வொளியில் fluorescent நிறத்தில் மாறுகிறது. இந்த தோற்றம் நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது, மலைச்சிகரத்தின் வடிவத்தினைப் போலவே மின்னல் கீற்றுகளின் தோற்றமும் இருப்பதையும் இங்கு கவனிக்கலாம். இங்கே கித்தானின் வலது ஒரத்தை ஒரு பார்வையாளன் நின்று கொண்டு பார்க்கும் முகட்டுப் புள்ளியாக கொள்ள வேண்டும். அவரது ஓவியத்தில் அவர் எங்கு நின்று வரைந்திருந்தாலும், பார்வையாளனுக்கு அனுமதித்திருக்கும் வாசலை சரியாக கவனித்து வர வேண்டும்.

மற்றொரு ஓவியத்தில் ஒரு நட்சத்திரம் வானில் இருந்து மலைப்பகுதியில் எங்கோ ஓர் பகுதியில் விழுந்து கொண்டிருப்பதைப் போலவும் அதை மற்றொரு முகட்டில் இருந்து அவர் பார்த்து கொண்டிருப்பது போலவும் வரைந்திருப்பார். இவரது நிறைய ஓவியங்களில் வரும் இமயமலைப் பகுதியின் இரவுகள் ஒன்றோடொன்று வேறுபட்டிருப்பதை இவரது ரசிகர்கள் உணர முடியும்.

மற்றொரு ஓவியத்தில் இரவு நேரத்தில் மலையானது கரிய நிறத்துடன் ஒரு பகுதியும், நட்சத்திரங்களின் ஒளிமிகுந்த பகுதியாக பெரும்பகுதி மலைகளும்  பிரகாசத்துடன் அமைந்திருக்கும். அவ்வோவியத்தில் நட்சத்திரம் விழும் காட்சியை ஒரு மலை முகட்டிலிர்ந்து தான் பார்ப்பது போல ரோரிச் வரைந்திருப்பார். அந்த ஓவியத்தில் அவர் அமர்ந்து பார்க்கும் மலைப்பகுதி மட்டும் கரிய நிறத்தில் இருளை உணர்த்தும். அந்த ஓவியத்தைப் பொருத்த மட்டும் அவர் அமர்ந்திருக்கும் பகுதி தான் முகட்டுப் புள்ளியாகிறது(VANTAGE POINT) அவ்வோவியத்தை பார்ப்பவர்களுக்கு அருகில் இருப்பதாய் தோற்றமளிக்கும் மலைப் பகுதியானது, இருளைக் காட்டுகிறது. தொலைவிலுள்ள மலைகள் எல்லாம் நட்சத்திரங்களின் ஒளியை பிரதிபலிக்கின்றன, மிகத் தொலைவில் தெரியும் மலையோ மிகப் பிரகாசமாய்  மிளிர்கிறது. இவ்விரண்டு ஓவியங்களே நான் சொன்ன உயிர்த்தன்மையைப் பற்றி உணர்ந்து கொள்ளப் போதுமானது.

4

//Haze was flaring, and behind it, at a great distance, the most powerful element was raging. Haze, glow, and heat lightning are the messengers of remote events. Northern lights or the Himalayan glow remind one of the accumulations which ears and eyes cannot perceive. It is the heart that can sense them, and it will beat with agitation and solemnity.//

ரோரிச் ஒரு முக்கியமான எழுத்தாளரும் கூட அவரது படைப்பான ALTAI-HIMALAYAS, SHAMBALA ,REALM OF LIGHT, FLAME IN CHALICE, HEART OF ASIA என்கிற கட்டுரைத் தொகுப்புகளும், ஒரு கவிதைத் தொகுப்பும் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகின. இன்றைய அறிவியலாளர்கள் அவரை ஏற்றுக் கொள்ளாமல், அவரது நம்பிக்கைகளை மீப்பொருண்மை என்றோ, கற்பனை என்றோ கூறினாலும், அவரும் ஓர் அறிவியலாளர் என்பதை மறந்து விடக் கூடாது. அமெரிக்காவில் பேரழிவு ஏற்படுத்திய மணல் புயலைத் தடுப்பதற்காக ஏற்பட்ட ஆராய்ச்சியைல் மங்கோலியா மற்றும் மஞ்சூரியப் பகுதியில் கிட்டதட்ட 300க்கும் மேற்பட்ட மண்ணரிப்பைத் தடுக்கக் கூடிய மரங்களின் விதைகளை பகுத்துப் பார்த்து சேகரித்துக் கொடுத்தவர் என்பதும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம்.

மலைகளை வைத்து அவர் வரைந்திருக்கும் படங்கள் மட்டும் 2000த்திற்கும் மேலே என்று சொல்லப் படுகிறது. பல மலைகளை அவர் ஒரே முகட்டில், ஒரே கோணத்தில் இருந்தாலும் அவை ஒரே தோற்றத்தை உங்களுக்குத் தராது என்று சொல்லலாம். ஏனென்றால் இந்த ஓவியங்களை நுகரும் பொழுது நீங்கள் transcendental stateக்குள் நுழைந்து விடுகிறீர்கள். அப்பொழுது வாழ்வில் ஒரு முறையாவது இமயத்திற்கு சென்று விட வேண்டும் என்று உங்கள் இதயம் துடித்து கொள்ளும்.

5

ரோரிச்சின் ஓவியங்களை பற்றி வெறும் அழகியல் பேச்சாக, அத்தனை எளிதாகப் பேசி முடித்து விட முடியாது. அவர் கலைஞராக இருந்தாலும் உலக அரசியலில் முக்கியமான பணிகள் செய்தவர்களில் ஒருவர். இல்லாவிட்டால் மூன்று முறை அமைதிக்கான நோபல் பரிசிற்காக இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருக்காது

நிக்கோலஸ் ரோரிச், இன்று உலகிற்கே பொதுவான பணமாக பல நாடுகள் ஏற்றுக் கொண்ட அமெரிக்க டாலரில் இருக்கும் ALL SEEING EYE எனப்படும் ரகசிய உலகின் சின்னமான பிரமிடு மற்றும் ஒற்றைக் கண்ணின் வடிவத்தைக் கொடுத்தவர்.(wiki: Eye of providence). இச்சின்னத்தில் வரும் கண் உலகின் ரகசிய அமைப்புகளின் ஒன்றான Illuminatiகளுடைய சின்னம், அப்போதைய(1935)அமெரிக்க அமைச்சர்களில் ஒருவரான WALLACE(ரோரிச்சின் சீடர்) இந்த சின்னத்தை ரூஸ்வெல்ட்டின் ஒப்புதல் பெற்று தேசத்தின் ஒரு டாலர் நோட்டில் இடம் பெறச் செய்தார். இந்த சர்ச்சைக்குரிய சின்னத்தின் கீழ்ப்பகுதிகளில் இருக்கும் எழுத்துகள் சிந்துச் சமவெளி எழுத்துகளாக இருக்கக் கூடும் என்று மொழியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

பழங்கதைகளிலும், புராணங்களிலும் வரும் அதிசயப் பொருளான(கல்லான) சிந்தாமணி பற்றிய கதைகள் இந்திய மற்றும் திபெத்திய வரலாற்றில் உண்டு. அது வைரம் போன்ற விலைமதிப்பில்லா கல்லென்றும், எரிநட்சத்திரமாய் வானிலிருந்து பூமியில் விழும் கற்கள் தான் சிந்தாமணிக் கற்கள் என்றும் பல்வேறு கதைகள் இன்றளவும் வழங்கி வருகின்றன.இவருக்கும் அந்த கல்லின் மீது நாட்டம் இருந்திருக்கிறது என்று சொல்ல வேண்டும், அவரது ஓவியம் ஒன்றில் விழும் எரி நட்சத்திரம் கூட அப்படிப்பட்ட ஒரு கல்லாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் – ரூஸ்வெல்டின் அமைச்சரவையில் துணை அதிபராக இருந்த வேலஸ், ரோரிச்சிற்கு எழுதியிருந்த கடிதத்தில் “GURU AWAIT THE STONE” என்று வருகிறது. அப்படியென்றால் தனது அகழ்வாராய்ச்சியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

சிந்தாமணியை வைத்து அவர் வரைந்திருக்கும் ஓவியம் ஒன்று :6

20ம் நூற்றாண்டின் துவக்க காலத்தில் அவர் அவர் வரைந்த ஓவியங்களில் இருந்து 1935க்குப் பிறகான ஓவியங்களில் இருக்கும் மாற்றத்தை நம்மால் உணர்ந்து விட முடியும். அவர் ஓவியங்களில் வரும் மலைகளை SYMBOLISMஆக எடுத்துக் கொள்ளவும் முடிகிறது, மலைகள் காட்டும் பேரமைதி தான் அவர் உணர்த்தும் மையப்பொருளாக நான் எடுத்துக் கொள்கிறேன். அந்தப் பேரமைதி தான் ரோரிச்சின் அரசியல் பார்வையாக இருந்தது. லாமாக்களோடு வசித்து வந்தாலும் அவர் இயேசுவையும், மோஸசையும் சிகரங்களில் உலவ விட்டார், கிருஷ்ண்னை ஒரு மரத்தடியில் இசைக்க வைத்தார்.

7

 பல ஓவியங்களில் மலைப்பாதைகளில் தன்னையே பல்வேறு கோலங்களில் உலவ விட்டுள்ளார். தன்னுடைய தேடலான ஷம்பல்லா எனும் பழைய நகரத்தை அவர் கண்டு கொண்டாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. சிக்கிம், திபெத், சீனா, காஷ்மீர், சைபீரியா, மங்கோலியா என்று பரந்து விரிந்த மலைப்பாதையில் சேமித்து வைத்த அல்லது கண்டறிந்தவற்றை தனது படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இத்தகைய பயணம் மூலம் அவர்  கண்டறிந்ததாக அவர் கருதுவது உலகத்திற்கே பொதுவான ஒரு கலாச்சார நூலிழையைத் தான், அவ்விழையில் தான் மனித இனத்தின் அறிவு மற்றும் அழகுக்கான  மிதமிஞ்சிய பசி கட்டப்பட்டிருக்கிறது, அவற்றின் குறியீடாகத் தான் இமயமலையினை அவர் உணர்த்துகிறார்.

ஒரே மலையினை காலை வெயில், பனி சூழந்திருக்கும் பொழுது, அந்தி வேளையில், இரவில், மின்னலொளியில், நிலவொளியில் என பல்வேறு சூழலில் பார்க்கும் பொழுது எழும் உணர்வுகளைச் சொல்லும் பணி எளிதானது இல்லை தான். மலைகளின் விழும் சூரிய ஒளி , நிழல் என்கிற தத்ரூபங்களை ஓவியத்திற்கு வெளியே நிற்கும் பொழுது பார்க்கும் பார்வையாளனாக சொல்ல முடியும், ஆனால் ஒத்துழைக்கும் சூழலில் நாம் இருக்கிறோமா?. நம்மையும் மறந்து அவ்வோவியங்களில் ஆழ்ந்திருக்கும் வேளையில் நாம் கித்தானுக்கு வெளியே இருப்பதில்லை. நமது VANTAGE POINT இம்மமலைச் சிகரங்களுக்குப் பின்னேயும் இருக்கலாம், இரு மலைகளுக்கு மத்தியிலிருக்கும் பள்ளத்தாக்குகளிலும் இருக்கலாம், இல்லை பகலிலும் தெரியும் நட்சத்திரங்களுக்கு அருகிலிருக்கலாம். அப்படிப் பட்ட உணர்வு உங்களுக்கும் வந்திருந்தால் நீங்கள் ஒரு மாபெரும் கலைஞனின் பரிபூரணமான படைப்புகளில் யாத்திரை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று பெருமை கொள்ளலாம்.

 (நன்றி – கணையாழி – பிப்ரவரி 2014)

யாளி பேசும்

– ஜீவ.கரிகாலன்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular